elugai

தலைமைத்துவ வெற்றிடமும் அவலங்களும்

தலைமைத்துவ வெற்றிடமும் அவலங்களும்

தலைமைத்துவ வெற்றிடமும் அவலங்களும்

கட்டுரையாளர் - கபில்

சரியான அரசியல் தலைமைத்துவத்தை கட்டமைக்க முடியாத, சரியான அரசியல் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்ய முடியாத ஒரு மக்கள் கூட்டத்தினால் மேல் எழ முடியாது. இது ஈழத்தமிழருக்கும் பொருந்தும். அண்மைய நாட்களில், சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படும், வெளிப்படுத்தப்படும் ஏமாற்றம், கோபம், கொந்தளிப்புகளுக்கான காரணம் இது தான். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ்மக்களுக்கு சரியானதொரு அரசியல் தலைமைத்துவம் கிடைக்கவில்லை. கடந்த காலத்தில் இருந்து என்னென்ன பாடங்களை கற்றுக் கொள்கிறோம் என்பது முக்கியமானது.

https://bmkltsly13vb.compat.objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/cdn.dailymirror.lk/assets/uploads/image_4ab299fe4f.jpg போருக்குப் பின்னரான 17 ஆண்டு கால தமிழ் தேசிய அரசியல், தேய்ந்து செல்லும் ஒன்றாக மாறியிருக்கிறது.

போருக்குப் பின்னரான 17 ஆண்டு கால தமிழ் தேசிய அரசியல், தேய்ந்து செல்லும் ஒன்றாக மாறியிருக்கிறது. 2004இல் 22 பிரதிநிதிகளுடன் இருந்த தமிழ்த் தேசிய அரசியல், இன்று பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் மாத்திரமன்றி, பிரதிநிதிகள் தெரிவுகள் விடயத்திலும் கோட்டை விட்டு விட்டு நிற்கிறது. தமிழரின் பிரதிநிதித்துவம் இப்போது, சிங்களத் தேசியக் கட்சிகளின் கையில் குடுமியைக் கொடுத்தவர்களாலும், தமது கடமைகளை மறந்தவர்களாலும் நிரம்பியிருக்கிறது என்பது தான் அவலம். கடந்த 17 ஆண்டு கால தலைமைத்துவம் என்பது சிறப்பானதாக இருந்திருந்தால், இவ்வாறானதொரு சூழலுக்குள் சிக்கும் நிலை தமிழருக்கு ஏற்பட்டிருக்காது.

கடந்த 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடந்த ஒரு பேரணி, சிங்கள மக்கள் மத்தியில் தாக்கங்களை ஏற்படுத்தியதோ இல்லையோ, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விரக்தியை, வெறுப்பை, கோபத்தை தூண்டியிருப்பதை சமூக ஊடகங்களில் நிரம்பியிருக்கும் கருத்துக்கள் காட்டுகின்றன. இவ்வாறான நிலை தமிழர்களுக்குப் புதியதல்ல. கடந்த காலங்களில் பலர் இப்படி குறுக்கே சென்று, அதிகாரத்தை சுவைத்திருக்கிறார்கள். சலுகைகளுக்கு மயங்கியிருக்கிறார்கள். ஆனால் கடைசியில் அவர்கள் யாரும் தமிழ் மக்களால் மதிக்கப்படுகின்ற நிலையில் இல்லை. தங்களின் முகவரிகளை தொலைத்து விட்டு நிற்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக முற்று முழுதாக ஆதாயம் தேடிக் கொண்டது சிங்கள பௌத்த பேரிவாதம் தான். இப்போதும் அப்படியானதொரு முறை வந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் தவறாகிப் போன தெரிவு, வாக்களித்த மற்றும் வாக்களிக்கா மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் தங்களின் தலையில் அடித்துக் கொள்ள வைத்திருக்கிறது. அந்தளவுக்கு மக்கள் தங்களின் தெரிவில் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதித்துவம் குறித்த அதிருப்தி மக்களிடம் அதிகம் இருக்கிறது. இதனை யாரும் மறுக்க முடியாது.

கூட்டங்களை குழப்புவது, தவறான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்துவது, சொற்பிரயோகங்கள், நடத்தைகள் என எல்லாமே மக்களை வெறுப்புக்குள் தள்ளியிருக்கின்றன. இவ்வாறான சூழலை மக்கள் எதிர்பார்க்கவில்லை. தங்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இப்படியெல்லாம் நடந்து கொள்வார் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்தச் சூழலில் தான் இது வெறும் நாடகமா என்று அவர்களே சந்தேகிக்கிறார்கள். சரியானதொரு தலைமைத்துவத்தை உருவாக்கத் தவறி விட்டதும், சரியான பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்வதில் இழைக்கப்பட்ட தவறுகள் தான் இந்த நிலைக்கான அடிப்படைக் காரணம்.

தமிழர்களுக்கான அரசியல் என்பது, தமிழர்களுக்காக அரசியல் செய்பவர்களால் மாத்திரமே சாத்தியமாகும். கடந்த காலங்களில் தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாக கூறிக் கொண்ட பலர் தங்களுக்கான அரசியலை முன்னெடுத்தனர். சிங்கள அரசியல் கட்சிகளுக்கான அரசியலை முன்னெடுத்தனர். அவ்வாறான திசையிலேயே இன்றும் சிலர் மாறிக் கொண்டிருக்கின்றனர். தமிழர் அரசியல் தமிழர்களால் தமிழர்களுக்காக கட்டமைக்கப்பட வேண்டும். அது சுயநலத்தை கடந்ததாக, தமிழர் நலனை மட்டும் மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதற்கான, பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் தோல்விகளே மிஞ்சியிருக்கிறது.

