செம்மணி விவகாரம்...! பொறியில் சிக்குவார்களா கடந்த ஆட்சியாளர்கள்..?
செம்மணி புதைகுழி விவகாரத்தில் முன்னைய ஆட்சியாளர்களைப் பொறியில் தள்ளும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இறங்கியுள்ளதாகவே தெரிகின்றது.
கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல், மோசடிகள், பாதாள உலக நபர்களுடனான தொடர்புகள், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுக்குத் துணை போனமை உள்ளிட்ட பல குற்றச்சம்பவங்கள் குறித்து அலசி ஆராய்ந்து கைதுகளை மேற்கொண்டு வரும் அநுர அரசாங்கம், இவை போதாது என்ற மனநிலையில் இருக்கின்றதோ தெரியவில்லை.
மேற்படி சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் போது அது ஒரு உள்ளூர் விவகாரமாகவே பார்க்கப்படும். முன்னாள் ஆட்சியாளர்களின் கீழ் செயற்பட்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளின் கைது சம்பவங்கள் ஊடகங்களுக்குச் செய்திகள் மாத்திரமே.
செம்மணி விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி ஆர்வம் காட்டுவதாகவே தெரிகின்றது. கடந்த ஆட்சியாளர்கள் கடந்து சென்ற மிகக் கொடூரமான மனிதப் பேரவலத்தை வெளிக்கொணர்ந்து, அதைச் சர்வதேசமயப்படுத்தக் கடும் பிரயத்தனங்களில் அநுர இறங்கியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் அகழ்வாராய்ச்சி இடம்பெறும் இடத்துக்குச் சென்று வருவதற்கான அனுமதி கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பித்த போது அரசாங்கம் மறுப்பின்றி அவர்களுக்கு அனுமதி வழங்கியமையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
சாதாரண மக்களுக்கு ஏன் இவ்வாறு இடம்பெறுகின்றது என்ற கேள்விகள் எழலாம். தேசிய மக்கள் சக்தி என்பது தற்போது நாட்டை ஆளும் ஒரு அரசியல் கூட்டணியாகும். ஆனால் அதற்குத் தலைமை தாங்குவது மக்கள் விடுதலை முன்னணி. இரண்டுக்குமே தலைவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக இப்போதும் விசாரணைகள் இடம்பெற்று வந்தாலும், அவர்களைக் கைது செய்வதற்கான வலுவான ஆதாரங்களை அநுர அரசாங்கம் திரட்டி வருகின்றது. அவ்வாறு கைது செய்யப்பட்டாலும் அவர்கள் செய்ததை நியாயப்படுத்த தென்னிலங்கையில் பேரினவாத சக்திகள் தாராளமாக இருக்கின்றன.
எனவே இவர்களுக்கு உள்ளூரில் தண்டனை வாங்கிக் கொடுப்பதோ அல்லது அபராதங்கள் விதிப்பதோ போதாது என்பதால், சர்வதேச ரீதியாக இவர்களை ஓரங்கட்டும் முயற்சிகளிலும் அவர்களுக்குச் சில நாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்படும் அளவுக்குக் காய்களை நகர்த்த வேண்டும் என்றும் அநுர அரசாங்கம் சிந்திப்பது போன்று தெரிகின்றது.
அதில் மூன்று தெரிவுகள் மாத்திரமே இப்போதைக்கு அநுர அரசு வசம் உள்ளன.
- 🔸 1) போர்க்குற்றங்கள்
- 🔸 2) ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்
- 🔸 3) காணாமல் போனோர் விவகாரம்
முதலாவது விடயத்தைக் கிண்டிக் கிளறுவதற்கு நடப்பு அரசாங்கம் முயற்சிக்காது. அது இராணுவ வீரர்கள் மற்றும் கடும்போக்கு சிங்கள பௌத்த மக்களோடு தொடர்புடைய விவகாரம். அது பூமராங்காகத் திரும்பித் தம்மையே தாக்கும் என்பது அநுர அரசாங்கத்துக்குத் தெரியும். போர்க்குற்ற சம்பவங்களைக் கடந்து சென்ற ஆட்சியாளர்கள் வரிசையில் தேசிய மக்கள் சக்தியும் நிச்சயம் இடம்பிடிக்கும் எனலாம்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் பல புதிய உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய தான் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த எழுதாணை மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் திகதி மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோர் விவகாரத்தை இழுத்தடிப்பு செய்யவே அலுவலகம் ஆரம்பித்து விசாரணைகள் நடத்தினர் கடந்த ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது செம்மணி விவகாரத்தோடு இவ்விடயம் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுவதால் சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலிருந்து இந்த விவகாரம் தூசு தட்டப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் ரவிகரன் எம்.பி. உரையாற்றியிருந்தமை முக்கிய விடயம்.
