விமானப்படையைத் தடுக்கிறதா இந்தியா?
இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்ட செய்தி ஒன்று, இராஜதந்திர வட்டாரங்களில் கவனத்தை பெற்றிருந்தது. இலங்கை விமானப்படையின் வயது முதிர்ந்த கிபிர் மற்றும் எஃப்-7 போர் விமானங்களுக்கு பதிலாக, அதிநவீன ஜே.எஃப்-17 சி புளொக் 3 விமானங்களை வழங்குவதற்கு, பாகிஸ்தான் முன்வந்ததாகவும் அதனை இலங்கை விமானப்படை நிராகரித்து விட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆறு தொடக்கம் பத்து விமானங்களை வழங்குவதற்கும், அந்த விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு தேவையான பயிற்சிகளையும் ஏனைய உதவிகளையும் வழங்குவதற்கும் பாகிஸ்தான் யோசனை முன் வைத்திருந்ததாகவும், ஆனால் அதனை விமானப்படை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் லெப்.ஜெனரல் முகமட் அலி, அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆறாவது இராணுவ அதிகாரிகள் மட்ட கலந்துரையாடலுக்கு அவர் இணைத் தலைமை தாங்கியிருந்தார். இதன் போது அவர் இலங்கையின் முப்படை அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகளையும் மேற்கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில் தான், ஜே.எஃப்-17 சி போர் விமானங்களை இலங்கை விமானப்படைக்கு வழங்குவதற்கு பாகிஸ்தான் முன்வந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனை இலங்கை அரசாங்கமோ, பாகிஸ்தான் அரசாங்கமோ உறுதி செய்யவில்லை. இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அதனை நிராகரித்திருக்கிறது. அவ்வாறான எந்த ஒரு முன்மொழிவும் பாகிஸ்தான் தரப்பில் முன்வைக்கப்படவில்லை என்றும் அது கூறியிருக்கிறது.
ஜே.எஃப்-17 தண்டர் போர் விமானம் — பாகிஸ்தான்-சீன கூட்டு தயாரிப்பான இந்த விமானங்களை இலங்கைக்கு வழங்குவதாக தகவல் பரவியிருந்தது. (படம்: Aviation Photos)
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே மிக நெருக்கமான உறவுகள் இருப்பது இரகசியமான விடயம் அல்ல. இது இந்தியாவுக்கு நெருடலானதாக இருந்தாலும் அதனை தட்டிக் கேட்க முடியாத சூழல் இருக்கிறது. பாகிஸ்தான், இலங்கையுடன் மிக நெருங்கிய நட்புறவில் இருந்து வரும் நாடு. கடந்த காலங்களில் இலங்கைக்கு பல வழிகளில் பாகிஸ்தான் இராணுவ ரீதியாக பெருமளவிலான உதவிகளை வழங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகளுடனான போரின்போது, பாகிஸ்தான் வழங்கிய இராணுவ உதவிகள் இலங்கையினால் என்றைக்கும் மறக்க முடியாதவை என்று, அரசாங்கத் தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் முன்னர் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில், பாகிஸ்தானுடனான இலங்கையின் உறவுகளுக்கு குறுக்கே செல்ல முடியாத சூழல் இந்தியாவுக்கு உள்ளது.
எவ்வாறாயினும், சில சந்தர்ப்பங்களில் பாகிஸ்தான் தொடர்பாக, கொழும்புக்கு இந்தியா அழுத்தங்களை கொடுத்தது என்பது மறுப்பதற்கில்லை. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து செயற்பட்ட, பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பாக, ஐஎஸ்ஐ அதிகாரிகளை, இலங்கையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இந்தியா அழுத்தங்களைக் கொடுத்திருந்தது. இந்தியாவில் அவர்கள் நாசவேலைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. பாகிஸ்தானும் குறித்த அதிகாரிகளை கொழும்பில் இருந்து மாற்ற நடவடிக்கை எடுத்தது. அது இந்தியாவின் அழுத்தங்களால் மட்டும் நிகழ்ந்ததல்ல. இலங்கையுடனான நட்புறவு கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பாகிஸ்தான் அவர்களை திருப்பி அழைத்தது.
தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளரின் இலங்கைப் பயணத்தை புதுடெல்லி சந்தேக கண்ணுடன் பார்ப்பதாக தெரிகிறது. அதன் ஒரு கட்டமாகவே, இலங்கை விமானப்படைக்கு பாகிஸ்தான் ஜே.எஃப்-17 சி போர் விமானங்களை வழங்க முன்வந்ததான தகவல் இந்திய ஊடகம் ஒன்றின் ஊடாக பரவியிருக்கிறது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், விமானப்படைக்கான போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் விடயத்தில் இலங்கையினால் சுயாதீனமான முடிவுகளை எடுக்க முடியாத நிலை உள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2016ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவின் பாகிஸ்தான் பயணத்தின் போது, 400 மில்லியன் டொலர் செலவில், எட்டு ஜே.எஃப்-17 தண்டர் போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கான உடன்பாடு செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. புதுடெல்லி கொடுத்த அழுத்தங்களை அடுத்து, அந்த உடன்பாடு கைவிடப்பட்டது. தேவைப்பட்டால் இந்தியத் தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை கொள்வனவு செய்யுமாறும் புதுடெல்லியினால் கூறப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர், பாகிஸ்தான் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டம் பற்றிப் பேசப்பட்ட போது, இலங்கை விமானப்படையை ஏன் நவீனமயப்படுத்த வேண்டும், அவசரம் என்றால், இந்தியா ஓடி வந்து உதவும் தானே என இந்தியத் தரப்பில் கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இலங்கை விமானப்படை வலுவான நிலையில் இருப்பதை, இந்தியா விரும்பவில்லை என்ற கருத்து அதன் ஊடாக வெளிப்பட்டது.
ஆனால், இலங்கை விமானப்படை பலமாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதில் இந்தியா முரண்பட்டதாக தெரியவில்லை. எந்த விமானங்களைக் கொண்டு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்திலேயே இந்தியாவுக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. பாகிஸ்தான்-சீன கூட்டு தயாரிப்பு என்பதால், ஜே.எஃப்-17 போர் விமானங்கள், இலங்கை விமானப்படையில் இணைக்கப்படுவது, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இந்தியா கருதியிருக்கலாம். இந்தியாவுக்கு எதிரான இந்த இரண்டு நாடுகளினதும் கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 போர் விமானங்கள் அதிநவீன தொழில்நுட்பங்களையும், போர்த்தளபாடங்களையும் உள்ளடக்கியது. அந்தப் போர் விமானங்கள் இலங்கை விமானப்படையில் இணைக்கப்படுகின்ற போது, அதனை இலங்கை விமானப்படை மாத்திரம் கட்டுப்படுத்துமா அல்லது பாகிஸ்தான் மற்றும் சீனாவினாலும் தரவுகளை திரட்டி கொள்ள கூடிய வாய்ப்புகள் இருக்குமா என்ற சந்தேகங்கள் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
இன்றைய நவீன உலகில், ஆயுதங்கள் மற்றும் போர்த்தளபாடங்களை விற்கின்ற-வாங்குகின்ற போது மிக உன்னிப்பாக பல விடயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. எந்த நாடு-எந்த நாட்டிடம் இருந்து-எந்த பொருட்களை வாங்குகிறது என்று பல்வேறு நாடுகளும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவற்றின் ஊடாக தாங்கள் கண்காணிக்கப்படுகின்றோமா, கண்காணிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதே அதற்கு காரணம். சீனா மற்றும் பாகிஸ்தானின் தொழில்நுட்பங்களைக் கொண்ட விமானங்களை, இலங்கை விமானப்படை பயன்படுத்துகின்ற போது, அவற்றில் இருந்து தொழில்நுட்ப ரீதியான தரவுகள் அல்லது சமிக்ஞைகளை இந்த நாடுகளால் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த விடயத்தில் இந்தியா அக்கறையுடன்-விழிப்புடன் இருந்திருந்தில் நியாயப்பாடுகள் உள்ளன.
