கொள்கை அரசியலும் கோமாளி அரசியலும்
கொள்கை அரசியலும் கோமாளி அரசியலும் மோதுகின்ற களமாக, தமிழ் அரசியல், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசியல் மாறியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழல், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பாரம்பரியம் மற்றும் அரசியல் அபிலாசைகளை எட்டுவதற்கான முயற்சிகள் அனைத்தையும் சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஒரு காலகட்டத்தில் முற்று முழுதாக தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கையில் இருந்தது. 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களின் போது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈபிடிபிக்கும் இடையிலான அதிகார இழுபறியாக மாறியது. பின்னர், ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலாதிக்கம் செலுத்தி வந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முற்றிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது. தமிழ் அரசுக் கட்சி ஒற்றை ஆசனத்துடன் அடங்கிப் போனது. தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களை கைப்பற்றியது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை கைப்பற்ற, இன்னொரு ஆசனத்தை சுயேட்சை குழு கைப்பற்றிக் கொண்டது.
இந்தக் குழப்பமான, முன்னுதாரணமற்ற தேர்தல் பெறுபேறு யாழ்ப்பாண அரசியலில் மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது ஒட்டுமொத்த தமிழ் அரசியல் பரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடக்கில் தாங்கள் தான் பெரிய தமிழ் கட்சி எனக் கூறிக்கொள்ளுகின்ற அளவுக்கு, தேசிய மக்கள் சக்தி கூடுதல் ஆசனங்களை பெற்றிருந்தாலும், அந்த கட்சி தனது உறுப்பினர்களை கூட நம்பாத நிலையே காணப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கு கூட, அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைமை தாங்கும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. தேசியப் பட்டியலின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஒருவரே யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைமை தாங்குகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தளவுக்கு ஆளுமை குறைபாடு, தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடம் இருப்பதாக ஆளும்கட்சி தலைமையே நம்புகிறது.
யாழ்ப்பாண மாவட்ட அரசியல் — கொள்கை அரசியலுக்கும் கோமாளி அரசியலுக்கும் இடையிலான மோதல் களமாக மாறியிருக்கிறது.
இந்த ஆளுமைக் குறைபாடு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் மிகத் தாராளமாக வெளிப்படுகிறது. நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இத்தகைய கூட்டங்கள் அமைதியாகவோ அல்லது குழப்பமற்ற சூழலிலோ நடக்கின்ற சூழலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இத்தகைய கூட்டங்கள் எப்போதும் குழப்பம் நிறைந்தவையாக - கலகம் நிறைந்தவையாக மாறியுள்ளன. இது இன்றைய ஊடகங்களுக்கு தீனி போடும் ஒரு அரசியல் உத்தியாக மாற்றப்பட்டுள்ளது.
அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மாத்திரம் இருந்த காலகட்டத்தில், செய்திகளை வெளியிடுவதில் நாகரிகமான மற்றும் அறத்துடன் கூடிய ஊடக நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. இன்றைய நவீன ஊடக உலகில் இணைய ஊடகங்களும் சமூக ஊடகங்களும் தாறுமாறாக பயன்படுத்தப்படுகின்ற நிலையில், இவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுகின்ற நோக்கில் இந்தக் கூட்டங்கள் குழப்பம் நிறைந்தவையாக மாற்றப்படுகின்றன. அரசியல் காழ்ப்புணர்வுகளும் தனிமனித உறவுகளும் வெளிப்படுத்தப்படும் களமாக இவை மாற்றப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர்களின் தெரிவுகளின் விளைவு இது. ஜனநாயகத்தில் வாக்காளர்களே மேன்மையானவர்கள். அவர்களுக்கு தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முழு உரிமை உள்ளது. அதனை கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால் அந்த தெரிவு தவறாகும் போது, என்ன நடக்கும் என்பதை, இன்றைய நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. கோட்டாபய ராஜபக்ஷவும் கூட 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியானவர் தான். ஆனால் அந்த தெரிவு சரியானதல்ல என்று மக்கள் உணர்ந்து கொண்டதால் தான் அவருக்கு எதிரான மக்கள் புரட்சி வெடித்தது. யாழ்ப்பாண வாக்காளர்கள் சமூக ஊடகங்களில் வரும் காணொளிகளை பார்த்து ஏமாந்து போனதற்காக இன்று புலம்பித் திரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
வெறும் சமூக ஊடக அரசியலாக தமிழரின் அரசியல் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த கோமாளித்தனமான அரசியல் சூழ்ச்சிக்குள் தமிழ்த் தேசிய அரசியல் நலன்கள் முற்று முழுதாக பலியிடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான, நீண்ட வரலாற்றைக் கொண்ட போராட்டங்கள் இன்று கேலிக்குரியதாக, கேள்விக்குரியதாக மாற்றப்பட்டுள்ளன. அவை முட்டாள்தனமானவையாக சித்திரிக்கப்படுகின்றன. இதன் ஊடாக, தமிழரின் அரசியல் அபிலாசைகள் மோசமானவையாக, தவறானவையாக, நியாயமற்றவை அல்லது சாத்தியமற்றவையாக தமிழ் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது. தமிழரின் அரசியல் உரிமைகளை அன்று தொட்டு இன்று வரை மறுத்து வரும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலுக்கு தீனி போடுகின்ற வகையிலேயே இது அமைந்திருக்கிறது.