இந்த தோல்விகள் தமிழர்களின் தவறுகளால் மட்டும் ஏற்பட்டதல்ல. தமிழர்களை தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும் புலனாய்வு மற்றும் உளவியல் போர் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே, அந்த முடிவு அந்த தரப்புகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனை இலக்கு வைத்தே பலவிதமான உத்திகள் வகுக்கப்பட்டன. அதற்கு மக்களின் வாக்குகள் பலிக்கடா ஆக்கப்பட்டன. இது ஒட்டுமொத்தத்தில் ஒரு மிகப்பெரிய சதி. அதற்குள் தமிழர்கள் சிக்கிக் கொண்டார்கள் என்பதே சரியானது.

தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் தொடர்பான முன்போக்கு சிந்தனைகள் இல்லாத தமிழ்ச் சூழலை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் வாக்குகள் ஏமாற்றிப் பறிக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சூழல் இன்று வரை தொடர்கிறது. தமிழர்களுக்கு என சரியான ஒரு தலைமைத்துவம் உருவாக விடாமல் தடுப்பதே, இவர்களின் நோக்கம். இந்த இலக்கை அவர்கள் எட்டினால், எதிர்காலத்தில் கூட தலைமைத்துவம் இல்லாத இனமாக தமிழர்கள் மாற்றப்படுவார்கள்.

இலங்கை தீவில் தமிழர்கள் ஒரு காலத்தில் அரசாட்சி செய்தார்கள், தங்களின் நிலம், தங்களின் பொருளாதாரம், தங்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கும் வல்லமையோடு இருந்தனர். ஆனால் இன்று தமிழர்களின் நிலம் பறிக்கப்படுகிறது. வழிபாட்டு உரிமை பறிக்கப்படுகிறது. வாழ்வுரிமையும், அரசியல் உரிமைகளும் இழக்கப்படுகின்றன. அனைவரும் சமத்துவமாக வாழுகின்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பதாக ஒரு மாயத் தோற்றத்துக்குள் இவை அனைத்தும் முற்று முழுதாக மறைக்கப்படுகின்றன. இந்தச் சூழல் தான் ஆபத்தானது.

இத்தகைய ஒரு ஆபத்துக்குள் தமிழர்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இந்த இரகசிய போர். இந்த இரகசியப் போரில், வழங்கப்பட்ட பாத்திரங்களை பலர் மிகத் திறமையாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். பார்வையாளர்களாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த காட்சிகளால் அவ்வப்போது அதிர்ச்சிகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடுகிறது. இந்த காட்சிகளில் வரும் திருப்பங்களை அவர்களால் எதிர்பார்க்க முடியவில்லை. அது ஏமாற்றத்தை கொடுக்கிறது.

இவ்வாறான அதிர்ச்சிகள், தமிழ் மக்களின் உளவியலை இன்னும் இன்னும் சிதைக்கிறது. தங்களுக்கென ஒரு தலைமைத்துவம் இல்லாததையிட்டு அவர்கள் திரும்பத் திரும்ப நொந்து கொள்கிறார்கள். இனிமேல் ஒரு கட்டுக் கோப்பான தலைமைத்துவம் வரப்போவதில்லை என வெறுப்புடன் கூறிக் கொள்கிறார்கள். இது இந்த வெறுமை நிலையை தொடர்ந்து நீடிக்க செய்வதற்கே உதவும்.

இந்த நிலையை மாற்ற வேண்டும். புதியதொரு தலைமைத்துவம் கட்டி எழுப்பப்பட வேண்டும். அதன் மூலமாகவே, தமிழர்களின் அரசியல் உரிமைகளை மீண்டும் நிலை நிறுத்தக் கூடிய ஒரு சூழல் உருவாகும். ஜனநாயக அரசியல் பாரம்பரியங்களின் ஊடாக, அந்த தலைமைத்துவத்தை கட்டி எழுப்புகின்ற முயற்சிகள் இன்னமும் இல்லை. ஒவ்வொரு முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்ற போது, அது கீழே இழுத்து விழுத்தப்படுகிறது. இதுதான் இன்றைய தமிழ்ச் சூழல்.

இந்த தமிழ் அரசியல் சூழலையும் தொடர்ந்து தக்க வைப்பதற்கு, பல நடிகர்கள் களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றைய நிலை பற்றி, தமிழ் மக்கள் சிந்திக்க, செயற்பட முடியாதபடி தங்கள் நாடக ஆற்றுகைகளை நிகழ்த்துகிறார்கள். அவற்றை சமூக ஊடகங்களில் பரப்பி மக்களின் கவனத்தை முழுமையாக தங்களின் பக்கம் இழுத்து கவனக் குவிப்பை தடுக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்து கொண்டாலும், அடுத்த கட்டம் பற்றி சிந்திக்க முடியாத ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

நன்கு கைதேர்ந்த புலனாய்வுப் போர் அல்லது இரகசிய போர் இப்படித்தான் முன்னெடுக்கப்படும். இது அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்தை மீண்டெழ விடாமல் தடுப்பதற்கான ஒரு இரகசிய போர். இது தமிழ் மக்களை முற்று முழுதாக ஆக்கிரமிக்கிறது. சிந்திக்க, செயற்பட விடாமல் தடுக்கிறது. இது தமிழ் மக்களில் ஒரு பகுதியைக் கனவில் மிதக்க செய்து, கற்பனையான பிரச்சினைகளை உருவாக்கி யதார்த்த அரசியலின் ஊடாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளில் இருந்து அவர்களை விலகியோட வைக்கிறது. அதற்கான ஒவ்வொரு முயற்சியும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகிறது. அதனைத் தான் அனுராதபுரம் பேரணியில் அரங்கேறிய நாடகங்களும், உணர்த்துகின்றன.

Post a Comment

0 Comments