வேண்டாத விசப் பரீட்சை
உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அரசாங்கம் தயங்கி வரும் விவகாரம், கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. நீதிமன்ற சுயாதீனத்தில் அரசாங்கத்தின் தலையீடு அதிகரித்திருப்பதாக, நீதியரசர்கள் மீதான அரசியல் அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.
அரசாங்கம் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு முற்படுகிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், அரசாங்கம் அதனை மறுத்து வந்தாலும் நீதியரசர்களின் நியமனத்தில் காட்டப்படும் தாமதம் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக இருக்கிறது. ஜனநாயகத்தின் பிரதான தூண்களில் ஒன்றாக நீதித்துறை உள்ளது. நீதித்துறை சுயாதீனமானதாக இருந்தால் மாத்திரமே ஜனநாயகம் செழிப்பானதாக இருக்கும். ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் சுயாதீனமான நீதித்துறையின் பங்கு அபரிமிதமானது.
இலங்கையை பொறுத்தவரையில் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் என்பது நீண்டகாலமாகவே ஒரு பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் ஒவ்வொரு விதமான தலையீடுகள் காணப்பட்டிருக்கின்றன. பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் நியமனங்களை மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ள நிலையில், பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த நியமனங்களில் அரசியல் செல்வாக்கு காணப்பட்டிருந்தது. ஜனாதிபதி பதவியில் இருந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளக் கூடியவர்களை, இந்த பதவிகளுக்கு கொண்டு வருவதில் அக்கறை காட்டியிருக்கிறார்கள். அதுபோல தங்களுக்கு விருப்பமானவர்களை நியமிப்பதற்காகவோ அல்லது தங்களுக்கு சாதகமாக செயல்படாதவர்களை வெளியேற்றுவதற்கோ கூட நிறைவேற்று அதிகாரமும் சட்ட வாக்க அதிகாரமும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நீதித்துறையின் அதிகாரத்தை மலினப்படுத்துகின்ற வகையில் அரசியல் செல்வாக்கு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றம் — நீதியரசர்கள் நியமன இழுபறி விவகாரம் கடந்த செவ்வாய்க்கிழமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் அறிக்கையில் நீதித்துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் தற்போது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வந்திருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டுகிறார். இந்த குற்றச்சாட்டு எழுந்ததற்கும், நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் குழப்ப நிலை ஏற்பட்டதற்கும், ஒரே காரணம், உயர்நீதிமன்ற கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதமையே ஆகும்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர் பதவிகளும், உயர்நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர் பதவிகளுமாக மொத்தம் எட்டு நீதியரசர் பதவிகள் வெற்றிடமாக இருக்கின்றன. கடந்த ஆறு மாதங்களாக இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாக சந்தேகிக்கப்படுகிறது. அரசியலமைப்பின் 107 மற்றும் 108-வது உறுப்புரைகளின்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் 63 வயதிலும், உயர்நீதிமன்ற நீதியரசர் 65 வயதிலும் ஓய்வு பெற வேண்டும். ஆனால் அரசாங்கம் இந்த வயதெல்லையை நீடிப்பதன் மூலமாக, தமக்கு வசதியானவர்களை பதவியில் நீடிக்கச் செய்வதற்கு முற்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது. அதனைக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வதற்கான முழு அதிகாரத்தையும் அது பெற்றிருக்கிறது. இந்த அதிகாரம் தான் இப்போது பிரச்சினைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. இனி யாருக்கும் இவ்வாறான பெரும்பான்மையை மக்கள் அளிக்கக் கூடாது என்றும், சாதாரண பெரும்பான்மையே போதுமானது என்றும் சஜித் பிரேமதாச கூறியிருப்பது கவனிக்க வேண்டிய விடயம்.
உயர்நீதிமன்றங்களின் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதன் ஊடாக, அரசாங்கம் தமக்கு சாதகமான தீர்ப்புகளை பெறுவதற்கு முற்படுகிறது என்ற சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. எந்த ஒரு சட்டமூலமும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படலாம். அவ்வாறு சவாலுக்கு உட்படுத்தப்படும் சட்ட வரைவுகளை ஆராய்ந்து, நாடாளுமன்றம் எவ்வாறு நிறைவேற்ற முடியும், அது அரசியலமைப்பிற்கு முரணானதா இல்லையா என்பதை, வியாக்கியானம் செய்யும் பொறுப்பு உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது. அரசாங்கம் சமர்ப்பிக்கின்ற எல்லா சட்ட வரைவுகளையும் உயர்நீதிமன்றம் அங்கீகரிப்பதில்லை. அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும். அரசியலமைப்புக்கு முரணாக இருக்கும் விடயங்களை சுட்டிக்காட்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் விசேட பெரும்பான்மையுடன் அல்லது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என வியாக்கியானம் செய்யும்.
