காணி அபகரிப்பு- பொய்களும் உண்மைகளும்
வலிகாமம் வடக்கில் பலாலி மற்றும் மயிலிட்டி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி, தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில், அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வடக்கு, கிழக்கில் முப்படைகளால் பயன்படுத்தப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை விடுவிப்பதற்கு, தற்போது எந்த வாய்ப்பும் இல்லை என அவர் கூறியிருக்கிறார். அந்த நிலங்களை இராணுவம் கைப்பற்றவில்லை என்றும், ஆனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், அவர் நியாயப்படுத்தியிருக்கிறார்.
வலிகாமம் வடக்கு மக்கள் — இராணுவம் கைப்பற்றியுள்ள தமது நிலங்களை மீட்குமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். (படம்: Tamil Guardian)
அதேவேளை, பலாலி பகுதியில் 1,661 ஏக்கர் காணிகளை தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக இராணுவம் கைப்பற்றவுள்ளதாகவும், அந்த நிலங்களை திருப்பி ஒப்படைக்க முடியாது என்றும், அவற்றின் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதுமாத்திரமன்றி, பலாலியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ள 29 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாது என்றும், அந்த வைத்தியசாலையை புனரமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 774.98 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பலாலி விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு, நிலங்கள் தேவைப்படுவதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, விமானப்படை ஊடாக பாதுகாப்பு அமைச்சிடம் கோரியிருப்பதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியிருக்கிறார். இது தவிர, பலாலி பகுதியில் இராணுவம் எந்தவொரு விவசாய செய்கையிலும் ஈடுபடவில்லை என்றும் சொந்த தேவைகளுக்காகவே பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயங்கள் அனைத்தும், பலாலி பிரதேசத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை இப்போது மாத்திரமன்றி, எதிர்காலத்தில் கூட விடுவிப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றன. அதைவிட, கணிசமான காணிகளை கைப்பற்றும் நிலைப்பாட்டில் அரசாங்கமும் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் இருக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்துவதாக உள்ளது பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கருத்து. இராணுவம் பொதுமக்களின் காணிகளை கைப்பற்றவில்லை எனக் கூறியிருக்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர், இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள, 1161 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும் கூறியிருப்பது, முன்னுக்குப் பின் முரணான கருத்தாக உள்ளது.
பொதுத்தேவைக்காக காணிகளை பயன்படுத்துவதாக கூறி, இராணுவத்தின் ஆக்கிரமிப்பை மறைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அண்மையில் மருதங்கேணியில் பொதுமக்களின் 25 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு அறிவிப்பும், பொதுத் தேவைகளுக்காக என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டது. ஆனால் அது 10வது விஜயபாகு காலாட்படைத் தலைமையகத்திற்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையாகும். பொதுத் தேவை என்ற பெயரில், இப்போது வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பில் அரசாங்கமும் இராணுவமும் இறங்கியுள்ளன என்பதை, பாதுகாப்பு பிரதி அமைச்சரின் நாடாளுமன்ற உரை மூலம் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
இன்னொரு பக்கத்தில் பலாலி விமான நிலையத்திற்கு என்ற பெயரில், மேலும் காணிகளை சுவீகரிக்கின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பலாலி விமான நிலையம் தற்போது சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் நிர்வகிக்கப்படுகிறது. முன்னர் அது முழுமையான இராணுவ விமானத் தளமாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது சர்வதேச விமான நிலையமாக அது பிரகடனம் செய்யப்பட்டு, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் அது நிர்வகிக்கப்படுகிறது. விமானப்படைத் தளம் இருந்தாலும், ஓடுபாதையை விமானப்படை பயன்படுத்தினாலும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினாலேயே அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், விமான நிலைய ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்கான காணிகள் தொடர்பாக, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை, அதனைக் கட்டுப்படுத்தும் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சின் ஊடாகவே கோரிக்கையை விடுக்க வேண்டும். ஆனால், விமானப்படை ஊடாக பாதுகாப்பு அமைச்சினூடாக கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியிருக்கிறார். இதிலிருந்து இந்த விவகாரம் எப்படி கையாளப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையை பாதுகாப்பு அமைச்சும், விமானப்படையும் பின்னால் இருந்து இயக்குவதாக தெரிகிறது. பலாலி விமான ஓடுபாதை விரிவாக்கம் என்ற பெயரில், தமது தளத்தை விரிவுபடுத்துவதற்கும், கட்டுப்பாட்டு எல்லையை அதிகரிப்பதற்கும், பொதுமக்களின் காணிகளை சுவீகாரம் செய்வதற்கு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்த விடயத்தில் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படை என்பன கையாளுகின்ற முறையானது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
மற்றொரு பக்கத்தில், சொந்த தேவைகளுக்காகவே இராணுவத்தினர் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதாகவும், வர்த்தக நோக்கில் அவர்கள் விவசாயத்தில் ஈடுபடவில்லை என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான பொய் என்பது, யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும் நன்றாகத் தெரியும். இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்கள், இராணுவ முகாம்களில் விற்பனை செய்யப்படுகின்றன. சோளம், மரக்கறிகள், பழ வகைகள் என்பன இவ்வாறு இராணுவ முகாம்களின் முன்பாக விற்கப்படுகின்றன. பல பல்பொருள் அங்காடிகளுக்கு இராணுவத்தினர் லொறிகளில் கொண்டு வந்து மரக்கறிகள், பழங்களை விற்பனை செய்கிறார்கள். இது வணிக நோக்கிலான நடவடிக்கை தான்.
