elugai

சீனாவின் அடுத்த நகர்வு என்ன? இலங்கையை நோக்கிய பீஜிங்கின் புதிய கணக்கு

இடம்மாறும் சீனாவின் முகம்

இடம்மாறும் சீனாவின் முகம்

கட்டுரையாளர் - ஹரிகரன்

இலங்கையைத் தங்களின் மூலோபாய கேந்திரமாகப் பார்க்கின்ற, உலகின் இரண்டு முக்கிய நாடுகளின், கொழும்பில் உள்ள தூதரகங்களில், இப்போது தூதுவர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க தூதுவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங் தனது பணிக்காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி, 6 மாதங்களுக்கு மேலாகியும், புதிய தூதுவர் இன்னமும் பொறுப்பேற்கவில்லை. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராகப் பெயரிடப்பட்ட எரிக் மேயரின் நியமனத்திற்கு அமெரிக்க செனட் கடந்த மே 18ஆம் திகதி, 46-43 என்ற வாக்குகள் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கியது. ஆயினும், அவர் இன்னும் இலங்கைக்கு வந்து பதவியைப் பொறுப்பேற்கவில்லை.

இந்தச் சூழலில், அமெரிக்க தூதரகத்தில் பதில் தூதுவராகக் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் பணியாற்றி வந்த ஜெய்ன் ஹொவெலின் பதவிக் காலமும் நிறைவடைகிறது.

இலங்கை மீது உன்னிப்பான கவனத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவின் நிலை இப்படியென்றால், இன்னொரு பக்கத்தில் சீனத் தூதுவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிய கீ சென்ஹொங் ஜூலை 31ஆம் திகதியுடன் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கையில் சீனாவின் முகமாகப் பார்க்கப்பட்டவர் அவர். இலங்கையர்கள் மத்தியில் சீனா என்றதும் அண்மைக்காலமாக அவரது முகமே முதலில் நினைவுக்கு வரும் அளவுக்கு அவர், நீண்டகாலம் இலங்கையில் பணியாற்றியிருக்கிறார். அது மாத்திரமன்றி, அவர் எல்லா மட்டங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்தி, தன்னை இலங்கையர்களுக்குப் பரீட்சயமான ஒருவராக மாற்றுவதிலும் வெற்றி கண்டிருக்கிறார்.

1988ஆம் ஆண்டு சீன இராஜதந்திர சேவையில் இணைந்து கொண்ட அவர், 61 வயதிலும் சுறுசுறுப்பான இளைஞன் போல, கொழும்பில் சீனத் தூதரகத்தை வழிநடத்தியிருந்தார். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மறைமுகமான இராஜதந்திரப் போரை அவர் எதிர்கொண்ட விதம் அசாதாரணமானது.

கொரோனா நெருக்கடியில் முழு உலகமும் சிக்கியிருந்த போது, 2020ஆம் ஆண்டு இலங்கைக்குத் தூதுவராக நியமிக்கப்பட்ட கீ சென்ஹொங், அன்று முதல் பதவியிலிருந்து விலகிச் செல்லும் வரை, கடுமையான சவால்களுக்கும் மத்தியில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளைக் கட்டி எழுப்புவதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

சீனாவைப் பொறுத்தவரையில், வெளிநாடு ஒன்றில் தனது தூதுவரை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பது அரிதான விடயம். 3 தொடக்கம் 4 ஆண்டுகள் மாத்திரமே, ஒரு நாட்டில் தனது தூதுவரைப் பணியாற்றுவதற்குச் சீனா அனுமதிக்கும். அதுவும், மூலோபாய முக்கியத்துவம் மிக்க இடங்களில் — மிகச் சிறப்பாகப் பணியாற்றிய சில தூதுவர்கள் மாத்திரமே, 5 ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையைத் தாண்டி கீ சென்ஹொங், இலங்கையில் 6 ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது ஒன்றே அவரது இராஜதந்திரப் பணிக்கான தகுதியை, முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அவர் இலங்கையில் சீனாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக, எந்தளவுக்குப் பணியாற்றி இருக்கிறார் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

சீனத் தூதுவர் கீ சென்ஹொங், கொழும்பில் ஷங்ரிலா விடுதியில் கடந்த 23ஆம் திகதி, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 99வது ஆண்டு நிறைவு விழாவைத் தனது பிரியாவிடை நிகழ்வாகவும் நடத்தியிருந்தார். அதில் உரையாற்றிய போது, இலங்கையைத் தனது இரண்டாவது தாய் நாடு எனக் குறிப்பிட்டார். அந்தளவுக்கு அவர் இங்கு பரீட்சயமாகப் பழகியிருக்கிறார்.

சீனத் தூதுவர் கீ சென்ஹொங் கொழும்பில் பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றுகிறார் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 99வது ஆண்டு நிறைவையொட்டி கொழும்பு ஷங்ரிலா விடுதியில் நடைபெற்ற நிகழ்வில், தனது பிரியாவிடை உரையையும் நிகழ்த்திய சீனத் தூதுவர் கீ சென்ஹொங். (படம்: Kelum Shivantha / Sri Lanka Mirror)

2000 நாட்களுக்கு மேலாகத் தான் இலங்கையில் பணியாற்றியிருப்பதாகவும், தனது இராஜதந்திரப் பணியில் நீண்டகாலத்தை இலங்கையில் செலவிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையை இரண்டாவது தாயகம் எனக் கூறியிருப்பதன் மூலமாக, இலங்கைக்கும் தனக்கும் இடையிலான நெருக்கம் எந்தளவு உறுதியானது என்பதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கோவிட் தொற்றுக் காலத்தில் இலங்கைக்குச் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்குவதற்கு எடுத்த நடவடிக்கை மிக முக்கியமானது. கிட்டத்தட்ட 26 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளைச் சீனா வழங்கியது. இது இலங்கையில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளில் கிட்டத்தட்ட 72 சதவீதத்திற்கும் அதிகமாகும். அதையடுத்து, பொருளாதார நெருக்கடி காலத்தில் இலங்கைக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைப்பதிலும், கடன் மறு சீரமைப்பு நடவடிக்கைகளிலும், கீ சென்ஹொங் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியிருந்தார்.

