சீனப் பல்கலைக்கழகத்தின் 'தமிழ்த்தேசிய' ஆராய்ச்சித் திட்டமும் ஈழத்தமிழரைச் சிக்கவைக்கும் புதிய உலகளாவிய சதிவலையும்
ஈழத்தமிழினத்தின் தார்மீக ஏகோபித்த வேணவா என்பது தங்களின் பாரம்பரியத் தாயக நிலப்பரப்பில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஓர் இறையாண்மையுள்ள 'தமிழீழத் தனிஅரசை' நிறுவுவதாகும். முள்ளிவாய்க்கால் வரை ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் உன்னதமான உதிரத் தியாகங்களினாலும், எமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சமரசமற்ற தத்துவார்த்த வழிகாட்டுதலினாலும் செதுக்கப்பட்ட இந்த இலட்சியக் கனவு, உலகெங்கும் வாழும் ஒன்பது கோடி தமிழர்களின் கூட்டு நனவிலி மனதின் முதன்மைப் பிரக்ஞையாக விளங்கி வருகின்றது.
இத்தகையதொரு வரலாற்றுச் சூழலில், தற்போது ஹொங்கொங்கில் உள்ள The Chinese University of Hong Kong (CUHK)ன் சட்ட பீடப் பேராசிரியர் அலெக்ஸ் கிரீன் (Faculty of Law Professor Alex Green) தலைமையில், நாடுகடந்த தமிழீழ அரசுடன் (TGTE) இணைந்து "இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேசச் சட்டரீதியான சவால்கள்" என்ற தலைப்பில் ஒரு முதுகலை ஆராய்ச்சித் திட்டத்தை (postdoctoral research project) மேற்கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அதில் ஆய்வாளர் தகுதிநிலையாக:
1. History அல்லது Public International Law-ல் PhD பெற்றவராக இருக்க வேண்டும்.
2. இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பான பின்னணி விரும்பத்தக்கது.
3. வரலாற்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
4. Legal மற்றும் policy briefs எழுதுவதில் பங்கேற்க வேண்டும்.
5. சர்வதேச academic publications-க்கு ஆய்வுகளைத் தயாரிக்க வேண்டும்.
6. TGTE மற்றும் பிற project stakeholders உடன் பணியாற்ற வேண்டும்.
7. ஆரம்ப நியமனம் ஆறு மாதங்கள்; Hong Kong-ல் நேரடியாகப் பணியாற்ற வேண்டும் எனத் தமிழீழச் சுயாதீன அரசு தொடர்பான ஆய்வாளர்களுக்கான அடிப்படைத் தகுதி அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த CUHK ஆய்வு உண்மையில் என்ன? என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த ஆய்வின் பொருள், இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு (independent Tamil State) உருவாவதைச் சுற்றியுள்ள இத்தகையதொரு வரலாற்றுச் சூழலில், சீனப் பல்கலைக்கழகமான சென்சென்னில் உள்ள ஹொங்கொங் சீனப் பல்கலைக்கழகம் திடீரென, "இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேசச் சட்டரீதியான சவால்கள்" என்ற தலைப்பில் ஒரு முதுகலை ஆராய்ச்சித் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளது.
முதன்முறையாகத் தமிழர்களின் உன்னதமான 'தமிழ்த்தேசிய'க் கனவு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு முதன்மைப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் விவாதப் பொருளாக மாற்றப்பட்டிருப்பது, தமிழ் அரசியல் தளங்களில் ஏதோ ஒரு தார்மீக ஆதரவு போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தினாலும், அதன் உண்மையான மறுபக்கம் தமிழினத்தின் இருப்புக்கே விடுக்கப்பட்டுள்ள மிக விபரீதமானதொரு புவிசார் இராஜதந்திர அபாயச்சங்கொலியாகும்.
சீனப் பேரினவாதத்தின் இந்த திடீர் 'கல்விசார்' ஆர்வம் என்பது ஈழத்தமிழர்கள் மீது கொண்டுள்ள பச்சாதாபத்தினால் உருவானதொன்றல்ல; அது இந்தோ-பசிபிக் கடல்சார் வியூகத்தில் தங்களின் ஏகபோக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மிக நுட்பமான சதிவலை மூலோபாயமாகும். சமகால உலகளாவிய மற்றும் பிராந்திய அரசியல் போக்குகளின்படி, இலங்கையின் ஒற்றையாட்சி அரசைத் தங்களின் கடன்பொறி இராஜதந்திரத்திற்குள் முழுமையாகச் சுருட்டி வைத்துள்ள சீனா, திரிகோணமலைத் துறைமுகம் உள்ளிட்ட தமிழர்களின் பூர்வீக நில வளங்களை விழுங்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில், தமிழர்களின் உன்னதமான தனிநாட்டுக் கோரிக்கையைச் சர்வதேசச் சட்டங்களின் வரம்புகளைக் காட்டி 'ஆராய்ச்சி' என்ற போர்வையில் கையாள்வதன் மூலம், ஈழத்தமிழ்த்தேசிய உணர்வைச் சர்வதேச அரங்கில் தங்களின் அரசியல் பகடைக்காயாக மாற்றுவதற்கும், கொழும்பு அரசைத் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அச்சுறுத்துவதற்கும் சீனா முயல்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் மிக ஆபத்தான மறுபக்கம் என்பது, தங்களின் தாயக இறையாண்மைக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் அறிவுசார் தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் தமிழ் ஆய்வாளர்கள், இளந்தலைமுறையினர், மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களைத் திட்டமிட்ட முறையில் 'இனம் காணும்' ஒரு உளவுத்துறைச் சூழ்ச்சியாகும். இந்த முதுகலை ஆய்வுத் திட்டத்தின் தரவுச் சேகரிப்பு என்ற பெயரில், தமிழீழக் கனவை நெஞ்சில் சுமந்து சமரசமின்றிப் போராடும் ஒரு சமூகத்தின் தத்துவார்த்தக் கோட்பாடுகள், அவர்களின் சர்வதேச இராஜதந்திரத் தொடர்புகள், மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் உள்விவகாரங்கள் யாவும் சீனப் பல்கலைக்கழகத்தின் வழியே திரட்டப்பட்டு, இறுதியில் கொழும்பு மற்றும் பிராந்திய மேலாதிக்க உளவுத்துறை அமைப்புகளுக்குச் சாதகமாகச் சிக்கவைக்கப்படும் பேராபத்து இதில் ஒளிந்துள்ளது. எமது மாவீரர்களின் தியாகங்களினாலோ அல்லது தலைவரின் இலட்சியக் கனவினாலோ செதுக்கப்பட்ட எமது தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகிய உன்னதமான அரசியல் கோரிக்கைகளை இத்தகைய பன்னாட்டுச் சதிவலைகளுக்குள் அடகு வைக்காமல் தற்காப்பதும், உலகளாவிய 9 கோடி தமிழர்களின் கூட்டுப் பிரக்ஞையை ஓர் உன்னத அதிகாரச் சக்தியாக மாற்றி இப்புதிய டிஜிட்டல் சனாதன மற்றும் பேரினவாதப் படையெடுப்புகளை வேரறுப்பதும் 'எழுகதிர்' வாயிலாக நாம் உலகிற்கு விடுக்கும் சமரசமற்ற தத்துவார்த்த அறைகூவலாகும்.
— தொடரும் (பகுதி 2)—
0 Comments