இந்த கோமாளித்தனமான அரசியல் யாரால் இயக்கப்படுகிறது? யாருக்கு எதிராக இயக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்வது கடினம் அல்ல. இதனை தமிழ் மக்கள் எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தமிழரின் எதிர்காலம் ஆபத்தான ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. கோமாளித்தன அரசியல்வாதிகள் இன்று தமிழரின் நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியலையும் அதன் மாண்பையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழ் அரசியல்வாதிகளை இயலாதவர்களாக- செயல்திறன் அற்றவர்களாக காட்ட முற்படுகிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழ் அரசியலையும் சிறுமைப்படுத்தி, அதன் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் நோக்கம் கொண்டது. இதன் மூலம் இலாபமடையப் போவது, சிங்களப் பேரினவாத அரசியல் தான்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் — யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னுதாரணமற்ற பெறுபேறு தமிழ் அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
சிங்களத் தேசிய அரசியலை நோக்கி தமிழ் வாக்காளர்களைத் திருப்பி, தமிழ் அரசியலை அதற்கு அடிமைப்படுத்துவதற்காகவே இத்தகைய அரசியல் கோமாளிகள் செயற்படுகிறார்கள். இன்னொரு பக்கம், தமிழரின் நீண்டநாள் அரசியல் அபிலாசையான அதிகாரப்பகிர்வை, கேள்விக்குட்படுத்தவும், இந்த கோமாளித்தன அரசியல்வாதிகள் முற்படுகிறார்கள். இந்த அரசியல்வாதிகள் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு தீவிரமாக பணியாற்றுகிறார்கள்.
தமிழரின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வாக இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட தீர்வே மாகாண சபைகள். காணி, பொலிஸ், சுகாதாரம், கல்வி போன்ற அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த மாகாண சபைகளை, இலங்கையின் ஆட்சியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்படுத்தி வருகிறார்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்காமல், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களைக் கடத்தி விட்டார்கள். எஞ்சியிருக்கின்ற சுகாதாரம் மற்றும் கல்வி அதிகாரங்களையும், கொஞ்சம் கொஞ்சமாக பறித்தெடுக்கின்ற செயற்பாடுகளையே சிங்கள பௌத்த பேரினவாதம் முன்னெடுத்து வருகிறது. இதற்கு தீனி போடுகின்ற வகையில் - அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உதவுகின்ற வகையில் - இன்றைய கோமாளித்தன அரசியல் அமைந்திருக்கிறது என்பது துரதிஷ்டம்.
ஒரு காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றத்திற்குள் இயங்கினார்கள். இன்று தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை விலை பேசுகின்ற - சிங்கள பேரினவாதத்துடன் இணைந்து அவற்றைப் பறித்தெடுக்கின்ற ஒரு கூட்டம் உருவாகியிருக்கிறது. இது தமிழ் அரசியலுக்கு குறிப்பாக கொள்கை அரசியலுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல். கொள்கை அரசியலுடன் மோதி வரும் இந்த கோமாளித்தன அரசியல், அற்பத்தனமான நோக்கங்களைக் கொண்டது. அதற்கு இலக்கு எதுவும் கிடையாது, யாரையும் கடிக்கும், யாரையும் காயப்படுத்தும், யாரையும் தூற்றும், யாரையும் தலையில் வைத்தும் கொண்டாடும். தமிழ் மக்களின் நலன்கள் என்ற பெயரில், நீண்ட கால நோக்கில் தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளை படுகுழிக்குள் தள்ளி விடுகின்ற நோக்கில் செயற்படுகிறது.
மத்தியை நோக்கி சென்றால், மத்தியின் அதிகாரங்களுக்குள் சென்று விட்டால், வளங்கள் கிடைக்கும், வளமான வாழ்வு கிடைக்கும் என்ற பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து மாகாணங்களையும் மாகாண அதிகாரங்களையும் பலவீனப்படுத்தும் நோக்கில் செயற்படுகிறது. தற்போதைய மாகாண அரசியல் அதிகார கட்டமைப்பை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளாத தரப்புகள் கூட, மாகாணத்திடம் இருந்து அதிகாரங்கள் பிடுங்கி எடுக்கப்படுவதை கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால் கோமாளித்தன அரசியல்வாதிகள் மிக இலகுவாக, மாகாணங்களின் அதிகாரங்களை மத்தியிடம் விட்டுக் கொடுப்பதற்காக செயல்படுகிறார்கள்.
0 Comments