ஏன் இந்தக் கூட்டு?
தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக, பொதுத்தளத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து, ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள், இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்திருக்கின்றன. இந்த கட்சிகள் கடந்த வாரம் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் இதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளும் - மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளும் - முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்த இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றன.
இந்த இணக்கப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது, சந்தேகங்களுக்கு முழு அளவில் தெளிவுபடுத்தும் வகையில், கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இது ஆரம்பக் கட்டம் தான், போகப் போகத் தான் எதையும் கூற முடியும் என்றளவில், அந்த ஊடக சந்திப்பை முடித்துக் கொள்வதிலேயே தலைவர்கள் ஆர்வம் காட்டியிருந்தனர். அது அவர்களின் செயற்திட்டம், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லையா என்ற சந்தேகங்களையே ஏற்படுத்தியிருக்கிறது.
பொது தளத்தில் ஒன்றிணையும் இந்தக் கட்சிகளின் தீர்மானம் பரவலான வரவேற்பை மாத்திரமன்றி, விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. தோல்வி பயத்தில் ஒன்றிணைந்திருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகள் என்ற விமர்சனங்கள் ஒருபுறம். அரசாங்கத்துக்கு எதிரான, கூட்டு எதிர்க்கட்சியின் ஒரு அணி என்ற விமர்சனம் இன்னொரு புறம். ஆளும்கட்சியின் தூண்டுதலின் பேரில் இணைந்துள்ள அணி என மற்றொரு புறமாக, எல்லா பக்கங்களிலும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது இந்த கூட்டு. கட்சிகள் தத்தமது கொள்கைகளுக்கு அமைவாக சுதந்திரமாக செயற்படக் கூடிய அதேவேளை, தமிழ், முஸ்லிம், மலையக தமிழ்ப்பேசும் மக்களின் பொதுவான பிரச்சினைகள் விடயத்தில் ஒருங்கிணைந்து செயற்படக் கூடிய சாத்தியமான விடயங்களில் பொதுத் தளத்தில் இயங்குவது குறித்து இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆறு கட்சிகளும் மாத்திரம், தமிழ்ப் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இவற்றைத் தாண்டியும், தமிழ்ப் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் இருக்கின்றன. குறிப்பாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இதில் விடுபட்டிருக்கிறது. பிற கட்சிகளும் வந்தால் வரவேற்போம் என ஊடக சந்திப்பின் போது கேள்வி ஒன்றுக்கு சுமந்திரன் பதிலளித்திருந்தார். ஆனால், இந்த கூட்டு உருவாக்கப்படும் போது, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அல்லது ஏனைய தமிழ்ப் பேசும் கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டதாக தெரியவில்லை.
பொதுத்தளத்தில் இணையும் இந்த முயற்சி கொள்கை ரீதியான இணக்கம் கொண்டது அல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளன. தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கோட்பாட்டை விட்டுவிட்டு இதில் இணைந்திருக்கவில்லை. அதுபோலத்தான் ஏனைய கட்சிகளும் தங்களின் அடிப்படைக் கொள்கைகள் விடயத்தில் சமரசம் செய்து கொண்டு இந்த கூட்டுக்கு வரவில்லை. ஆனால் பொதுத்தளத்தில் இணைந்து செயற்பட தீர்மானித்திருக்கின்றன. எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகள், கொள்கை ரீதியாக முரண்படும் என்ற எடுகோளின் அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டிய தேவை இல்லை. தாராளமாக மற்றவர்களையும் அரவணைத்து செயற்பட்டு இருக்கலாம். ஆனால் அவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இது ஒரு வரையறுக்கப்பட்ட செயற்திட்டங்களைக் கொண்ட ஒரு பொதுத்தளமாகவே தென்படுகிறது.
குறிப்பாக மாகாண சபைத் தேர்தல், நியாயமான அதிகாரபகிர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்பு மற்றும் காணி பிரச்சினைகள் போன்ற விடயங்களை பிரதானமாக கையாளும் நோக்கில் இந்த கூட்டு உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் அடையாளம் காணப்படாத- கையாளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும், எதிர்காலத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள், அதனை ஒரு அதிகாரப்பகிர்வுக்கான முதற்படியாக கருதுகின்ற கட்சிகள், இந்த கூட்டில் இணைந்திருக்கின்றன என்பது முதலாவது விடயம். கடந்த காலங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொழும்பின் ஆட்சியாளர்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்கள், இந்த கூட்டில் இணைந்து இருக்கிறார்கள் என்பது இரண்டாவது விடயம்.
