elugai

செம்மணி புதைகுழி விரிகிறது: இன்னும் எத்தனை உண்மைகள் புதைந்துள்ளன?

விரிவடையும் செம்மணிப் புதைகுழி

விரிவடையும் செம்மணிப் புதைகுழி

கட்டுரையாளர் - கபில்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாவது கட்டத்திற்குத் திட்டமிடப்பட்ட 56 நாட்கள் நிறைவடைகின்ற நிலையில், இந்தப் புதைகுழி இன்னும் விரிவடைந்து கிடக்கிறது என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. கடந்த வியாழன் வரை, மொத்தமாக 105 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின் மூலம் 552 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 540 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் பெரும்பாலானவை ஆடைகளின்றியும், தடயப் பொருட்களின்றியும் காணப்படுவது பொதுவானதொரு பண்பாக உள்ளது.

செம்மணி-சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி மயானப் பகுதியை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது. அது இந்து மயானம் என்பதால், சடலங்கள் எரிக்கப்படும் வழக்கமே இருந்து வந்திருக்கிறது. சில அரிதான சம்பவங்களில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம்; குறிப்பாகச் சிறுவர்களின் சடலங்களைப் புதைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதுபோல, வழக்குகள் தீர்க்கப்படாத மரணங்கள் சட்ட நடைமுறைகளுக்கு அமைய மயானங்களில் புதைக்கப்படும் வழக்கமும் உள்ளது. அவ்வாறான சில சடலங்களும் மீட்கப்பட்டவற்றில் இருக்கக் கூடும்; அதனை முழுமையாக நிராகரிக்க முடியாது. உரிய பரிசோதனைகள், ஆய்வுகளின் பின்னர்தான் அதனை உறுதி செய்து கொள்ள முடியும். அவ்வாறான சில எலும்புக்கூடுகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் புதைக்கப்பட்டிருந்தன.

ஆனால், செம்மணி சித்துப்பாத்தி மயானப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமை 552ஐ தாண்டி விட்டது. சடலங்களைப் புதைக்கும் வழக்கம் கொண்ட கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்குத் தனியான இடுகாடுகள் உள்ள நிலையில், எந்தவொரு இந்து மயானத்திலும் இந்த அளவு சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதற்குச் சாத்தியமில்லை. பெரும் எண்ணிக்கையில் சடலங்கள் ஒழுங்குமுறையின்றி, தாறுமாறான முறையில் புதைக்கப்பட்டிருப்பது — இது ஒரு குற்றப் பிரதேசமாக இருந்துள்ளது என்று சந்தேகிக்கத்தக்க ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

சடலங்களைப் புதைப்பதற்கென இந்துக்களிடம் சில மரபுகள் உள்ளன; அவை எல்லா சந்தர்ப்பங்களிலும் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த மரபுகளுக்குப் பொருந்தாத வகையில்தான் பெருமளவிலான எலும்புக்கூடுகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

சடலங்களைச் சட்டரீதியாக, மரபுரீதியாகப் புதைக்கின்ற போது புதைகுழியின் ஆழம் அதிகமாக இருக்கும். ஆனால் இரண்டு மூன்று அடி புதைகுழிக்குள்தான் பெருமளவிலான எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்படிச் செம்மணிப் புதைகுழி பற்றிய சந்தேகங்கள் நீண்டு செல்கின்றன.

செம்மணிப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளுக்கான கால எல்லை முடிவுக்கு வரும் நிலையில், அதற்கு அருகேயுள்ள பகுதியில் கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக இரண்டு இடங்களில் சோதனை அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அகழ்வு மேற்கொள்ளப்பட்ட ஒரு புதைகுழியில் இருந்து முதல் நாளிலேயே 3 சடலங்கள் அடையாளம் காணப்பட்டன; அவற்றில் ஒன்றின் மண்டையோடு இருக்கவில்லை. இரண்டாவது புதைகுழியில் ஒரு எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இதன் மூலம், தற்போதுள்ள மயான எல்லைகளுக்கு அப்பாலும் செம்மணி மனிதப் புதைகுழி பரவியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் தோன்றியுள்ளன.