இலங்கை உயர் நீதிமன்றம், கொழும்பு — நீதியரசர்கள் நியமனத்தில் அரசாங்கம் காட்டும் இழுபறிப் போக்கு கடுமையான எதிர்ப்புகளை தோற்றுவித்திருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதாக உறுதியளித்திருக்கிறது. அதை வரையும் பணிகள் நடைபெறுவதாக பல வாரங்களுக்கு முன்னரே அமைச்சர்கள் கூறியிருந்தார்கள். ஆனால் வரைவு இன்னும் பொது அரங்கிற்கு வரவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது பதவிக்காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல சட்ட திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு முற்படுகிறது. அவை ஜனநாயகத்தை பாதுகாக்குமா? அரசியலமைப்பை மீறாதிருக்குமா? என்ற கேள்விகள் இருக்கின்றன. ஏனென்றால் தற்போதைய அரசாங்கம் ஒரு கட்சி ஆட்சி முறையை நோக்கி நகர்ந்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது கூட, அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நாட்டில் சர்வாதிகாரத்தனம் தலை தூக்குவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே சீனாவின் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்சி ஆட்சி முறையை உருவாக்குகின்ற விருப்பங்களை ஜேவிபி வெளிப்படுத்தி இருந்தது. இது நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்திற்கு முற்றிலும் எதிரானது. அந்த பாரம்பரியத்தையும் விழுமியங்களையும் நிராகரித்து விட்டு, தனிக்கட்சி ஆட்சி ஒன்றுக்குள் நாட்டை கொண்டு செல்வது என்பது சர்வாதிகார ஆட்சி உருவாக்கத்திற்கே வழி வகுக்கும்.
புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதாது. அந்த அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமா என உயர்நீதிமன்றம் தான் தீர்மானிக்கும். இதுபோன்ற பல சிக்கலான விடயங்களை அரசாங்கம் எதிர்கொள்ளக் கூடிய நிலையில், உயர்நீதிமன்றத்தில் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அரசுக்கு சார்பாக கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருப்பது அரசாங்கத்திற்கு வசதியானதாக இருக்கும். அவ்வாறான ஒரு கட்டமைப்பை இப்போது உருவாக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறதா என்ற கேள்வியே எழுந்திருக்கிறது.
அதனால் தான் நீதியரசர்கள் நியமனத்தில் காட்டப்படும் இழுபறி மற்றும் நெருக்கடிகள் போன்றவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தன. இது பற்றிய ஒரு நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கு கூட அரசாங்க தரப்பு இன்னமும் இணங்கவில்லை. அந்தளவிற்கு இந்த விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையின்றி செயற்படுகிறது. விவாதம் ஒன்று நடத்தப்பட்டால் அது பல விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும். அரசாங்கம் தமது அதிகாரபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, இந்த விவாதம் நடத்தும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இது நெருக்கடியை உருவாக்கும். நீதித்துறையின் மீது அரசாங்கம் தலையீடு செய்கிறது அல்லது அதனை கட்டுப்படுத்த முனைகிறது என்ற விம்பம் உருவாகுமேயானால், அதனை இலகுவாக அழித்து விட முடியாது. கடந்த காலத்தில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா பதவி நீக்கப்பட்ட விவகாரம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சர்வதேச அளவில் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியது. இது போன்ற விவகாரங்களில் அரசாங்கம் மெத்தனமாக செயற்பட்டால் அல்லது நீதிபதிகளின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அல்லது அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்படுமேயானால் கடுமையான எதிர் விளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
நீதியரசர்களின் நியமனங்களில் அரசாங்கம் காட்டி வரும் இழுபறிப் போக்கு, நாட்டின் சட்ட அமைப்புகளின் மத்தியில் கடுமையான எதிர்ப்புகளைத் தோற்றுவித்திருக்கிறது. சட்டத்தரணிகள் சங்கங்கள், பொது அமைப்புக்கள், சிவில் சமூகம் என்பன அரசாங்கத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருக்கின்றன. ஆனால் அரசாங்கம் அதற்கு தெளிவான பதிலை கொடுக்காமல் அமைதியாக இருக்கிறது. இதன் ஊடாக தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதில் அது உறுதியாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
0 Comments