elugai

மாகாண சபைகள் மீது மக்களின் நம்பிக்கை குறைகிறதா? வெளியான கருத்துக்கணிப்பு சொல்லும் உண்மை

மறக்கப்படுகிறதா மாகாண சபைகள்?

மறக்கப்படுகிறதா மாகாண சபைகள்?

கட்டுரையாளர் - கபில்

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அண்மையில் வெளியிட்ட ஒரு கருத்துக்கணிப்பு, மாகாண சபைகள் தொடர்பான விவாதம் ஒன்றைத் தூண்டியிருக்கிறது. பொருளாதார நிலை தொடக்கம் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் மீதான நம்பகத்தன்மை அல்லது திருப்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், எழுப்பப்பட்ட கேள்விகளில் மாகாண சபை தொடர்பான கேள்வியும் அடங்கியிருந்தது. மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் முக்கியத்துவம் குறித்த அந்த கேள்விக்கு பதில் அளித்தவர்களில் 67 வீதமானோர், அது முக்கியமானது எனக் கூறியிருக்கிறார்கள். அதேசமயம் 20.3 சதவீதமானவர்கள் முக்கியத்துவமற்றது என தெரிவித்திருக்கிறார்கள். முக்கியமானதோ முக்கியமற்றதோ இல்லை என்று 5 சதவீதமானோரும், தெரியாது என 7 சதவீதமானோரும், பதிலளித்திருக்கிறார்.

மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு 38 ஆண்டுகள் ஆகின்ற நிலையில்- நாட்டின் தென்பகுதியில் 25 ஆண்டுகள் வரை செயற்பாட்டில் இருந்திருக்கின்றன. கிழக்கில் 10 ஆண்டுகள் வரையும், வடக்கில் சுமார் 5 ஆண்டுகள் வரையிலுமே மாகாண சபைகள் இயங்கியுள்ளன. எனினும், 67 வீதமானோர் மாத்திரமே மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியது முக்கியம் எனக் கூறியிருக்கிறார்கள். 20 வீதமானவர்கள் இதனை அவசியமற்றது என குறிப்பிட்டு இருக்கின்ற நிலையில், 7 சதவீதமானவர்கள் இதுபற்றி அறியாமலேயே இருக்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம். அதுவும் நாட்டின் இரண்டாவது நிலை நிர்வாக கட்டமைப்பான மாகாண சபைகள் பற்றி, அதன் முக்கியத்துவம் தொடர்பாக உணர்ந்து கொள்ளாத நிலையில், இந்தளவு மக்கள் இருப்பதை சாதாரணமாக கருத முடியாது.

முடிந்தால் மாகாண சபை தேர்தல்களை நடத்திக் காட்டுமாறும், அதில் வென்று காட்டுமாறும், அரசாங்கத்துக்கு பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் சவால் விடுத்திருக்கின்ற சூழலில் தான் இந்தக் கருத்துக்கணிப்பு வெளியாகியிருக்கிறது. அண்மையில் உருவாக்கப்பட்ட ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளின் முக்கியமான இலக்குகளில் ஒன்று, மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவாக நடத்த வலியுறுத்துவதாகும். ஆனால், மாகாண சபைகள் தொடர்பான மக்களின் நிலைப்பாடுகள், பலத்த கேள்விகளை எழுப்பத் தூண்டியிருக்கிறது. மாகாண சபைகளை பயனற்றதாகவும், வினைத்திறனற்றதாகவும், வெள்ளை யானை என்றும் அடையாளப்படுத்தி பிரசாரம் செய்து வந்த தரப்புகள் கூட, இன்று மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று கூறுகின்றன. இந்த சூழலில் மக்கள் மத்தியில் மாகாண சபைகள் தொடர்பான எதிர்மறை மனோபாவம் உருவாகி வருவது கவனிக்கத்தக்கது.

இன ரீதியாக இந்த விடயத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பதும் கருத்துக்கணிப்பில் வெளிப்பட்டிருக்கிறது. நாட்டுமக்களில் 70.4 சதவீதமானவர்கள் தேர்தலை நடத்த வேண்டியது முக்கியம் எனக் கூறியிருக்கிறார்கள். முஸ்லிம்களில் 67.8 வீதமானோரும், சிங்களவர்களில் 67.3 சதவீதமானோரும், இது முக்கியமானது என கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள். அதேவேளையில் தமிழர்களில் மிகக் குறைந்த அளவாக 63.4 சதவீதமானவர்களே, தேர்தல்கள் முக்கியமானது எனக் கூறியிருக்கிறார்கள். தமிழர்களில் 24.8 வீதமானவர்கள் முக்கியத்துவமற்றது என குறிப்பிட்டிருப்பதும், 9.7 சதவீதமானவர்கள் இது பற்றி தமக்குத் தெரியாது எனக் கூறியிருப்பதும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வு முயற்சியாகவே, இந்திய அரசினால் மாகாண சபைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டிருந்தன. பிரத்தியேகமாக, வடக்கு-கிழக்கிற்கான ஒரு அதிகார பகிர்வு ஏற்பாடாகத்தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன, தந்திரமான முறையில் ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்தனி மாகாண சபைகளை உருவாக்கி, வடக்கு, கிழக்கிற்கு தனித்துவமான அதிகார கட்டமைப்பாக, மாகாண சபையை தமிழர்கள் பெற முடியாதபடி தடுத்து விட்டார். இவ்வாறான நிலையில், மாகாண சபை தேர்தல் முக்கியமா இல்லையா என தெரியாது என்றும் கிட்டத்தட்ட 10 சதவீதமான தமிழர்கள் கருத்து வெளியிட்டிருப்பதை சாதாரணமாக கருத முடியாது.

வடக்கு மாகாண சபை யாழ்ப்பாணம் வடக்கு மாகாண சபை — வடக்கு மாகாண சபைக்கு ஒரே ஒரு முறை மாத்திரமே தேர்தல் நடத்தப்பட்டது; தமிழர்கள் அதன் மூலம் பயனடைந்தது மிகக் குறைவே. (படம்: Northern Provincial Council)

மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு 4 தசாப்தங்களாகின்ற போதும், வடக்கு கிழக்கு மாகாண சபை சில மாதங்களே இயங்கியது. அதன் பின்னர் கிழக்கு மாகாண சபை குறிப்பிட்ட சில காலம் இயங்கியது. வடக்கு மாகாண சபைக்கு ஒரே ஒரு முறைதான் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழர்கள் இந்த நிர்வாக அமைப்பின் கீழ் இருந்தது, பயனடைந்தது மிக மிகக் குறைவாகும். இவ்வாறான நிலையில், தமிழர்கள் மத்தியில் மாகாண சபை தேர்தல் அவசியமற்றது என கருதுகின்ற போக்கு அதிகம் இருப்பதை, இரண்டு விதமாக நோக்கலாம்.

ஒன்று- மாகாண சபைகள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான நிலையான தீர்வு அல்ல என்ற விடயம். தமிழர் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு, மீளப் பெற முடியாத அதிகாரங்களுடன் கூடிய சமஸ்டி அதிகாரப் பகிர்வாக இருக்க வேண்டும் என்பதே, தமிழர்களின் நிலைப்பாடாக உள்ளது. 13வது திருத்தச் சட்டமும் மாகாண சபைகளும் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆரம்ப புள்ளியாக கூட இருக்க முடியாது என தமிழர் தரப்பு தொடக்கத்தில் இருந்தே கூறி வந்திருக்கிறது. ஆனாலும், தவிர்க்க முடியாதபடி மாகாண சபைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலில் தமிழ்த் தரப்புகள் பல இருக்கின்றன. இன்று மாகாண சபை தேர்தலை முக்கியம் என வலியுறுத்துகின்ற தமிழ் தரப்புகள் கூடுதல் அதிகாரப்பகிர்வையோ அதற்கான முயற்சிகளையோ சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வையோ நிராகரிக்க அல்லது வலியுறுத்தாமல் இருக்க தயாராக இல்லை. இவ்வாறான நிலையில், மாகாண சபைகள் மீதான நம்பிக்கையின்மை காரணமாக, அதற்கு தேர்தல் நடத்தினால் என்ன, நடத்தாமல் போனால் என்ன எனக் கருதுகின்ற போக்கு தமிழர்களிடம் அதிகம் இருக்கலாம்.

இரண்டாவது காரணம், மாகாண சபைகள் இயங்கிய காலத்தில் வினைத்திறனாக இருக்கவில்லை என்பது. மாகாண சபைகள் செயற்பட்டபோது சரியான முறையில் இயங்க தவறின அல்லது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய அவற்றை நிர்வகிக்க அதிகாரங்கள் போதுமானதாக இல்லாமல் இருந்தது. அல்லது இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. இது போன்ற காரணங்களும், தமிழர்கள் மத்தியில் இதுபற்றிய ஆர்வம் குறைவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மாகாண சபைகளின் மூலமாக தமிழர்களுக்கு நன்மை கிடைக்காத சூழலில், அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படுவதை முக்கியமானதாக கருதாத நிலை உருவாகியிருக்கக் கூடும்.

மாகாண சபைகள் தொடர்பான கிராமப்புற மக்களிடத்தில் இருக்கின்ற விழிப்புணர்வு அல்லது அதன் முக்கியத்துவம் தொடர்பாக இருக்கின்ற கரிசனை, நகர்ப்புற மக்களிடத்தில் இருக்கவில்லை என்பதையும் கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. அதைவிட, இளையவர்கள் மட்டத்தில் மாகாண சபைகளை அதிகளவில் நம்புகின்ற நிலை காணப்படுகிறது. 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 71 வீதமானோர், மாகாண சபைகளுக்கு தேர்தல் முக்கியம் எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் மாகாண சபை முக்கியத்துவமானது என 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64.9 வீதமானோரே கூறியிருக்கிறார்கள்.

அதாவது, மாகாண சபை தேர்தலை வலியுறுத்தி இருப்பவர்களில் அதிகமானோர், மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்காதவர்களேயாவர். ஆனால் மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போது இருந்தவர்கள், வாக்களித்தவர்கள் மத்தியில் அதன் மீதான நம்பிக்கையை குறைந்திருக்கிறது. மாகாண சபைகளின் அவசியத்தை, மாகாண சபைகளுக்கான தேர்தலை வலியுறுத்தும் அரசியல் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ளதாக கருதப்படும் இந்த மனோநிலை நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டியது. மாகாண சபைகளை ஒரு உறுதியான வலுவான பயனுறுதி மிக்க அரசியல் அதிகார கட்டமைப்பாக வைத்திருக்க விரும்பும் எந்த தரப்பும், இதன் மீதான நம்பகத்தன்மை சீர்குலைவதை தடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது. ஏனென்றால், இந்தப் போக்கு, மாகாண சபைகளின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக்கி விடக் கூடும்.

Post a Comment

0 Comments