அரசியல் மாயையின் உடைவு
எப்போதும் மக்கள் தங்களுக்குத் தேவையான விடயங்களுக்குள் சென்றுவிடாதபடி, சிந்திக்காதபடி வைத்துக் கொள்வதற்கே அரசாங்கங்கள் சிந்திக்கும். இது ஒரு அரசியல் மாயையாகும்; தமிழர்களது அரசியலுரிமை சார்ந்த விவகாரமாகும். தமிழ்த் தேசியம், போர்க்குணம், சுயநிர்ணய உரிமைக்கான கோசமும் நிலைப்பாடும் இப்போது இதற்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் தாயகச் செயலணியால் கடந்த வருடம் நடத்தப்பட்ட நீதியின் ஓலம் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் இவ்வருடமும் நடைபெறவிருக்கிறது. இதன் நோக்கமும் அடைவும் எந்தளவுக்குச் சாத்தியமானது என்பதற்கப்பால், தமிழர்களை ஒருங்கிணைப்பதும் தமிழ்த் தேசியத்தின் நிலைப்பாட்டை எதிர்கால சந்ததியினருக்குக் கடத்தும் செயற்பாடு நடைபெறவேண்டும் என்பது கட்டாயமானது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றமானது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா என்றால், அந்தக் கேள்விக்குப் பதிலைக் காண்பது கடினமானது என்பதுடன், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கூட்டாளிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றுவதற்கான நகர்வுகளே நடைபெற்று வருகின்றன.
தற்போதைய அரசாங்கம் சத்தமின்றி, சலசலப்பின்றி, சிரித்த முகத்துடன் தமிழர் தாயகத்தில் தனி சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் இருந்துகொண்டே இருக்கின்றன. தேர்தல் காலங்களில் இந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகளை வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் நம்பி, அதன் பிரதிநிதிகளுக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து தமிழ்த் தேசியத்தைப் புறந்தள்ளியிருப்பதாகவே ஜே.வி.பி. நம்பிக்கை கொண்டிருக்கிறது; அதற்கேற்ற நகர்வுகளையும் மேற்கொள்கிறது.
இந்த நிலையில், தமிழர்கள் தேசிய அரசியற் கட்டமைப்பை இழந்துவிடாதபடியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்ற வகையில் தாயகச் செயலணியின் நடவடிக்கைகள் அமைந்திருப்பது பார்வைக்குரியது. ஆனால், தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் என்ற ரீதியில் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பு அதியுச்ச பலம் பெற்றிருந்த காலத்திலிருந்து அதனைக் கடந்து, ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும் சிதைக்கப்பட்டு, தமிழ்த் தேசியத் தேர்தல் அரசியலும் ஒரு பலவீனமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பலவீனங்களைத் தெளிவாக அறிந்து தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.
ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் தமிழ் இனத்துக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தி தனது ஆக்கிரமிப்பு அதிகாரங்களைத் திணித்துவருகின்ற வேளையில், முன்னெடுக்கப்பட்டுவரும் தாயகச் செயலணியின் முன்னெடுப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற வேலைத்திட்டங்களைத் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினர் நகர்த்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கடந்த கால அரசாங்கங்களைப் போலவே இந்த நாட்டை முழுமையாகச் சிங்கள பௌத்த நாடாக மாற்றும் முழுமையான திட்டம் முன்னெடுக்கப்படுவதும், "ஒரே நாடு ஒரே கொள்கை" என்ற கோசம் ஒரு மாயை என்பதும் தமிழ் மக்களுக்குக் கொண்டுசேர்க்கப்படவேண்டும் என்பதுடன், சர்வதேச ரீதியான நீதி கோரலுக்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படவேண்டும். இதற்காக எதிர்வருகின்ற தேர்தல்களையும் சரியான முறையிலே கையாளுவதற்கும் திட்டமிடப்பட வேண்டும். அதற்கு மக்களைத் தயார்படுத்துவதே இந்த இடத்தில் தேவையாகும்.
இலங்கையில் உருவாகியிருக்கின்ற இடதுசாரி மரபில் வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினை அணுகும் வகையில் முற்றுமுழுதான மாற்றமுடையதாகவே இருக்கும் என்றே அனைவரும் நம்புகின்றனர். நாட்டில் ஊழலை ஒழித்து நீதியை நிலைநாட்டுவோம் என்று உறுதிமொழி கூறி மக்கள் ஆதரவு பெற்று ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, கடந்த கால அரசுகள் போலவே உள்ளகப் பொறிமுறை மூலமே நடவடிக்கை தொடரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தாலும், இம்முறை கொண்டுவரப்படும் தீர்மானம் மூலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தப்படக் கூடும் என்றும் நம்பிக்கை காணப்படுகிறது.
