தமிழக சட்டமன்றத் தேர்தல் – 2026: பட்டியல் எண் 11 — தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (உ. தனியரசு)
தாராபுரம் என்பது திருப்பூர் மாவட்டத்தின் ஒரு எளிமையான ஊர். அங்கு திரு.உடையப்ப கவுண்டரின் வீட்டில் பிறந்த திரு.தனியரசு அவர்கள், முதுகலை அரசியல் அறிவியல் படித்தார், பிறகு சட்டம் பயின்றார். அந்தப் படிப்பு வெறும் சான்றிதழுக்காக அல்ல, ஒரு சமூகத்தின் குரலாக மாறுவதற்கான முன்தயாரிப்பாக இருந்தது.
அவரே உ. தனியரசு — தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர். 2001 மார்ச் 15 — ஒரு வரலாற்று தேதி. கொங்கு நாட்டின் மக்களுக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக, அவர்களின் உரிமைகளுக்காக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உதயமானது. தனியரசு அதன் தலைவராக, இன்றும் அதே உறுதியுடன் தொடர்கிறார்.
கொங்கு நாடு என்பது வெறும் புவியியல் பெயரல்ல, அது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி, ஒரு வரலாறு, ஒரு அடையாளம். திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம் என விரிந்து கிடக்கும் அந்த பகுதியின் மக்களுக்கு ஒரு தனித்துவமான அரசியல் குரல் தேவை என்று தனியரசு உணர்ந்தார். அந்த உணர்வே இந்த கட்சியின் தோற்றுவாய்.
அரசியல் பயணம் — தோல்வியிலிருந்து வெற்றி வரை
2009 ஆண்டு முதல் தேர்தல் அனுபவம். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டணியின்றி தனித்து நின்றார். தோல்வி வந்தது. ஆனால் அந்த தோல்வி அவரை உடைக்கவில்லை. தனியரசு நாமக்கலில் நான்கு லட்சம் பேர் கலந்துகொண்ட பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். அது ஒரு செய்தி — கொங்கு மண்டலத்தில் இந்த கட்சிக்கு ஒரு இடம் இருக்கிறது என்ற செய்தி.
2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்து பரமத்திவேலூர் தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றியைப் பெற்றார். ஒரு சிறிய கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினரானார் — அது கொங்கு மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு. சட்டமன்றத்தில் அவரது குரல் தனித்து ஒலித்தது. அவர் கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரில் இயங்கினாலும் அந்த மண்டலத்தில் பல்வேறு சமூகங்களின் குரலை சட்டமன்றத்தில் உறுதியாக எடுத்துவைத்தார்.
2016 ஆம் ஆண்டு காங்கேயம் தொகுதியில் மீண்டும் வெற்றி. இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் கொங்கு நாட்டின் குரல் ஓங்கி ஒலித்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வி வந்தது. ஆனால் அரசியல் பயணம் நிற்கவில்லை.
கட்சியின் பலமும் பலவீனமும்
தமிழக வாக்காளர்களில் கிட்டத்தட்ட 15% வாக்கு விகிதம் கொண்ட கொங்கு வேளாளர் சமூகத்தில் கணிசமான செல்வாக்கு — இது ஒரு சிறிய கட்சிக்கு மிகவும் வலுவான அடித்தளம். வட்டார வளர்ச்சி, விவசாயிகள் நலன், உள்ளூர் தொழில்துறை சார்ந்த சிக்கல்களின் போது பொதுச் சமூகத்தின் குரலாகத் தொடர்ந்து இயங்குவது கட்சியின் வலிமை.
ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் — கொங்கு நாடு பகுதியைத் தாண்டி கட்சிக்கு எந்த செல்வாக்கும் இல்லை. கொங்கு நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன. கொங்கு நாடு முன்னேற்ற கழகம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு நாடு ஜனநாயக கட்சி என்று. இந்த சிதறல் ஒட்டுமொத்த கொங்கு அரசியல் சக்தியை வலுவிழக்கச் செய்கிறது.
