பேரிடர் இராஜதந்திரம்
கனடாவின் விக்டோரியா நகரில் அண்மையில் நடந்த இந்தோ-பசிபிக் பாதுகாப்புத் தலைவர்களின் மாநாட்டின் போது, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா, அமெரிக்காவின் தேசிய காவல் பிரிவின் தலைவர், ஜெனரல் ஸ்டீவன் நோர்டாஸ் (General Steven Nordhaus) உடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
கனடாவின் விக்டோரியா நகரில் நடந்த இந்தோ-பசிபிக் பாதுகாப்புத் தலைவர்களின் மாநாட்டில் இலங்கை-அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்கள் இருதரப்புப் பேச்சு நடத்தினர்.
இந்த இருதரப்பு கலந்துரையாடலின் போது, பேரிடர் மீட்பு, உள்கட்டமைப்பு மீள்திறன் மற்றும் பாதுகாப்பு ஈடுபாடு ஆகிய துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து ஆராயப்பட்டிருந்தது. பேரிடர் மீட்புத் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மொன்டானா தேசிய காவல்படையுடன் இலங்கை விமானப்படை ஐந்து நாள் அட்லஸ் ஏஞ்சல்-2 கூட்டுப் பயிற்சிகளை முடித்த மறுநாள் இந்த சந்திப்பு இடம் பெற்றிருந்தது. அட்லஸ் ஏஞ்சல்-2 கூட்டுப் பயிற்சியானது தேடல் மீட்பு, மனிதாபிமான உதவி, மற்றும் பேரிடர் மீட்பு ஆகியவற்றை மையப்படுத்தியே இடம்பெற்றது.
அண்மைக்காலத்தில் பேரிடர் மீட்பு ஒத்துழைப்பு என்பது ஒரு முக்கியமான விடயமாக மாறியிருக்கிறது. பேரிடர் மீட்பு இராஜதந்திரம் (Disaster Diplomacy) 1990களின் இறுதியில் தான் அறிமுகமானது. இயற்கை அல்லது மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் அதற்கான நிவாரண உதவிகள், நாடுகளுக்கு இடையேயான வெளியுறவுக் கொள்கைகளிலும், பகைமை நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இது மாறியிருக்கிறது. இதனை ஆராய்வதை மையப்படுத்திய ஒரு கல்வித்துறையாகவும் உருவெடுத்துள்ளது.
1990களின் இறுதியில் அறிமுகமான இந்த பேரிடர் இராஜதந்திரம், சில ஆண்டுகளிலேயே விடுதலைப் புலிகளாலும் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்பாடு நடைமுறைக்கு வந்த பின்னர், 2003ஆம் ஆண்டு மே மாதம், 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப்பெருக்கை இலங்கையின் தென்பகுதி சந்தித்தது. 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், குறைந்தது 200,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் உணவுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க அப்போது, இந்திய இராணுவத்தினர் உதவி வழங்கியிருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதிகளுக்கு 10 லொறிகளில், அரிசி மற்றும் உதவிப் பொருட்களை கொண்டு சென்று வழங்கியிருந்தனர். நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஒரு முன்னோடியில்லாத நடவடிக்கையாக அப்போது கருதப்பட்டது.
இந்த பேரிடர் இராஜதந்திரம் இப்போது இன்னும் விரிவடைந்திருக்கிறது. இன்றைய சூழலில், வல்லரசு நாடுகள் தங்களின் பூகோள, பிராந்திய பாதுகாப்பு நலன்களை உறுதி செய்து கொள்வதற்காக, பல்வேறு விதங்களில் பல்வேறு இடங்களில் தலையீடு செய்கின்றன. பனிப்போர் காலத்தில் பிற நாடுகளின் மீதான தலையீடுகள் வெளிப்படையானதாக இருந்தது. அமெரிக்கா எதிர் ரஷ்யா என்ற அந்த சூழலில், இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு நாடுகளுக்கு இராணுவ உதவிகளை வழங்கின. தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத நாடுகளை, வளைத்து போடுவதற்காக ஆயுதக் குழுக்களையும் உருவாக்கி சண்டைகளை தோற்றுவித்தன.
பனிப்போருக்கு பின்னர், இந்தச் சூழல் பெரும்பாலும் முடிவுக்கு வந்தது. 2001 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் இரட்டைக் கோபுரம் மீது பின்லேடன் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், ஆயுதக் குழுக்களுக்கு பின்னால் இருந்து செயற்படுவதை, வல்லரசுகள் குறைத்துக் கொள்ளத் தொடங்கின. அது தங்களுக்கே வினையாக அமைந்து விடலாம் என்ற அச்சம் அதற்குக் காரணம். அதற்காக முற்று முழுதாக ஆயுதக் குழுக்களிடம் இருந்து விலகிக் கொண்டதாக அர்த்தமில்லை. இன்றைக்கும், மத்திய கிழக்கிலும், ஆபிரிக்காவிலும் இடம்பெறுகின்ற ஆயுத மோதல்களுக்கு பின்னால் வல்லரசுகளின் புவிசார் அரசியல் நோக்கங்கள் உள்ளதை மறுப்பதற்கில்லை.
எனினும், இப்போது வல்லரசு நாடுகள் தங்களின் பூகோள, பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு நலன்களை உறுதி செய்து கொள்வதற்கு, பிற நாடுகளுடன் வெளிப்படையான இராணுவ தலையீடுகளை வைத்துக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. இதனால் பிற நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை பேணிக் கொள்வதற்கு, வித்தியாசமான ஒரு களம் தேவைப்பட்டது. இப்போதைய உலகச் சூழலை அதற்கு வாய்ப்பானதாக மாற்றியிருக்கின்றன வல்லரசு நாடுகள்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் ஒரு பெரும் பிரச்சினையாக மாறியிருக்கிறது. அதன் விளைவாக பேரிடர்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேரிடர்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் இடம்பெறுகின்றன. பேரிடர்களை எதிர்கொள்வது என்பது, வளர்ந்த நாடுகளால் கூட சில சமயங்களில் கடினமானது. அமெரிக்காவில் காட்டுத் தீயை அணைக்க கனடா விமானங்களையும், தீயணைப்பு வீரர்களையும் அனுப்பியது அதற்கு ஒரு உதாரணம்.
