elugai

பாதுகாப்பு ஒத்துழைப்பின் பின்னணியில் அமெரிக்காவின் நீண்டகால இலக்கு என்ன?

விரிவடையும் பாதுகாப்பு உறவு

விரிவடையும் பாதுகாப்பு உறவு

கட்டுரையாளர் - சுபத்ரா

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், அமெரிக்க கடற்படை, கடலோரக் காவல்படை, விமானப்படை என்பன, இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படையுடன் இணைந்து, முதல் முறையாகக் காரட் (CARAT) சிறிலங்கா-2026 எனப்படும் ஐந்து நாள் கடற்பயிற்சிகளில் பங்கேற்றிருக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமான பதிலளிப்பு, பேரிடர் தயார் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவும் இலங்கையும் இந்தக் கூட்டுக் கடற்பயிற்சியை ஆண்டுதோறும் நடத்த இணங்கி இருந்தன. 2017ஆம் ஆண்டு இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு (ACSA) புதுப்பிக்கப்பட்டபோது, கடலோர ஒத்துழைப்பு தயார் நிலை மற்றும் பயிற்சி என்ற, இந்தக் காரட் கூட்டுப் பயிற்சி, ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அக்சா எனப்படும், கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு, முற்று முழுதாக உணவு, எரிபொருள், போக்குவரத்து போன்ற, விநியோகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு உடன்பாடு.

அதன் அடுத்த கட்டமாக, இலங்கையுடன் படைகளை நிலை நிறுத்துவது மற்றும் அவர்களுக்கான சிறப்பு சலுகைகளை வழங்கக் கூடிய வகையில், படைகளை நிலைப்படுத்தும் உடன்பாட்டுக்கு (SOFA) அமெரிக்கா தயாராகியது. ஆனால் நல்லாட்சி அரசில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அதற்கு இணங்கவில்லை. எதிர்க்கட்சிகளும் அதனைக் கடுமையாக எதிர்த்தன. தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அமெரிக்காவுக்குச் சாதகமானதாக அமையவில்லை. கோட்டாபய ராஜபக்ச, இலங்கையில் அமெரிக்காவுக்கு அளிக்கப்பட்ட பல பாதுகாப்பு நலன்களைப் பறித்துக் கொண்டார்.

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காரட் கூட்டுப் பயிற்சி 2018, 2019, 2020 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இடம்பெற்றிருந்தன. அதன் பின்னர் 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளிலும், இந்தக் கூட்டுப் பயிற்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்போது ஆறாவது கூட்டுப் பயிற்சி திருகோணமலை சம்பூரில் தொடங்கி கொழும்பு வரை இடம்பெற்றிருக்கிறது. ஜூலை 27ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை 5 நாட்கள் இடம்பெற்ற இந்தக் கூட்டுப் பயிற்சி, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடியது எனக் கருதப்படுகிறது.

காரட் சிறிலங்கா 2026 தொடக்க விழா திருகோணமலை இலங்கை கடற்படையின் கிழக்குக் கடற்பரப்புக் கட்டளையாளர் கடற்படை துணைத் தளபதி புத்திக லியனகமகேவும், அமெரிக்க கடற்படையின் Expeditionary Strike Group 7 துணைத் தளபதி கப்டன் மைக்கல் மெசெஞ்சரும், திருகோணமலையில் நடைபெற்ற காரட் சிறிலங்கா 2026 தொடக்க விழாவில் தேசிய கீதங்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர். (படம்: U.S. Navy / Chief Mass Communications Specialist Mike Wright, Public Domain)

இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் நெருக்கத்தையும் அமெரிக்கா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்தியப் பெருங்கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவைத் தனது பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே, அமெரிக்கா கருதுகிறது. இங்கு அமெரிக்கா தனது தளங்களை அமைக்க முடியாவிட்டாலும், தான் நினைத்த நேரத்தில் நினைத்தவாறு இங்கு கூட்டுப் பயிற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடிய நிலையில் இருக்கிறது. மொன்டானா தேசிய காவல்படையுடன் செய்து கொண்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்பாடுகளும், பகிரங்கப்படுத்தப்படாத பாதுகாப்பு உடன்பாடுகளும் அதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

