elugai

அமெரிக்காவின் 4 மில்லியன் டொலர் செய்மதி வலை! இந்தியப் பெருங்கடலில் கொழும்பு துறைமுகத்தைக் குறிவைக்கும் வாஷிங்டன்.

அமெரிக்க வியூகத்துக்குள் மூழ்கும் இலங்கை

அமெரிக்க வியூகத்துக்குள் மூழ்கும் இலங்கை

கட்டுரையாளர் - ஹரிகரன்

அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் போல் கபூர், மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, மூன்று பிரதான விடயங்களில் கவனம் செலுத்தியிருந்தார். முதலாவது பாதுகாப்பு ஒத்துழைப்பு. இரண்டாவது வர்த்தகம் மற்றும் முதலீடுகள். மூன்றாவது பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இராஜதந்திர இணைப்புகள். இந்த மூன்று விடயங்களிலும் அவர் முக்கிய கவனம் செலுத்தியிருந்தார்.

முதலில் அவர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த போது, சர்வதேச சட்டங்களை அமுல்படுத்துகின்ற விடயத்தில் இலங்கை நடுநிலையுடன் செயற்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஈரானின் ஐ.ஆர்.ஐ.எஸ் டேனா என்ற போர்க்கப்பல் காலி துறைமுகத்துக்கு அப்பால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து, அதன் மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அவர்களை தடுத்து வைத்திருந்து, ஈரானுக்கு திருப்பி அனுப்பிய விவகாரத்தில், இலங்கை அரசாங்கம் முற்று முழுதாக அமெரிக்காவின் வழிகாட்டலிலேயே செயற்பட்டது. ஆனால், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே தாங்கள் செயற்படுவதாக அரசாங்கம் கூறியது. இந்த விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள், தீர்மானங்கள், இலங்கையின் இன்னொரு நட்பு நாடான ஈரானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அதனை சாடை மாடையாக சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டும் இருந்தார்.

தற்போது மத்திய கிழக்கு விவகாரத்தில், ஈரானுடன் அமெரிக்கா சமரசம் செய்து கொண்டிருந்தாலும், இலங்கையும் ஈரானும் நெருங்கிய வர்த்தக தொடர்புகளை கொண்ட நாடுகள் என்ற வகையில் மீண்டும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதையோ, வர்த்தகத்தை மேற்கொள்வதையோ அமெரிக்கா விரும்பவில்லை என தெரிகிறது. அவ்வாறு நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதை தடுத்து நிறுத்துவது, அமெரிக்க தரப்பின் ஒரு நோக்கமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் தான், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக நடுநிலையாக செயற்படுவோம் என்பதை அமெரிக்க உதவி இராஜாங்க செயலருக்கு வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் பின்னர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோதும், இதே விவகாரம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. ஈரானுடனான போரின் போது, அமெரிக்கா இலங்கையை தளமாக பயன்படுத்த முற்பட்டது. அமெரிக்கா போர் விமானங்கள் மத்தலவில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியதாகவும், அதனை தாம் மறுத்து விட்டதாகவும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்திருந்தார். இது விவேகமற்ற கருத்தாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவை எரிச்சலூட்டும் விடயமாக பார்க்கப்பட்டது. இலங்கையின் பதில் அமெரிக்காவுக்கும் கூட அதிருப்தியை அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கொழும்பு துறைமுகம் கொள்கலன் முனையம் கொழும்பு துறைமுகம் — அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் உள்பட பல அமெரிக்க அதிகாரிகள் இங்கு தொடர்ச்சியாக வருகை தந்துள்ளனர்.

போருக்கு பின்னரான சூழலில், இந்திய பெருங்கடலின் மீது ஈரானும் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. அமெரிக்கா மீண்டும் போரை தொடங்கினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மாத்திரம் இன்றி, இந்திய பெருங்கடல், செங்கடல், அரபிக்கடல், என அனைத்து பகுதிகளுக்கும் அமெரிக்காவுக்கு எதிரான போரை விரிவுபடுத்துவோம் என, ஈரானிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரித்திருந்தார். எனவே ஈரான் விடயத்தில் அமெரிக்கா அலட்சியமாக இருந்து விட முடியாது. ஈரானின் அணுசக்தி ஆற்றலை கட்டுப்படுத்துவதற்கு சில இணக்கப்பாடுகளை அமெரிக்கா எட்டியிருந்தாலும், அதன் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் திறன்களை குறைத்து மதிப்பிட முடியாத நிலை உள்ளது. அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்படி என்ற கேள்விக்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை. அதன் விமானி ஜெல்லி மீன் போன்ற வடிவத்தில் ட்ரோன்கள் தென்பட்டதாக கூறியதை, அமெரிக்க புலனாய்வாளர்களால் நம்பவே முடியாமல் இருக்கிறது. அவர்கள் இது தொடர்பாக தீர்மானம் ஒன்றுக்கு வர முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் அமெரிக்கா தனது தற்காப்புத் திறனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, இலங்கை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்புகளை வலுப்படுத்த முற்படுகிறது. அதற்கான ஒரு முயற்சியாகவே, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூரின் இலங்கை பயணம் அமைந்திருந்தது. அதேபோல, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. வர்த்தக சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியிருந்த போதும், அதனை செய்வதில் இலங்கை சவால்களை எதிர்கொள்கிறது. சிறிய நாடான இலங்கை பெரிய நாடான அமெரிக்காவுக்கு இணையாக, இறக்குமதிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது என்ற விடயத்தை போல் கபூருடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்துக் கூறியிருக்கிறார்.