சிறிய நாடுகள், பொருளாதார வலுக் குறைந்த நாடுகளுக்கு பேரிடர்களை சமாளிப்பது கடினமானது. இலங்கையில் சுனாமி பேரழிவு ஏற்பட்டபோது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உதவ முன் வந்தன. கடந்த ஆண்டு டித்வா புயல் ஏற்பட்ட போதும், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் படைகளை அனுப்பி மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டன.
இவ்வாறான பேரிடர் மீட்பு உதவி நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டாலும், அது பேரிடர் காலத்துக்காக மட்டும் வரையறுக்கப்படவில்லை. இப்போது பேரிடருக்கு முந்திய முன்னாயத்த பயிற்சிகளுடன் கூடிய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அட்லஸ் ஏஞ்சல் கூட்டுப் பயிற்சி அவ்வாறானது தான்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் பல நாடுகள் இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளில் இருந்து விலகியிருந்தன. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றன இலங்கைப் படைகளின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, நெருங்கிய உறவுகளை தவிர்த்துக் கொண்டன. இதனை, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களுக்கு சாதகமாக திருப்பிக் கொள்ள முற்பட்ட போது மேற்குலக நாடுகள் விழித்துக் கொண்டன.
இலங்கை இராணுவத்துடன் போர்ப் பயிற்சிகள், கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழலில், இலங்கை படைகளுடன் பேரிடர் மீட்பு, மனிதாபிமான நடவடிக்கைகள் என்ற போர்வையில் கூட்டு செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தன. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர், இலங்கை படையினருடன் அமெரிக்கா மனிதாபிமான பயிற்சிகளை மாத்திரம் முன்னெடுத்தது. பின்னர் மரைன் படைப்பிரிவை உருவாக்கிக் கொடுத்தது. கடற்படைக்கு தேவையான போர்க் கப்பல்களையும், கண்காணிப்பு விமானங்களையும், ஹெலிகொப்டர்களையும் வழங்கியிருக்கிறது.
மேலும் ராடார்கள், செய்மதி தொலைத்தொடர்பு கருவிகள் என, விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு ரீதியாக உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் பெரும் பகுதி, பேரிடர் மீட்பு தொடர்பான உதவியாகவோ, கூட்டு நடவடிக்கையாகவோ தான் முன்னெடுக்கப்படுகிறது. பேரிடர் மீட்பை மையப்படுத்திய, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை இலங்கையுடன் வலுப்படுத்திக் கொள்வதில், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றன. இதேவகையான ஒத்துழைப்பை இலங்கை படைகளுடன் மேற்கொள்வதற்கு இன்னும் பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.
உலக நாடுகள் இலங்கையில் தங்களின் புவிசார் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கும், மூலோபாய ரீதியாக தலையீடுகளுக்குமான ஒரு முக்கிய வழியாக பேரிடர் இராஜதந்திரத்தைப் பயன்படுத்த முனைகின்றன. இலங்கை இந்தியப் பெருங்கடலின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதையில் அமைந்துள்ளதால், இங்கு ஏற்படும் இயற்கை பேரிடர்களின் போது வழங்கப்படும் உதவிகள் வெறும் மனிதாபிமானத்தை மட்டும் மையப்படுத்தியதாக இருப்பதில்லை.
அமெரிக்கா, மற்றும் இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவை இலங்கையுடன் இணைந்து கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பயிற்சிகளை நடத்துகின்றன. இது போன்ற பயிற்சிகள், பிற நாடுகளுக்கு இலங்கையின் மூலோபாய பாதுகாப்புத் தரவுகள் மற்றும் கடற்பரப்புப் பகுதிகளை நெருக்கமாக கண்காணிக்க வழி செய்கின்றன. பேரிடருக்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளும் கூட, இவ்வாறான இராஜதந்திரத்திற்கு உட்பட்டது தான். இதற்கான நிதி உதவிகள் மற்றும் கடன் திட்டங்கள், உள்நாட்டுக் கொள்கை முடிவுகளில் சர்வதேச நாடுகள் மறைமுகமாகத் தலையிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
இலங்கை அரசாங்கம் இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகளைக் கையாள்வதில் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகிறது. பேரிடர் உதவிகளை ஏற்கும் அதேவேளையில், நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படாமல் இருக்க, அதிகாரங்களைச் சமநிலைப்படுத்துவதற்குப் பதிலாக, நாட்டின் நலன்களைச் சமநிலைப்படுத்தும் ஒரு வெளியுறவுக் கொள்கையை நோக்கி இலங்கை நகர்ந்து வருகிறது. ஆனால் இது இலகுவானதல்ல. ஏனென்றால் அமெரிக்கா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனும் இலங்கை பேரிடர் மீட்பு மற்றும் பயிற்சிகளை முன்னெடுக்க தொடங்கி விட்டது.
இத்தகைய கூட்டு பயிற்சிகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் உதவியை இலங்கை எதிர்பார்க்கிறது என்பதை, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவின் கருத்து உணர்த்துகிறது. பாதுகாப்பு உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு, பேரிடர் இராஜதந்திரத்தை ஒரு வழிமுறையாக இலங்கை கையாள முனைவதாக தெரிகிறது.
0 Comments