elugai

பாகிஸ்தானுடன் இலங்கை வலுப்படுத்தும் உறவு: இந்தியாவின் மூலோபாய கணக்கீடு மாறுமா?

பாகிஸ்தானை நெருங்க விடுமா இந்தியா?

பாகிஸ்தானை நெருங்க விடுமா இந்தியா?

கட்டுரையாளர் - ஹரிகரன்

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப். ஜெனரல் முகமட் அலி அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் கூர்ந்து நோக்கப்படும் ஒன்றாக உள்ளது. அவரது பயணத்தின் அடிப்படை நோக்கம் ஆறாவது இலங்கை-பாகிஸ்தான் ஆயுதப்படைகள் கலந்துரையாடலில் பங்கேற்பது தான். ஜூலை மூன்றாம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற அந்த பாதுகாப்பு கலந்துரையாடலுக்கு, இலங்கை மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர்கள் கூட்டாக தலைமை தாங்கியிருந்தனர். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்த பாதுகாப்பு உரையாடலுக்கு பின்னர், பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலாளர் லெப். ஜெனரல் முகமட் அலி, பாதுகாப்புச் செயலாளர் எயர் மார்ஷல் சம்பத் துயகொந்த மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோரை சந்திப்பதுடன் மாத்திரம் நின்று விடவில்லை. அதற்கு அப்பால் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அமைச்சர் அனுர கருணாதிலகவையும் சந்தித்து பேசியிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் விமான மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளில் கூட்டாண்மை செயற்பாடுகளை வலுப்படுத்துவது மற்றும் முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராய்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் இலங்கை வருகை 2025 பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப். ஜெனரல் முகமட் அலியின் இலங்கை வருகை — கடற்படைத் தலைமையகத்தில் ஆறாவது இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. (படம்: Sri Lanka Defence)

இலங்கையுடன் பாகிஸ்தான் நீண்ட கால நட்புறவை கொண்டிருக்கிறது. அதன் எல்லா ஒத்துழைப்புகள் மற்றும் செயற்பாடுகளும், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானின் இராணுவப் பயிற்சி, ஆயுத உதவிகள் மற்றும் ஏனைய இராணுவ ரீதியான ஒத்துழைப்புகள், இலங்கை இராணுவத்தின் பல்வேறு வெற்றிகளுக்கு முக்கிய பங்களித்திருக்கிறது. பல இக்கட்டான தருணங்களில், இலங்கை இராணுவம் தோல்விகளை தவிர்க்கவும் பாகிஸ்தான் உதவியிருக்கிறது.

குறிப்பாக இரண்டு முக்கியமான சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாதவை. 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு தளத்தைக் கைப்பற்றிய பின்னர், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான போரை விடுதலைப் புலிகள் ஆரம்பித்திருந்தனர். கேரதீவில் தரையிறங்கிய புலிகள், தனங்களப்பு, நாவற்குழி, கைதடி, சாவகச்சேரியை கைப்பற்றினர். கிழக்கு அரியாலையில் தரையிறங்கிய புலிகள், செம்மணி, அரியாலை, கொழும்புத்துறை பகுதிகளைக் கைப்பற்றி, யாழ்ப்பாணம் கச்சேரியை அண்டிய பகுதிகள் வரை முன்னேறியிருந்தனர். அந்த தருணத்தில், பாகிஸ்தானில் இருந்து அவசரமாக பலாலியில் கொண்டு வந்து இறக்கப்பட்ட பல்குழல் பீரங்கிகள் தான் விடுதலைப் புலிகளின் முன்னகர்வைத் தடுத்து நிறுத்தியது.