யாழ்ப்பாணம் — செம்மணி புதைகுழி அமைந்துள்ள பிராந்தியம் யாழ்ப்பாணம் — செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அமைந்திருக்கும் பிராந்தியம். அகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (படம்: Wikimedia Commons)

மூன்றாவது கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், அடுத்த கட்டமாகவும் அகழ்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; ஏனெனில் செம்மணிப் புதைகுழி அகழ்வு நிறைவடையவில்லை, அதற்கு அப்பாலும் புதைகுழிகள் உள்ளன என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த கட்ட அகழ்வு தொடர்பான மதிப்பீடுகள், நிதி ஒதுக்கீடுகள், நீதிமன்றத் தீர்மானங்கள் எடுப்பதற்குப் பல மாதங்கள் ஆகக்கூடும். கடந்த காலங்களில் இத்தகைய இழுபறிகள் காணப்பட்டிருந்தன; மீண்டும் அத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் நீடித்தால், அதற்கிடையில் மழைக்காலம் தொடங்கி விடும். வெள்ளத்தைக் காரணம் காட்டி, மீண்டும் பல மாதங்கள் அகழ்வுப் பணிகள் தடைப்படக்கூடிய ஆபத்தும் உள்ளது.

செம்மணியில் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மட்டுமன்றி, பல இடங்களிலும் புதைகுழி இருக்கிறது என்பதைச் சிறையில் மரணதண்டனைக் கைதியாக உள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெளிவுபடுத்தியிருந்தார். நியாயமானதொரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டால், அதன் முன்பாக உண்மைகளை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், அவர் தனது மனைவி ஊடாக ஜனாதிபதிக்குக் கடிதங்களை அனுப்பியிருந்தார். ஆனால் அந்தக் கடிதங்களுக்கு அதிகாரபூர்வமாக எந்தப் பதிலும் அனுப்பப்படவில்லை. இதுபற்றி அண்மையில் நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் அளித்த பதில், சோமரத்ன ராஜபக்ச மூலமாகச் செம்மணிப் புதைகுழி இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லையோ என்ற சந்தேகங்களையே தோற்றுவித்தது.

ஒரு குற்றம் நடந்திருக்கிறது என்றால், அதுபற்றித் தெரிந்த சாட்சியொருவர் அதனை வெளிப்படுத்த முன்வரும்போது, அரசாங்கமும், சட்ட அமுலாக்க அமைப்புகளும் அது தொடர்பான விசாரணைகளைத் தொடங்க வேண்டும். ஆனால் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, 1988ஆம் ஆண்டு செம்மணியில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களை அடையாளப்படுத்தத் தயார் என்று கூறிய போது, வெறுமனே 15 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. அதன் பின்னர் அந்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டதுடன், அகழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இப்போது மீண்டும் சோமரத்ன ராஜபக்ச புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளம் காட்டவும், இவற்றுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்று வெளிப்படுத்தவும் தயார் என்கிறார். ஆனால் அரசாங்கம் அவரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கம் அவரிடம் அதுபற்றி விசாரித்து, அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதனைச் செய்யாமல், இழப்பீடுகளுக்கான பணிப்பாளர் மூலம் அவரிடம் பேசியதாகவும், அவர் தனக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கேட்கிறார் என்றும் கூறி, வாயை அடைக்க முயன்றார் நீதியமைச்சர் ஹர்ஷன நாணக்கார.

கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் சோமரத்ன ராஜபக்ச. அவர் 28 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார். அவர் கேட்கும் பொதுமன்னிப்பை வழங்கி, செம்மணிப் புதைகுழிகளின் உண்மைகளை வெளியே கொண்டு வந்தால் என்ன என்பது ஒரு தரப்பின் வாதம். அதேவேளை, அவர் தண்டனையில் இருந்து தப்பித்து விடுதலையாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார் என இன்னொரு தரப்பு வாதமும் உள்ளது. இதில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்ற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.

