செம்மணிப் புதைகுழிக்கான நீதி
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 412 ஐ எட்டி விட்டது. இந்த மனிதப் புதைகுழியை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் பார்வையிட்டிருந்தார். இதன் போது அவர், செம்மணிப் புதைகுழிக்கு நீதி நிலைநாட்டப்படும் என்றும், தமது அரசாங்கம் அதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த புதைகுழி அகழ்வு தொடங்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதற்கான எந்த ஒரு முயற்சிகளும் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை.
1998 ஆம் ஆண்டு கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அடையாளம் காட்டிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளும் கூட இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. அவை பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மரபணுச் சோதனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகின்ற போதும், அந்த மரபணு பரிசோதனைகளை நடத்தி அடையாளம் காண்பதற்கான எந்த நடவடிக்கைகளும் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படாதுள்ள சூழலில், தற்போது அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி இருக்கிறது.
செம்மணி புதைகுழிக்கு நீதி நிலைநாட்டப்படும் என வாக்குறுதி கொடுப்பது மட்டும் போதாது. அதனை செயலளவில் நிரூபிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக உரிய காலவேளைக்குள் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால், இந்தளவுக்கும், அந்தப் பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் காலத்திற்கு காலம் ஏற்பட்ட இடையூறுகள், நிதியை விடுவிப்பதில் காணப்பட்ட தாமதங்கள், காலநிலை தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றினால் இழுபறிகள் ஏற்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி — இதுவரை 412 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் அடையாளம் காணும் பணி தொடங்கப்படவில்லை. (படம்: Tamil Guardian)
இவ்வாறான சூழலில், தற்போதைய அரசாங்கம் இன்னும் மூன்று ஆண்டுகள் வரையே பதவியில் இருக்கப் போகிறது. அடுத்த தேர்தலில் யார் ஆட்சியமைப்பார் என்று தெரியாது. அதற்குள் இந்த அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்று எந்த அடிப்படையில் கூற முடியும்? நீதியை நிலை நாட்டுதல் என்பது தனியே மனித எலும்புக் கூடுகளை அகழ்ந்தெடுத்து அடையாளம் காண்பது மாத்திரம் அல்ல. மரணங்கள் எப்படி நிகழ்ந்தன, இந்த நிலைமைக்கு பொறுப்பானவர்கள் யார் என கண்டறிந்து, அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவது தான் இறுதியான நீதி. அதற்கு நீண்டதூரம் கடந்து செல்ல வேண்டும் என்பது உண்மை.
தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் தான். அது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் அடுத்த ஆட்சிக் காலத்திலாவது நீதியை வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க முடியும். எனவே இப்போது, எந்த ஒரு அமைச்சரோ அல்லது அரசாங்கமோ நீதியை நிலைநாட்டுவோம் என்று கூறுவது இந்த விடயத்தில் நடக்கக் கூடிய காரியமாகத் தெரியவில்லை. 28 ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுக்கே நீதி வழங்கப்படாத நிலையில், எத்தனையோ தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்குவதற்கான பிள்ளையார் சுழி கூட போடப்படாதுள்ள நிலையில், நீதி குறித்த வெற்று வாக்குறுதிகளை கொடுப்பது அபத்தமானது.
இந்த புதைகுழி விடயத்தில் உண்மைகளை அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறு உண்மையை அறிந்தவர்களில் ஒருவர் கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகின்ற சோமரத்ன ராஜபக்ஷவும் ஒருவர். கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னரே, செம்மணி புதைகுழிகள் தொடர்பான விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் மனச்சாட்சிக்குப் பயந்தோ, உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றோ இதனைக் கூறியிருக்கவில்லை. அந்த வழக்கில் இருந்து அவர் தப்பித்திருந்தால் அல்லது குறைந்த தண்டனையுடன் தப்பிக்கக் கூடிய நிலை இருந்திருந்தால், இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கமாட்டார். உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் அவர் இருந்திருந்தால், கிருசாந்தி படுகொலை விசாரணை நடக்கும் போதே அதனைக் கூறியிருக்கலாம். அப்படி அவர் செய்யவில்லை. இது ஒரு கூட்டு சதி.
