elugai

மொட்டு பேரணியின் இலக்கு

மொட்டு பேரணியின் இலக்கு

மொட்டு பேரணியின் இலக்கு

கட்டுரையாளர் - சத்ரியன்

அனுராதபுரத்தில் கடந்த 12ஆம் திகதி, சிறிலங்கா பொது ஜன பெரமுன நடத்திய அரசியல் பேரணி, 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் நோக்குடன் நடத்தப்பட்டதாக நம்ப வைப்பதற்கு அந்த கட்சி கடுமையாக முயற்சிக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன, அதற்கு இப்போது அவசரப்பட வேண்டியதில்லை. மைத்திரிபால சிறிசேன வேட்புமனுத்தாக்கல் செய்யப் போகும் போது தான், எதிரணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது சக்தி வாய்ந்த தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவையே அவர் தோற்கடித்தார். கோட்டாபய ராஜபக்ஷவும் கூட, நீண்டகாலம் முன்னதாகவே, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் பெரும் வெற்றியைப் பெற்றார்.

அனுராதபுரம் பொதுஜன பெரமுன பேரணி அனுராதபுரத்தில் சிறிலங்கா பொது ஜன பெரமுன நடத்திய அரசியல் பேரணி.

எனவே நாமல் ராஜபக்ஷவின் அடுத்த தேர்தலுக்காக பொதுஜன பெரமுன இப்போதே தயாராகிறது என்பது பொய்வாதம். ஆனால், அரசியல் என்பது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்ற நீரோடை போல இருக்க வேண்டும். அப்போதுதான் அது தெளிவானதாக இருக்கும், மக்களுடன் நெருக்கமானதாக இருக்கும், மக்களுக்கும் கட்சிக்கும் இடையிலான உறவு பலமானதாக இருக்கும்.

ராஜபக்ஷவினர் அதிகாரத்தை இழந்த பின்னர் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி வந்தாலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கான நேரம் இதுவல்ல. அதற்கு இன்னமும் காலஅவகாசம் இருக்கிறது. அவர்கள் அவசரப்படுவதற்கு வேறு காரணங்கள் உள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்திற்கு வர முடியாதபடி தடுப்பதற்கு எல்லா வியூகங்களையும் வகுத்து செயற்படுகிறது. தற்போதைய ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி ஒரு பாரம்பரியமான அரசியல் கட்சி அல்ல, ஜேவிபியாக இருந்த போது, அதன் வாக்கு வங்கி 3 தொடக்கம் 5 சதவீதமாகவே இருந்து வந்தது. திடீரென ஏற்பட்ட ஒரு அரசியல் விபத்து அவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்து விட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளிலும் அவர்கள் பெரிதாக எதுவும் சாதிப்பதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை. எனவே மீண்டும் மக்கள் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் பக்கம் திரும்பக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. அதனால் அத்தகைய பாரம்பரிய அரசியல் கட்சிகள் தங்கள் வழிக்கு குறுக்கே வந்து விடாதபடி தடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கிறது.

கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள், முறைகேடுகள் என்பன, அவர்கள் மீதான நடவடிக்கைகளை எடுத்து, முடக்குவது, அரசாங்கத்திற்கு வசதியாக அமைந்து விட்டது. ராஜபக்ஷ குடும்பத்தினரை மையப்படுத்தி இப்போது அரசாங்கம் விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அரசியலில் தீவிரமாக செயற்பட்ட மற்றும் தீவிர அரசியலில் இல்லாத ராஜபக்ஷ குடும்பத்தினர் கூட, விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள்.

ஆனால், ஒன்றை மட்டும் கவனிக்க வேண்டும் — முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விலக்கியே இந்த விசாரணைகள் நடக்கின்றன. அவர் மீது கைவைக்க அரசாங்கம் தயங்குகிறது, அல்லது அச்சப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, மற்றும் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, பிள்ளைகளான நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ மற்றும் பெறாமக்களான ஷசீந்திர ராஜபக்ஷ, சமீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷவினர் பலர் குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு என மாறி மாறி விசாரணைக்கு முன்னிலையாகி வருகிறார்கள். இந்த விசாரணைகள் பல இப்போது இறுக்கமடைந்திருக்கின்றன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த போது இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணையில், நாமல் ராஜபக்ஷ 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அவர் குறி வைக்கப்படுகிறார் என்பதை ராஜபக்ஷவினர் அறிந்திருந்தனர். அதனால் தான், அனுராதபுர பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது. பேரணி மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும், இந்தப் பேரணியைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் அவரைக் கைது செய்திருக்கிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதும் தான் அவர்களின் நோக்கம். நாமல் ராஜபக்ஷ தனது கைது தொடர்பாக முன்கூட்டியே அறிவித்திருந்தார். இது ராஜபக்ஷவினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக முன்னெடுத்த ஒரு நடவடிக்கையே தவிர, அரசியல் மீள் எழுச்சிக்கான பேரணி அல்ல.

