elugai

இந்தியாவின் அடுத்த நகர்வு... இலங்கையின் அரசியல் சமநிலைக்கு புதிய சவால்

இந்தியா வைக்கும் பொறி

இந்தியா வைக்கும் பொறி

கட்டுரையாளர் - கார்வண்ணன்

இந்தியாவினால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், இருதரப்பு உறவுகளில் நெருக்கடிகளை உருவாக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அவசர கூட்டம் இடம்பெற்றது. இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னான்டோ ஆகியோரின் தலைமையிலான குழுவினர், இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களை விரைவாகவும் தடையின்றியும் முன்னெடுப்பதற்கான வழிவகைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன் ஒரு கட்டமாக, ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதற்கும், அதனைக் கண்காணிப்பதற்கும் ஜனாதிபதி செயலகத்தில் தனியாகப் பிரிவு ஒன்றை உருவாக்குவது குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. இது இருதரப்பு உறவுகளைக் கையாளும் விடயத்தில், இரண்டு நாடுகளும் தீவிர கவனம் செலுத்துகின்றன என்பதை விட, இந்தத் தாமதங்கள் நெருக்கடிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்தியா இதுவரை 7.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியிருப்பதாகவும், அதில் 850 மில்லியன் டொலர் திருப்பி செலுத்த வேண்டியிராத கொடைகள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கைக்குக் கடன்கள், உதவிகளை வழங்குவதில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. போர் முடிவுக்கு வந்த பின்னர் 2009ஆம் ஆண்டு இந்தப் போட்டி தீவிரம் அடைந்தது. 2006 முதல் 2022ஆம் ஆண்டு வரை இலங்கைக்குச் சீனா சுமார் 13.2 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கியது. அதேவேளை போருக்குப் பின்னர், இந்தியா கடந்த 17 ஆண்டுகளில் மாத்திரம் 7.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு நிதியுதவியாக வழங்கியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கான முன்மொழிவுகளுக்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகள் கையெழுத்திடப்படுகின்ற போதும், அவற்றை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. பல்வேறு இழுபறிகள் அல்லது தடங்கல்கள் காரணமாக இதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. இலங்கை அரசாங்கம் முழு அளவில் பல திட்டங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு புதுடெல்லி தரப்பில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இது இப்போதுதான் எழுகின்ற பிரச்சினை அல்ல, பல ஆண்டுகளாகவே இந்தச் சிக்கல் நீடித்து வருகிறது.

திருகோணமலை சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான உடன்பாடு செய்யப்பட்டு இரண்டு தசாப்தங்களாகி விட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சம்பூர் இருந்த காலகட்டத்திலேயே, அங்கு அனல் மின் திட்டத்தை நிறுவுவதற்கு இந்தியா முன் வந்திருந்தது. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அனல் மின் திட்டத்திற்குப் பதிலாகச் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவுவதற்கு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்ட போதும், திட்டமிட்டபடி அதனைச் செயற்படுத்துவதிலும் தடங்கல்கள் நீடித்து வருகின்றன.

காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் ஆகியவற்றின் விரிவாக்கத்திற்கு, இந்தியா நிதியுதவிகளை அறிவித்த போதும், அவற்றை ஏற்றுக்கொண்டு திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. இந்தியா-இலங்கை இடையே தரைப்பாலம் அமைக்கும் திட்டம், குழாய் வழி எண்ணெய் விநியோகத் திட்டம், மின்சார இணைப்பு திட்டம் போன்ற திட்ட முன்மொழிவுகள் விடயத்திலும் இரண்டு தரப்புகளுக்கும் இடையே தெளிவான இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை. அதேவேளை திருகோணமலையில் எரிபொருள் கேந்திரத்தை உருவாக்குவது உள்ளிட்ட இந்தியாவின் பல திட்டங்கள், திட்டமிட்ட காலதாமதங்களை எதிர்கொண்டு வருவதாகப் புதுடெல்லி நம்புகிறது.

இந்தத் தாமதங்கள் தொடர்பாகக் கடந்த காலங்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் இலங்கைத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்கள். அதன் போது இந்தத் திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு மாறாகத் திட்டங்கள் இழுத்தடிக்கப்படும் சூழல் தொடர்ந்து கொண்டே வந்த நிலையில் தான், கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் அவசர கூட்டம் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு முக்கிய காரணம், டிட்வா புயலுக்குப் பின்னர் இந்தியா அறிவித்த, 450 மில்லியன் டொலர்களில் 350 மில்லியன் டொலர் கடன் திட்டத்தை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியானது தான். பேரிடருக்குப் பின்னர் இந்தியா 450 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்க முன்வந்தது. அதில் 100 மில்லியன் டொலர் கொடையாகவும் எஞ்சிய 350 மில்லியன் டொலர் கடனாகவும் வழங்கப்படும் என கொழும்பில் வைத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்திருந்தார். ஆனால், அதிகமான வட்டி அறவிடப்படும் என்பதால் 350 மில்லியன் டொலர் கடனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்க இலங்கை அதிகாரிகள் தீர்மானித்திருப்பதாக, சில ஊடகங்களில் செய்திகள் கசிந்திருந்தன. இதனை அடுத்தே, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ ஆகியோர் பங்கேற்ற அவசர கூட்டம் இடம்பெற்றிருக்கிறது.

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஜனாதிபதி செயலகத்தில் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் — இந்தியா நிதியளிக்கும் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பாக இலங்கைத் தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். (படம்: Ada Derana, தொடர்பு நிகழ்வு)

இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட முக்கியமான ஒரு விடயம், இந்தியாவின் நிதியுதவியுடனான திட்டங்களைச் செயற்படுத்துவதைக் கண்காணிப்பதற்கும், வழிநடத்துவதற்கும், ஜனாதிபதி செயலகத்தில் ஒரு தனிப் பிரிவை நிறுவுவது பற்றியதாகும். இந்த யோசனையை இந்திய தரப்பே முன்வைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்தத் திட்டங்கள் தாமதம் அடைவதற்கு அமைச்சுகள் அல்லது அதிகாரிகள் மட்டத்தில் உள்ள அசமந்த போக்கே காரணம் என இந்தியத் தரப்பு நம்புகிறது. அதனால் தான் ஜனாதிபதியின் கண்காணிப்பில் இருக்கக் கூடியதாக ஒரு தனிப் பிரிவை உருவாக்கி இந்தத் திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதற்கு இந்திய தரப்பு யோசனை முன் வைத்திருப்பதாகத் தெரிகிறது.

இது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடிய ஒரு விடயம். ஏனென்றால், இதுவரை காலமும் அவர் இத்தகைய திட்டங்களில் ஏற்பட்ட இழுபறிகளுக்குத் தனக்கு கீழ் உள்ள தரப்புகளைக் காரணம் காட்டி தப்பிக் கொள்ளக் கூடிய நிலை இருந்தது. ஆனால் ஜனாதிபதி செயலகத்தில் தனிப்பிரிவு செயற்படத் தொடங்கினால், அதனைக் கண்காணிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கும் அவரது செயலக அதிகாரிகளுக்கும் இருக்கும். அவர்கள் திட்டங்களைச் செயற்படுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டது தமக்குத் தெரியாது என கூற முடியாத நிலை ஏற்படும்.

இது அரசாங்கத்திற்கு வைக்கின்ற ஒரு பொறியாகவே இருக்கப் போகிறது. அரசாங்கம் இதற்கு இணக்கம் தெரிவித்ததாகத் தகவல் இல்லை. ஆனால் இணக்கம் தெரிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்தியா கோரும் போது தட்டிக்கழிக்க முடியாது.

இந்தச் சூழலில், வரும் வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது இந்த விவகாரத்தை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.

இலங்கையில் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துவதற்குச் சீனா போன்ற பல நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சீனா உள்ளிட்ட, தான் விரும்பாத பல நாடுகளின் திட்டங்கள் முன்னோக்கி நகர்த்தப்படும் போதும், தமது திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது. இதனால் தான், இலங்கையுடனான திட்டங்கள் விடயத்தில், கொழும்புடன் இன்னும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாகத் தான், இந்தத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், தடைகளை நீக்குவதற்குப் புதுடெல்லி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும். ஏனென்றால் அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ இழுத்தடித்த திட்டங்களை இனி மேல் தாமதிக்க முடியாத நிலை ஏற்படும். அப்படித் தாமதித்தாலும் புதுடெல்லிக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படும்.

Post a Comment

0 Comments