முட்டாள்களாக்கப்படும் மக்கள்
விரைவில் பயங்கரவாத தடைச் சட்டம் ஒழிக்கப்படும் என்றும், திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியிருக்கிறார். கடந்த திங்கட்கிழமை வர்த்தக சமூகத்துடன் இடம்பெற்ற ஒரு சந்திப்பின்போது, அவர் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.
அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நாடு இழக்கக் கூடிய ஆபத்து இருப்பதாக, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகச் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்திருந்த சூழலில் தான், ஜனாதிபதி அனுர இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக ஆடை ஏற்றுமதி வர்த்தக நிறுவனங்களுடனான சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகையை அதிகம் நம்பியிருக்கின்ற இலங்கையின் தொழில்துறைகளில், ஆடை ஏற்றுமதித் துறை முக்கியமானது. அதனால் தான் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பது பற்றி ஆடை ஏற்றுமதித் துறை வர்த்தகர்கள் மத்தியில் இந்தக் கருத்தை பரிமாறியிருக்கிறார்.
பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்ற நிலையில், இந்த நிலைப்பாட்டிற்கு முன்னர் இணங்கியிருந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இப்போது புதிய சட்டம் ஒன்றின் ஊடாக அதனை பதிலீடு செய்ய முயன்று வருகிறது. புதிதாக கொண்டு வரப்படும் சட்டத்திற்கு பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் என முன்னர் பெயரிடப்பட்டது. அந்த சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், திருத்தங்கள் கோரப்பட்டு இப்போது புதிய சட்ட முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
பயங்கரவாதத்தை தடுக்கும் அல்லது எதிர்க்கும் ஒரு சட்டத்தைக் கொண்டு வரும்போது, பயங்கரவாதம் என்பதற்கு தெளிவான வரையறை ஒன்று தேவை. அதனை தீர்மானிக்கும் விடயத்தில் அரசாங்கமும் சட்ட நிபுணர்களும் கடும் சவால்களை எதிர்கொண்டிருப்பது உண்மை. அந்த வரையறையை தீர்மானிக்கின்ற போது மக்களின் அடிப்படை உரிமைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டியது முக்கியம். அதனால் தான், மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இருக்கும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கொடுக்க வேண்டியிருந்திருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றம் — பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலான புதிய சட்ட மசோதா குறித்த விவாதங்கள் நடைபெறும் இடம்.
அரசாங்கம் இப்போது, பின் கதவால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு அல்லது தடுப்பு என்ற ரீதியாக இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பதிலாக, திட்டமிட்ட குற்றங்களை தடுப்பது என்ற புதியதொரு முறையில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றக் கும்பல்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் கப்பம் கோருதல், பணம் பறித்தல், ஒப்பந்த கொலைகளை முன்னெடுத்தல் என விரிவான குற்றச்செயல்களில் இவை ஈடுபடுகின்றன. பாதாள உலக குழுக்கள் இலங்கைக்கு முக்கியமான சவாலாக இருப்பது உண்மை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இத்தகைய குழுக்களை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. இத்தகைய குற்றக் கும்பல்களை சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றக் கும்பல்களை தடுத்து வைப்பதற்காக, பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு இணையான ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் என, அரசாங்கம் தன் செயற்பாடுகளை நியாயப்படுத்த முற்பட்டிருக்கிறது. திட்டமிட்ட குற்றங்களை தடுப்பதற்கான சட்டம் என்ற போர்வையில், தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பல விடயங்கள் உள்ளடக்கப்படக் கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. இதன் உள்ளடக்கம் இன்னமும் வெளிவராவிட்டாலும் அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.
அரசாங்கம் மிகத் தந்திரமாக ஒரு பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது. திட்டமிட்ட குற்றக் கும்பல்களை கையாளுவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த தொடங்கிய போதே, இந்த இரண்டையும் இணைக்க அரசாங்கம் முற்படுகிறது என்பது தெளிவாகி விட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில சிக்கலான விடயங்களை இப்படித்தான் கையாள முற்படுகிறது. இதன் மூலம் எதிர்ப்புகளை தடுக்க அல்லது சமாளிக்க திட்டமிடுகிறது.
அண்மைக்காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாறி மாறி நீதிமன்ற விசாரணைகளுக்குள்ளே சிக்க தொடங்கியிருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தின் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமான கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் பொறுப்பேற்க வேண்டியவர்கள். ஆனால் தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது போர்க்கால மீறல்கள் அல்லது சம்பவங்கள் தொடர்பாக, குற்றச்சாட்டுகளை முன்வைக்கவோ அல்லது அதற்காக அவர்கள் மீது விசாரணைகளை முன்னெடுத்து தண்டனைகளை வழங்கவோ தயாராக இல்லை. மாறாக ராஜபக்ஷவினரை வேறு வழக்குகளில் சிக்க வைத்து, அதன் மூலமாக அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நிதி தொடர்பான மோசடிகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்படுகின்ற அல்லது விசாரணைகளுக்கு முகம் கொடுக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
நீதித்துறை — ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான வழக்குகள் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு நகர்கின்றன, போர்க்கால மீறல்கள் அல்ல.
தமிழர் தரப்பில் உள்ள சிலர் இதனை வரவேற்கிறார்கள். ராஜபக்ஷவினர் தமிழர்களுக்கு எதிராக இழைத்த தவறுகள் அநீதிகளுக்கு ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூற வைக்கப்படுகின்ற சூழல் ஏற்படுகிறது என அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் இது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதம் எனக் கூற முடியாது. ஏ யும் பி யும் சமம், ஏ யும் சி யும் சமம் என்பதால், பி யும் சி யும் சமம் என்று தீர்க்கப்படும் கணக்கு அல்ல இது.
மனித உரிமை மீறல்கள் விடயத்தில் அப்படி தீர்வு காண முடியாது. தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், நீதிக்கு புறம்பான, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறுவதும், நிதிக் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனைகள் பெற்றுக் கொடுப்பதும் ஒன்றல்ல. இந்த இரண்டையும் ஒரே தராசில் வைத்து எடை போட முடியாது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ராஜபக்ஷவினரை ஊழல் மோசடி குற்றச்சாட்டில் தண்டிப்பதன் ஊடாக, போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதில் இருந்து அவர்களையும் தங்களையும் பாதுகாக்க முற்படுகிறது. ராஜபக்ஷவினரை ஏதோ ஒரு வகையில் தண்டித்து விட்டோம் எனக் காட்டுவதன் மூலம், அதிகபட்ச நெருக்கடியை அது தவிர்க்க முனைகிறது. இன்னொரு பக்கம் போர்க்கால மீறல்களில் தங்களுக்கு உள்ள வகிபாகத்தை மறைத்துக் கொள்வதும் சுலபமாகி விடும்.
அரசாங்கம் மக்களை முட்டாள்களாக்குவதில் மிகத் தெளிவாக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
0 Comments