புதிய ஆயரும் சர்ச்சையும்
அண்மைக்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை தொடர்பான, வாதப்பிரதிவாதங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விவகாரத்தில், கத்தோலிக்க திருச்சபை பேராயர் மல்கம் ரஞ்சித் எடுத்த நிலைப்பாடுகள் இதற்கு முக்கிய காரணம். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் அவர், மைத்திரி- ரணில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததுடன், ஆட்சி மாற்றத்தை தூண்டும் வகையிலும் செயற்பட்டிருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக அவர் முயன்றார் என அப்போது விமர்சனங்கள் இருந்தன. பின்னர் ராஜபக்ஷவினருக்கு எதிராக குரலை உயர்த்த வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டது. ராஜபக்ஷவினரை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதே அதற்கு காரணம்.
அதன் பின்னர் அவர் அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் உருவாவதற்கும் ஆதரவாக இருந்தார். அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர், பேராயர் மல்கம் ரஞ்சித்திடம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதி காப்பாற்றப்படும் என்று இப்போதும் நம்புவதாக பேராயர் கூறி வருகிறார்.
ஆனாலும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அவர் அவ்வப்போது ஆழமான அதிருப்தியை வெளிப்படுத்தவும் தவறவில்லை. இந்த விவகாரத்தில் அவருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் சிலருக்கும் முரண்பாடுகள் இருந்து வருகின்றன. ஆனாலும், பேராயர் மல்கம் ரஞ்சித், சிங்கள பௌத்த தேசியவாத நலன்களை விட்டுக் கொடுக்கின்ற வகையில் ஒருபோதும் செயற்பட்டதில்லை. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை கட்டிக் காப்பாற்றுகின்ற வகையிலேயே அவர் செயற்பட்டு வந்திருக்கிறார்.
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள், வன்முறைகள் குறித்து அவர் ஒருபோதும் எதிர்ப்போ கவலையோ கண்டனமோ வெளியிட்டதில்லை. இலங்கை முழுவதற்குமான கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் என்ற வகிபாகத்தில் இருந்த போதும் அவர் அந்த தலைமைத்துவ பாங்குடன் செயற்படவில்லை என்ற கவலையும் அதிருப்தியும் தமிழ் மக்களிடம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
அவரது பதவிக்காலம் கிட்டத்தட்ட முடிவு கட்டத்தை நெருங்கியிருக்கிறது. 75 வயதை நெருங்கும் அவர் மிக விரைவில் ஓய்வுபெற வேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் தனது ஓய்வை வத்திக்கானுக்கு அறிவிக்க வேண்டும். அவருக்குப் பதிலாக கத்தோலிக்க திருச்சபை பேராயர் ஒருவரை நியமிக்க வேண்டும். அதற்குப் பொருத்தமானவரைப் பரிந்துரை செய்யும் பொறுப்பும் கருதினால் மல்கம் ரஞ்சித்துக்கு இருக்கிறது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் — யாழ்ப்பாண ஆயர் நியமனத்தில் அவரது செல்வாக்கு குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. (படம்: Wikimedia Commons)
இந்தச் சூழலில் தான், யாழ்ப்பாண ஆயராக கொழும்பு துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என வத்திக்கான் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க குருக்கள் மத்தியில் முழுமையான வரவேற்பை பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. வழி வழியாக யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய கத்தோலிக்க குருமாரை புறந்தள்ளி, கொழும்பில் நீண்டகாலம் பணியாற்றிய அன்ரன் ரஞ்சித் ஆயராக நியமிக்கப்பட்டது ஒன்று. இன்னொன்று, இவரது நியமனத்துக்கு பின்னால், அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதான சந்தேகம். இலங்கையின் மொத்த கத்தோலிக்கர்களில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர், வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களிலேயே வாழ்கின்ற போதும், பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களின் அரசியல் விருப்பங்கள், அபிலாசைகள் குறித்து ஒருபோதும் கவனத்தில் கொண்டதில்லை.