அதுபோல, 2008ஆம் ஆண்டு இறுதிக் கட்ட போரின் போதும், மாங்குளத்தை கைப்பற்றும் தருணத்தில் இராணுவத்தின் மோட்டார் மற்றும் ஆட்டிலறி பீரங்கிக் குண்டுகளின் கையிருப்புகள் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அதனால், குறிப்பிட்டளவு காலத்திற்கு போரை நிறுத்தி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது. அந்த தருணத்தில், இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் இராணுவ தளபதியுடன் தொடர்பு கொண்டு, பாகிஸ்தான் இராணுவத்தின் ஆயுத கிடங்கில் இருந்து பெருமளவிலான பீரங்கி குண்டுகளை பெற்றுக் கொண்டு போரை முன்னெடுத்திருந்தார். இவ்வாறாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு பாகிஸ்தான் அளித்த பங்களிப்பு மிக மிக அதிகம். அதற்கான நன்றி கடனாகவே, இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானுடனான நட்புறவை எந்தக் காலத்திலும் கைவிட தயாராக இருந்ததில்லை. பாகிஸ்தானுடனான நட்பை விட்டுக் கொடுக்காத வகையிலேயே அது இந்தியாவுடன் நட்புறவை பேணி வந்திருக்கிறது. இதனை இந்தியாவும் புரிந்து கொண்டிருந்தது.

இவ்வாறான சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளரின் அண்மைய இலங்கைப் பயணத்தின் போது, துறைமுகங்களை பயன்படுத்துவது மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுகத் துறைகளில் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள், திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த ஒத்துழைப்புகள், இந்தியாவின் கவனத்தை ஈர்க்காமல் இருக்க முடியாது. ஏனென்றால், இந்தியப் பெருங்கடலில் இலங்கையைத் தனது உடனடி செல்வாக்கு வலயத்தின் ஒரு பகுதியாக இந்தியா கருதுகிறது. இதனைத் தக்க வைப்பதற்காக, பொருளாதார முதலீடுகள், உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் ஆகியவற்றின் மூலம், வெளி சக்திகளை, குறிப்பாக சீனாவை, தீவிரமாக எதிர்கொள்ள முயன்று வருகிறது.

இந்தியப் பெருங்கடல் இந்திய பாகிஸ்தான் கடற்படை இந்தியப் பெருங்கடல் கடற்படை போட்டி — பாகிஸ்தான் நீர்மூழ்கிகளின் இயக்கம் மற்றும் இலங்கையுடனான ஒத்துழைப்பு இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளது.

திருகோணமலையில் உள்ள சம்பூரில் மின் உற்பத்தி நிலையம், எண்ணெய் சேமிப்புக் களஞ்சியம் போன்ற திட்டங்களை இலங்கையுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ள போதும், இந்த திட்டங்களை தொடருவதில் நீண்ட தாமதங்கள் காணப்படுகின்றன. அதேபோல, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்தி, எரிசக்தித் திட்டங்கள் போன்றவற்றிலும் இங்கு இந்தியா போட்டியிட்டு வருகிறது. இந்தியாவின் இந்த அணுகுமுறை பெரும்பாலும் பொருளாதார நலன்களையும், பாதுகாப்பு நலன்களையும் இணைப்பதாகவே அமைந்திருக்கிறது. ஆனால், கொழும்பில் பாகிஸ்தானுடனான ஒத்துழைப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் திட்டங்கள் நெகிழ்வுத்தன்மை குறைவானவையாக இருப்பதாக அல்லது நிபந்தனைக்குட்பட்டதாக இருப்பதாக இலங்கை அரசாங்கத்தினால் உணரப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவை இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையில் அமைந்துள்ள இலங்கை, ஒரு முக்கியமான புவிசார் மூலோபாய இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் பாகிஸ்தான்-இலங்கை உறவுகள் மேலும் ஆழமடைவது, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய செல்வாக்கிற்கு நேரடியான சவால்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இலங்கையில், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அதிகரித்த ஈடுபாடு, இலங்கையின் தொடர்புகளை இந்தியாவிலிருந்து விலக்கி, பல்முனைப்படுத்தக் கூடும் என்ற அச்சம் புதுடெல்லியிடம் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான பரந்துபட்ட போட்டிக்கு மத்தியில், பாகிஸ்தான் தொடர்பான பாதுகாப்புச் சூழல்களை நிர்வகித்துக் கொண்டு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது நலன்களைப் பாதுகாப்பதற்கு, கொழும்பின் மூலோபாய உள்கட்டமைப்பின் மீது வலுவான செல்வாக்கைப் பேணுவது அவசியம் எனக் கருதுகிறது. இவ்வாறான நிலையில், தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலில் நடைபெறும் பரந்த புவிசார் அரசியல் போட்டியின் ஒரு பகுதியாக, கொழும்புக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான குறைந்தபட்ச ஒத்துழைப்புகள் கூட, இந்தியாவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் நிலை காணப்படுகிறது.

இந்தச் சூழலில் பாகிஸ்தானுடனான ஒத்துழைப்புகள், குறித்த எந்தவொரு நகர்வும் சிக்கலான சூழ்நிலைகளையே ஏற்படுத்தும். அண்மையில் பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் சென்ற விவகாரம் கூட, இந்தியாவினால் சகித்துக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருந்திருக்கவில்லை. சீன நீர்மூழ்கிகள் கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் செல்வதை தடுத்த இந்தியாவினால் சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தான் நீர்மூழ்கி கொழும்பில் தரித்துச் செல்வதை தடுக்க முடியவில்லை. இவ்வாறான நிலையில், வங்கக்கடலில் பாகிஸ்தானும் நீர்மூழ்கி கப்பலை நிறுத்துவதற்கு தயாராகி வருகிறது. இது இந்தியாவுக்கு நேரடியாக சவால் விடுகின்ற ஒரு செயற்பாடாக இருக்கும். ஏனென்றால் வங்கக்கடல் தற்போதைய நிலையில் பாகிஸ்தானின் இறையாண்மையுடன் எந்தவகையிலும் தொடர்புடைய ஒன்று அல்ல. 1971 போருக்கு முன்னர் வங்கக் கடலில் பாகிஸ்தானுக்கு இறையாண்மை உரிமை இருந்தது. இப்போது பங்களாதேசாக இருக்கின்ற பகுதி அப்போது கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. ஆனால் இப்போது அவ்வாறான நிலை இல்லை.

இவ்வாறான நீர்மூழ்கிகளின் இருப்பிற்கு, இலங்கையை ஒரு தளமாகவோ அல்லது விநியோக மையமாகவோ பயன்படுத்த பாகிஸ்தான் முற்படுமானால் அது இந்தியாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில், இலங்கையுடன் பரந்துபட்ட அளவில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வரும் பாகிஸ்தான், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் விவகாரத்தில் நெருக்கமான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள விரும்புகிறது. அதற்கான மூலோபாய முயற்சிகள் தான் இப்போது முன்னெடுக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளரின் பயணத்தின் போது இதுபற்றிய பேச்சுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. அவை வெளிப்படையானவையாக இடம்பெறவில்லை. மறைமுகமாக இடம்பெற்றவை. இராஜதந்திரத்திலும் புலனாய்விலும், பல விடயங்கள் வெளிப்படையாக இடம்பெறுவதில்லை. வெளியே கூறப்படுகின்ற காரணங்களும், பெயர்களும், வேறானவையாக இருக்கலாம். அவற்றின் அடிப்படை நோக்கங்கள் வேறுபட்டதாக இருக்கும். இந்த வகையில் இலங்கையுடன் பாகிஸ்தான் ஏற்படுத்தி வருகின்ற இந்த நெருங்கிய ஒத்துழைப்பு புவிசார் அரசியல் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாத்திரமன்றி, இலங்கைக்கு கடும் சவாலான ஒன்றாகவும் மாறக்கூடும். ஏனென்றால், விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக இரண்டு நாடுகளும் ஒரே கோட்டில் பயணித்தது போன்ற புறச் சூழல் இன்று இல்லை. எனவே, ஒன்றையொன்று முட்டிமோதும் வகையிலான இராஜதந்திரமும், மூலோபாய தந்திரங்களுமே இதில் கையாளப்படும்.

Post a Comment

0 Comments