கோட்டாபாய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க என மூன்று ஜனாதிபதிகளின் பதவிக்காலத்தில், அவர் இலங்கைக்கான தூதுவராகப் பணியாற்றியிருக்கிறார். அவரது இந்தப் பணிகளில் சீன அரசாங்கத்துக்கு முழு திருப்தி இருந்ததால் தான் அவரால் ஆறு ஆண்டுகள் இங்கு பணியாற்றக் கூடியதாக இருந்தது. சீனாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு அவர், பீஜிங்கிற்கு அதிகம் தேவைப்பட்டிருக்கிறார்.

மூலோபாய நலன்களைக் கருத்தில் கொண்டு, சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மாத்திரம், சீனா இவ்வாறானவர்களை வெளிநாடுகளில் தூதுவராகப் பணியாற்றுவதற்கு அனுமதித்திருக்கிறது. கீ சென்ஹொங்கிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது, அவருக்கான தனித்துவத்தை மாத்திரம் காண்பிக்கவில்லை, இலங்கையுடனான சீனாவின் உறவுகளின் முக்கியத்துவத்தையும் அது தெளிவாகக் காண்பித்திருக்கிறது.

இலங்கையுடனான உறவுகளைக் கையாளுவது அண்மைக்காலத்தில் அதிகம் சவாலானதாகவே இருந்து வந்திருக்கிறது. இவ்வாறான சூழலில், அந்த உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்குச் சாதகமான ஒருவரை உச்சமாகப் பயன்படுத்துவதற்குச் சீனா விரும்பியிருக்கிறது. சீன வெளியுறவு அமைச்சின், மிக நம்பிக்கையான மற்றும் மூலோபாய ரீதியாக வலுவான இராஜதந்திரியாக இவர் கருதப்பட்டார்.

இலங்கையின் அரசியல் தலைவர்கள், பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் மிக நெருங்கிய உறவை இவர் ஏற்படுத்தியிருந்தார். மகாநாயக்க தேரர்களுடன் மாத்திரம் அவர் உறவுகளைப் பேணியிருக்கவில்லை. வடக்கிற்குப் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்தார். மேற்சட்டை அணியாதவர்கள் தான் ஆலயத்திற்குள் செல்ல முடியும் என்ற நல்லூர் ஆலயத்தின் மரபைக் கண்டு அவர் பின்வாங்கவில்லை. மேற்சட்டையைக் கழட்டி விட்டு, வேட்டியுடன் ஆலயத்திற்குள் சென்று வழிபாடு செய்கின்ற அளவிற்கு, அவர் கவர்ச்சிகரமான இராஜதந்திரியாக மாறியிருந்தார்.

இவ்வாறான இயல்பு, அனைத்து தரப்புகளுடனும் அவர் சீரான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் கைகொடுத்தது. இது அவர் சீனாவின் நலன்களை இலங்கையில் உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் போதுமான தகைமையை அவர் கொண்டு இருந்தார் என்பதைக் காட்டுகிறது. அதனால் தான் அவரால் ஆறு ஆண்டுகள் வரை இலங்கையில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவிகளை ஒருங்கிணைப்பதில் அவர் காட்டிய அக்கறை அதிகமானது. அதிலும் கடந்த பல ஆண்டுகளாகப் பாடசாலை மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்குவது போன்ற உதவித் திட்டங்களின் ஊடாகச் சமூக மட்டத்திலும் அவர் அறியப்பட்டவராக மாறியிருந்தார்.

இலங்கையில் இருந்து திரும்பியுள்ள அவருக்குச் சீன வெளியுறவு அமைச்சில் உயர் பதவி அல்லது முக்கியமான நாடொன்றுக்கான தூதுவர் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது. அதேவேளை, இலங்கைக்கான புதிய தூதுவரைச் சீனா இன்னமும் அறிவிக்கவில்லை.

ஆனால், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்படுபவருக்குக் கொழும்பு இலகுவான பணியாக இருக்காது. ஏனென்றால், உலகில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கையை, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. இப்படிப் பலநாடுகளின் கண்காணிப்பில் இருக்கின்ற இலங்கையில், சீன தூதுவராகப் பணியாற்றுபவருக்குக் கூடுதல் பொறுப்பும் அழுத்தமும் இருக்கும். இங்கு சீனாவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துவதும் சவாலான விடயங்களைச் சமாளிப்பதும் இலகுவானது அல்ல. இது பீஜிங்கிற்குத் தெரியாத விடயம் அல்ல.

எனவே கொழும்பிற்கு அனுப்பப்படும் அடுத்த சீனத் தூதுவர், நிச்சயமாக கீ சென்ஹொங் போன்ற ஒருவராக இருக்க வேண்டும் என்பதில் பீஜிங் அதிக அக்கறை காண்பிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Post a Comment

0 Comments