ஈரானிய கடற்படையின் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா கடந்த மார்ச் மாதம், இலங்கைக்குத் தெற்கே அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்கும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படையே மேற்கொண்டது. இலங்கையின் பொருளாதார கடல் எல்லைக்குள் நிகழ்ந்த சம்பவம் என்பதால், அதனைக் கையாளும் பொறுப்பு தமக்கு இருப்பதாக இலங்கை கூறினாலும், அமெரிக்காவின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதான சந்தேகங்கள் உள்ளன. மீட்கப்பட்ட ஈரானியப் படையினர் மீண்டும் போருக்குத் திரும்பாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அமெரிக்கா அப்போது பகிரங்கமாகவே இலங்கைக்கு அறிவுறுத்தியது.

இது அமெரிக்காவின் தந்திரமான ஒரு நடவடிக்கை. தாக்குதலுக்குப் பின்னர் ஈரானிய படையினரைச் சிறை பிடிப்பது ஒன்றும் அமெரிக்காவுக்குக் கடினமான காரியமாக இருந்திருக்காது. ஆனால் அதனைச் செய்யும் நோக்கம் அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை. அவர்களைச் சிறைபிடிப்பதால் இலாபம் இல்லை என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். எனவே தான், தனது தாக்குதலுக்குப் பின்னரான நடவடிக்கைக்கு, இலங்கையை அமெரிக்கா ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. இலங்கை இதனைத் தெரிந்து கொண்டோ தெரியாமலோ அதில் சிக்கிக் கொண்டது.

இந்தச் சூழலில், இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை அமெரிக்கா தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. இரண்டு நாடுகளின் படைகளுக்கு இடையில் பல்வேறு மட்டங்களில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள், பயிற்சிகள், ஒத்திகைகள், ஏனைய நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மாறி மாறி அமெரிக்கப் படை அதிகாரிகளும் போர்க்கப்பல்களும் இலங்கைக்கு வருவது வழக்கமான நிகழ்வாகி விட்டது.

இந்த ஆண்டு எத்தனை இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகள் இடம் பெற்றன என்ற கேள்விக்கு இரண்டு விதமான பதில்கள் உண்டு. ஒன்று, அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்ட கூட்டுப் பயிற்சிகள் நிகழ்ச்சி திட்டங்கள். இன்னொன்று, அதிகாரபூர்வமற்ற வகையில், பகிரங்கப்படுத்தப்படாமல் இடம்பெற்றவை. இலங்கையுடன் அல்லது இலங்கையில் மேற்கொள்ளுகின்ற கூட்டுப் பயிற்சிகளை அல்லது ஏனைய இராணுவ நிகழ்ச்சி திட்டங்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு இப்போது அமெரிக்கா தயங்குகிறது. இவ்வாறு மறைக்கப்பட்ட பல நிகழ்ச்சி நிரல்கள் அல்லது பயிற்சி திட்டங்கள் இரு தரப்பு உறவுகளில் உள்ள வெளிப்படையற்ற தன்மையைக் காட்டுகிறது. ஏன் வெளிப்படையின்றி இத்தகைய கூட்டுப் பயிற்சிகள், செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற கேள்வி இருக்கிறது.

இலங்கைக்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புகள், உறவுகள் இருக்கின்றன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளுகின்ற கூட்டுப்பயிற்சிகள், செயற்திட்டங்களை இந்த நாடுகள் விரும்புவதில்லை.

