இலங்கையை தளமாக பயன்படுத்திய ரஷ்யா
கொழும்பு துறைமுகம் மீதான அமெரிக்காவின் கண்காணிப்பும் கவனமும் தீவிரமடைந்து வருவதை தெளிவாக உணரக் கூடியதாக உள்ளது. இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்காவின், இராஜாங்கத் திணைக்களம் மற்றும் போர்த் திணைக்களம் ஆகியவற்றின் உயர்நிலை அதிகாரிகள் அனைவரும், கொழும்புத் துறைமுகத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். துறைமுகத்தின் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்வது, பாதுகாப்புக் கட்டமைப்புகளை மேற்பார்வையிடுவது போன்றவற்றில் அவர்கள் ஈடுபடுவதுடன், துறைமுக அதிகார சபை, மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடனும் பேச்சுக்களை நடத்துகின்றனர். இது ஒரு வழக்கமான விடயமாக மாறியுள்ளது.
கொழும்புத் துறைமுகம் மீதான அமெரிக்காவின் இந்த கவனக் குவிப்பு சாதாரணமான ஒன்று அல்ல. கொழும்புத் துறைமுகத்தை முற்று முழுதாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாவிட்டாலும், கண்காணிப்பில் வைத்திருப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று, கொழும்புத் துறைமுகத்தையும் இலங்கைக்கு அருகேயுள்ள இந்திய பெருங்கடல் கப்பல் பாதையையும், பாதுகாப்பானதாக வைத்திருப்பதன் மூலம், தனது வர்த்தகத்தை நிலையாக பேண முடியும் என அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்காவின் வர்த்தகம் பாதுகாப்பானதாக இருப்பதற்கு, இலங்கையை முக்கியமான ஒரு தளமாக பார்க்கிறது. இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலமும் துறைமுகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலமும், இதனை செய்ய முடியும் என அமெரிக்க அதிகாரிகள் நம்புகிறார்கள். இதனை அடிப்படையாக வைத்தே, கொழும்புத் துறைமுகத்தை முற்றிலும் பாதுகாப்பானதாக வைத்திருப்பதற்கு ஏற்ற சூழலை, அமெரிக்கா உருவாக்கி வருகிறது.
கொழும்பு துறைமுகம் — அமெரிக்கா வழங்கிய ராடர்கள் மற்றும் ஸ்கானர்களால் கப்பல் போக்குவரத்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றங்கள், உள்நாட்டுக் குழப்பங்களால் இதில் தளம்பல்கள் ஏற்பட்டாலும், அதனை வெற்றிகரமாக கையாண்டு அமெரிக்கா தனது திட்டத்தை செயற்படுத்துகிறது. இலங்கை கடற்படையில் மரைன் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது இதன் முதல்கட்டம். எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள கூடிய வகையில், கடற்படையின் நவீன கொமாண்டோ படைப்பிரிவாக மரைன் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இது அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவுக்கு இணையான பயிற்சி மற்றும் ஆயுதங்களைக் கொண்டது. இந்த படைப்பிரிவுக்கான பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகள் அமெரிக்காவினாலேயே வழங்கப்பட்டன. இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடுகளைச் செய்யும் முனைப்புகளும் முன்னெடுக்கப்பட்டாலும் அது சாத்தியமாகவில்லை.
மரைன் படைப்பிரிவை உருவாக்குவது மட்டும் கொழும்புத் துறைமுகத்தினதும், இலங்கை கடற்பரப்பினதும் பாதுகாப்பை பலப்படுத்த போதாது. கொழும்பு துறைமுகம் வழியாக செல்லும் கப்பல்களும் பொருட்களும் கண்காணிக்கப்பட வேண்டும். பாரிய கொள்கலன் கப்பல்களை கண்காணிப்பதும் அவற்றை ஆய்வு செய்வதும் சாதாரணமான விடயம் அல்ல. அவற்றில் உள்ள பொருட்களை கண்டறிய கூடிய வகையில், குறிப்பாக அணுசக்தி, இரசாயன, கதிரியக்க பொருட்கள் கப்பல்களில் கடத்தப்படுவதை கண்டறிவதற்கும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை கண்டறிவதற்கும் ஏற்ற தொழில்நுட்பங்களையும் கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்கா நிறுவத் தொடங்கியது. இதற்காக, ராடர்கள் மற்றும் ஸ்கானர்கள் பல அமெரிக்காவினால் கொடையாகவே வழங்கப்பட்டன. இவை சந்தேகத்துக்குரிய கப்பல்களை ஆய்வு செய்வதற்கு பயன்படக் கூடியவை. அத்துடன், ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் கண்காணிப்புக் கப்பல்களை கொடையாக வழங்கியதன் மூலமும், கொழும்பு துறைமுகம் மற்றும் அதன் அருகில் உள்ள இந்திய பெருங்கடல் கப்பல் பாதையின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தியிருக்கிறது.
இவை மாத்திரம் போதுமானது என அமெரிக்கா கருதவில்லை. அமெரிக்காவுக்கு தனியே, கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பு அல்லது அதனூடாக நகர்த்தப்படும் பொருட்களின் பாதுகாப்பு மாத்திரம் முக்கியமல்ல. அமெரிக்கா விரும்பாத நாடுகளுக்கு அல்லது அமெரிக்கா விரும்பாத பொருட்கள், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது அல்லது கடத்தப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. ஈரான் தனது நிழல் கப்பல்படையின் மூலமாக, அமெரிக்க தடைகளை மீறி இலங்கைக்கு அண்மையான கடற்பரப்பில் எண்ணெய் விற்பனையில் ஈடுபடுகிறது. இதனைத் தடுப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. அதுபோல ஈரானுக்கு கப்பல்கள் மூலமாக, ஆயுதங்கள் அல்லது தொழில்நுட்ப கருவிகள் கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கும் அமெரிக்கா இந்தப் பகுதியில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் வர்த்தக தடையை மீறி செல்லுகின்ற கப்பல்கள் அல்லது பொருட்களை தடுப்பது அல்லது கண்காணிப்பதற்கும் கொழும்புத் துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது.
இவ்வாறான நிலையில் அண்மையில் வெளியான ஒரு தகவல் அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல, இலங்கைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்துகின்ற ஏவுகணைகள், ட்ரோன்களில் 90 சதவீதமானவற்றில் ஜப்பானிய இலத்திரனியல் பாகங்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. ஜப்பானின் மிகப் பிரபலமான டொஷிபா, நிப்பொன், பனசொனிக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் இலத்திரனியல் பாகங்கள் பலவற்றை, ரஷ்ய ஏவுகணைகளும், ட்ரோன்களும் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை டோக்கியோவிற்கு வழங்கியிருக்கிறது உக்ரைன். ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ள சூழலில், அதனை மீறி ஜப்பான் இந்த பொருட்களை நேரடியாக ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதா? இல்லை. அப்படி நடக்கவில்லை. இந்த நிறுவனங்கள் நேரடியாக ரஷ்யாவுக்கு இவற்றை அனுப்பவில்லை என்பதை அமெரிக்கா உறுதி செய்திருக்கிறது.
ஆனால், குறைகடத்திகள், மைக்ரோ சிப்கள், ட்ரான்ஸ்மிட்டர்கள் போன்ற நவீன இலத்திரனியல் பாகங்கள், ஜப்பானிலிருந்தே, ரஷ்யாவிற்கு சென்றிருக்கிறது. இவை தனியே இராணுவ பயன்பாட்டுக்கான பொருட்கள் அல்ல. இராணுவ தேவைக்கும் பயன்படுத்தக் கூடிய - இரு பயன்பாட்டு பொருட்கள். எனவே ஜப்பான் இவற்றின் ஏற்றுமதியை கட்டுப்படுத்த முடியாது. ஜப்பானில் உள்ள, சில புலனாய்வு பலவீனங்களை பயன்படுத்தி, அந்த நாட்டில் இருந்து இலத்திரனியல் பாகங்களை, ரஷ்யா பெற்றுக் கொள்வதற்கு சில வழிமுறைகளை கையாளுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கென ரஷ்யா பல நுட்பமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருக்கிறது.
ரஷ்ய இராணுவத்தின் GRU என்ற புலனாய்வு அமைப்பு, வலிமை வாய்ந்தது. பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இதனை தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளன. இந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு, இதற்கு முன்னர் அறியப்படாத, 20வது இயக்குநகரம் என்ற ஒரு பிரிவை உருவாக்கியிருக்கிறது. அது, டோக்கியோவில் இருந்து செயற்படுகிறது. ஜப்பானின் எதிர்ப் புலனாய்வு நடவடிக்கைகள் பலவீனமாக இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, டோக்கியோவின் நகர பொலிஸ் தலைமையகத்தில் இருந்து நடந்து செல்லக் கூடிய தூரத்தில், இந்த அமைப்பு வெளிப்படையாகவே இயங்கத் தொடங்கியிருக்கிறது. ரஷ்ய விமான நிறுவனமான ஏரோ புளொட் நிறுவனத்தின் அலுவலகம் என்ற போர்வையில் இயங்கும் இந்த 20வது இயக்குநரகத்தின் செயற்பாடுகளை, ஏரோ புளொட் நிறுவன அதிகாரி என்ற போர்வையில் செயற்படும், மாக்சிம் பில்சென்கோவ் (Maksim Filchenkov) என்ற அதிகாரி வழிநடத்துகிறார்.
