தமிழ் இனப்படுகொலையின் எதிர்விளைவு
கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 43வது ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்ட தருணத்தில், பிரித்தானிய அமைச்சரவையில் இளநிலை அமைச்சராக ஈழத்தமிழ் பெண் ஒருவர் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பிரித்தானியாவில் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற அன்டி பர்ன்ஹாம் தனது அரசாங்கத்தின் இணை அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்ட போது பலருக்கும் ஆச்சரியம் தான் ஏற்பட்டது. வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எட் மில்லிபாண்டின் கீழ், நாடாளுமன்ற இணை அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டதே அதற்குக் காரணம். பிரித்தானிய வரலாற்றில் ஈழத்தமிழர் ஒருவர் அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
உமா குமரன் முதல்முறையாக, அண்மையிலேயே நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார். அவருக்கு வெளிவிவகார அமைச்சின், நாடாளுமன்ற இணை அமைச்சராகப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது வெளிவிவகார அமைச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புக்களை உள்ளடக்கிய ஒரு பதவி.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, தமிழர்களைப் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் நிலையை ஏற்படுத்தியது. இந்தப் புலம்பெயர்தல் தற்போதும் தொடர்ந்தாலும் ஒப்பீட்டளவில் கணிசமாகக் குறைந்திருக்கிறது.
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் தங்கள் வீடுகளை விட்டு, நிலங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்ட மக்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, அழிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட மக்கள், வெளிநாடுகளில் புகலிடம் தேட நிர்பந்திக்கப்பட்டார்கள். தமிழ் மக்களை அடிமைகளாக்குவதற்காக, நாடற்றவர்கள் ஆக்குவதற்காக, பொருளாதார ரீதியில் பலமற்றவர்கள் ஆக்குவதற்காக, இன வன்முறைகள் காலத்திற்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற போர், தமிழ் மக்களின் பெருமளவிலான புலம்பெயர்விற்கு வழி வகுத்திருந்தது.
தமிழர்கள் ஆயுத பலத்தின் ஊடாக உருவாக்கிய நிழல் அரசையும், ஆயுதப் போராட்டத்தையும், 2009ஆம் ஆண்டு, இலங்கை அரசு வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் தோற்கடித்தது. இதற்குப் பின்னர் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை, 17 ஆண்டுகளாக இலங்கையின் ஆட்சியாளர்கள் எவருமே நிறைவேற்றவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வருவதும், அதனை நிறைவேற்றாமல் வெளியேறுவதும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்டத் தமிழர்களை ஏமாற்றுகின்ற தந்திரம் சிங்கள ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டு வருகிறது. தற்போதைய ஆட்சியும் அதற்கு விதிவிலக்கானது அல்ல. தமிழர்களுக்கு எந்தவொரு அதிகாரப்பகிர்வையும் அரசியல் தீர்வையும் வழங்குவதில்லை என்ற திடமான நிலைப்பாடு சிங்கள ஆட்சியாளர்களிடம் இருக்கிறது என்பதை இந்த இழுத்தடிப்பு தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
இந்தச் சூழலில் தான், புலம்பெயர் சமூகத்தின் எழுச்சி முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து சென்ற இலட்சக்கணக்கான தமிழ் மக்கள், தாம் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில், தங்களை நிலைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் பொருளாதார ரீதியாகத் தங்களை வலுப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தியவர்கள், அடுத்த தலைமுறையைக் கல்வி ரீதியாகவும் துறைசார் நிபுணத்துவ ரீதியாகவும் வளர்த்தெடுப்பதில் வெற்றி பெறத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் பெறுபேறாகத்தான், இப்பொழுது புலம்பெயர் தேசங்களில் ஆட்சி அதிகாரங்களில் பங்கெடுப்பவர்களாக அவர்கள் மாறி வருகின்றனர்.
கனடாவில் நகராட்சி அரசியலில் தொடங்கிய பயணம், மாகாண அரசியலில் இருந்து, இப்போழுது தேசிய அரசியல் வரை முன்னேற்றம் கண்டிருக்கிறது. கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி, ஹரி ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டது, அங்கு புலம்பெயர் தமிழர்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. அதுபோல, இப்போது, பிரித்தானியாவில் வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற துணை அமைச்சராக உமா குமரன் பதவியேற்றிருக்கிறார். இதுபோன்ற மாற்றங்கள் பல்வேறு புலம்பெயர் நாடுகளில் உருவாகியிருக்கின்றன.
அவுஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ், நோர்வே என்று பல நாடுகளில் உள்ளூராட்சி அமைப்புகளில் இருந்து அடுத்தடுத்த கட்ட அரசியல் கட்டமைப்புகளில் ஈழத்தமிழர்கள் கணிசமாகப் பங்கெடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவில் மிச்சேல் ஆனந்தராஜா செனட் உறுப்பினராகவும், அஷ்வினி அம்பிகைபாகர் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றனர். நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வனுஷி சீதாஞ்சலி வால்டர்ஸ் உறுப்பினராகப் பதவியில் இருக்கிறார். கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜூவனிடா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், ஒன்ராறியோ மாகாண அமைச்சராக விஜய் தணிகாசலமும், மாகாண சட்டமன்ற உறுப்பினராக லோகன் கணபதியும் பதவி வகிக்கின்றனர். நோர்வேயில் ஹம்சி குணரத்தினம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இது தவிர சுவிஸ் அரசியல் கட்டமைப்புகளிலும் கணிசமான ஈழத்தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புலம்பெயர் நாடுகளின் அரசியலில் தமிழர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக மாறத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த மாற்றம் ஒரு முக்கியமான கட்டம். முன்னர் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட போதும், நிலங்கள் அபகரிக்கப்பட்ட போதும், அதுபற்றிய குரல்களை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்வதற்குப் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டன. பிரித்தானிய பிரதமருக்கு, கனடிய பிரதமருக்கு ஒரு செய்தியை எடுத்துச் சென்று சேர்ப்பதற்குப் பெரும் பாடுபட வேண்டிய ஒரு காலகட்டம் இருந்தது. அதற்காகப் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் கூடக் காத்திருக்க வேண்டிய நிலை முன்னர் இருந்தது. ஆனால் இப்போது, இவர்களின் காதுக்கு ஒரு செய்தியைக் கொண்டு செல்வதற்குக் குறுகிய நேரம் போதும். அந்தளவிற்கு ஈழத் தமிழ் பிரதிநிதித்துவம் அந்தந்த நாடுகளில் உள்ளது.
புலம்பெயர் தேசங்களின் அரசியலில் ஈழத் தமிழர்கள் செல்வாக்குப் பெறுவது இலங்கைத் தீவில் தமிழர்களின் நிலைமைகளில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தி விடாது. அப்படி மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பினால் அது தவறு. இங்கு தனிநாட்டையோ அல்லது தனித்துவமான தீர்வு ஒன்றையோ ஏற்படுத்துவதற்கு அவர்களால் பங்கேற்க முடியாது. ஆனால் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான அழுத்தங்களை அந்தந்த நாடுகளின் ஊடாகக் கொடுப்பதற்கு, இவ்வாறான பிரதிநிதித்துவங்கள் முக்கியமானவை.
இலங்கை அரசாங்கம் தமிழர்களை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டால் போதும், பிரச்சினை தீர்ந்தது என்று கருதிய ஒரு காலம் இருந்தது. ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களின் அந்தப் பார்வை தவறானது என்பதை, புலம்பெயர் தேசங்களில் செல்வாக்குப் பெற்று வரும் ஈழத் தமிழ் அரசியல் உணர்த்தத் தொடங்கியிருக்கிறது. பிற நாடுகளில் இதுபோன்றதொரு பலம், இலங்கை அரசுக்குக் கிடையாது.
பிரித்தானிய அரசியலில் ரணில் விக்கிரமசிங்க என்ற ஒருவர் இராஜாங்க அமைச்சராக இருந்தார். அவர் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார். பிரித்தானிய அரசாங்க மட்டத்தில், ஈழத் தமிழர்களின் நிலையை எடுத்துக் கூறுவதற்குப் பிரதிநிதி ஒருவர் இருக்கிறார் என்பது தனித்துவமான ஒரு பாதுகாப்பு. கனடிய பிரதமருக்கு அருகே ஒரு தமிழ் அமைச்சர் இருக்கிறார் என்பது இன்னும் கூடுதலான பாதுகாப்பு. இது போல பல நாடுகளில் பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசகர்களாக, அதிகாரிகளாக, இலங்கை தமிழ் இளைய தலைமுறை வளரத் தொடங்கியிருக்கின்றனர்.
இது, தமிழர்களை விரட்டியடித்தவர்கள் எதிர்பாராத ஒரு மாற்றம். சிங்கள பௌத்த பேரினவாதம் விரும்பாத ஒரு மாற்றம். சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்கு கையாண்ட மலினத்தனமான முயற்சிகளின் எதிர்விளைவே இது. இந்த விளைவை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை, விரும்பவும் இல்லை, ஆனால் இந்த யதார்த்தத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
உள்நாட்டு அரசியலில் வலுப்பெற முடியாமல் புறக்கணிக்கப்பட்ட, விரட்டியடிக்கப்பட்ட, ஈழத் தமிழ் சமூகம் புறநாடுகளில் செல்வாக்குப் பெறுவதும் அரசாங்கத்தில், அரசியலில் அதிகாரம் செலுத்துவதும் சிங்கள பௌத்த பேரினவாதம் செய்த நன்மை எனவும் எடுத்துக் கொள்ளலாம். போர், இன வன்முறைகள் இல்லாமல் புலம்பெயர்தல் சாத்தியப்பட்டிருக்காது. போரைத் தனியே பாதகமான விளைவாக மாத்திரம் பார்த்தவர்கள், அதற்குப் பின்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை, ஈழத்தமிழ் சமூகம் சர்வதேச அளவில் வியாபித்து வளர்ந்து வருவதைக் குறைத்து எடை போட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அடக்க நினைத்தவர்களுக்கு, அடங்க மறுப்பவர்களின் செய்தியாக, இந்த மாற்றத்தைப் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
0 Comments