அண்மையில் நடந்த காரட் கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தில் இருந்து பொசிடோன்-8 ரக விமானமும் வந்திருந்தது. அது கடல்சார் கண்காணிப்பு மற்றும் ரோந்துக்காகப் பயன்படுத்தப்படுகின்ற, அதிநவீன விமானம். அந்த விமானம் ஒரு பறக்கும் ராடர் மையமாகும். அமெரிக்காவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்த் திட்டத்தின் முக்கிய அங்கமாக இந்த விமானங்கள் செயற்படுகின்றன. ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த விமானம் கூட்டுப் பயிற்சிக்காக இலங்கைக்கு வந்திருந்தது. அதன் பின்னர், 2021ஆம் ஆண்டும், இப்போது மூன்றாவது முறையாகவும், இந்த விமானத்தை அமெரிக்கா அனுப்பி வைத்திருக்கிறது.

இது வெறுமனே கூட்டுப் பயிற்சி மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா செலுத்தி வரும் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் இதன் நோக்கம் தான். அதிநவீன ராடர் கருவிகள் பொருத்தப்பட்ட இந்த விமானம், இலங்கையில் இருந்து செயற்படுவதை இந்தியாவும் கூட அவ்வளவு விரும்பாது. இவ்வாறான நிலையில், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இதனால் நிச்சயம் வெறுப்படையும். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்தக் கூட்டுப் பயிற்சிகளின் ஊடாகத் தனது திறனை இந்தியப் பெருங்கடலில் வலுப்படுத்தி வருகிறது. இதனூடாகச் சீனாவையும் ரஷ்யாவையும் பலவீனப்படுத்துவது அதன் முக்கிய இலக்காகும். இலங்கையைத் தன் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்வதற்கு, தயார் நிலையில் வைத்திருப்பதும் இந்தக் கூட்டுப் பயிற்சியின் மற்றொரு நோக்கம்.

2019ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையுடன் காரட் கூட்டுப் பயிற்சியை முன்னெடுப்பதில் அமெரிக்கா சில சிக்கல்களைச் சந்தித்தது. அதனால் தான் 2020, 2022, 2023, 2025ஆம் ஆண்டுகளில் இந்தக் கூட்டுப் பயிற்சியை முன்னெடுக்க முடியாமல் போனது. ஆண்டுதோறும் நடத்தத் திட்டமிடப்பட்ட கூட்டுப் பயிற்சி இந்த ஆண்டுகளில் நடத்த முடியாமல் போனது அமெரிக்காவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தற்போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாதளவுக்கு நெருக்கமானது என, அமெரிக்காவுக்கான தூதுவர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் மகிந்த சமரசிங்க கூறியிருக்கிறார். முன்பு போதும் இல்லாத இந்த நெருங்கிய உறவு, மீண்டும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்வதற்கான கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது.

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர், முதல்முறையாக இந்தக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் உறவுகளையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடியது. இப்போதைய நிலையில் இந்த நகர்வு அமெரிக்காவுக்குச் சாதகமானது.

அதேவேளை, இலங்கை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவின் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்குள் ஈர்க்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் வலுவடைந்து வருகிறது. அமெரிக்க எதிர்ப்பாளர்களும் இலங்கையை நடுநிலை நாடாக இருக்க வேண்டும் என விரும்புகின்ற தரப்புக்களும், அமெரிக்காவை நோக்கிச் செல்லுகின்ற இலங்கையின் இந்தப் போக்கைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அமெரிக்காவை நோக்கிச் செல்லுகின்ற இந்த நிலை, எதிர்காலத்தில் இலங்கையை நெருக்கடிக்குள் சிக்க வைக்கும் ஆபத்து இருப்பதாக அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அந்த எச்சரிக்கையை அனுர அரசாங்கம் கண்டு கொள்வதாக இல்லை. ஏனென்றால், இன்றுள்ள நிலையில், இலங்கை அரசுக்கு அமெரிக்காவின் தயவும், தேவைகளும் அதிகமாக இருப்பதால், எந்த வகையிலும் அமெரிக்காவைக் குழப்பத்திற்குள் தள்ள அது விரும்பவில்லை.

Post a Comment

0 Comments