நல்லூர், யாழ்ப்பாணம் — செம்மணி சித்துப்பாத்தி பகுதிக்கு அருகிலுள்ள பிரிவு நல்லூர் பிரிவு, யாழ்ப்பாணம் — செம்மணி-சித்துப்பாத்தி புதைகுழி அமைந்துள்ள நிர்வாகப் பிரிவு. (படம்: Wikimedia Commons)

சோமரத்ன ராஜபக்சவைப் பயன்படுத்தி உண்மைகளை வெளியே கொண்டு வந்தால், மேலும் புதைகுழிகளை அடையாளம் காணும் போது அரசாங்கத்தின் மீதான பொறுப்பு அதிகமாகும். குற்றமிழைத்தவர்களை முழுமையாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்டளவானோரையாவது சட்டத்தின் முன் நிறுத்தக்கூடிய வாய்ப்பு அதன் மூலம் உருவாகலாம். அரசுப் படையினரை அவ்வாறு நீதியின் முன் நிறுத்த முயன்றால், அதற்கு எதிராகத் தெற்கில் அரசியல் பிரசாரம் முன்னெடுக்கப்படும் என்ற அச்சம் அரசாங்கத்திடம் உள்ளது. ஏற்கெனவே, விமல் வீரவன்ச சிங்களவர்களின் வரிப்பணத்தில் செம்மணிப் புதைகுழிகள் அகழப்படுவதாக இனவாதப் பிரசாரத்தைக் கிளப்பியிருக்கிறார். இதுபோல் இன்னும் பலர் அரசுப் படைகளைக் காப்பாற்றும் இலக்குடன் பிரசாரங்களைத் தீவிரப்படுத்துவார்கள் என்ற பயம் அரசாங்கத்திடம் உள்ளது.

இது மாத்திரமன்றி, கடந்தகால அரசாங்கங்களுடன் ஜேவிபியும் ஒரு அங்கமாகவோ, பக்கத்துணையாகவோ இருந்திருப்பதால், பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு அதற்கும் இருக்கிறது. எனவேதான் இந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முற்படுகிறதா என்ற சந்தேகங்களும் உள்ளன.

செம்மணிப் புதைகுழிக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இப்போது மேற்கொள்ளப்படுவது வெறும் புதைகுழி அகழ்வு மட்டும்தான்; அதுகூட எவ்வளவு நாள் நீடிக்கப் போகிறது என்று கூற முடியாதுள்ளது, ஏனெனில் புதைகுழிகளின் எல்லை போகப்போக விரிந்து கொண்டிருக்கிறது. இதன் அகழ்வுகளை முழுமைப்படுத்த வேண்டுமானால், இதனுடன் தொடர்புடையவர்கள், சாட்சிகளைக் கொண்டு எல்லாப் புதைகுழிகளையும் அடையாளம் கண்டு அகழ வேண்டும். அதற்கான வாய்ப்பு சோமரத்ன ராஜபக்ச மூலம் கிடைத்திருந்தும், அரசாங்கம் அதனைப் பயன்படுத்த மறுக்கிறது. அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுகிறாரா இல்லையா என்பது அடுத்த விடயம்; அவர் சொல்வது உண்மையா என்று கூட அரசாங்கம் விசாரிக்கத் தொடங்கவில்லை. இது இந்த விடயத்தில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையைச் சந்தேகிக்கத் தூண்டுகிறது.

இப்போது செம்மணிப் புதைகுழி அகழ்வு அனுமான் வால் போல நீண்டு கொண்டிருக்கிறது. நீண்டு செல்லும் அகழ்வுப் பணிகளை முடிக்கும் போது, மரபணுச் சான்று உறுதிப்படுத்தக்கூடிய, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் இறந்து போயிருப்பார்கள். ஏற்கெனவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி வந்த 300க்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்கள் இறந்து விட்டனர். இவ்வாறானவர்களின் மரணத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட பலரின் வழக்குகளும் விடை கிடைக்காத கேள்விகளாகவே முடிந்து விடும். எனவே, அவசர கதியில் மரபணுச் சோதனைகள், சட்ட மருத்துவ ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருந்தும், அதில் அக்கறை செலுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலையில், செம்மணிப் புதைகுழி விரிவடைந்து செல்வது, இது இன்னும் எத்தனை பயங்கரமானதாக இருக்கப் போகிறதோ என்ற அச்சத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment

0 Comments