elugai

இந்தியாவுக்கு எதிராக திருப்புகிறதா துருக்கி? இலங்கைக்கு ட்ரோன்கள் வழங்கும் அறிவிப்பின் பின்னணியில் மறைந்திருக்கும் புவிசார் அரசியல் நகர்வுகள்

இந்தியாவுக்கு எதிராக திருப்புகிறதா துருக்கி?

இந்தியாவுக்கு எதிராக திருப்புகிறதா துருக்கி?

கட்டுரையாளர் - ஹரிகரன்

இலங்கைக்கு இராணுவப் பயன்பாட்டுக்கான ட்ரோன்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகத் துருக்கி அறிவித்திருக்கிறது.

அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய துருக்கியின் தூதுவர் செமிஹ் லுத்பு துர்குட் (Semih Lutfu Turgut), இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துவதற்குத் துருக்கி திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார். அதன் ஒரு கட்டமாக, கண்காணிப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் இராணுவ ட்ரோன்களை வழங்குவதற்குத் துருக்கி முன்வந்துள்ளது என்றும், துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக, தமது நாட்டின் தொழில்நுட்பக் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். அதன் பின்னர், இலங்கையில் இருந்து ஒரு குழு துருக்கிக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய நிலையில் இலங்கை இராணுவத் தேவைகளுக்கான ட்ரோன்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான எந்த முனைப்புகளிலும் ஈடுபடவில்லை. ஆனால் பல நாடுகள், இலங்கைக்கு ட்ரோன்களை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றன அல்லது விருப்பம் வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமிஹ் லுத்பு துர்குட் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான துருக்கியின் தூதுவர் டாக்டர் செமிஹ் லுத்பு துர்குட் — இருதரப்பு உறவுகளை அனைத்துத் துறைகளிலும் விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இராணுவ ட்ரோன் வழங்கல் முன்மொழியப்பட்டுள்ளது. (படம்: News 1st)

அவுஸ்திரேலியா ஒரு தொகுதி ட்ரோன்களைக் கடலோரக் கண்காணிப்பிற்காக வழங்கியது. ஜப்பானும் பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ட்ரோன்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இப்போது துருக்கி இலங்கைக்கு ட்ரோன்களை விற்பனை செய்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளது.

இதற்கான தேவை இருக்கிறதா, அதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளதா என்பதைத் தாண்டி, துருக்கித் தூதுவர், ட்ரோன்களை வழங்கத் தயார் எனக் கூறியிருக்கிறார். இலங்கை அதிகாரிகளுக்கு ட்ரோன்கள் பற்றிய விளக்கங்களை வழங்குவதற்குத் துருக்கி அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும், இங்குள்ள அதிகாரிகளை அங்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாகவும், துருக்கித் தூதுவர் குறிப்பிட்டிருக்கிறார்.

துருக்கியின் இரட்டை நிலைப்பாடு

துருக்கித் தூதுவரின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் ஒரு புவிசார் அரசியல் நோக்கம் உள்ளது, பலரால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரே இஸ்லாமிய நாடு துருக்கி. ஆனால், அவ்வப்போது துருக்கி நேட்டோ அமைப்பின் தீர்மானங்களுடனும் முரண்படுகிறது. குறிப்பாக, உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொள்வதற்குத் தடை போட்டதே துருக்கி தான். சில சந்தர்ப்பங்களில் நேட்டோவின் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் செயற்படுவதால், துருக்கியை முழுமையாக நம்புவதற்கு இஸ்ரேல் தயாராக இல்லை.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் துருக்கி அண்மைக்காலத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான், மாலைதீவு போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளைத் துருக்கி வலுப்படுத்தி வருவது இந்தியாவுக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது. இலங்கைக்கு ட்ரோன்களை வழங்கத் துருக்கி முன்வந்ததன் பின்னணியில், இந்தியாவுடனான துருக்கியின் சிக்கலான மற்றும் பதற்றமான புவிசார் அரசியல் உறவுகள் மிக முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகின்றன. தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில், இந்தியாவின் தீவிர துருக்கிய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்குப் பதிலடி கொடுக்கவும், இந்த ட்ரோன் இராஜதந்திரத்தைத் துருக்கி ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் — துருக்கியின் நெருங்கிய கூட்டாளி

