கலப்பு யுத்தமும், தாயகக் கோட்பாட்டு சிதைப்பும்
இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நசுக்கப்பட்டுவரும் தமது தாயகக் கோட்பாட்டின் இருப்பை வெளிப்படுத்த தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் அதிக மன ஆர்வத்துடன் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இதன் சின்னங்களாக வானளாவிய வகையில் கட்டப்பட்டுள்ள கோவில் கோபுரங்கள் சாட்சியாக நிற்கின்றன. தமது அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் தமது ஒவ்வொரு ஊர்களிலும் தன்னிச்சையாக கோவில்களில் வானளாவிய கோபுரங்களை கட்டி வைத்திருக்கின்றனர். இது உண்மையில் ஆங்காங்கே திடீர் திடீரென முளைக்கும் பௌத்த சின்னங்களை நிறுத்தும் நோக்குடன், அதற்கு எதிரான யுக்திக்காகவே பயன்படுத்துகின்றனர் என்றே பார்க்கலாம்.
பௌத்த மத பீடங்களோ பௌத்த சின்னங்களை கோவில்களின் அருகே கட்டி விட்டு இந்துக்களும், பௌத்தர்களும் இணைந்து வாழ்கின்றனர் என்று பிரசாரப்படுத்த முனைகின்றனர். ஆனால், அது தமது தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் சிங்கள பௌத்த நகர்வாகவே தமிழ் மக்கள் காண்கின்றனர்.
அடுத்து தமது தாயக நிலங்களில் அல்லது கிராமங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது பௌத்த மத சின்னங்களின் கட்டுமானம் நிகழும்போது தமிழ் மக்களை பெரும் பதற்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. வடக்கு, கிழக்கு தமிழர் வாழும் பகுதியில் இன்று நிலைகொண்டுள்ள இராணுவத்தை, கொழும்புசார் அரச திணைக்களங்கள் தமது சட்டபூர்வமான இறையாண்மையை உறுதி செய்வதற்கான இராணுவ இருப்பாக மாற்ற வேண்டுமாயின், நில அளவைகளை மேற்கொண்டு தாம் மக்கள் நிலங்களை ஆக்கிரமித்திருக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதாவது, ஆக்கிரமிப்பு இராணுவக் குடியிருப்புகளை பாதுகாப்பு படைகளின் பாசறையாக மாற்ற வேண்டுமாயின் சர்வதேச நியதிகளுக்கேற்ப பல திணைக்களங்களின் கூட்டு அங்கீகாரம் அதனை சட்டபூர்வமானதாக மாற்றுகிறது.
யாழ். பல்கலைக்கழகத்தில் மீள்அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி — மாணவர் போராட்டத்தின் பின் மீள் நிறுவப்பட்டது.
தமிழர் தாயகத்தில் எந்த ஊர்களிலும் நிரந்தரமான பாசறையாக மாற்றம் பெறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. இதனால், ஒவ்வொரு நில அளவை நிகழ்வுகளும் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலையை உருவாக்குகின்றன. இதற்கு மாறாக எத்தகைய அரச படைகளுக்கு அழுத்தம் இருந்தாலும் தமது போராளிகளுக்கான ஒவ்வொரு நினைவெழுச்சி நிகழ்வுகளும் மிகவும் அமைதியான முறையில் எந்தவித நெரிசல்கள், ஒழுங்கீனங்களும் இன்றி, எந்தவித அவதூறு இனவாத சம்பவங்களும் இன்றி செவ்வனே இடம்பெறுவதை செய்திகள் காட்டி நிற்கின்றன. கடினமான அழுத்தத்தின் மத்தியில் இடம்பெறும் இந்த போராட்டங்களும் நிகழ்வுகளும் சூழல் சந்தர்ப்ப விபரத்துடன் தமிழகத்தை சரியாக சென்றடைகின்றதா என்பது உறுதி செய்யப்பட வேண்டியதை உணர்த்துகிறது.
இத்தகைய சூழலுக்கு ஏற்ப தமிழ் மக்கள் தமது போராட்டங்களை பாதுகாப்பு மன உறுதியோடு நடத்த வேண்டுமாயின் அதற்கான கேடயத் திட்டம் ஒன்றும் அவர்களை வழி நடத்துபவர்களால் எந்த அளவு அமைத்து கொடுக்கப்படுகிறது என்பது மிக முக்கியமானதாக தெரிகிறது. ஒவ்வொரு போராட்டத்திலும் கொழும்பு சட்ட ஒழுங்கின் அழுத்தத்திற்கு எதிராக, சட்ட ஆலோசகர்கள் அணி ஒன்று பாதுகாப்புக்காக துணை நிற்கிறது என்ற உணர்வு மக்கள் மத்தியில் இருக்கும்போது போராட வரும் மக்களின் துணிவு அதிகமாக இருக்கும். ஆனால், இத்தகைய கேடயத் திட்டங்கள் எந்த அளவில் செயற்படுகின்றன என்பது தெளிவற்றதாக உள்ளது.
