இந்தியாவின் சந்தேகம்
அண்மையில் ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கையும், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவையும் தனித்தனியே சந்தித்துப் பேசியிருந்தது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொதுவாகப் பேசப்பட்ட விடயங்களில் ஒன்று, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது பற்றியதாகும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைப் பொறுத்தவரையில், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவோம் என அவர் பதிலளித்திருக்கிறார்; ஆனால் அதற்கான காலக்கெடு எதையும் அவர் முன்வைத்திருக்கவில்லை.
ஜனாதிபதி அனுரவிடம் இதனை வலியுறுத்தியது தொடர்பாக, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை எடுத்துக் கூறியிருந்தது. அப்போது இந்தியத் தூதுவர், புதிய அரசியலமைப்பை வலியுறுத்துகின்ற போது கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய அச்சம் இந்தியாவிடம் இருப்பதை இது புலப்படுத்தியிருக்கிறது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால், தற்போதுள்ள அரசியலமைப்பில் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டம் இல்லாமல் போய்விடும். இதனால் மாகாண சபைகள் காலாவதியாகிப் போய்விடுமா என்ற சந்தேகம் இந்தியாவிடம் ஏற்பட்டிருக்கிறது.
13வது திருத்தச் சட்டமும் மாகாண சபைகளும் — வரலாற்றுப் பின்னணி
1987ஆம் ஆண்டு இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையீடு செய்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலமாக அந்தத் தலையீட்டைச் செய்தபோது, இனப் பிரச்சினைக்கான தீர்வு என, 13வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து மாகாண சபைகளை உருவாக்குகின்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இது தமிழர்களுடன் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அப்போது அரசியல் அரங்கில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஆயுதப் போராட்ட அரங்கில் இருந்த அமைப்புகளும், இதனை ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் மாநிலங்களுக்கு இருந்த உரிமைகள், அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
ஆனாலும், வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு தனியான நிர்வாக அலகை உருவாக்கி, தனித்துவமான ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவது இந்தியாவின் திட்டமாக இருந்தது. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன தந்திரமான முறையில் அதனை மாற்றி, எல்லா மாகாணங்களுக்கும் தனித்தனியான நிர்வாக அலகுகளை உருவாக்கி, தெற்கில் தனக்கு எதிர்ப்பு எழாதபடி பார்த்துக் கொண்டார் எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது முழு உண்மையல்ல; வட-கிழக்கு மாகாணங்களுக்கான தனித்துவமான அதிகாரப் பகிர்வைத் தரம் குறைப்பதற்காகவே, ஏனைய மாகாணங்களிலும் அவர் சபைகளை உருவாக்கினார் என்பதுதான் உண்மை. இதன் மூலம், தமிழர்களுக்குத் தனித்துவமான தீர்வு ஒன்றை வழங்காமல் அவர் தடுத்தார்.
1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன — 13வது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபைகளையும் உருவாக்கிய பின்னணியில் இருந்தவர். (படம்: Wikimedia Commons)
ஆனால், அந்த மாகாண சபைகளையும் 13வது திருத்தச் சட்டத்தையும் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்கள் கடைசிவரை அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியும், சில தமிழ்ப் போராளி அமைப்புகளும் அதனை ஏற்றுக் கொண்டதுடன், வட-கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டன. வட-கிழக்கு மாகாண சபை குறுகிய காலத்தில் கலைக்கப்பட்ட பின்னர், அதற்குத் தேர்தல் நடைபெறவில்லை.
2006ஆம் ஆண்டு வடக்கு-கிழக்கு மாகாணங்களைத் தனித்தனி நிர்வாக அலகுகளாகப் பிரித்து இருவேறு மாகாண சபைகளை உருவாக்குவதற்கு ஜேவிபி வழிவகுத்தது. உயர்நீதிமன்றத்தில் ஜேவிபி தொடுத்த வழக்கினால், 1987ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தன தற்காலிகமாக ஒன்றிணைத்து வர்த்தமானி மூலம் அறிவித்த பிரகடனம் உயர்நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்டது. இதனால், வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனி மாகாண சபைகள் உருவாகும் நிலை ஏற்பட்டது.
2008ஆம் ஆண்டு போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போது, மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினார். ஆனால் 2009இல் போர் முடிவுக்கு வந்த போதும், அவர் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தார். இந்தியாவின் கடும் அழுத்தங்களை அடுத்தே, 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. ஐந்தாண்டு பதவிக் காலத்திற்குப் பின்னர், அது மீண்டும் உறக்க நிலைக்குச் சென்று விட்டது. வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் மாத்திரமின்றி, நாட்டின் எல்லா மாகாண சபைகளுமே இப்போது உறக்க நிலையில்தான் இருக்கின்றன. அதனை மீண்டும் தட்டி எழுப்பி இயங்கச் செய்வதற்குத் தமிழ் பேசும் கட்சிகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
புதிய அரசியலமைப்பும் இந்தியாவின் அச்சமும்
தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு என, 13வது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபைகளையுமே இந்தியா குறிப்பிட்டு வருகிறது; தமிழ் மக்களையும் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ள வைக்கவும் முற்படுகிறது. இவ்வாறான நிலையில்தான், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13வது திருத்தச் சட்டமும் மாகாண சபைகளும் காணாமல் ஆக்கப்பட்டு விடும் என்ற கவலை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் மக்களுக்குக் கௌரவமாக, நீதியாக, சமத்துவமாக வாழத்தக்க ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி அளித்திருக்கிறது. இந்தியப் பிரதமர் மோடி அதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.
தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தை "அ"விலிருந்து தொடங்கும் எண்ணம் இல்லை. நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளின் மூலம் உருவாக்கப்பட்ட வரைவின் தொடர்ச்சியாகவே அது இருக்கும் என, தற்போதைய ஜனாதிபதி முன்னர் வாக்குறுதி அளித்திருந்ததாகத் தமிழ் பேசும் கட்சிகள் சில கூறுகின்றன. இதனால்தான், தற்போதைய அரசாங்கம் ஏகீய ராஜ்ய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறது என, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. அந்த எச்சரிக்கையை மெய்ப்பிக்கும் வகையிலான சில சமிக்ஞைகள் இப்போது தென்படத் தொடங்கியுள்ளன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க — புதிய அரசியலமைப்பு தொடர்பான வாக்குறுதியும், அதன் மீதான இந்தியாவின் கவலையும் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன. (படம்: Wikimedia Commons)
இந்தக் கட்டத்தில்தான் இந்தியா, புதிய அரசியலமைப்புக்கான பணிகளை ஆரம்பத்திலிருந்து தொடங்குவது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கிறது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாமல் ஆக்கும்போது, அதற்கு மாற்றான அதிகாரப் பகிர்வு எவ்வாறு கொண்டுவரப்படும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என இந்தியா கூறியிருக்கிறது. ஏனெனில், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பல கட்டங்கள் உள்ளன; சில வேளைகளில் அதனை நிறைவேற்ற முடியாமலும் போகலாம், அது பாதி வழியில் திரிசங்கு நிலையையும் அடையலாம். 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் காலத்தில் கொண்டு வரப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் அதற்கு நல்லதொரு உதாரணம்; அந்தச் சட்டத்தினால்தான் இன்று வரை மாகாண சபைகள் இயங்க முடியாத நிலையில் இருக்கின்றன. இவ்வாறான நிலையில்தான் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, அதிகாரப் பகிர்வு விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு
ஆனால், இதே இந்தியா தான் உருவாக்கிய 13வது திருத்தச் சட்டத்தில், ஜே.ஆர். ஜயவர்த்தன அதிகாரங்களை மற்ற மாகாணங்களுக்கும் பகிர்ந்து கொடுத்த போது எதிர்க்கவில்லை. ஜே.ஆருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க மறுத்த போதும், உயர்நீதிமன்றம் மூலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போதும் இந்தியா எதிர்க்கவில்லை; அந்தச் சூழலைப் பொருத்தமான முறையில் கையாளவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பின்னர் மாகாண சபைகளின் அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சட்டங்கள் மூலமாகவும், வர்த்தமானி அறிவித்தல் மூலமாகவும் பறிக்கப்பட்ட போதும் இந்தியா எதிர்க்கவில்லை. ஆனால் இப்போது, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் இறங்குகின்ற போது, 13வது திருத்தச் சட்டத்தின் நிலை பற்றி இந்தியா தமிழ் பேசும் கட்சிகளிடம் எச்சரித்திருக்கிறது.
கோட்டையில் அமைந்துள்ள இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் — புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களுக்கு மையமாக இருக்கும் இடம். (படம்: Wikimedia Commons)
கடந்த வாரம் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான ஆசிரியர் தலையங்கம், 13வது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபைகளையும் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைகள் என ஒப்பீடு செய்திருந்தது. இது 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகத் தென்னிலங்கையில் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகாரங்கள் பகிரப்பட்டால், இத்தகைய அதிருப்திகள் களையப்படக் கூடும். ஆனால் தெற்கிலுள்ள தரப்புகள் புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தெளிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வை வழங்குவதற்கு முன்வருமா என்பதே கேள்வி.
தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை வழிநடத்தும் ஜேவிபி, இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போது அதனை ஏற்றுக் கொள்ளவில்லை; 13வது திருத்தச் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவற்றிற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியிருந்தது. இந்த அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பில் இருந்து 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு முற்படுகிறதா என்ற கேள்வி முக்கியமானதாக இருக்கிறது.
இத்தகைய சந்தேகங்களுக்குத் தெளிவான பதிலுடன்தான் புதிய அரசியலமைப்புக்கான நகர்வில் இறங்க வேண்டும். புதிய அரசியலமைப்பு முக்கியமானதொரு தேவையாக இருந்தாலும், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றாத, அதிகாரப் பகிர்வை உறுதி செய்யாத ஒன்றாக அது இருந்தால், அந்த அரசியலமைப்பு கொண்டு வரப்படுவதில் அர்த்தம் ஏதும் இல்லை.
0 Comments