இந்தியாவுடனான துருக்கியின் முரண்பாட்டிற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் தான். துருக்கியைப் பொறுத்தவரையில், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையில், அது ஒரு இஸ்லாமிய நாடாகவே நடந்து கொள்கிறதே தவிர, நேட்டோ நாடாகத் தன்னைக் கருதவில்லை. அது முழுமையாகப் பாகிஸ்தானின் பக்கமே நிற்கிறது. பாகிஸ்தானைத் தனது மிக நெருங்கிய சகோதர நாடாகவே கருதுகிறது. இந்தியாவின் எதிர்ப்புகளை மீறிப் பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து ஆயுதங்களையும், ட்ரோன்களையும் வழங்கி வருகிறது.

பாகிஸ்தான் எங்கள் சகோதர நாடு என்பதால், நாங்கள் இந்தியாவிற்கு ஒருபோதும் ட்ரோன்களை விற்கமாட்டோம் — துருக்கியின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான பேக்கர் (Baykar) பகிரங்கமாக அறிவித்தது.

2025ஆம் ஆண்டு பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஒப்பரேசன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவிற்கு எதிராகத் துருக்கியில் தயாரிக்கப்பட்ட 'சோங்கார்' (Songar) வகை ட்ரோன்களைப் பயன்படுத்தியது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, இந்தியா துருக்கிக்கு எதிராகக் கடுமையான பொருளாதார மற்றும் இராஜதந்திரப் புறக்கணிப்புகளை ஆரம்பித்தது. இதற்குப் பதிலடியாக, துருக்கியின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான பேக்கர் (Baykar), பாகிஸ்தான் எங்கள் சகோதர நாடு என்பதால், நாங்கள் இந்தியாவிற்கு ஒருபோதும் ட்ரோன்களை விற்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தது.

துருக்கியின் பேக்கர் நிறுவனத்தின் பேராக்டர் TB2 ட்ரோன் துருக்கியின் பேக்கர் நிறுவனம் தயாரிக்கும் பேராக்டர் TB2 ஆயுதம் தாங்கிய ட்ரோன் — மாலைதீவு உட்பட, துருக்கியுடன் நெருக்கமான நாடுகளுக்கு இதே வகை ட்ரோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. (படம்: AFP)

இந்தியாவிற்கு விற்க மறுக்கும் அதே ட்ரோன்களை, இந்தியாவின் அண்டை நாடுகளான மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு வழங்கத் துருக்கி முன்வந்திருப்பது, இந்தியாவைச் சுற்றி ஒரு மூலோபாய அழுத்தத்தை உருவாக்கத் துருக்கி முயற்சிப்பதைக் காட்டுகிறது.

மாலைதீவு — முன்னுதாரணம்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மாலைதீவு, இலங்கை போன்ற நாடுகள், இந்தியாவின் பாரம்பரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பவை. மாலைதீவிலிருந்து இந்திய இராணுவப் பிரிவுகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு தனது ஆயுதம் தாங்கிய ட்ரோன்களைத் துருக்கி நிலைநிறுத்தியது. தற்போது இலங்கையிலும் தனது பாதுகாப்புத் தடயத்தைப் பதிக்கத் துருக்கி முனைவதானது, பிராந்தியத்தில் இந்தியாவின் தனித்துவமான ஆதிக்கத்திற்குச் சவால் விடுவதாக அமைந்துள்ளது.

துருக்கி தனது பாதுகாப்புத் தளபாடங்களை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம், புதுடெல்லிக்கு ஒரு வலுவான இராஜதந்திரச் செய்தியை அனுப்ப விரும்புகிறது என்பது புலனாகியுள்ளது. இந்தியா தன்னைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் காட்டும் அதே பாதுகாப்பு விழிப்புணர்வை, இந்தியப் பெருங்கடல் நாடுகளில் துருக்கியும் அதன் ட்ரோன் வெளியுறவுக் கொள்கை மூலம் உருவாக்க முனைகிறது.

