elugai

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பைச் சுற்றிய சர்ச்சை, பொறுப்புக்கூறல் அரசியலும் எதிர்க்கட்சிகளின் வியூகமும்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு

கட்டுரையாளர் - சத்ரியன்

நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பு செய்கின்ற அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற போதும், அந்த எதிர்ப்பை மக்கள் மயப்படுத்துகின்ற முயற்சிகளில் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. நீதிபதிகள் மட்டத்திலும் கூட அரசாங்கத்தின் திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கவில்லை.

நீதித்துறையை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக எடுக்கின்ற முயற்சியாகவே, இதனை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதற்கு எதிராக மக்களைத் திரட்டி பெரியளவில் போராட்டங்களை நடத்துகின்ற முனைப்புகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடவும் இல்லை, அதற்கான முயற்சிகளுக்குப் பெரியளவில் ஆதரவு கிடைக்கும் சாத்தியங்களும் தென்படவில்லை.

இந்தச் சூழலில் இந்த விவகாரத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாகக் கொண்டு செல்வதற்கும், அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கும், தங்களுக்குச் சாதகமான நிலை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் கூட்டு எதிர்க்கட்சி எனச் சொல்லப்படும், முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் முயற்சிக்கின்றனர். இவர்கள் கடந்த வாரம் நடத்திய ஒரு ஊடக சந்திப்பின் போது வெளிப்படுத்தியிருந்த சில விடயங்கள், இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கியிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் நீதிபதிகளின் பதவிக்காலம் நீடிப்புக்கு எதிராகக் கூடிய கூட்டம் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையைத் தோற்கடிக்கும் உபாயம் குறித்து ஆலோசிக்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூடியிருந்தனர். (படம்: Sunday Times)

நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பு செய்வதன் மூலம், அரசாங்கம் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட முனைவதாகவும், இது நாட்டின் நீதித்துறை தொடர்பான நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் பாதிக்கும் என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்தார்.

நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் தகுதி அவருக்கு உள்ளதா என்ற கேள்விகளும் உள்ளன. ஏனெனில் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்கிய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவர் வெளிவிவகார அமைச்சராகப் பதவியில் இருந்தவர். அதுமட்டுமன்றி, ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும் அரசாங்கத் தரப்பு உறுப்பினராக ஜி.எல்.பீரிஸ் அங்கம் வகித்திருந்தார். அப்படிப்பட்டவர் தான் இப்போது நீதித்துறை சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்துக் குரல் எழுப்புகிறார்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஊடக சந்திப்பில் உரையாற்றுகிறார் முன்னாள் அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றுகிறார் — நீதிபதிகளின் பதவிக்காலம் நீடிக்கப்படுவது நாட்டின் நீதித்துறை மீதான சர்வதேச நம்பகத்தன்மையைப் பாதிக்கும் எனக் கூறியுள்ளார். (படம்: Jaffna Monitor)

நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது, சர்வதேச அளவில் இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் முன் வைத்திருக்கின்ற ஒரு விடயம், அரசாங்கத்திற்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது தான். போர்க்கால மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுடன் நீதிபதிகள் விவகாரத்தை முடிச்சு போட்டு அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கின்ற நடவடிக்கை இது.

அரசாங்கம் நீதித்துறையைப் பலவீனப்படுத்துவதால் சர்வதேச அளவில் அதன் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்றும், அது உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் முயற்சிகளைச் சர்வதேச மயப்படுத்துகின்ற நிலைக்குள் தள்ளும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கு நீதியை வழங்க வேண்டும், பொறுப்புக்கூறலை உறுதி செய்து, குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை, கடந்த 17 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இலங்கையின் ஆட்சியாளர்கள் யாரும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கோ, குற்றமிழைத்தவர்களைக் கண்டறிந்து தண்டனைக்கு உட்படுத்துவதற்கோ, நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ தொடக்கம், அனுரகுமார திசாநாயக்க வரையிலான ஆட்சித் தலைவர்கள் அனைவருமே, ஒரே நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கிறார்கள்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் அவர்கள் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவது குறித்துக் கவலைப்படவில்லை. சிங்கள மக்களின் அதிருப்தியை, எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளக் கூடாது என்பதிலும், பொறுப்புக்கூற வேண்டியவர்களின் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதிலுமே அவர்கள் கரிசனையாக இருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் நீதித்துறையைப் பலவீனப்படுத்துவது, உள்நாட்டுப் பொறுப்புக்கூறலை ஆபத்திற்குள் தள்ளும் என்பது கூட்டு எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு. அப்படியென்றால் உள்நாட்டுப் பொறுப்புக்கூறலில் கூட்டு எதிர்க்கட்சி உறுதியாக இருக்கிறதா, அக்கறை கொண்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

கூட்டு எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் எந்தவொரு வகையிலும் முன்னெடுக்கப்படுவதை விரும்பவில்லை. அது நியாயமாக, சுதந்திரமாக, நேர்மையாக, பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்பட்டால், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பலர் கூட்டு எதிர்க்கட்சியிலும் இருக்கின்றனர். எனவே, எந்தவொரு பொறுப்புக்கூறல் பொறியிலும் சிக்கி விடக் கூடாது என்பதே அவர்களின் திடமான நிலைப்பாடு.

ஆனால், சர்வதேசத்தை சமாளிப்பதற்கு, அவ்வப்போது உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறை பற்றிப் பேசி, வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி வந்திருக்கிறார்கள். அந்த நிலை இன்றும் தொடர்கிறது. இன்றைய அரசாங்கமும் அவ்வாறு ஏமாற்றும் தந்திரத்தையே கையாளுகிறது.

நீதிபதிகளின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதைக் கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பதற்கு, நீதித்துறை சுதந்திரத்தின் மீதான அரசின் தலையீடுகளை அதிகரிக்கச் செய்யும் என்ற காரணத்தைத் தாண்டி, வேறு காரணங்களும் இருக்கின்றன. வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டால், தற்போது கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள பலர், சிறைக்குள் செல்லும் ஆபத்தும் ஏற்படலாம். எனவே தான், நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதைக் கூட்டு எதிர்க்கட்சி கடுமையாக எதிர்க்கிறது. அதற்காகவே நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு முயற்சிகளைத் தடுக்க, பொறுப்புக்கூறல் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேச சமூகம் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சர்வதேசமோ, இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தன்னால் அந்த நடவடிக்கையை முன்னெடுப்பது கடினமானது என்பதால், அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதால், இலங்கையைக் கொண்டு அதனை நிறைவேற்ற முற்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானத்திலும், இலங்கை அரசைப் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பு செய்கின்ற அரசாங்கத்தின் நடவடிக்கையினால், நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டால், சர்வதேச அளவில் இலங்கையின் நீதித்துறை பற்றிய எதிர்பார்ப்புகள் சிதைந்து போகும். இலங்கையின் நீதித்துறை நம்பகமற்றதாகக் கருதப்படும் சூழலில் உள்நாட்டுப் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதைக் கைவிட்டு, சர்வதேச பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு முன்னெடுக்கப்படக் கூடிய சூழல் ஏற்படும் என்றும், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

இது ஒரு வகையில் சரியானது தான். இலங்கையின் நீதித்துறை நம்பகமற்றதாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், எந்தவொரு நாட்டினாலும் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலியுறுத்த முடியாது போகும்.

பாதிக்கப்பட்ட மக்கள், உள்நாட்டு நீதியின் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அதனை அவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தினாலும், சர்வதேச சமூகம் அதனைக் கைவிடுவதாக இல்லை. அதற்குக் காரணம் அவர்களின் இயலாமை தான்.

இப்போது உள்நாட்டு நீதித்துறைக் கட்டமைப்பு மேலும் சிதைவடைந்து போனால், சர்வதேச நீதிக்கான கோரிக்கை வலுப்பெறும் என்பதைச் சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல முற்படுகிறது கூட்டு எதிர்க்கட்சி. சிங்கள மக்கள் சர்வதேச நீதி கோரும் முயற்சிகளைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அதற்கு நாட்டின் இறைமை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய கவலைகளைத் தாண்டிய காரணங்கள் உள்ளன. அவர்களைச் சார்ந்த படையினர் நீதியின் முன் நிறுத்தப்படுவதையோ, தண்டிக்கப்படுவதையோ அவர்கள் விரும்பவில்லை. அதனை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

குற்றமிழைத்த படையினரை, வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று தண்டனைக்கு உட்படுத்தும் நிலையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் அவர்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ இப்படித்தான் சிங்கள மக்களை ஏமாற்றினார். எமது படையினரை சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று அவர் சூளுரைத்தார். இதன் மூலமாக அவர் சிங்கள மக்களின் மனங்களில் கதாநாயகனாக இடம்பிடித்துக் கொண்டார்.

உள்நாட்டு நீதி கேள்விக்கு உட்படுத்தப்படுகின்ற போது, பலவீனப்படுத்தப்படுகின்ற போது, சர்வதேச நீதி கோரிக்கை வலுவடையும். அது பிற நாடுகள், தரப்புகளால் வலியுறுத்தப்படும் நிலை ஏற்பட்டால், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்கள், சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என கூட்டு எதிர்க்கட்சி கூறுகிறது.

தற்போது, இராணுவ அதிகாரிகள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள், அவர்கள் மீது பயணத்தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பலர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்கள் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ், அந்தந்த நாடுகளின் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படும் நிலை ஏற்படலாம் என கூட்டு எதிர்க்கட்சி கூறுகிறது.

இதற்கான வாய்ப்புகள் இல்லை எனக் கூற முடியாது. ஆனால் அதற்கான உடனடிச் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

மிகையான இந்தக் கற்பனையைச் சிங்கள மக்களிடம் கொண்டு சென்று, அரசாங்கத்தின் தீர்மானங்களைப் பின்வாங்கச் செய்யவும், சிங்கள மக்களின் காவலர்களாக மீண்டும் அடையாளப்படுத்திக் கொள்ளவுமே கூட்டு எதிர்க்கட்சி முற்படுகிறது.

Post a Comment

0 Comments