அவர்களின் நிலைப்பாட்டிற்கு மாறாகவே கத்தோலிக்க திருச்சபையின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. கத்தோலிக்க மக்கள் தமிழ் மக்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியவர்கள். ஆயுதப் போராட்டத்திலும் அரசியல் போராட்டத்திலும் முழுமையாகப் பங்களித்தவர்கள். அவர்களின் அரசியல் நிலைப்பாடு, அரசியல் அபிலாசைகள் பற்றி கத்தோலிக்க திருச்சபை கவனத்தில் எடுத்திருந்தால், தமிழினப் படுகொலைக் குற்றச்சாட்டை நிராகரிக்கும் வகையில், ஆயர்கள் பேரவையின் அறிக்கை வெளியாகியிருக்காது.
சில வாரங்களுக்கு முன்னர் வெளியான அந்த அறிக்கை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் தமிழினப் படுகொலையை கண்டித்தும், நினைவுகூர்ந்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். இது கத்தோலிக்கத் திருச்சபையின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போனதாக இருக்கவில்லை.
இப்போது, யாழ்ப்பாண மாவட்ட ஆயரின் நியமனம் குறித்த சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. இதனை, தனிப்பட்ட ஒரு தாக்குதலாக பார்ப்பதைவிட, இதன் பின்னால் ஒளிந்துள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல் தான் கவனத்திற்குரியது. இது தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் அ.நிக்ஸன் எழுதியிருந்த ஒரு கட்டுரை பரவலான விவாதங்களை உருவாக்கியிருந்தது. சமூக ஊடகங்களில் இது பெருமளவில் பகிரப்பட்டது. ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது அவரவர் நிலைப்பாடுகளைச் சார்ந்த விடயம்.
ஆனால், ஆயர்கள் நியமனங்களின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கான ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டதா என்பதே கேள்வியாக உள்ளது. மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை உலகறிய செய்தவர். பல்வேறு ஆணைக்குழுக்களில் அதுபற்றிச் சாட்சியம் அளித்தவர். இறுதிப் போரின் பின்னர் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டதாக ஐ.நா விசாரணைகளின் கூறியவர். சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும், ஒற்றையாட்சி அரசை காக்கும் அதன் முயற்சிக்கும், பெரும் சவாலாக இருந்தவர்.
எதிர்காலத்தில் இராயப்பு யோசேப் போன்ற ஒரு ஆயர் வடக்கு கிழக்கில் உருவாகக் கூடாது என்பதில், சிங்கள பௌத்த பேரினவாதம் கவனம் செலுத்தியிருந்தால், அது ஆச்சரியமல்ல. அவருக்குப் பின்னரான காலகட்டத்தில், ஆயர்கள் நியமனங்களின் போது கையாளப்பட்ட சில முறைமைகள், அத்தகைய சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கியது.
யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயம் — யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தலைமையிடம், புதிய ஆயர் நியமனம் தொடர்பான சர்ச்சையின் மையம். (படம்: Wikimedia Commons)
இப்போது கொழும்பு துணை ஆயராக நியமிக்கப்பட்டிருக்கும் அன்ரன் ரஞ்சித், யாழ்ப்பாண ஆயர் நியமனங்களில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் கரம்பனை பூர்வீகமாக கொண்டவர் என்ற தகுதி கேள்விக்குரியதல்ல. அவரது கல்வித் தகைமைகளோ, குருத்துவ வாழ்வு மற்றும் மறைக்கல்வி சார்ந்த விடயங்களோ அல்ல. 30 ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பில் பணியாற்றியது கூட அல்ல. அவர், பேராயர் மல்கம் ரஞ்சித்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு செயற்படுவாரோ என்ற அச்சம் – சந்தேகம் தான் அவரது நியமனம் சர்ச்சைக்குள்ளாகியிருப்பதற்குக் காரணம்.