இந்த விடயத்தில் அமெரிக்கா பரந்துட்ட இலக்குகளை முன்வைத்து செயல்படுகிறது. அதன் முக்கியமான இலக்குகளில் ஒன்று கொழும்பு துறைமுகம். கொழும்பு துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியிருந்தார். முன்னதாக மேற்கு கொள்கலன் முனைய திட்டத்தை அதானி குழுமத்துடன் இணைந்து முன்னெடுக்க, 550 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. பின்னர் அந்த திட்டத்தில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியது. கொழும்பு துறைமுகத்தில் சீனா தனக்கென முனையத்தை கொண்டிருக்கிறது. இந்தியாவும் தனக்கென முனையத்தைக் கொண்டிருக்கிறது. அதைவிட, கப்பல்களை பழுது பார்க்கின்ற டொக்யாட் தளத்தையும் இந்தியா தன் வசப்படுத்தி இருக்கிறது. இவ்வாறான நிலையில் அமெரிக்கா தனக்கான செல்வாக்கை உறுதி செய்வதற்கு தளமொன்றை எதிர்பார்க்கிறது. கொழும்பு துறைமுகத்திற்குள் அமெரிக்காவின் முதலீடுகளுக்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்படுகின்றன.

போல் கபூர் அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் போல் கபூர் — தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் இலங்கை பயணத்தில் பாதுகாப்பு, வர்த்தகம், பிராந்திய ஒத்துழைப்பு என மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தினார்.

அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் போல் கபூர் கொழும்பு வந்திருந்த போது, கொழும்பு துறைமுகத்துக்கு சென்று பார்வையிட்டிருந்தார். அதற்கு முன்னர் கொழும்பு வந்த அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர் செர்ஜியோ கோரும், கொழும்புத் துறைமுகத்தை பார்வையிட்டிருந்தார். அதற்கு முன்னர் வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் கொழும்பு துறைமுகத்துக்கு செல்வதையும், தாங்கள் அன்பளிப்பாக வழங்கிய போர்க்கப்பலில் ஏறி பார்வையிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். கொழும்பு துறைமுகத்தின் மீதான அமெரிக்காவின் கவனம் அதிகரித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை ஒரு வர்த்தக கேந்திரமாக மாற்றுவதன் மூலமாக அமெரிக்கா தனது சில இலக்குகளை எட்ட முனைகிறது. அதற்காக கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பையும் வசதிகளையும் அதிகரிக்க முற்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தை கொண்டு அதனை சாதிப்பது இலகுவானது என ட்ரம்ப் நிர்வாகம் கருதுவதில் ஆச்சரியம் இல்லை. அதேவேளை, இலங்கைக்கு தேவையான படைக்கல சாதனங்களையும் அமெரிக்கா தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தில் கஜபாகு கப்பலைப் பார்வையிட்ட உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இலங்கை கடற்படையின் கப்பல்கள் மற்றும் படகுகளுக்கும் தரையில் உள்ள தளங்களுக்கும் இடையில் தொடர்பாடலை பேணக்கூடிய அகலப்பட்டை செய்மதி தொடர்பு கருவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்திருக்கிறார். இதன் பெறுமதி 4 மில்லியன் டொலர்களாகும். இதன் மூலமாக ஒரு கடற்படை வலையமைப்பை உருவாக்க அமெரிக்கா முற்படுகிறது. ஏற்கனவே ராடர்களின் மூலமாக சில இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இப்போது தொடர்பாடல் கட்டமைப்பின் ஊடாக அது நிகழ்த்தப்படவிருக்கிறது. இது இலங்கைக்கு நன்மை தருகிறதோ இல்லையோ அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும்.

"இலங்கையின் கடல் பகுதி பாதுகாப்பானதாக இருக்கும் போது சர்வதேச கப்பல் பாதைகள் பாதுகாப்பாக இருக்கும், வர்த்தகம் தடையின்றி நடைபெறும். இந்தியப் பெருங்கடல் செழிப்புக்கான ஒரு நெடுஞ்சாலையாகவே நிலைத்திருக்கும். இது அமெரிக்காவுக்கு நேரடியாக முக்கியத்துவம் வாய்ந்தது" என போல் கபூர் கூறியிருந்தார்.

அமெரிக்கா இலங்கையின் பாதுகாப்பை தனது பாதுகாப்பின் ஒரு அங்கமாக பார்க்கிறது. இலங்கையை வலுப்படுத்துவதன் மூலம் தனது பாதுகாப்பை வலுப்படுத்த முனைகிறது. இந்த சிக்கலான இணைப்பு, இந்த பிராந்தியத்தின் வலுச் சமநிலையை பேணுகின்ற களமாக இலங்கையை மாற்றி இருக்கிறது. இந்த மாற்றம் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான் என பல நாடுகளுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்ற இலங்கைக்கு, அமெரிக்காவின் இந்த நகர்வு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, போகப் போக புரிந்து கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments