ஒலிவர் ரணசிங்கவின் நூல் கிளப்பும் சர்ச்சை
இலங்கையின் முப்படைகளிலும், தளபதிகளாக இருந்தவர்கள், தங்களின் போர்க்கால அனுபவங்களை நூல்களாக வெளியிட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சர்வதேச அளவில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்ற சூழலில், இந்தப் போரில் பங்கெடுத்த இலங்கையின் இராணுவ தளபதிகள், வரலாற்றில் தங்களின் பதிவுகள் இடம்பெற்று விட வேண்டும் என்பதற்காகவும், தங்களின் வீர சாகசங்களை நூல்களாக எழுதி வருகிறார்கள்.
ஜெனரல் கமல் குணரத்ன தான் இதனைத் தொடக்கி வைத்தவர். அவர், நல்லாட்சி அரசின் காலத்தில், இராணுவத்தில் இருந்து விலகிய போதே, நந்திக்கடலுக்கான பாதை என்ற தனது நூலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்குப் பின்னர், பல படைத் தளபதிகள் போர் வரலாற்று நூல்களை எழுதியுள்ள போதும், அவை ஜெனரல் கமல் குணரத்னவின் நந்திக்கடலுக்கான பாதை அளவிற்கு பிரபலம் பெறவில்லை.
இந்த வரிசையில் இப்போது இடம்பிடித்திருப்பவர், முன்னாள் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஒலிவர் ரணசிங்க. 1996 தொடக்கம் 1999 வரை இலங்கை விமானப்படையின் 9வது தளபதியாக பணியாற்றிய அவர், கடந்த 16ஆம் திகதி கொழும்பில் நடந்த நிகழ்வில், To Survive As One Nation, One People என்ற தனது நூலை அறிமுகம் செய்திருந்தார்.
இந்த நூலில் அவர் குறிப்பிட்டிருக்கின்ற சில சம்பவங்கள், வாசகர்களுக்கு சுவாரசியமானவையாக அமைந்திருக்கலாம். அவை அவரது வீரசாகசங்களாக வரலாற்றில் இடம்பிடிக்கலாம். ஆனால், இந்தச் சம்பவங்கள், விதிமுறைகள், சட்டங்கள் போன்றவற்றை இவர்கள் எப்படி உதாசீனம் செய்திருக்கிறார்கள், மீறியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. ஒலிவர் ரணசிங்கவின் நூலில் இரண்டு சம்பவங்கள் தொடர்பாக கூறப்பட்டிருக்கின்ற விடயங்கள், விமானப்படையின் விதிமுறைகள் மீறப்பட்டதை காட்டுகிறது.
முதலாவது சம்பவம் — 1985, மாக்ரெட் தட்சர்
1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாவது சம்பவம் இடம்பெற்ற போது, அவர் விமானப்படைத் தளபதி அல்ல, ஹெலிகொப்டர் அணியின் கட்டளை அதிகாரியாக இருந்தார். பிரித்தானிய பிரதமராக இருந்த மாக்ரெட் தட்சர், மூன்று நாள் பயணமாக 1985 ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி, இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியிருந்தார். இரும்புச்சீமாட்டி என அறியப்பட்ட அவர், மறுநாள் 12ஆம் திகதி காலை, பிரித்தானிய மகாராணியின் நிதியுதவியில் கட்டப்பட்ட விக்டோரியா அணைக்கட்டையும், அதனுடன் இணைந்த நீர்மின் உற்பத்தி நிலையத்தையும் திறந்து வைப்பதற்காக கண்டிக்குச் செல்லவிருந்தார்.
பிரித்தானிய பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையிலும், அவர் வருவதற்கு முதல் நாளான ஏப்ரல் 10ஆம் திகதி இரவு 9.30 மணியளவில், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். யாழ்ப்பாணம் கோட்டையிலும், குருநகரிலும் இருந்த இராணுவ முகாம்களுக்கு நடுவே இருந்த பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில், பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். நான்கு லொறிகளில் அந்த ஆயுதங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. அது புலிகளின் ஆயுதக் கையிருப்பை திடீரென பலமடங்காக உயர்த்தியது.
அந்தத் தாக்குதலை அடுத்து, விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் கோட்டையை முற்றுகையிட்டனர். யாழ்ப்பாண குடாநாடு அதன் பின்னரே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வரத் தொடங்கியது. அந்த முற்றுகையை அடுத்து, கோட்டை முகாம் தனிமைப்படுத்தப்பட்டது.
பொலிஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு, யாழ்ப்பாணம் கோட்டையை புலிகள் தாக்கலாம் என புலனாய்வுத் தகவல் இராணுவத்திற்குக் கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் தரை வழியாக இராணுவத்தினரை பலாலியிலிருந்து கோட்டைக்கு அனுப்பக் கூடிய சூழல் இருக்கவில்லை. பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட போதே பல பாலங்கள், மதகுகளை புலிகள் குண்டு வைத்து தகர்த்திருந்தனர். அதனால் அவசரமாக 250 இராணுவத்தினரை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமானப்படையிடம் அப்போது போதுமான ஹெலிகொப்டர்கள் இருக்கவில்லை.
இது தொடர்பாக ஹெலிகொப்டர் அணியின் கட்டளை அதிகாரியாக இருந்த ஒலிவர் ரணசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர், இரண்டு பெல் ஹெலிகொப்டர்களுடன் விமானப்படை தலைமையகத்தில் இருந்தார். மறுநாளான 12ஆம் திகதி விக்டோரியா அணையை திறக்கச் செல்லும் பிரித்தானியப் பிரதமர் மாக்ரெட் தட்சரை ஏற்றி செல்வதற்காக அந்த இரண்டு ஹெலிகொப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
4வது ஹெலிகொப்டர் படையணிக்குச் சொந்தமான, விஐபி போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் இலங்கை விமானப்படையின் பெல் 412 ஹெலிகொப்டர். (படம்: Sri Lanka Air Force)
மிக முக்கியமான உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரமுகர்களை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகள் தொடர்பாக விமானப்படையில் சில நடைமுறைகள் உள்ளன. பயணத்திற்கு 48 மணி நேரம் முன்னரே, அந்த ஹெலி, விமானப்படை தலைமையகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு, முழுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர், தனியாக வைத்திருக்க வேண்டும். அந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
இவ்வாறான கட்டுப்பாடுகள் இருந்த போதும், பிரித்தானிய பிரதமரை ஏற்றிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெல் 412 ஹெலிகொப்டர்கள் இரண்டும், ஏப்ரல் 11ஆம் திகதி ஒரு மணியளவில் பலாலி நோக்கி புறப்பட்டு சென்றன. அதில் ஒன்றை ஒலிவர் ரணசிங்க ஓட்டிச் சென்றார். பலாலியிலிருந்து மாறி மாறி ஒவ்வொரு ஹெலிகொப்டரிலும் 22 படையினரை ஏற்றிச் சென்று கோட்டையில் இறக்கிய பின்னர், இரவு 10 மணியளவில், இரண்டு ஹெலிகொப்டர்களும், கடும் மழை பெய்து கொண்டிருந்த ஆபத்தான வானிலைக்கு மத்தியில், கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்குத் திரும்பின. மறுநாள் காலையில் அவை, திட்டமிட்டபடி, பிரித்தானிய பிரதமரை கண்டிக்கு ஏற்றிச் சென்றன.
இதனைத் தனது தற்துணிவின் பேரில் எடுக்கப்பட்ட முடிவாக, வடக்கில் படையினரின் உயிர்களைப் பாதுகாப்பதற்காகத் தான் எடுத்துக் கொண்ட, அதிகபட்ச ஆபத்தான முடிவு என குறிப்பிட்டிருக்கிறார் ஒலிவர் ரணசிங்க. விமானப்படையில் நடைமுறைகளை மீறி அவர் எடுத்த முடிவு, எந்த ஆபத்தை ஏற்படுத்தாததால், அவருக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது.
இந்தச் சம்பவம், அவரைப் பொறுப்புவாய்ந்த ஒரு அதிகாரியாக, விமானப்படையின் சட்ட திட்டங்களை மதிக்கும் அதிகாரியாக அடையாளப்படுத்தவில்லை. ஒரு முகாமின் பாதுகாப்பிற்காக, இன்னொரு நாட்டின் தலைவரின் பயணத்தைப் பணயம் வைக்கும் அளவிற்கு அவர் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டுச் செயற்பட்டிருக்கிறார். சாகச வீரராக, துணிச்சல்மிக்க தேசப்பற்றுள்ள ஒரு விமானப்படை அதிகாரியாக இந்தச் சம்பவம் சிங்கள வாசகர்கள் மத்தியில் அவரை அடையாளப்படுத்தும். ஆனால் அவர் ஒரு சர்வதேச பிரமுகரின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பின்றி நடந்து கொண்ட அதிகாரி என்பதே இந்தச் சம்பவத்தின் மூலம் எடுத்துக் கூறப்படும் முக்கியமான விடயம்.
ஒரு இராணுவ அதிகாரி தனக்கு இடப்பட்டுள்ள கட்டளையையும், தனக்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளையும் மீறாமல் இருக்க வேண்டும். அந்தப் பொறுப்பை ஒலிவர் ரணசிங்க நிறைவேற்றியிருக்கவில்லை. அது மாத்திரமன்றி, ஹெலிகொப்டரின் ஆசனங்களை அகற்றி விட்டு, பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் கோட்டைக்கு 22 படையினரை ஏற்றி சென்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் கூட விமானப்படையின் விதிமுறைகளை மீறுகின்ற ஒரு செயல்.