பெரிய கட்சிகளின் கூட்டணியைச் சார்ந்தே இயங்கும் நிலை, தனித்துவமான அரசியல் அடையாளத்தை நிலைநிறுத்துவதில் பெரும் சவாலாக இருக்கிறது. சாதி அடையாளத்தைத் தாண்டி இளைஞர்களை பொது மேம்பாடுகள் நோக்கி ஈர்க்கும் தெளிவான சித்தாந்தம் இன்னும் கட்சியில் வலுவடையவில்லை. மேலும் தனியரசுக்கு எதிராக பதிவான 6 கிரிமினல் வழக்குகள் இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு கேள்விக்குறியாக நிற்கிறது.
கூட்டணி இல்லாமல் போனது ஏன்?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு முக்கியமான தருணமாக இருந்திருக்கும். சரியான கூட்டணி அமைந்திருந்தால் காங்கேயம் அல்லது அதைச் சுற்றியுள்ள தொகுதிகளில் கணிசமான தாக்கம் செலுத்தியிருக்கலாம்.
அதிமுகவுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திமுக அரசின் சாதனைகளை உளப்பூர்வமாகப் பாராட்டினார். ஆனாலும், திமுக இந்த முறை அவரைக் கூட்டணியில் சேர்க்காமல் போனதன் காரணம் என்ன என்பதை அறிய முடியவில்லை.
மற்றொரு கொங்கு வேளாளர் சமூகப் பிரதிநிதித்துவக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் சாதீய அதியுணர்வும், ஆதிக்க மனப்போக்கும் கொண்டவர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். அப்படியானால், திமுக அப்படியான ஆதிக்க உணர்வு கொண்ட பெரும்பான்மைச் சமூகத் தலைவர்களை ஊக்குவிக்க நினைக்கிறதா? தனியரசு போன்ற கொஞ்சம் இணக்கமான தலைவர்களை கூட்டணிக்குள் கொண்டு வந்திருக்கலாமே?
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி E.R. ஈஸ்வரன் போன்ற ஆதிக்க மனப்போக்கும், முதிர்ச்சியும் இல்லாத தலைவர்களை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் போன்றோர் ஆதரிப்பது கூட ஓரளவு புரிந்துகொள்ளக்கூடியதுதான் — அதீத ஆதிக்க சாதி உணர்வு தானே இங்கே வாக்கு வங்கியாக மாறுகிறது. ஆனால், முனைவர் திருமாவளவன் போன்ற ஒடுக்கப்பட்ட உழைக்கும் எளிய மக்களின் தலைவர்களும் கொங்கு ஈஸ்வரன் போன்றவர்களை ஆதரிப்பதும், முட்டுக் கொடுப்பதும் ஏனோ அத்தனை பொறுத்துக்கொண்டு அரசியலில் மேம்பாட்டை உருவாக்கப் பயன்படாது.
கட்சி எதிர்கொள்ளும் தேர்வு
ஆனால் கட்சி ஒரு பெரிய கேள்வியை எதிர்கொள்கிறது — வட்டார சாதிக் கட்சியாக மட்டும் தேங்கிவிடுவதா? அல்லது கொங்கு நாட்டின் அனைத்து மக்களையும் அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான இயக்கமாக வளர்வதா? அந்த தேர்வே திரு.தனியரசின் அரசியல் மரபைத் தீர்மானிக்கும்.
ஆனால் ஒரு தலைவராக வெறுப்பு அரசியலை அவர் எங்கும் பரப்பியதாக எனக்கு நினைவில்லை. முதிர்ச்சியோடும், மதிப்பீடுகளோடும் பிற அரசியல் கட்சித் தலைவர்களை அவர் பேசுவது எப்போதும் நெகிழ்வான உணர்வைத் தரும்.
கொங்கு நாட்டின் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் தனியரசின் குரல் இன்னும் தேவைப்படுகிறது. அந்த தேவையை நிறைவேற்றும் வலிமை அவருக்கு கிடைக்கட்டும்.


0 Comments