பலாலி அருகேயுள்ள குடும்பசிட்டியில் இராணுவத்தினரின் விவசாயப் பண்ணை ஒன்று இயங்குவது குறித்து, இராணுவத்தின் அதிகாரபூர்வ செயற்திறன் அறிக்கையில் (performance report) குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2024ஆம் ஆண்டிற்கான, இலங்கை இராணுவத்தின் செயற்திறன் அறிக்கையில், வருமானத்தை தரும் திட்டங்கள் -செயற்பாடுகள் என்ற வகைக்குள், நாடு முழுவதும் 18 இராணுவ விவசாயப் பண்ணைகள் இயங்குவது பற்றி விரிவான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியில், இந்த 18 விவசாய பண்ணைகளின் மூலமும், 99 கோடி 64 இலட்சத்து 96 ஆயிரத்து 902 ரூபா மொத்த வருமானமாக கிடைத்திருக்கிறது. அதில் 73 கோடி 28 இலட்சத்து 56 ஆயிரத்து 61 ரூபா செலவினமாக காட்டப்பட்டுள்ளதுடன், 26 கோடி 36 இலட்சத்து 40 ஆயிரத்து 741 ரூபா இலாபமீட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குரும்பசிட்டியில் உள்ள இராணுவ விவசாய பண்ணையின் மூலமாக மாத்திரம், 56 இலட்சத்து 90 ஆயிரத்து 769 ரூபா வருமானம் கிடைத்திருக்கிறது. அதில் 15 இலட்சத்து 88 ஆயிரத்து 130 ரூபா செலவினங்கள் போக, 41 இலட்சத்து 2 ஆயிரத்து 638 ரூபா இலாபமாக கிடைத்திருக்கிறது. சராசரியாக- 18 பண்ணைகளிலும் மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பகுதி இலாபம் கிடைத்துள்ள அதேவேளை, குரும்பசிட்டிப் பண்ணை மூலம் கிட்டத்தட்ட முக்கால் பங்கு இலாபமாக ஈட்டப்பட்டிருக்கிறது. இது பாதுகாப்பு அமைச்சினால், சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படியான தரவுகளாகும்.
அவர்களுக்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது தெரிந்திருக்குமோ தெரியவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தையும், அரசாங்கம் ஏமாற்ற பயன்படுத்திக் கொள்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மக்களைப் போலவே நாடாளுமன்றமும் ஏமாற்றப்படுகிறது. மக்களின் காணிகள் மக்களுக்கு என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இப்போது தேசிய பாதுகாப்புக்கு தேவையான காணிகள் மக்களின் காணிகளாகவே இருந்தாலும் அவற்றை வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இதனை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெளிவாக எடுத்துக் கூறிய பின்னரும், ஊடகங்கள் அவரது கருத்தை திரிபுபடுத்துவதாக மக்களை ஏமாற்ற முயன்றிருக்கிறார் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர்களை பறிகொடுத்து விட்டு நடுத்தெருவில் நின்று போராடும் மக்களுக்கு, அடுத்த சில மாதங்களில் 243 ஏக்கர் காணிகளை மட்டும் விடுவிக்கத் தீர்மானித்திருப்பதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு, ஏமாற்றும் செயலன்றி வேறில்லை. சிறியளவிலான காணிகள் விடுவிப்பின் மூலம், காணிகள் விடுவித்துக் கொண்டிருப்பதாக உலகத்திற்குப் படம் காட்ட முனைகிறது அரசாங்கம். இது மக்களையும், உலகத்தையும் ஏமாற்றுகின்ற, முட்டாள்களாக்குகின்ற செயலே என்பதில் சந்தேகம் இல்லை.
0 Comments