அனுரவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதா?
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள், அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு ஊக்கமளிக்கக் கூடியவை. அரசாங்கம் பதவிக்கு வந்து, இன்னும் இரண்டு மாதங்களில், இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ள சூழலில், இந்தக் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வீழ்ச்சியடைந்து விட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில், இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் அதற்கு மாறாக அமைந்திருக்கின்றன.
ஆளும்கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதால் தான், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளை விட, கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உள்ளூராட்சி தேர்தலில், சுமார் 21 இலட்சம் வாக்குகள் குறைவாகவே கிடைத்திருந்தன. இதனை அடிப்படையாக வைத்தே, ஆளும்கட்சியின் செல்வாக்கும், அதன் மீதான மக்களின் நம்பிக்கையும் குறைந்து வருகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன. இதனால் தான், மாகாண சபை தேர்தல்களை துணிந்து எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி தயங்குகிறது என்ற பரவலான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க — கருத்துக்கணிப்பில் 75.5 வீதமானோர் அவரது செயற்பாடுகளில் திருப்தி தெரிவித்துள்ளனர். (படம்: ONLANKA)
ஆனால் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பின் முடிவுகளின் படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் மீது 75.5 வீதமானவர்கள் திருப்தி வெளியிட்டிருக்கிறார்கள். 23.3 சதவீதமானவர்கள் மட்டுமே திருப்தி இல்லை என குறிப்பிட்டிருக்கிறார்கள். கருத்துக்கணிப்பில் பங்கேற்ற முக்கால்வாசிப் பேர், ஜனாதிபதியின் செயற்பாடுகளில் திருப்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம். ஆனால், அவரது செயற்பாடுகளின் மீது திருப்தி வெளியிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் அல்ல. மலையகத் தமிழர்கள் மத்தியில் 94.4 வீதமும் முஸ்லிம்கள் மத்தியில் 93.4 சதவீதமும், தமிழர்கள் மத்தியில் 90.3 சதவீதமும் ஜனாதிபதி தொடர்பாக திருப்தி வெளியிட்டுள்ள போதும், சிங்கள மக்கள் மத்தியில் 69.9 வீதமானவர்கள் மாத்திரமே திருப்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
இது சிறுபான்மை மக்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளை மீது திருப்தியை அல்லது நம்பிக்கையை கொண்டிருப்பதை காட்டினாலும், பெரும்பான்மை சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் கடுமையான சவாலை எதிர்கொள்கிறார் என்பதை காட்டுகிறது. நாட்டின் சனத்தொகையில் 75 சதவீதமானோர் சிங்களவர்களாக, இருக்கின்ற சூழலில், அவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் மாத்திரமே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் செயற்பாடுகளில் திருப்தியடைந்திருக்கிறார்கள். மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதில், அவர் தோல்வியடைந்திருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
இந்த கருத்துக்கணிப்பு மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிக்கிறதா அல்லது அரசியல் ரீதியான குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளதா என்ற கேள்விகள் இருக்கின்றன. இந்த கருத்துக்கணிப்பு, ஜனாதிபதி தேர்தலின் போது அனுரகுமார திசாநாயக்கவுக்கு கிடைத்த 42.31 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடக் கூடியதல்ல. அந்த தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகளை கருத்துக்கணிப்பில் கிடைத்துள்ள ஆதரவுடன் ஒப்பிட முடியாது. சில ஊடகங்கள், தேர்தல் வாக்குகளை, கருத்துக்கணிப்புடன் ஒப்பிட்டு, இப்போது அவருக்கான ஆதரவு 75 சதவீதமாக உயர்ந்திருப்பதாக கணக்குக்காட்டுகின்றன. இது தனியே ஜனாதிபதியின் செயற்பாடுகளின் மீது நம்பிக்கை அல்லது திருப்தி குறித்த கேள்விக்கான பதில் மட்டுமேயாகும். தேர்தல் ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் அடிப்படையில் தான், வாக்காளர்கள் தீர்மானம் எடுப்பார்கள். அவர்கள் கட்சி ரீதியாக தீர்மானம் எடுக்கலாம், கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்கலாம், வேறு விருப்ப தெரிவுகளின் அடிப்படையிலும் தீர்மானங்களை எடுக்கலாம். ஆனால், இந்தக் கருத்துக்கணிப்பு, திருப்தியா இல்லையா என்ற கேள்வியை மட்டும் மையப்படுத்தியது. ஒரு பிரச்சினையை மையப்படுத்தி எழுப்பப்படும் கேள்விக்கான பதில், கொள்கை ரீதியானதாக, கட்சி சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதேவேளை, சஜித் பிரேமதாசாவின் செயற்பாடுகள் தொடர்பாக திருப்தி தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 29.4 வீதம் என கருத்துக் கணிப்பு கூறியிருக்கிறது. 64.9 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகளில் திருப்தி இல்லை எனக் கூறியிருக்கிறார்கள். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விடயத்தில் அரசாங்கத்தின் விசாரணைகளின் மீது அதிகளவிலான மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்பதும், குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் குறைந்தளவு நம்பிக்கையே உள்ளது என்பதும் இந்தக் கருத்து கணிப்பு புலப்படுத்துகிறது.
இந்த சூழலில், அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை துணிந்து நடத்த முன்வருமா என்ற கேள்வி எழுகிறது. மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதற்கு ஒரே காரணம், மக்கள் செல்வாக்கை பரீட்சிப்பதற்கு அது தயங்குகிறது என்பதுதான் என்றால், எந்த அச்சமும் இன்றி இந்த தேர்தலை நடத்த முன் வரக்கூடும். ஆனால் அரசாங்கத்தின் நிலைப்பாடு அத்தகையது அல்ல. அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை இழுத்தடித்து இழுத்தடித்து அதனை நடத்துவதில் இருந்து விலகிச் செல்வதற்கு முற்படுவதாகவே உள்ளது. காலப்போக்கில் மாகாண சபையை செயலற்றதாக்கும் முனைப்பிலேயே அது செயற்படுகிறது. இவ்வாறான நிலையில், அரசாங்கத்திற்கான மக்களின் செல்வாக்கு உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் அது தேர்தலுக்கு தயாராகுமா? அதனை எதிர்கொள்வதற்கு முற்படுமா? என்ற கேள்வி இருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி சிங்கள மக்களின் திருப்தியை அல்லது ஆதரவை பெறாமல் போனால், தேர்தலை எதிர்கொள்வது கடினமானது. ஜனாதிபதி மீது அதிகளவு மக்கள் திருப்தியான கருத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் ஒரு அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருகின்ற விடயத்தில், சிங்கள மக்கள் எடுக்கின்ற முடிவு தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் மத்தியில் அதிருப்தியான நிலை ஒன்று இருக்கின்ற சூழலில், தேர்தலை துணிந்து நடத்த முடியாத சிக்கலும் அரசாங்கத்துக்கு இருக்கும். மாகாண சபைத் தேர்தல்கள் நாடு முழுவதற்கும் நடத்தப்பட வேண்டியவை. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவது முக்கியமானது. அதில் கோட்டை விடும் நிலை ஏற்பட்டால், அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தல் ஆபத்தானதாக மாறும்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழ்ப் பேசும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்றப் போகிறாரா? அல்லது சிங்கள மக்களின் திருப்தியை காப்பாற்றிக் கொள்வதற்கு முற்பட போகிறாரா என்ற கேள்வி எழுகிறது. சிங்கள மக்களை நோக்கி அவர் திரும்புவாரேயானால் சடுதியாக தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளையும் ஆதரவையும் அவர் இழப்பார். சிங்கள மக்கள் மத்தியில் அவரது பிரபலம் குறைந்திருப்பது தான் தமிழ்ப் பேசும் மக்களிடம் திருப்தி பெற்றிருப்பதற்குக் காரணம். சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை அவர் பெற்றிருப்பதால் தான் சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகம் உள்ளது. எல்லாத் தரப்புகளையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒருவராக அனுரகுமார திசாநாயக்க இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் அவர் எல்லா சமூகங்களினதும் ஆதரவை சமநிலையில் பேணியிருக்க முடியும். அந்த சமநிலையை பேணுவதில் அவர் வெற்றி பெறவில்லை. இந்த தளம்பல் நிலையானது, அவர் சிங்கள பௌத்த தேசியவாதத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படும் நிலையை தோற்றுவிக்கலாம்.
0 Comments