elugai

சர்வஜன வாக்கெடுப்பைத் தவிர்க்குமா அரசு? நீதித்துறையைச் சுற்றிய புதிய சர்ச்சை

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா?

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா?

கட்டுரையாளர் - சத்ரியன்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கின்ற தீர்மானத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதை, அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெளிப்படுத்தியிருக்கிறது.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கின்ற முயற்சியில், அரசாங்கம் இறங்கியிருக்கிறது என, கடந்த பல வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. அதுபற்றி அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பிய போது இன்னமும் அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்பது போலவே கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் கடைசியில் அந்த அமைச்சரவை தீர்மானம், நிறைவேற்றப்பட்டு விட்டது.

தற்போதைய பிரதம நீதியரசர் அரசாங்கத்துக்குச் சாதகமானவர் என்பதால், அவரது பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கிலேயே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கின்ற முடிவை, அரசாங்கம் எடுத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், அரசாங்கமோ தனிநபர்களை இலக்கு வைத்து இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், நிலுவையில் இருக்கின்ற வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு அனுபவம் மிக்க நீதிபதிகள் தேவை என்பதால்தான், அவர்கள் ஓய்வு பெறுகின்ற வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டியிருப்பதாகவும் காரணம் கூறுகிறது.

நிலுவையில் உள்ள வழக்குகளில் பல, எதிர்க்கட்சியினர் சம்பந்தப்பட்டவை. குறிப்பாக ராஜபக்ஷவினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்குகள் பெருமளவில் தற்போது விசாரணையில் இருக்கின்றன. கடந்த 11 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளை விரைந்து விசாரணை செய்து தீர்ப்பளிப்பது முக்கியம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கருதுவதில் ஆச்சரியமில்லை. அது அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.

ராஜபக்ஷவினருக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவே, நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கத் திட்டமிட்டிருப்பதாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாகவே கூறியிருந்தார். இது ராஜபக்ஷவினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேவேளை எதிர்க்கட்சியினரைப் பொறுத்தவரையில், ஆளும்கட்சி தமக்குச் சாதகமான நீதிபதிகளை வைத்துக் கொண்டு நீதிமன்றங்களின் ஊடாக அதிகாரத்தை நிலைப்படுத்த முற்படுகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னொரு பக்கத்தில், கீழ் நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில், தங்களின் பதவி உயர்வுகள் இதனால் பாதிக்கப்படும் என்ற அச்சம் தோன்றியிருக்கிறது. அதேவேளை, நாட்டு மக்களுக்கு நீதித்துறையின் சுயாதீனம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இந்த நகர்வு இப்படிப் பல்வேறு மட்டங்களில் பல்வேறு தரப்புகளுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

அரசாங்கம் கூறுவது போல, தேங்கியுள்ள வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் நோக்கில், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றால், உயர்நீதிமன்றங்களில் உள்ள எட்டு நீதியரசர் பதவிகள் கடந்த பல மாதங்களாக அரசாங்கம் ஏன் நிரப்பாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. எதிர்க்கட்சிகள் அதனை மையப்படுத்தி, அரசாங்கத்தின் தோலை உரிக்க முற்படுகின்றன. அரசாங்கம் வழக்குகளைத் துரிதப்படுத்த விரும்பினால் உயர்நீதிமன்றங்களில் வெற்றிடமாக உள்ள நீதியரசர் பதவிகளுக்கு நியமனங்களைச் செய்திருக்கலாமே என அவர்கள் எழுப்புகின்ற கேள்வி நியாயமானது.

அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறிப் பல வாரங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள, நீதியரசர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் நடவடிக்கையை அரசியல் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனக் கூற முடியாது. அரசாங்கத்துக்குத் தனது திட்டங்கள், நடவடிக்கைகளை நீதிமன்றம் குழப்பாமல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் நீதித்துறை கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்ய முனைவதில் ஆச்சரியம் இல்லை. எந்தவொரு அரசாங்கமும் நீதித்துறை தமக்கு ஒத்துழைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வழமை.

அவ்வாறு ஒத்துழைக்காமல் முரண்படுகின்ற நீதியரசர்கள், நீதிபதிகள் பழிவாங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது, அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்க மறுத்த பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க, பதவியில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டது. அதுபோல அரசாங்கத்திற்குச் சாதகமான தீர்ப்புகளை அளிக்க வாய்ப்பில்லாத நீதிபதிகள் பதவி உயர்வுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள், அல்லது சேவை நீடிப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், தட்டிக் கழிக்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளன.

அண்மைக்காலத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்த ஒருவர், தமக்குப் பதவி உயர்வு வழங்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். இதுபோன்ற சம்பவங்கள் நீதித்துறைக்குள்ளேயும் இடம்பெறுகின்றன. அரசியலில் தங்களை நிலைப்படுத்த விரும்புகின்ற கட்சிகள் நீதித்துறையைத் தங்களின் கைக்குள் வைத்துக் கொள்வதற்கே முற்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் அத்தகைய நோக்கம் கொண்டது என்ற சந்தேகங்கள் இருக்கின்றன. அதனால் தான் எதிர்க்கட்சிகள், சட்டத்துறை சார் அமைப்புகள், சிவில் அமைப்புகள் என எல்லா தரப்புக்களும் இதனை ஒரு சந்தேகத்துடன் பார்க்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தங்களை அரசாங்கம் செய்ய முனைவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் இரண்டு தடைகளைத் தாண்ட வேண்டும். முதலில், கீழ் நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி உயர்த்துவதற்காக, சட்ட திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதால், அதனை இலகுவாக மேற்கொள்ளலாம். அடுத்து, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாகத்தான் நீடிப்பு செய்ய முடியும்.