இந்த பேரணியில் முன்னரைப் போல, ராஜபக்ஷவினர் பலர் ஒன்று திரளவில்லை. மஹிந்த ராஜபக்ஷவை கூட கைத்தாங்கலாகத் தான் அழைத்து வர முடிந்தது. உரையாற்ற கூட முடியாதளவுக்கு அவர் உடலளவில் தளர்ந்து போயிருக்கிறார். சமல் ராஜபக்ஷவையோ, கோட்டாபய ராஜபக்ஷவையோ, ஏனைய ராஜபக்ஷவினரையோ காண முடியவில்லை. இந்த அரசியல் மேடையில் ஏறாமல் இருப்பதே, தங்களுக்கு பாதுகாப்பானது என அவர்கள் கருதியிருக்கலாம்.

நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதால் அவரது மனைவி லிமினி வீரசிங்க அனுராதபுர பேரணியில் மேடை ஏறுவார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அவரது தந்தையான திலக் வீரசிங்க அதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியிருந்தார். லிமினியை அரசியலில் இறக்குவதற்கு, குடும்பத்தில் ஆதரவு இல்லை என்பதை அவரது கருத்து வெளிப்படுத்தியிருக்கிறது.

நாமல் ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பொதுஜன பெரமுன தலைமையகத்திற்கு வந்திருந்தார்கள். ஆனால், நாமலை அடுத்த ஜனாதிபதியாக்குவதற்காக நடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட அனுராதபுர பேரணியில் அவர்கள் யாருமே பங்கெடுத்திருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

ராஜபக்ஷவினருடன் நிழல் போல இருந்து, கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதால், ராஜபக்ஷவினரிடம் இருந்து விலகிச் சென்ற விமல் வீரவன்ச, உதய கம்பன்பில போன்றவர்கள் மீண்டும் பொதுஜன பெரமுன மேடையில் ஏறியதுதான், அந்த பேரணியின் முக்கிய அம்சம். இந்த இரண்டு பேருமே தனித்து அரசியல் செய்ய முடியாதவர்கள், ஆனால் தாராளமாக இனவாதத்தையும் இனவெறுப்பையும் கக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு போக்கிடம் வேறு கிடையாது. மீண்டும் மொட்டுடன் ஒட்டிக் கொள்வது தான் அவர்களின் ஒரே தெரிவாக இருந்தது.

அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அனுராதபுர பேரணியை சாட்டாக வைத்து அதனுடன் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, இந்த பேரணி பொதுஜன பெரமுனவின் எழுச்சியாகவோ அல்லது நாமல் ராஜபக்ஷவை மேல் நோக்கி கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்தும் போலவோ தெரியவில்லை. இந்த பேரணியால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில் பொதுஜன பெரமுன முன்னகரும் என்று எதிர்பார்த்தால் அது தவறு. அதற்கான உழைப்பும் காலமும் முயற்சியும் இன்னமும் அதிகம் தேவைப்படுகிறது.

நாமல் ராஜபக்ஷவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல, 100 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டது என்பது வெறும் குற்றச்சாட்டாக மட்டும் இருக்காது. அதனை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்டு வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டியதே அவருக்கு முக்கியமானது. இது மாத்திரம் அவருக்கு எதிராக உள்ள ஒரே வழக்கு அல்ல, இன்னும் பல வழக்குகள் இருக்கின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் தாண்டியே, நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். அவர் ஜனாதிபதியாக வருவாரா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஏனென்றால், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக வருவார் என்று யாரும் கனவு காணவில்லை. அப்படியான ஒரு அரசியல் சூழல் முன்னொருபோதும் இலங்கையில் இருந்ததும் இல்லை. மைத்திரிபால சிறிசேனவுக்கு அத்தகைய வாய்ப்பு வரும் என்றும் யாரும் எதிர்பார்த்ததில்லை. டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றது கூட ஒரு அரசியல் விபத்து தான்.

இவ்வாறான விபத்துகளின் மத்தியில், எதிர்பாராத சூழல்களின் மத்தியில், நாமல் ஜனாதிபதியாவாரா இல்லையா என்று இப்போது யாரும் அனுமானிக்க முடியாது. ராஜபக்ஷவினரைப் பொறுத்தவரையிலும், இப்போது அடுத்த ஜனாதிபதி பற்றி கனவு காணக்கூடிய நிலையில் இல்லை. தங்கள் மீது தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் வழக்குகளில் இருந்து விடுபடுவது தான் அவர்களின் முதல் இலக்கு. அதனை வெற்றி கொண்டால் மட்டுமே ஜனாதிபதி பதவி மீது அவர்களால் குறி வைக்க முடியும்.

Post a Comment

0 Comments