மாகாண சபைத் தேர்தல் — புதிய கூட்டின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக மாகாண சபைத் தேர்தல் நடத்துவது முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் நேரடியாக இணைந்திருந்து அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டவர்களும், அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ளாமல் பின் கதவால் நலன்களை அனுபவித்தவர்களும், இதில் இணைந்திருக்கிறார்கள். ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை முழுமையாகவும் தீவிரமாகவும் எதிர்க்கின்ற தரப்புகள் இதில் இணையவில்லை. சமஸ்டியை வலியுறுத்தினாலும், கிடைப்பதை பெற்றுக் கொள்ளலாம் அந்த மனோநிலையில் இருக்கின்ற தரப்புக்களே இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தரப்புக்களுக்கு மாகாணசபைத் தேர்தல் அவசரமானது-அவசியமானது. அதுபோல புதிய அரசியலமைப்பை கொண்டு வர அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் இவர்களின் இலக்கு. இதனூடாக சமஸ்டி அரசியலமைப்பை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இல்லாவிட்டாலும், புதிய அரசியலமைப்புக்கான முனைப்புகளில் ஈடுபடும் எத்தனிப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே, முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு வரைவை மையப்படுத்தி, புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தொடர்ச்சியாக குற்றச்சாட்டி வரும் நிலையில், இந்த புதிய கூட்டு அரசியலமைப்பு திருத்தத்திற்கு பிரதான கோரிக்கையை முன் வைத்திருக்கிறது. இந்த பொதுத் தளம் எவ்வாறு செயற்பட போகிறது, எவ்வாறு மக்களின் பிரச்சினைகளை அணுகப்போகிறது என போகப் போகத்தான் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த பொது தளத்தின் ஊடாக, காரியமாற்றக் கூடிய சாத்தியங்கள் அரிதாகவே தென்படுகின்றன. ஏனென்றால் இந்தக் கூட்டில் இணைந்திருக்கின்ற கட்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட போதும், தமிழ் தேசிய நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்பவை அல்ல.
இந்த கட்சிகளுக்கு மக்களின் பிரச்சினைகளைத் தாண்டி தங்களின் சொந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த தளத்தில் ஒன்றிணைந்திருக்கின்ற ஆறு கட்சிகளுமே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் அதிர்ச்சியையும் பின்னடைவையும் எதிர்கொண்டவை. முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தேசிய மக்கள் சக்தியிடம் கடுமையாக அடிவாங்கின. இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் கூட, வரலாற்றில் என்றுமில்லாத வகையில், பேரிடியைச் சந்தித்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் மலையக மக்கள் மத்தியில் கொண்டிருந்த, பாரம்பரிய செல்வாக்கை தேசிய மக்கள் சக்தி அசைத்து பார்த்து விட்டது. இவ்வாறாக சொந்த மக்கள் கூட்டத்தில், கடுமையான அரசியல் சவால்களை எதிர்கொண்டுள்ள ஆறு கட்சிகள் தான், இந்த பொது தளத்தில் இணைந்து இருக்கின்றன.
இந்த பொது தளம் இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தளமாக இருக்குமா அல்லது இந்த கட்சிகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கானதாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தக் கட்சிகளுக்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு கணிசமாக குறைந்து விட்டது. மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்களையும் அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்காக, இந்த கூட்டு உருவெடுக்கப்படவில்லை. அரசியல் கூட்டணியாக கூட இது அமையவில்லை. அவ்வாறான ஒரு கூட்டாக உருவாவதற்கான சாத்தியங்களும் தென்படவில்லை. ஏனென்றால் இந்த கட்சிகள் ஒவ்வொன்றினதும் அரசியல் நலன்கள் வெவ்வேறானவை. வெவ்வேறான தளங்களில் செயற்படுபவை, வெவ்வேறான அரசியல் நிரல்களுக்கு உட்பட்டவை. இவை அனைத்தும் ஒரு பொதுத்தளத்தில் இணைந்து கொள்வது என்பது கடினமானது.
போருக்குப் பின்னரான 17 ஆண்டுகளில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பொதுத்தளத்தில் செயற்பட வைப்பதிலேயே பெரும் தோல்வி எதிர் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகளை, தமிழ் பேசும் கட்சிகள் என்ற ஒற்றை காரணத்தின் அடிப்படையில், பொதுத்தளத்தில் கூட்டணியாக செயற்பட வைப்பது சாத்தியமா?
0 Comments