அவ்வாறு செய்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமானது, சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என அரசாங்க பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெகதிஸ்ஸ கூறியிருக்கிறார். நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் அதையே சொல்கிறார். ஆனால், நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தைச் செய்த பின்னர், அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகள் மாத்திரமன்றி, சட்டத்தரணிகள் சங்கத்தின் தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சிறப்பு பொதுக்கூட்டம் நீதிபதிகள் ஓய்வு வயதெல்லை நீடிப்புக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3,000க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்தனர்; அரசாங்கம் தொடர விரும்பினால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரினர். (படம்: Ada Derana)

ஆனால், அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லப் போவதில்லை எனக் கூறுகிறது. சர்வஜன வாக்கெடுப்பிற்குச் சென்றால் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்திருந்தால் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவதற்கும், தற்துணிவுடன் அரசாங்கம் முன் வந்திருக்கும்.

இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளுக்கு உள்ள ஒரே வாய்ப்பு, இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவது தான். இவ்வாறு சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல் செய்யும்போது, சர்வஜன வாக்கெடுப்பைக் கோரி வாதங்களை முன்வைக்க முடியும். ஆனால் இதில் ஒரு சிக்கலான விடயம் இருக்கிறது.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்குச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதா, இல்லையா என்பதைப் பற்றித் தீர்மானிக்கின்ற அதிகாரமும் நீதியரசர்களிடமே வரப்போகிறது. அவர்களின் தலைவிதியை அவர்களே தீர்மானிப்பது என்பது, முற்றிலும் பொருத்தமற்றது. ஏனென்றால், இந்த விடயம் குறித்துத் தீர்ப்பளிக்கப் போகின்ற நீதியரசர்கள் இந்த விவகாரத்தினால் பயனடையக் கூடியவர்கள். அவர்கள் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்வதற்கு ஆதரவளிப்பார்களா என்ற சந்தேகம் இருக்கிறது.

தங்களின் சொந்த விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு தீர்ப்பை அளிக்கின்ற விடயத்தில், நீதியரசர்கள் எந்தளவுக்குச் சுயாதீனமாக, பக்கசார்பின்றி முன் வருவார்கள் என்ற கேள்வி இருக்கிறது. அவர்கள் எந்தளவுக்கு நேர்மையானவர்களாக இருந்தாலும், இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், இடறும் வாய்ப்பு உள்ளது. அடிப்படையில் அனைவரும் மனிதர்கள், சுய விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவர்கள் என்பதை ஒருபோதும் மறந்து விட முடியாது. அதைவிட, அவர்கள் எந்தளவுக்கு நீதி, நேர்மையாகத் தீர்ப்பளித்தாலும், அது பக்கசார்பானதாக விமர்சிக்கப்படக் கூடிய வாய்ப்புகளும் அதிகம். இதனால் தான் இதை ஒரு சிக்கலான வழக்காக எல்லாத் தரப்பினரும் கருதுகிறார்கள்.

நீதித்துறையின் சுயாதீனத்தை அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளுவதாக விமர்சிக்கிறார்கள். விஷப் பரீட்சையை அரசாங்கம் நடத்துவதாகக் கருதுகிறார்கள். நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைப் பாதிக்கும் என்பதால், இந்த அரசியல் திருத்தத்திற்கு அவசரப்படக்கூடாது என கொமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கமும் கூறியிருக்கிறது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இதனை எதிர்க்கிறது. கீழ் நீதிமன்ற நீதிபதிகளும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

மொத்தத்தில் நீதித்துறையும், நாடும் இப்போது பல பிரிவுகளாகப் பிளவுபட்டிருக்கிறது. அரசாங்கத்தின் இந்த நகர்வே இந்தப் பிளவுக்குக் காரணம். இதுதான் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்ற குழப்ப நிலை. அரசாங்கம் குட்டையைக் குழப்பி, மீன்பிடிக்க முனைகிறது. நீதித்துறையின் சுயாதீனத்தைக் கேள்விக்குட்படுத்துவதன் ஊடாக, அரசாங்கம் தன் காரியத்தை நிறைவேற்ற முற்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பின்னர், அரசியலமைப்பில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். அது மூன்றாவது முறையும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கு அவருக்கு இருந்த தடைகளை நீக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட திருத்தம். அந்த அரசியலமைப்புத் திருத்தம் தான் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கையை சூனியமாக்கியது. தோல்வியடையாத தலைவர் என்ற இறுமாப்பில் இருந்த அவரைத் தோல்விக்குள் தள்ளியது. பெரும் அவமானங்களுக்குள்ளேயும் சிக்க வைத்தது. அதிலிருந்து மீண்டெழ முயற்சிக்கின்ற போதும் திரும்பத் திரும்ப அவர் தள்ளிவிடப்படும் நிலையிலேயே இருக்கிறார்.

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அரசியலமைப்புத் திருத்த முயற்சியால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் இது போன்ற நிலை ஏற்படாது என்றில்லை. ஏனென்றால், இதுவும் கூட அரசாங்கத்தின் நலன் கருதிய, நீதித்துறையின் சுயாதீன தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துகின்ற வகையிலான ஒரு நடவடிக்கை. இது பற்றிய மக்களின் கருத்து நிச்சயமாக நேர்மறையானதாக இருக்க முடியாது.

Post a Comment

0 Comments