elugai

தமிழ்ப்பேசும் கட்சிகளின் புதிய கூட்டணி: மக்களின் உரிமைகளுக்கான அரசியல் நகர்வா, எதிர்காலத் தேர்தலுக்கான வியூகமா?

தமிழ்ப்பேசும் கட்சிகளின் இலக்கு

தமிழ்ப்பேசும் கட்சிகளின் இலக்கு

கட்டுரையாளர் - கபில்

தமிழ்ப் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகள், பொதுத்தளத்தில் இணைந்து செயற்படுவதற்கான ஒரு இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றன. இந்த இணக்கப்பாட்டின் அடிப்படை, அதன் இலக்குகள், செயற்திட்டம் என்பன இன்னமும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஆனால், மாகாண சபை தேர்தல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் ஆகிய மூன்று பிரதான விடயங்களை மையப்படுத்தி, பொதுத்தளத்தில் செயற்பட உள்ளதாக இந்த கட்சிகள் குறிப்பிட்டிருக்கின்றன.

தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற இந்த கட்சிகள், தானாக ஒன்றிணைந்தனவா அல்லது ஏதேனும் பின்புல காரணிகளின் அடிப்படையில் ஒன்றிணைந்தனவா என்பது கேள்விக்குரியது. ஏனென்றால் பரந்துபட்ட ஒரு எதிர்க்கட்சிக் கூட்டை உருவாக்குகின்ற முயற்சிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதும், அது இன்னமும் முழுமையடையாதுள்ளது. அவ்வப்போது கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தப்பட்டாலும், நடைமுறை சாத்தியமான செயற்திட்டங்களை அல்லது கூட்டு போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் கூட்டாக முகிழவில்லை. இந்தச் சூழலில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு பாரம்பரியமாக அரசியல் தலைமை தாங்கி வந்த கட்சிகளை உள்ளடக்கி, இந்த கூட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் முஸ்லிம் எதிர்க்கட்சிகள் சந்திப்பு இலங்கை தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சந்திப்பு — பொதுத் தளத்தில் இணைந்து செயற்படுவதற்கான இணக்கப்பாட்டை இந்த கட்சிகள் எட்டியுள்ளன.

இது ஒரு அரசியல் கூட்டணி அல்ல, தேர்தல் கூட்டணியாகவும் இருக்கப் போவதில்லை என தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கொள்கையின் வழிசெயற்படுபவை. அதற்கு மதிப்பளிக்கும் வகையில் சுதந்திரமாக செயற்படக் கூடியதாக, இதன் கொள்கை திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே, அரசியல் கூட்டணியாக இது உருவாகும் சாத்தியங்கள் இல்லை என்றே கூறலாம். ஆனால் ஒரு பொதுத் தளத்தில் இயங்கப் போகின்றன. அரசியல் கூட்டணியாக மாறும் இலக்கை கொண்டிருக்காமல்- ஒரு பொது தளத்தில் இந்தக் கட்சிகள் இணைவது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. தமிழ், முஸ்லிம், மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதும் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதும் இதன் முதற் படியாக கருதப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்ற நிலையில் தான், தமிழ்ப் பேசும் கட்சிகள் இத்தகைய ஒரு பொதுத்தளத்தை உருவாக்கும் நோக்கில் இணைந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தவுடன் இதற்கான களம் திறக்கப்பட்டிருந்தால், அதனை இந்த கட்சிகளின் சுய இணைவாக கருதியிருக்க முடியும். அவ்வாறில்லாமல் இந்த அரசாங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு பதவிக்காலம் முடிவடைய கூடிய சூழலில், இந்தக் கட்சிகள் இணைந்திருப்பது, பிற தரப்புகளின் அழுத்தங்களினால் இடம்பெற்றதா என்ற சந்தேகங்களை தோற்றுவித்திருக்கிறது. இலங்கையில் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பது, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவது, அதிகாரத்தை கைப்பற்றுவது போன்ற செயற்பாடுகள் எல்லாம், தனியே உள்நாட்டு அரசியல் சக்திகளால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதில்லை. அதனை தாண்டி சர்வதேச சக்திகளும் கூட பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான விடயங்களில் தலையீடு செய்திருக்கின்றன. ஆட்சி மாற்றங்களுக்குப் புறத் தூண்டுதல்கள் காரணமாக இருந்திருக்கின்றன. ராஜபக்ஷவினர் முன்னர் இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாகவே முன்வைத்திருந்தனர். இந்தச் சூழலில், இப்போது ஆறு கட்சிகள் பொது தளத்தில் இயங்க இணங்கியிருப்பதை சுயமான முடிவாக இருக்குமா என்ற கேள்விகளை எழுப்ப வைத்திருக்கிறது.