இலங்கையைக் கூண்டிலேற்றிப் பார்த்துவிடவேண்டும் என்று துடிக்கும் ஈழத் தமிழர்கள் தமது தொடர்ச்சியான செயற்பாடுகளை நாட்டிலும் புலத்திலும் மேற்கொண்டு வருகின்றனர். அதிலொன்றுதான், தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில், 'நீதியின் ஓலம்' எனும் தொனிப்பொருளில் கையெழுத்துப் போராட்டம் கடந்த வருடம் நடத்தப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினரால் யாழ். செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட 'நீதியின் ஓலம்' கையெழுத்துப் போராட்டம் — மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னரே கையெழுத்துப் பணி ஆரம்பமானது. (படம்: pathivu.com)
கையெழுத்துப் போராட்டமும் பேரணியும் ஐந்து நாள் கையெழுத்துப் போராட்டமாக வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றன. அதே நேரத்தில், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. இப்போராட்டமானது, "உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம்; தமிழின அழிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி நிற்கிறோம்" என நடத்தப்பட்டது. அத்துடன், சிவில் தரப்புகளும் அரசியல் தரப்புகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குக் கடிதங்களை அனுப்பியிருந்தன.
இலங்கையில் இனஅழிப்பு நடவடிக்கைகள், வலிந்து காணாமலாக்கப்பட்டமைகள், யுத்த நெறிமுறைகளுக்கு முரணாக நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச சமூகத்தின் முழுமையான பங்குபற்றுதலுடன் இன்றுள்ள அரசானது தகுந்த விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய தீர்வுகளை வழங்க முன்வரவேண்டும் என்று கோருவதாகவே போராட்டம் நடைபெற்றிருந்தது. ஒரு வருடம் கடந்த போதிலும் அதற்கான பலாபலன் என்ன என்று கேட்கும் அளவிலேயே நிலைமைகள் காணப்படுகின்றன. இதனை மறுப்பதற்கில்லை என்பதே உண்மை. ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையானது ஆங்கிலேயர்களின் காலனித்துவ நடவடிக்கை காரணமாக உருவானது. அதற்கான முழுப் பொறுப்பினையும் பிரிட்டன் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்ற கோசம் இருக்கின்ற நிலையில், தமிழர்களின் இறைமை குறித்து 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொண்ட நடவடிக்கை சுட்டிக்காட்டப்பட்ட வண்ணமிருக்கிறது.
இலங்கையில் இனப்படுகொலைகள் நடந்தன என்பதைச் செம்மணியிலும், மன்னாரிலும் என இன்ன பல இடங்களிலும் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் ஆதாரங்களாக உறுதிப்படுத்தினாலும், சர்வதேசப் பொறிமுறையின்றி முழுமையான தீர்வுகிடைக்கப்போவதில்லை. எனவே, நடந்து முடிந்த இனஅழிப்பு நடவடிக்கைகள், வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள், யுத்த நெறிமுறைகளுக்கு முரணாக நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச சமூகத்தின் முழுமையான பங்குபற்றுதலுடன் விசாரணை நடத்தப்படுவதே ஒரே வழி என்பது தமிழர்களுடைய நிலைப்பாடாகத் தொடர்கிறது. இது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் தேவையானதாகும்.
அந்த வகையில், தமிழினப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரும் 'நீதியின் ஓலம் 2' எனும் கவனயீர்ப்புப் போராட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை முன்னெடுக்கவுள்ளதாகத் தாயகச் செயலணி அறிவித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியை மையப்படுத்தி ஈழத் தமிழர்கள் மீது அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் சிறு சாட்சியம் மட்டுமே என்ற நிலை காணப்பட, நடைபெறும் இப்போராட்டம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நடத்தப்படுவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
1996ஆம் ஆண்டில் அரச படைகளால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட, 16 வயதுடைய பாடசாலை மாணவியின் வழக்கின் மூலமாகவே இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. இவ்விடயத்தை மூடிமறைக்கும் முயற்சிகள் அரசுத் தரப்பால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் மேற்கொண்ட தொடர்ச்சியான அழுத்தங்களின் மூலமே இதுவரை 480ஐ தாண்டிய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை நடைபெற வேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டுவந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும். தமிழர்கள் மீது இனப்படுகொலை செய்த படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா போல அனைத்து நாடுகளும் பயணத் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் உறுதிசெய்ய வேண்டும். ஐ.நா. சபை தமிழர்களின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இம்முறை நீதியின் ஓலம் 2 மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
எது எவ்வாறானாலும், தேர்தல் அரசியலென்பது எமது இனத்தின் இருப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துவிட முடியாது என்பதும், உரிமை மறுக்கப்படும் சமூகம் தொடர்ச்சியாகப் போராடுவதைத் தவிர வழியில்லை என்பதையும் உணர்ந்து, நிலைப்பாட்டில் மாற்றமின்றி நகர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் தமிழர்கள் மனதில் கொள்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்பதே முடிவு. அந்தவகையில், நீதியின் ஓலம் ஒத்துழைப்புடன் நகர்த்தப்படுவதும் கட்டாயமாகும்.
0 Comments