ஆனால் சந்திரிகாவுக்குப் பிறகு இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளாது அசட்டையாகக் கடந்து மகிந்த, மைத்ரி, கோட்டாபய, ரணில் ஆகியோரையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். அதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்கின்றதோ தெரியாது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 471 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 455 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
40ஆவது நாளான கடந்த புதன்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளடங்கிய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினரும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத் தூதுவர்களும் என 8 உறுப்பினர்கள் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடும் நிபுணர்கள் குழுவோடும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் கலந்துரையாடினர். குழுவினர் அவ்விடத்துக்கு வருகை தந்த போது வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர். செம்மணி அவலத்தைச் சர்வதேசம் விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். இது தொடர்பில் பல கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மொரேனோ, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுத் தளத்திற்கு விஜயம் செய்த போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவினர் ஒருவரைத் தேற்றும் காட்சி. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து தூதுவர்களும் உடன் இருந்தனர். (படம்: Jaffna Monitor)
புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் கடந்த வியாழக்கிழமை (30) செம்மணி பகுதியில் நடைபெற்றது. ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்டின் அவர்களின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதா ததேயு திருச்சுரூபம் முன்பாக ஆரம்பமான பேரணி, செம்மணி சந்தியைச் சென்றடைந்தது.
பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் அறிக்கையை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்டின் வாசித்தார். அவ்வறிக்கையில், 2026ஆம் ஆண்டு ஆடி மாதம் 21ஆம் திகதி வரையில் சிறுவர்கள் மற்றும் சிசுக்களின் எச்சங்கள் உட்பட 454 மனித என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சுயாதீன சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், மனித எச்சங்களை அகழ்ந்தெடுத்தல், அடையாளம் காணல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை 'மினசோட்டா நெறிமுறை' (Minnesota Protocol) உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சுயாதீன டி.என்.ஏ. (DNA) பரிசோதனை, குடும்பங்களின் பங்கேற்பு மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், செம்மணி அகழ்வுப் பணிகளை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தொடர்ந்து கண்காணித்து, சான்றுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக யாழ்ப்பாணத்தில் ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறையின் பிரசன்னம் அவசியமானது என்றும் கோரப்பட்டுள்ளது.
பொது மக்கள், உறவுகளை இழந்தவர்கள் மாத்திரமல்லாது தற்போது சிவில் மற்றும் ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் செம்மணி விவகாரத்துக்கு நீதி வேண்டும் என களமிறங்கியுள்ளனர். மட்டுமன்றி, இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கும் தமிழ்த் தரப்பு சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி வருகின்றமை முக்கிய விடயம்.
செம்மணி விவகாரம் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமானதொரு மனிதப் பேரவலமாக உருப்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதைச் சர்வதேசமயப்படுத்தினால் இறுதியில் இந்த விவகாரம் போர்க்குற்றங்கள் வரிசையில் இடம்பிடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் மறுக்க முடியாது. ஆனால் அரசாங்கம் இதை எவ்வளவு தூரம் கொண்டு செல்லும் என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாதுள்ளது. இதை மனிதாபிமான ரீதியில் அணுக அரசாங்கம் முயற்சி செய்கின்றதா அல்லது இதன் பின்னணியில் வேறு நிகழ்ச்சி நிரல்கள் உள்ளனவா என்பதைப் பொறுத்திருந்து பார்த்தல் வேண்டும்.
எனினும் இந்த விவகாரத்தில் கடந்த ஆட்சியாளர்களான சந்திரிகா, மகிந்த, மைத்ரி, கோட்டாபய, ரணில் ஆகியோர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளதையும் மறுக்க முடியாது.
0 Comments