அதேவேளை, இந்த கட்சிகள் பொதுத்தளத்தில் எவ்வாறு செயற்பட போகின்றன என்பதை முக்கியமான கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் தற்போதைய அரசாங்கத்துடன் இந்த கட்சிகள் கடுமையாக மோதவில்லை. ஆனால் முரண்படுகின்றன. அதேபோல அரசாங்கத்துடன் நெருங்கி செயற்படவும், அதனுடன் இணங்கி போகவும் தயாராக இல்லை. இது இவர்களுக்கு ஒரு சிக்கலான சூழல். ஏனென்றால் தற்போதைய அரசாங்கம் இந்த கட்சிகளிடம் பாரம்பரியமாக இருந்து வந்த தமிழ்ப் பேசும் மக்களின் ஆணையை கணிசமாக பறித்தெடுத்திருக்கிறது. கடந்த தேர்தல்களில், தேசிய மக்கள் சக்தி இந்த ஆறு கட்சிகளின் வாக்கு வங்கியை சிதைத்திருக்கிறது. அவற்றின் ஆசனங்களை கைப்பற்றியிருக்கிறது. இவ்வாறான சூழலில், ஆளும்கட்சியுடன் நெருங்கி செல்வது, தங்களின் சுய இருப்பை சிதைத்து விடும் என்ற அச்சம் இந்த கட்சிகளுக்கு உள்ளது.

இதிலிருந்து மீண்டெழுவது இந்த கட்சிகளுக்கு முக்கியமான தேவையாக உள்ளது. அதற்காகவே கூட்டாக இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அது உண்மையானால், இவ்வாறு கூட்டாக இணைந்து செயற்படுவதன் ஊடாக, இந்த கட்சிகள் தங்களின் செல்வாக்கை எப்படி மீட்டெடுக்க முடியும் என்று நம்புகின்றன என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த கூட்டு ஒரு பொதுத் தளத்தில் உள்ள பிரச்சினைகளை அணுகுவதற்கு மாத்திரமே உருவாக்கப்பட்டிருக்கிறது. சிக்கலான பிரச்சினைகளில் இது மூக்கை நுழைக்கப் போவதில்லை. இவ்வாறான நிலையில் இதன் காத்திரத்தன்மை குறித்த கேள்விகள் உள்ளன. அதேவேளை, இந்த கட்சிகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். ஒரு அழுத்தக் குழு போல செயற்படும் வாய்ப்புகள் உள்ளன.

இலங்கை சிவில் சமூகம் மனித உரிமை அழுத்த குழு அழுத்த குழு மாதிரி — மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் கண்காணிப்பு குழு போன்ற அமைப்புகள் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வினைத்திறனுடன் செயற்பட்டன.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கடுமையான இராணுவ அழுத்தங்களும் நெருக்கடிகளும் கொழும்பில் இருந்த போது, மனோ கணேசன், ரவிராஜ், மகேஸ்வரன், விக்கிரமபாகு கருணாரத்ன போன்றவர்கள் பொதுமக்கள் கண்காணிப்பு குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். இவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு பொது தளத்தில் இயங்கினார்கள். கொழும்பில் இடம்பெற்ற கைதுகள், சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் விடயத்தில், உடனுக்குடன் தலையீடு செய்து, அதுபற்றி வெளிப்படுத்துவதும் அதற்கு எதிராக போராட்டங்கள், நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் இதன் நோக்கமாக இருந்தது. கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமான ஒரு பணியாக இருந்தது. ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கடத்திச் செல்லப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள், கொன்று போடப்பட்டார்கள். இவ்வாறான சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இந்த குழு மிகவும் வினைத்திறனாக செயல்பட்டிருந்தது. ஒரு அழுத்த குழுவாகவே அது இயங்கியது.

பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கம் வகித்தவர்கள் அதில் இடம்பெற்றிருந்தாலும், அந்த கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்படாத வகையில் இந்த குழு மக்களின் பிரச்சினைகளுக்கு மனிதாபிமான ரீதியாக, மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுவதே பிரதான இலக்காக இருந்தது. அதுபோல ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகளும் ஒரு அழுத்த குழுவாக இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் தீர்வுக்காக-அன்றாட பிரச்சினைகளுக்காக-மக்களின் உரிமைக்காக-குரல் கொடுப்பது முக்கியமானது. இதற்கான பொது தளத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்தச் சந்தர்ப்பத்தை, தமிழ்ப் பேசும் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். வெறும் அரசியல் நலங்களுக்கானதாக இல்லாமல், அதனை மட்டும் நோக்கியதாக இல்லாமல், பொது தளத்தில் இன்று மக்கள் எதிர்கொள்ளுகின்ற பல பிரச்சினைகளை இந்த ஆறு கட்சிகளின் கூட்டினால் வெளிப்படுத்தவும் தீர்க்கவும் முடியும்.

அரசியலில் இல்லாத அல்லது சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களால் மாத்திரமே அழுத்த குழுக்கள் செயற்பட முடியும் என்றில்லை. அதனைத் தாண்டி அரசியல் ரீதியாக செயற்படுகின்ற கட்சிகள், தரப்புகள் கூட, அவ்வாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கக் கூடிய தரப்பாக இருக்க முடியும். அரசாங்கத்துடன் கொண்டிருக்கக் கூடிய நட்புறவையும் அதன் மீது பிரயோகிக்கக் கூடிய அழுத்தங்களையும் சரியாக கையாண்டால் இதனைச் சாதிக்க முடியும். அதேவேளை, அரசாங்கமும் அதற்கு இடம் கொடுக்க வேண்டும். அழுத்தக் குழுக்கள் எப்போதுமே அரசாங்கத்தின் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பவை. தற்போதைய அரசாங்கம் சரியாக செம்மையாக செயற்படுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

அதேவேளை அவ்வாறு அரசாங்கத்தை சரியான திசையில் நகர்த்தும் தரப்பாக மாறுவது, தற்கொலைக்கு ஒப்பானது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை சிறப்பானதாக எல்லோரும் குறிப்பிடுவது வழக்கம். அவ்வாறு அந்த ஆட்சி சிறப்பானதாக இருந்தமைக்கு, திமுக சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட்டது தான் காரணம் என்றும், திமுக கூறிய தவறுகளை திருத்திக் கொண்டதால் சிறப்பாக செயற்பட முடிந்தது என்றும் எம்.ஜி.ஆர் கூறியிருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை திமுகவினால் ஆட்சியமைக்க முடியவில்லை.

அதுபோல, தற்போதைய அரசாங்கத்தின் தவறுகளை திருத்தும் அழுத்தக் குழுவாக செயற்படுவதை தமிழ்ப் பேசும் கட்சிகள், தங்களின் இருப்புக்கான ஆபத்து என உணருமேயானால், அவ்வாறு செயற்பட முன்வராது. அப்படியானால் எந்த பொது தளத்தில் எப்படி தமிழ்ப் பேசும் கட்சிகள் செயற்படப் போகின்றன?

Post a Comment

0 Comments