கேடயங்களாக மானிட விழுமியங்களும் இறையாண்மையும்
தமிழ்மக்களின் செயற்பாட்டுக்கான அனுபவத்தை 2021ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தமிழர் அடையாள சிதைப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டு மீள்புனரமைக்கப்பட்ட நிலை இந்த கேடய அணிகளின் செயற்பாட்டையும் அவற்றின் அவசியத்தையும் செயல் வடிவமாக காட்டி நிற்கின்றன. கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டு நீக்கப்பட இருந்த வேளையில் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டமும் அதற்கு ஆதரவாக உள்நாட்டிலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பலரும் உடனடியாக எடுத்த செய்திப் பரிமாற்ற நகர்வுகள் சென்னையில் இருந்து அழுத்தம் எழுவதற்கு காரணமாக இருந்தன. இதனால் அந்த நினைவுத்தூபி மீள் அமைப்பு செய்யப்பட காரணமாக இருந்தது.
ஓர் அரசு எவ்வாறு இரவிலும் பகலிலும் தனது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ளும் வகையில் தனது அதிகாரத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறதோ, அதேபோல அரசு ஒன்றின் அதிகார வரம்பு மீறல்களை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு தேசியம் தனது மானிட விழுமியங்களை கேடயமாகப் பயன்படுத்துவது தான் இயல்பு. இந்த இரு பகுதியும் தமக்கான இறையாண்மையை கோரிநிற்கும் வரையிலும் இந்த இரண்டிலும் எந்த தரப்பும் ஒட்டுமொத்தாக உரிமை பாராட்ட முடியாது. இந்த நிலையில் இறையாண்மை எப்பொழுதும் கேள்விக்குட்படுத்தப்பட்டதாகவே இருக்கும். இதனால் ஒரு தேசம் தனக்கு எதிராக நிகழ்த்தப்படும் கட்டமைப்பு ரீதியான சீரழிப்புகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் அதிவேகமாக சர்வதேச வெளியில் பரப்புரை செய்வது அதன் கேடயமாக அமைகிறது.
தமிழக சட்டசபையின் புதிய தலைமையும் கொழும்பின் அச்சமும்
தமிழ் மக்கள் குறித்து கொழும்பு அசௌகரிய உணர்வு கொண்டிருக்கிறது என்றால், மேற்குறித்த கட்டமைப்புகளின் உருவாக்கம் மட்டுமல்ல, கொழும்பின் பயம் தமிழக சட்டசபையின் புதிய தலைமையே ஆகும். பாரம்பரியமான தி.மு.க., அ.தி.மு.க. தலைமைகளில் இருந்து வேறுபட்டதாக புதிய இளம் தலைமுறை ஒன்று உருவாகி உள்ளது. தமிழக சட்டசபையில் ஈழத்தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம் உறுதி செய்யப்பட்ட வகையில் அவர்களுடைய அரசியல் விருப்பத்தை பிரதிபலிக்கக் கூடிய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு தீர்மானம் மீண்டும் ஒரு முறை நிறைவேற்றப்பட வேண்டும், என்பதை வேண்டுகோளாக மான்பு மிகு தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து விடுவார்களோ என்பதில் கொழும்பின் அச்சம் உள்ளது.
தமிழக சட்டமன்றம், சென்னை — ஈழத்தமிழர் தாயகம் தொடர்பான தீர்மானங்கள் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வரும் இடம். (படம்: Wikipedia)
இந்த தீர்மானங்கள் ஏற்கெனவே கடந்த கால தமிழக சட்டசபை அரசாங்கங்களால் இயற்றப்பட்ட தீர்மானங்களே, இன்னும் ஒரு தடவை தேவையா என ஒருவர் கேட்கலாம். தொடர்ச்சியாக தமிழக சட்டசபையில் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களும் தீர்மானம் கொண்டு வரும்போது மூன்றுக்கு மேற்பட்ட மாற்று அரசாங்கங்களால் ஒரே தீர்மானம் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட தீர்மானம், புது டெல்லி மத்திய சபை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டு பேச்சுக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டிய தேவை ஒன்று ஏற்படுகிறது. அத்துடன் இது சர்வதேச கவனத்துக்கு ஆளாகும். அத்துடன் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரும் ஈழத்தமிழ் மக்களின் நீண்டகால அனுதாபியுமான ம.தி.மு.க. கட்சியின் செயலர் வைகோ ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயலாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈழத்தமிழ் மக்கள் மீது பயங்கரவாதிகள் என்ற பெயருருவாக்கம் செய்யும் அரச இயந்திரம் சர்வதேச அளவிலான பிரசாரத்தையே மையமாகக் கொண்டு செயற்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு தமிழ் மக்கள் எந்த வித நகர்வுகளையும் செய்யாது தடுக்க வல்லது. இந்த வகையில் தமிழ் மக்கள் தமது முழு வளங்களையும் திரட்டிய வகையில் சர்வதேச நாடுகள் அனைத்திலும் உள்ள பாராளுமன்றங்களிலும் சட்டசபைகளிலும் நகராட்சி மன்றங்களிலும் வாக்கெடுப்பின் மூலம் சட்ட அங்கீகாரம் பெற்ற தலைமைகளை, குறிப்பாக தமிழ்த் தலைமைகளை தமது கேடயமாக பயன்படுத்துவதை தவிர்க்க முடியாததுதான். தமிழ் மக்கள் தமது இருப்பை இழந்தவர்களாக மாற்றப்படுவதற்கு முன்னர் செயலாற்ற வேண்டிய தருணம் இது.
0 Comments