பெல்-412 ஹெலிகொப்டரில், ஆசனங்களுடன் 15 படையினரையே ஏற்றிச் செல்ல முடியும். 8.7 அடி நீளமும், எட்டு அடி அகலமும் கொண்ட ஹெலிகொப்டரின் உட்பகுதிக்குள், 22 பேரை அமர வைப்பது சாத்தியமற்றது. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அதனை இயக்குவது ஆபத்தானது. பல சந்தர்ப்பங்களில் அளவுக்கு மீறிய படையினரை ஏற்றுச் சென்ற விமானப்படை ஹெலிகொப்டர்கள் விழுந்து நொறுங்கியிருக்கின்றன.
விமான பாதுகாப்பு விதிமுறைகள், விமானங்களின் பாதுகாப்புக்காக மாத்திரமன்றி, படையினரின் பாதுகாப்புக்காகவும் தான் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளை மீறிய ஒருவரே இலங்கை விமானப்படைக்கு 3 ஆண்டுகள் தலைமை தாங்கியிருக்கிறார் என்பதை அவரது நூலே சாட்சியமாக உள்ளது.
இரண்டாவது சம்பவம் — 1987, ராஜீவ் காந்தி
இன்னொரு சம்பவம், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்றுள்ளது. இந்திய-இலங்கை உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக, கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து கொழும்புக்கும், பின்னர் விமான நிலையத்திற்கும் ஏற்றி செல்வதற்கான பொறுப்பு ஒலிவர் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய பிரதமரின் பயணத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஹெலிகொப்டரை விதிமுறைகளை மீறி, இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்திய அவரை, மீண்டும் இந்தியப் பிரதமரின் பயணத்திற்காகத் தெரிவு செய்ததே சர்ச்சைக்குரிய முடிவு தான்.
காலி முகத்திடலில் இருந்து ராஜீவ் காந்தியையும் சோனியா காந்தியையும் ஹெலிகொப்டரில் ஏற்றிய பின்னரே, கடற்படை சிப்பாயால் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட சம்பவம் பற்றி தனக்குத் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தெரியப்படுத்தப்பட்டதாக ஒலிவர் ரணசிங்க குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் சந்தர்ப்பத்தில் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள், அந்த இலக்கு தவறினால், இரண்டாவது தாக்குதல் திட்டத்தை வைத்திருப்பார்கள் என்றும், அது ஹெலிகொப்டரை இலக்கு வைப்பதாக இருக்கக் கூடும் என்றும் தான் கருதியதாகவும், இதனால் தனது பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
வழக்கமான பாதையைத் தவிர்த்து எதிர்பார்க்கப்படாத திசையில் ஹெலிகொப்டரைச் செலுத்தி, கட்டுநாயக்க விமான நிலையத்தில், விமான கட்டுப்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், தவறான திசையில் தரையிறக்கியதாகவும், சினப்பர் அல்லது ஆர்பிஜி தாக்குதலில் இருந்து தவிர்க்கவே தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் ஒலிவர் ரணசிங்க குறிப்பிட்டிருக்கிறார். அவர் இதற்கு விமானப்படைத் தலைமையகத்திடம் அனுமதி பெற்றிருக்கவில்லை. ஆனால் இதுவும் அவரது ஆபத்தான முடிவாகும்.
ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட நிலையில், அவரை ஏற்றிய ஹெலி தவறான பாதையில் பயணித்ததும், தவறான இடத்தில் தரையிறக்கப்பட்டதும் கூட, பாதுகாப்பு அதிகாரிகளால் தவறான தீர்மானங்களை எடுக்கத் தூண்டியிருக்கும். அது அவரது உயிருக்கு ஆபத்தான நிலைமைகளைக் கூட ஏற்படுத்தியிருக்கலாம்.
எவ்வாறாயினும், இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் இரண்டு முக்கியமான தலைவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பயணங்களை உறுதி செய்திருக்கிறார். அதனால் அவர் தப்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்தத் தலைவர்களின் பாதுகாப்பு விடயத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை அவர் சரியாகப் பின்பற்றவில்லை.
இதுபோன்ற தவறுகள் எந்த ஒரு இராணுவ அமைப்பிலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இராணுவ அமைப்புகளில் சாகசங்களுக்கு இடமில்லை; விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும், கட்டளைகளுமே முக்கியமானவை. இலங்கையின் இராணுவ கட்டமைப்பில் சாகசங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் தான், ஒலிவர் ரணசிங்கவினால் விமானப்படையின் தளபதியாக வர முடிந்திருக்கிறது.
0 Comments