ஏரோ புளொட் அலுவலகம், டோக்கியோ — ரஷ்யாவின் GRU புலனாய்வுப் பிரிவின் 20வது இயக்குநரகம் இங்கிருந்து இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. (படம்: RFE/RL)
பனிப் போர் காலத்தில் இருந்தே ஏரோ புளொட் விமான சேவை போர்வையில், ரஷ்யா மேற்கு நாடுகளில் இருந்து ஆயுத தயாரிப்புக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டது. இப்போது, ஏரோபுளொட் அதிகாரி என்ற போர்வையில் டோக்கியோவில் இருந்து செயற்படும், மாக்சிம் பில்சென்கோவ், இலத்திரனியல் உதிரிப் பாகங்களை நேரடியாக ரஷ்யாவுக்கு அனுப்பவில்லை. அப்படி அனுப்பினால் பிடிபட்டிருக்கும். அவ்வாறு அனுப்புவதற்குத் தடை உள்ளது. அப்படி அனுப்பியிருந்தால், ரஷ்யாவுக்கான விநியோகமும் பாதிக்கப்பட்டிருக்கும். ரஷ்யா தனது விநியோகத்திற்கு எந்த பாதிப்பும் வராத வகையில், அமெரிக்கா அல்லது மேற்கு நாடுகளுக்கு சந்தேகங்கள் ஏற்படாத வகையில், ஜப்பானிலிருந்து இந்த அதிநவீன இலத்திரனியல் பொருட்களை பெற்றுக் கொள்கிறது.
ஏனென்றால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு, இந்த விநியோகம் இடம்பெறும் வழி தெரியக்கூடாது என்பதில் ரஷ்யா கவனமாக இருந்திருக்கிறது. ஆனாலும் இதனை அமெரிக்க புலனாய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். நியூயோர்க் டைம்ஸ் கடந்த வாரம் இதனைப் பகிரங்கப்படுத்தியிருக்கிறது. இதுமாத்திரமல்ல, பல மேற்குலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட ரஷ்யாவின் ஆர் பார்ம் என்ற மருந்து உற்பத்தி நிறுவனமும், இலங்கை ஊடாக பொருட்களை பரிமாற்றம் செய்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இலங்கையை ரஷ்யா தனது ஒரு தளமாக பயன்படுத்துகிறது என்ற விடயம் இப்போது அம்பலமாகியிருக்கிறது.
இலங்கையுடன் ரஷ்யா பொருளாதார உறவுகளையும் பாதுகாப்பு உறவுகளையும் வலுப்படுத்துவதற்கு விருப்பம் தெரிவித்த போதும், இலங்கை அரசாங்கம் அதற்குத் தயங்கி வந்தது. மட்டுப்படுத்தப்பட்ட உறவுகளையே பேணி வந்திருக்கிறது. அமெரிக்காவை பகைத்துக் கொள்ளாமல் இருப்பதே இன்றைய ஆட்சியாளர்களின் நோக்கமாகும். எனவே அவர்கள் இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருந்தாலும், ஜப்பானிய இலத்திரனியல் பொருட்களை, இராணுவ தேவைக்காக ரஷ்யா பெற்றுக் கொள்வதற்கான ஒரு தளமாக இலங்கையை பயன்படுத்தியிருக்கிறது என்பது, இலங்கைக்கு அதிர்ச்சியான விடயம்.
இவ்வாறான சம்பவங்கள், கடத்தல்கள், வர்த்தகங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காகவே கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்க விமான நிலையம் என்பவற்றில் நவீன ஸ்கானர்களை நிறுவி அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வந்தது. இந்த கண்காணிப்பு வலயமைப்பின் ஊடாகத் தான், அமெரிக்கா இதனைக் கண்டறிந்ததா என்பது இன்னமும் உறுதியாகவில்லை. ஆனால், இது கண்டறியப்பட்டிருப்பது, இலங்கைக்கு சவாலை ஏற்படுத்தும். ஏனென்றால், அமெரிக்கா, ஜப்பான் மாத்திரமன்றி ரஷ்யாவும் கூட இலங்கைக்கு முக்கியமானது. இந்த நாடுகள் எடுக்கக் கூடிய எந்த நகர்வும் இலங்கையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
0 Comments