elugai

நீர்கொழும்பு சிறை வன்முறை: இலங்கை மீது தீவிரமாகும் சர்வதேச அழுத்தம்

தீவிரமாகப் போகும் அழுத்தம்

தீவிரமாகப் போகும் அழுத்தம்

கட்டுரையாளர் - சத்ரியன்

கடந்த மாதம் இலங்கைக்கு இரண்டாவது முறையாகப் பயணத்தை மேற்கொண்டிருந்த சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு, தமது 10 நாள்கள் பயணத்திற்கு பின்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், விசாரணைக்கு முந்தைய நீண்டகால தடுப்புக்காவல் இடங்கள் மற்றும் தனிநபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ள பிற இடங்களில் நிலவும் நெரிசல் மற்றும் போதுமான வசதியற்ற நிலைமைகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது. ஐ.நா உபகுழுவின் உறுப்பினர்கள் சிறைச்சாலைகள், பொலிஸ் நிலையங்கள், விளக்கமறியல் மையங்கள், புனர்வாழ்வு மையங்கள் மற்றும் மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கும் பிற இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தடுப்புக்காவல் வசதிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இந்தக் கருத்தை வெளியிட்டனர். கைதிகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டத்தில் இருந்த போதிலும், நடைமுறையில் அது சீராகச் செயற்படுவதில்லை என்றும், அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள். இந்த ஐ.நா உப குழுவின் பயணம் முடிந்து சில நாட்களின் பின்னர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரும் கலவரம் இடம்பெற்றிருக்கிறது.

முதல் முறையாக 2019 ஆம் ஆண்டு, சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய சில நாட்களில், ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்றது. அந்தச் சம்பவம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பெருமளவில் கைதுகள், தடுத்து வைப்புகள், சித்திரவதைகளுக்கு காரணமாக அமைந்திருந்தது. இப்போது ஐ.நா குழு இரண்டாவது பயணத்தை மேற்கொண்டு திரும்பிய சூழலில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளில் அதிகாரிகள் மற்றும் கைதிகள் என 28 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் இலங்கை 2025 நீர்கொழும்பு சிறைச்சாலை — ஐ.நா உபகுழு பயணம் முடிந்த சில நாட்களிலேயே 28 பேர் உயிரிழந்த கலவரம் இங்கு வெடித்தது. (படம்: Informed Sri Lanka)

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு தனது இரகசிய அறிக்கையை இன்னமும் அரசாங்கத்திடம் கையளிக்காத நிலையில், இடம்பெற்றிருக்கின்ற இந்த சம்பவம், ஐ.நா குழுவின் அறிக்கையை இன்னமும் காட்டமானதாக - கடுமையானதாக மாற்றுவதற்கே வழிவகுக்கும். ஐ.நா உபகுழு தயாரிக்கும் இந்த இரகசிய அறிக்கை அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் வெளியிடப்படமாட்டாது. அதனை வெளியிட வேண்டும் என முன்கூட்டியே ஐ.நா உபகுழு வலியுறுத்தியிருந்தாலும், அதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வெளிவந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றிருக்கின்ற வன்முறைகள், சாதாரணமானவை அல்ல, அவை சர்வதேச அளவில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

இந்த சம்பவத்திற்கான அடிப்படை காரணங்களை ஐ.நா போன்ற அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் நிச்சயம் ஆராயும். ஏனென்றால், இலங்கையின் மனித உரிமைகள் நிலை இப்போது பல்வேறு தரப்பினரால் உன்னிப்பாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றது. போர்க்கால மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் இன்னமும் முன்னெடுக்கப்படாத நிலையில், அதனை தட்டிக் கழித்துக் கொண்டு மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற நிலையில் முன்னேறி இருப்பதாக காட்டுவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் முயன்று வந்திருக்கிறார்கள். இவ்வாறான சூழலில் சிறைச்சாலைகளில் இடம்பெற்றிருக்கின்ற வன்முறைகள், படுகொலைகள் என்பன மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக காட்டப்படும் விம்பத்தை உடைத்து விடக் கூடியவை. அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு இது ஒரு சிக்கலான விடயமாகவே இருக்கும்.

ஏனென்றால், கடந்த கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான எந்த ஒரு முயற்சியிலும் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டிருக்கவில்லை. கடந்த காலத்தை மறந்து விட்டு, புதியதொரு எதிர்காலத்தை நோக்கி செல்வோம் என்ற ரீதியாகவே அதன் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இத்தகைய போக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவுக்கு கொண்டு வருவது போன்ற மனித உரிமைகள் சார்ந்த தீவிரமான பிரச்சினைகளை மூடி மறைப்பதாகவே உள்ளது.