இந்த சிக்கலினால் தான், விமானப்படை வேறு வழியின்றி ஏற்கனவே, சீனாவிடம் வாங்கிய எஃப்-7 போர் விமானங்களை மறுசீரமைத்து புதுப்பித்தது. இதற்கமைய, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, நான்கு கிபிர் C2/C7 போர் விமானங்களையும், ஒரு கிபிர் TC2 பயிற்சி விமானத்தையும், பிந்திய தொழில்நுட்பங்களுடன், கிபிர்-C12 தரத்திற்கு மறு சீரமைத்து புதுப்பிப்பதற்கான 50 மில்லியன் டொலர் ஒப்பந்தம் இஸ்ரேலிய நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டது. இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட முதல் கிபிர்-C12 போர் விமானம் அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முதல் பறப்பில் ஈடுபடுத்தப்பட்டது.
பாகிஸ்தான்-சீன தொழில்நுட்பத்தை எதிர்த்த இந்தியா, இஸ்ரேலிய தொழில்நுட்பத்தை எப்படி ஏற்றுக் கொண்டது என்ற கேள்வி வரலாம். இஸ்ரேலும் இந்தியாவும் வெளிப்படையான கூட்டாளிகளாக இருக்கின்றன. இஸ்ரேலுடன் இணைந்து பல ஆயுத தளபாட உற்பத்திகளை இந்தியா மேற்கொள்கிறது. அதன் தொழில்நுட்பங்களை இந்தியா பயன்படுத்துகின்றது. இவ்வாறான சூழலில் அதை ஆபத்தான ஒன்றாக இந்தியா பார்க்கவில்லை. ஆனால் சீனா மற்றும் பாகிஸ்தானின் தொழில்நுட்பங்களை இந்தியா நம்பத் தயாராக இல்லை. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை எல்லையாக கொண்ட இந்த நாடுகள் இந்தியாவுடன் போர்களை நடத்தியுள்ளதுடன், ஆயுதப் போட்டியிலும் ஈடுபட்டுள்ளவை. இந்தச் சூழலில், இந்த நாடுகளின் தொழில்நுட்பத்துடனான நவீன போர் விமானங்கள், இலங்கையில் பயன்பாட்டில் இருப்பது இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடும் என்ற கவலை புதுடெல்லிக்கு உள்ளது.
அதேவேளை, பாகிஸ்தானிடம் இருந்து ஜே.எஃப்-17 சி போர் விமானங்களை கொள்வனவு செய்ய பங்களாதேஷும் உடன்பாடு செய்திருக்கிறது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளிடம், சீன-பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பு போர் விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதை இந்தியா பாதகமானதாகவே கருதுகிறது. இவ்வாறான நிலையில் தான், 10 ஆண்டுகளுக்கு முன்னரே, பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்கும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சியை இந்தியா தடுத்தது. இப்போது மீண்டும் அத்தகைய செய்தி ஒன்று வெளியானதன் பின்னணியில், அப்படி ஒரு யோசனையை முன்வைக்கவில்லை என்று பாகிஸ்தான் தூதரகம் கூறியிருக்கிறது. அப்படியானால், இந்த தகவல் பொய்யானதா? வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்டதா?
கிபிர் போர் விமானம் — இஸ்ரேலிய தொழில்நுட்பத்துடன் மறுசீரமைக்கப்பட்ட இலங்கை விமானப்படையின் கிபிர்-C12 விமானங்கள். (படம்: Aviation Photos)
இவ்வாறான நிலையில், கிட்டத்தட்ட 30 தொடக்கம் 35 மில்லியன் டொலர் வரை பெறுமதியான ஜே.எஃப்-17 சி போர் விமானங்களை பாகிஸ்தானிடம் இருந்து கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை. அதைவிட இவற்றை கொள்வனவு செய்கின்ற அளவுக்கு தற்போது பொருளாதார ரீதியாக பலமான நிலையிலும் நாடு இல்லை. இவ்வாறான நிலையில், ஜே.எஃப்-17 சி போர் விமானங்கள் பற்றிக் கிளம்பும் புரளிகளுக்குப் பின்னால், உளவியல் புலனாய்வு நடவடிக்கை ஒன்று காரணமாக இருக்கக் கூடும்.
0 Comments