இந்த படுகொலைகள் திட்டமிட்ட அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. அதில் பங்காளிகளாக இருந்தவர்கள் இராணுவத்தில், உயர் அதிகாரிகளில் இருந்து சிப்பாய் வரையில் – பல்வேறு தரங்களில் இருந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடக்கம் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை தூக்கிச் சென்று புதைத்தவர்கள் வரை - பல்வேறு மட்டங்களில் தவறு இழைத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக தண்டனையில் இருந்து தப்பிக்கின்ற நிலைதான் இன்று வரை நீடிக்கிறது. தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை தொடருகின்ற வரை, நீதியை நிலைநாட்டும் பேச்சுக்கே இடமில்லை.
சோமரத்ன ராஜபக்ஷ இப்போது செம்மணிப் புதைகுழிகள் தொடர்பான மேலதிக உண்மைகளையும் விவரங்களையும் வெளிப்படுத்த தயார் என்று ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். அவர் பலமுறை கடிதம் அனுப்பிய பின்னரும் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து அவரை அணுகி, அவரிடம் இருந்து தகவல்களை பெற்று, புதைகுழிகளை அடையாளம் காண்பதற்கோ அல்லது மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கோ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இது இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறையின்றி இருக்கிறது என்பதற்கான ஒரு அடையாளம்.
நீதி அமைச்சு — செம்மணிப் புதைகுழி விசாரணைகள் தொடர்பாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதிமொழிகள் வழங்கியுள்ளார்.
செம்மணிப் புதைகுழியை பார்வையிட்ட பின்னர், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்னொரு தகவலையும் வெளியிட்டிருக்கிறார். சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் தலைவர் சந்தித்தபோது, தனக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினால் செம்மணிப் புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார் எனக் குறிப்பிட்டிருக்கிறார். உண்மைகளை கூறுவதாக முன் வந்தவர் இப்படி கூறுவது சரியா என்றும் நீதியமைச்சர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சோமரத்ன ராஜபக்ஷ ஏற்கனவே செம்மணி மற்றும் அரியாலை கிழக்கு பகுதிகளில் உள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பான பல தகவல்களை கடிதங்களில் வெளிப்படுத்தியிருந்தார். அந்த தகவல்களின் அடிப்படையில் கூட அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டிருக்கலாம். அதற்கான நடவடிக்கைகளும் கூட எடுக்கப்பட்டிருக்கவில்லை. குறித்த காலப்பகுதியில் குறித்த பிரதேசத்தில் நிலை கொண்டிருந்த படையினரிடம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தால் கூட, பல்வேறு தகவல்கள் வெளிவந்திருக்க கூடும் அல்லது சோமரத்ன ராஜபக்ஷ கூறுவது உண்மையா என்பதையாவது கண்டறிந்திருக்கலாம். அதற்கான முயற்சிகளும் கூடத் தொடங்கப்படவில்லை.
சோமரத்ன ராஜபக்ஷ உண்மைகளை கூறுவதற்குத் தயாராக இருப்பதாக கூறியவுடனேயே அவரிடம் அது பற்றி விசாரணைகளை தொடர்ந்திருக்க வேண்டும். அதைக் கூட அரசாங்கம் செய்திருக்கவில்லை. அவர் பொதுமன்னிப்பு என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் உண்மையை கூற வருகிறார் என நீதி அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். இது அரசாங்கம் அவரை விசாரணைக்குக் கொண்டு வர விரும்பவில்லை என்பதே காட்டுகிறது.
சோமரத்ன ராஜபக்ஷ ஒரு குற்றவாளியாக இருந்தாலும் விடுதலை பெறுவதற்கான அதியுச்சமான வாய்ப்புகளையும் வழிகளையும் தேடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் அவர் உண்மைகளை வெளிப்படுத்தி விட்டு பொது மன்னிப்பின் ஊடாக தப்பிக் கொள்ள முற்படலாம். இந்த விடயத்தில் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது எனத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
சோமரத்ன ராஜபக்ஷ போல உண்மையை கூற கூடியவர்கள் இன்னும் பலர் இருக்கக்கூடும். அவர்களை அரசாங்கம் தேடி விசாரணைகளைத் தொடங்கியதாகத் தெரியவில்லை. அப்படி விசாரிக்க தொடங்கினால் இந்த விவகாரத்தில் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும். அதனால் தான் அந்த வழியில் அவர்கள் செயற்படவில்லை. மாறாக அவர் பொது மன்னிப்பை நிபந்தனையாக விதிக்கிறார் என்று கூறி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முற்படுகிறது.
0 Comments