சிறைச்சாலைகளில் நிலவுகின்ற கடுமையான நெருக்கடியே இந்தப் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக சொல்லப்படுகிறது. இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அவற்றின் கொள்ளளவை விட 4 மடங்கு சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் 11 ஆயிரம் வரையான சிறைக்கைதிகளை தடுத்து வைப்பதற்கான வசதிகளே உள்ளன. ஆனால் சிறைச்சாலைகளில் 41,250 கைதிகள் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது கைதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மோதல்களுக்கு வழிவகுப்பதுடன் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுகிறது. கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறைச்சாலைகளின் இட வசதிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியது முக்கியமானதொரு குறைபாடு. தற்போதைய அரசாங்கமும் கூட ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தவறிவிட்டது.

நீர்கொழும்பு சிறைச்சாலை நிலைமை நீர்கொழும்பு சிறைச்சாலை — 11,000 பேர் கொள்ளளவு கொண்ட இலங்கை சிறைச்சாலைகளில் 41,250 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். (படம்: Ada Derana)

காலுக்குள் வெள்ளம் வந்த பின்னர் தான் அணை கட்ட முயலுவதை போல, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த வன்முறைகளுக்குப் பின்னரே அரசாங்கம் அவசரமாக, காலியில் மஹாமோதர சிறைச்சாலையை உருவாக்குவதாக அறிவித்திருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மற்றும் குற்றக்கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கைது செய்யப்படுவது மற்றும் தடுத்து வைக்கப்படுகின்ற போக்கு அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் கைது செய்யப்படும் பெருமளவிலான சந்தேக நபர்களை சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கும் போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன. குற்றக்கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையில் போட்டிகள், மோதல்கள் வெளியிலேயே இருக்கும் நிலையில், அனைவரையும் ஒரே சிறைக்குள் அடைக்கும் போது முரண்பாடுகள் கூர்மையடையும்.

அதைவிட, இத்தகைய கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற போதும், வெளியுலகுடன் தொடர்புகளை வைத்திருப்பதும், வெளியே குற்றங்களை ஒழுங்கமைப்பதும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. பல குற்றக் கும்பல் தலைவர்கள் சிறைச்சாலைக்குள் இருந்து பல படுகொலைகளுக்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள். பல தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். பல போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை வழிநடத்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் கடந்த கால விசாரணைகளில் அம்பலமாகியிருந்தன. இவற்றை முற்று முழுதாக அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் கலவரம் ஏற்பட்டிருக்கிறது. போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கைதிகளுக்கு இடையில் தொடங்கிய மோதல்கள் தான், பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளுடனான மோதலாக மாறியது. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள், இதேபோன்று வன்முறைகளில் ஈடுபடுவதும், பெருமளவில் கலவரங்களில் கொல்லப்படுவதும் இயல்பான ஒன்று. இலங்கையும் அவ்வாறான ஒன்றாக சூழலுக்கு மாறி இருக்கிறது என்பதையே இந்த கலவரங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றன.

இவ்வாறான சிறை வன்முறைகள் தடுக்கப்பட வேண்டியதும், தவிர்க்கப்பட வேண்டியதும் இலங்கையை பொறுத்தவரையில் முக்கியமானது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற முயற்சி நடந்து கொண்டிருக்கின்ற சூழலில் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் ஏற்படக் கூடிய எந்தவொரு பாதகமான சம்பவங்களும், அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பது போல, மோசமான மனித உரிமை மீறல் வரலாற்றைக் கொண்ட இலங்கை அதற்கு பொறுப்புக்கூறாமல், குற்றமிழைத்தவர்களை தண்டனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்காமல், இந்த நிலையிலிருந்து மீள முடியாது என்பதையே சிறைக் கலவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இத்தகைய சம்பவங்கள், கடந்த கால கறைகளை கழுவுகின்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்பட்டுள்ள ஒரு தோல்வி என்றே கூறலாம். வரும் நாட்களில் ஐ.நா அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இலங்கைக்கு எடுக்கப் போகும் பாடங்களும் கொடுக்கப் போகும் எச்சரிக்கைகளும் இந்த சம்பவங்களின் தீவிரத்தை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டும்.

Post a Comment

0 Comments