[இணையத் தமிழ்ப் பயணத்திற்கும், இந்த வலைப்பூவிற்கும் அடித்தளமாக இருக்கும் சகோதரன் குணசேகரன் ஜெயராஜ் அவர்களுக்கும் அவர் குழுமத்திற்கும் அன்பும் நன்றிகளும்]
வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நான் அடையும் வெற்றிகள் அனைத்திற்கும் காரணமாக நான் நினைப்பது என் தகப்பனார் அவர்களின் வழி நடத்தலும் அன்பும் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மாறாத மனித நேயத்தையும், இன உணர்வையும், தமிழின் இனிமையையும் எனக்கு உணர்த்திய அவரின் பாதங்களில் இருந்து தொடங்குகிறது என் தமிழ்ப் பயணம்.
கூடவே இந்த உலகத்தில் எனக்கு ஓர் அங்கீகாரத்தை வழங்கி அனைவர் முன்பும் கிருஸ்ணா அம்பலவாணர் ஆகவும் தொல்காப்பியன் ஆகவும் அடையாளபடுத்திய என் உயிரினும் மேலான தமிழீழத்தேசியத்தின் ஆத்மாவான அந்த விடுதலைப் பேரொளியே என் தாயுமான தயாபரன்..
ஓடும் இயந்திரப்பற்களுக்குள் என் மானிடத்தை தொலைத்துவிடாது நிமிர்வுகொள்வதற்கு உரமாகி நின்ற என் ஆசான்களுக்கும் குறிப்பாக எனக்கு அறிவூட்டிய என் தாயின் திருவடியும் என் நெஞ்சிருக்குவரை நினைவழியாது தொடரவே செய்யும்..
தமிழோடு பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழ்த்தேசியனாய் தலைவன் விரல்பிடித்து வளர்ந்தவன் என்ற பெருமித்தோடும் இறுமாப்போடும் தஎன்னை உங்களிடம் அறிமுகம் செய்வேன்,
ஒரு வேதியர் குடும்பத்தில் பிறந்தேன், கண்ணனே எம் காதலன் என வாழும் குடும்பத்துப்பிள்ளை நான்.
அத்தகைய குடும்பத்தில் பிறந்து ஆச்சார அனுட்டாங்களுக்குள் ஆட்பட்டிருந்த என்னை மனிதனாக்கி மானுட விடுதலையைசெ சிந்திக்கத்தூண்டியவர் தந்தை பெரியாரும் அவர் வழிவந்த தலைவர் அவர்களும் தான்..
ஆரம்பத்தில் வேதம் ஓதும் வேதியனின் மகனாக வளர்ந்தேன், ஆனாலும் 1979ல் எங்கள் கோவில் முற்ரத்தில் நின்ற அந்த மாபெரும் வரலாற்றுப் பெருநெருப்பைக் கட்ட கணத்திலிருந்து ஒரு முழுமை பெற்ற மனிதனாக தேசவிடுதலையைச் சுமக்கும் உன்னதனை பின்தொடர முனைந்தேன்.
நித்திலத்தீவாம் நிறைவளர் இலங்கையில் உத்தர யாழ்குடா ஊர்களில் ஒன்றாம் இணுவையம்பதியின் அருகில் இருக்கும், விஸ்வநாதன் குடிகொண்ட காரைக்கால் எனது சொந்த ஊர், தந்தை வழித் தாத்தா ஒரு பெரியார் வழி வந்த பண்பாளர், தந்தையார் தந்தை செல்வா, ஜீஜீ பொன்னம்பலம், திருச்செல்வம், வன்னியசிங்கம், இராசதுரை ஆகியோரோடு ஒன்றாய்ப்பயணித்தவர். தாயார் பாசமுள்ள என் தாய் அன்னபூரணம் ஒரு தமிழ் நங்கை, ஆண்பிள்ளைகளில் தலைமகன் நான்,அக்காள் அண்ணன் உடன் தங்கை இருவர், தம்பிமார் இருவர் என கூடிவாழும் கூட்டுகுடும்பம் நாம்.
ஆனாலும் எனது வாழ்க்கையின் பெரும்பகுதி தாயக விடுதலைக்காண களப்பணியிலேடே கடந்து போனது..
ஆனாலும் படித்தது சட்டம் BA LLB, (Ceylon) , பின்னாளில் தேவைகருதி கற்றது அரசியல் விஞ்ஞானக்கற்கை நெறி MA in Special in Political science, (University of Madras),
எனது பணி என்பது தேசவிடுதலைக்கானது..
அதற்கான பணிக்காலம் 1985 முதல் 2009 வரை ( ஜநா மனித உரிமைகள் ஆணையம் முதல் அனைதுலக செயலகப்பணி )
கூடவே இலக்கிய அமர்வுகள், ஊடக சந்திப்புக்கள், மக்கள் விடுதலைக்கான அரசியல் உரையாடல்கள், பேச்சு எழுத்து , சமூக ஒருங்கிணைப்பு மொழிபெயர்ப்புப்பணி ஆகியவற்றோடு உலக விடுதலை இயக்க இயங்கியலாளர்களுடனான உறவுகள் , இலக்கிய பேராளுமைகளுடான உறவுகள் தொடர்பாடல்கள், தமிழ் நிறைந்த நண்பர்கள், நூல்களால் நிரப்பப்பெற்ற வீடு, மெல்லிய இசை போல வாழ்க்கை அழகாகவே இருக்கிறது.
இப்போது கூடவே முதுமை என்னை ஆரத்தழுவிக்கொள்கின்றது.
நான் என்னும் இந்த பிம்பம், முழுமையான நான் அல்ல, நான் என்பது ஒரு காலிப் பாத்திரமாய் உருவாகி, சமூக வண்ணங்களால் நிரப்பப் பெற்று என்னைச் சுற்றி இருக்கும் எண்ணங்களை எதிரொலிக்கிறது. சில நேரங்களில் நீங்களே நான். சமூக ஏற்ற தாழ்வுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் களைய குறைந்த அளவு சிந்திக்கும் தகுதி ஒன்றே போதும், நீங்கள் என் நண்பனாக இருப்பதற்கு…………………..
பெரியாரின் சமூகப் புரட்சி கண்ட தமிழ்ப் பேரன் நான், உறுதிமிக்க தலைவனின் அன்புத்தம்பிகளில் ஒருவன் நான், பாசறை நான் புகுந்த இடம் தேசநலன் எனது கடன் தேன்தமிழே எனது திடல் என்ற தமிழ் முழக்கப் பாசறையின் வழித் தோன்றல் நான், நீர்த்துப் போன அரசியற் கட்சிகளின் எந்த மேடையிலும் என்னை நீங்கள் பார்க்க முடியாது, சாதிக் கட்சிகளின் மாநாடுகள் நடக்கும் பாதையில் கூட என் கால்கள் நகராது, வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை, நான் மனிதம் நிரம்பிய மனிதத்தை இவ்வுலகில் நிரப்பிய அகதித்தமிழன். அது மட்டுமே என் அடையாளம்.
0 Comments