தனிப்பட்ட ரீதியாக, இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை அவர் ஆதரிப்பவராக இருக்கலாம்- அல்லது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எதிர்ப்பவராகக் கூட இருக்கலாம். ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆயராக அவர், மக்களின் அரசியல் அபிலாசைகளை மதிப்பவராக அதனுடன் இணைந்து செல்பவராக இருக்க வேண்டும் என்ற ஆதங்கம் பரவலாக உள்ளது. கடந்த காலங்களில் யாழ்ப்பாண ஆயர்கள், அவ்வாறே இருந்திருக்கிறார்கள். அவர்கள் கத்தோலிக்க மக்களின் மதிப்புக்குரியவர்களாக மாத்திரமன்றி ஒட்டுமொத்த யாழ்ப்பாண- தமிழ் மக்களின் மதிப்புக்குரியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
அத்தகைய எதிர்பார்ப்பு தற்போதைய ஆயர் நியமனத்தின் போதும் முளை விட்டிருப்பது தவறல்ல. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மறைமாவட்டங்களின் பெரும்பாலான குருக்கள் தமிழ் தேசிய அரசியல் பயணத்துடன் ஒன்றிணைந்திருப்பவர்கள். நினைவேந்தல்கள் முதல் அரசியல் கலந்துரையாடல்கள், அரசியல் தீர்வு முயற்சிகள் என எல்லாவற்றிலும் பங்கெடுப்பவர்கள். குருமார்என்ற நிலைக்கு அப்பால் , மக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பாலமாக கூட விளங்கியிருக்கிறார்கள். போருக்கு பின்னரான காலகட்டத்தில், தமிழ்த் தேசிய அரசியலின் இருப்புக்காக, தமிழ் மக்களின் இருப்புக்காக, உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளுக்கும் ஒத்துழைத்து வந்திருக்கிறார்கள்.
இதனை விரும்பாத தரப்புகள் - இதனை எதிர்க்கின்ற தரப்புகள்- புதிய ஆயர் நியமனம் ஊடாக, தங்களை வலுப்படுத்திக் கொள்ள முற்படுகின்றனவோ என்ற சந்தேகங்களை தோற்றுவித்திருக்கிறது. புதிய ஆயரின் நியமனம் தொடர்பாக வெளியான விமர்சனங்களுக்கு, எதிர்க் குரல் எழுப்புவோர் அனைவரும் தமிழ் தேசியத்தை போலியானதாகவும், அதற்கு ஒத்துழைக்கும் ஆயர்கள் மற்றும் குருக்களின் நடவடிக்கைகளையும் எதிர்த்து அதிகம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்த நியமனத்துக்கு பின்னால் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டநிகழ்ச்சி நிரல் உண்மையானதாக இருக்கக் கூடுமோ என்று நம்ப வைப்பதாக உள்ளது.
தமிழ் மக்கள் பிரதேச ரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாக இன்னும் பல்வேறு வழிகளின் ஊடாக பிளவுபடுத்தப்படுகிறார்கள். இதன் ஊடாக தமிழ் தேசிய அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கப்படுகிறது. தமிழ் தேசிய உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்படுகிறது. இதன் அடுத்தடுத்த கட்டங்கள், எதிர்பார்க்கப்படாத முனைகளின் ஊடாக எல்லாம், முன்னெடுக்கப்படும். இத்தகைய கட்டத்தில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான முன்னெடுப்புக்களுக்கு புதிய ஆயர் நியமனம் துணை போய் விடக்கூடாது என்ற ஆதங்கம் பரவலாக இருப்பது தவறல்ல.
இந்த விடயத்தில் புதிய ஆயர் எப்படி செயற்பட போகிறார் என்ற கேள்வி வருகிறது. அவர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின், அரசியல் வழிமுறையின் தொடர்ச்சியாக நீடிப்பாரா அல்லது அதனை மறுத்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் செயற்படுவாரா என்பது, போகப் போகத் தான் தெரியும். ஆனால் அவர், தமிழ்த் தேசிய மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி, சிங்கள பௌத்த தேசியவாத நலன்களை மையப்படுத்தி, ஒற்றையாட்சிக் கோட்பாட்டை வலுப்படுத்தும் வகையில் செயற்படும் ஒருவராக இருந்தால், அவரது நியமனம் தொடர்பாக எழுந்திருக்கின்ற சர்ச்சைகள், சந்தேகங்கள் அல்லது குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை தான் என்றாகி விடும்.
0 Comments