மாலைதீவில் துருக்கியின் பாதுகாப்பு நுழைவு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு சமநிலையைக் கணிசமாக மாற்றியமைத்துள்ளது. இது இந்தியாவின் கண்காணிப்பை முடக்கியுள்ளது. மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயத்தை, இந்தியாவின் கடலோர காவல்படையும், இந்தியாவினால் வழங்கப்பட்ட டோனியர் விமானங்களுமே கண்காணித்து வந்தன. ஆனால், மாலைதீவில் முகமட் முயிஸு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியாவை வெளியேற்றினார். இதனால், மாலைதீவின் காவலர் பணி இந்தியாவிடமிருந்து பறிக்கப்பட்டது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு மாற்றாக, துருக்கியின் Baykar நிறுவனத்திடம் இருந்து, 37 மில்லியன் டொலர் பெறுமதியான Bayraktar TB2 ரக ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை மாலைதீவு வாங்கியது. இந்த ட்ரோன்கள் இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள மாபாரு (Maafaru) சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. துருக்கி தனது டொகான் (Dogan) வகை அதிவேகத் தாக்குதல் படகுகளையும் மாலைதீவுக்கு வழங்கி அங்குள்ள கடற்படையினருக்குப் பயிற்சியளித்து வருகிறது. இதனால் இந்தியாவின் தென்பகுதி கடல் எல்லைக்கு மிக அருகில், துருக்கி ட்ரோன்கள் உளவு பார்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பாதுகாப்பு வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு இது எவ்வளவு சிக்கலானது?

இவ்வாறானதொரு சூழலில் தான், துருக்கித் தூதுவர் இலங்கைக்குக் கடல்சார் கண்காணிப்புக்காக, இராணுவ ட்ரோன்களை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இது ஒரு சிக்கலான விடயம். இலங்கை இதனை ஏற்றுக்கொண்டால், இந்தியாவுக்கு அது கோபத்தை ஏற்படுத்தும். பாகிஸ்தானிடம் உள்ள துருக்கியின் ட்ரோன்களால் இந்தியா ஏற்கனவே பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய சூழலில், இலங்கையும் துருக்கியிடம் இருந்து ட்ரோன்களை வாங்கினால், அதனை இந்தியா இன்னும் கூடுதல் அச்சுறுத்தலாகப் பார்க்கும். எனவே, இந்தியா தனது கடுமையான இராஜதந்திர எதிர்ப்பை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

முன்னதாக, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை ஜேஎவ்-17 போர் விமானங்களை வாங்க முயன்றபோது, இந்தியா தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தியது. தேவைப்பட்டால் தனது தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வழங்கத் தயார் என்றும் அப்போது இந்தியா கூறியது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கு முதன்மையான பாதுகாப்பு வழங்குநராக இருக்கவே இந்தியா விரும்புகிறது.

இவ்வாறான நிலையில், ட்ரோன்களை வாங்குவதற்கு இலங்கை துருக்கியை நாடினால், பாதுகாப்பு தேவைகளுக்கு இந்தியாவைச் சார்ந்திருக்கும் நிலை குறையும். அது இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்குப் பின்னடைவாக அமையும். அதைவிட, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, இந்தியா பில்லியன் கணக்கான டொலர்களைக் கடனாகவும், எரிபொருளாகவும் வழங்கியது.

இவ்வாறு மூலோபாய ரீதியாக இலங்கையுடன் இந்தியா உறவுகளைக் கொண்டிருக்கும் சூழலில், பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டாளியான துருக்கி இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வது, புதுடெல்லியுடனான கொழும்பின் உறவுகளை விரிசலடையச் செய்யும். எதிர்கால இந்திய முதலீடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளையும் அது பாதிக்கலாம். மாலைதீவைத் தொடர்ந்து இலங்கையிலும் துருக்கியின் இராணுவத் தளபாடங்கள் கால்பதித்தால், இந்தியாவின் தெற்கு எல்லை முழுமையாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். ட்ரோன்களின் தரவுகள் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள், மறைமுகமாகத் துருக்கி மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் கைகளுக்குச் செல்லக் கூடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு ஏற்படும்.

துருக்கி பாதுகாப்பு நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்து இந்த ட்ரோன்கள் குறித்து, பாதுகாப்பு தரப்பிற்கு விளக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளது. எனினும், இலங்கை அரசு இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளைக் கருத்தில் கொண்டு, இந்தச் சலுகை குறித்து இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. அதுபற்றி வாய்திறக்காமல் உள்ளது. பிராந்திய மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக, துருக்கி வழங்கும் இந்த வாய்ப்பை இலங்கை பற்றிக் கொண்டால், அது இலங்கைக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும்.

Post a Comment

0 Comments