elugai

கழித்து ஒதுக்கப்பட்ட கப்பல்களும் 10 ஹெலிகாப்டர்களும்! அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் பாதுகாப்பு வலையில் வீழும் அநுர அரசு.

இராணுவ கேந்திரமாக மாறும் இலங்கை

இராணுவ கேந்திரமாக மாறும் இலங்கை

கட்டுரையாளர் - சுபத்ரா

அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடம் (INDO-PACOM), கடந்த ஜூன் 16ஆம் திகதி மீண்டும் பசுபிக் கட்டளைப் பீடமாக (PACOM) மாற்றப்பட்ட பின்னர், அதன் விமானப்படைகளின் தளபதி ஜெனரல் கெவின் சினைடர் (General Kevin Schneider) 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்தார். அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஜிம் மாட்டிஸ் (Jim Mattis), 2018 ஆம் ஆண்டு பசுபிக் கட்டளை பீடத்தை, இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடமாக பெயர் மாற்றம் செய்திருந்தார். அதனை இப்போதைய பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெட்செத் மீண்டும் பசுபிக் கட்டளைப் பீடமாக மாற்றியிருக்கிறார்.

1947 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ருமனால் பசுபிக் கட்டளை பீடம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த கட்டளைப் பீடம் உலகின் பெரும் பிராந்தியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 3 இலட்சத்து 75 ஆயிரம் படையினர் பணியாற்றுகின்ற இந்த கட்டளை பீடம், 36 நாடுகள் 14 நேர வலயங்களை உள்ளடக்கியது. ஹவாயில் உள்ள இதன் தலைமையகம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான கொரிய போர், வியட்நாம் போர் உள்ளிட்ட பல போர்களுக்கு தலைமை தாங்கியது. இலங்கையின் மேற்குப் பகுதியில் இருந்து, ஹவாய் வரையிலான இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பிரதேசங்களை உள்ளடக்கியதாக, இந்த கட்டளைப் பீடத்தின் நிர்வாக அமைப்பு அமைந்திருக்கிறது.

இந்த கட்டளைப் பீடத்தின் விமானப்படைகளின் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கின்ற பயணம் மிக மிக முக்கியமானது. பசுபிக் கட்டளைப் பீடத்துக்கும், இலங்கை பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கும், இப்போது மிக நெருங்கிய, இறுக்கமான, வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு உருவாகியிருக்கிறது. வெளிப்படையாக தெரிகின்ற அல்லது வெளிப்படுத்தப்பட்ட தொடர்புகள், பயணங்கள், உறவுகளைத் தாண்டி, இந்த பிணைப்பு உயர் நிலையில் இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாத உண்மை. பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதிகள், உயர் அதிகாரிகள் மட்டத்தில் மாத்திரமன்றி, கட்டளையிடும் அதிகாரமற்ற, கீழ்நிலை அதிகாரிகள் மட்டத்திலும் கூட தொடர்புகள் பேணப்படுகின்றன. இது மேலிருந்து கீழ் நோக்கிய இறுக்கமான பிணைப்பு ஒன்றிற்கான அடித்தளம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இதற்கான அடித்தளம் போடப்பட்டது. 2016 ஆம் ஆண்டு பசுபிக் கட்டளைப்பீடத்தின் தளபதியாக இருந்த அட்மிரல் ஹரி ஹாரிஸ், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போதே, இணைப்புக்கான வழிகளை உருவாக்கியிருந்தார். அதன் பின்னர், 2018 ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிந்த போது, இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடம் உருவாக்கப்பட்டது. நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கைக் கடற்படையை வலுப்படுத்துவதில் தொடங்கிய ஒத்துழைப்பு, பின்னர் விமானப்படைக்கு விரிவாக்கம் அடைந்து இப்போது இராணுவத்துடனும் கூட இணைந்து செயற்படும் நிலைக்கு வந்திருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையின் மீது போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் எதிர்கொள்ளப்பட்டிருந்தது. சர்வதேச அரங்கில் குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இது தொடர்பான விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த அந்த சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவத்துடனான ஒத்துழைப்பை மட்டுப்படுத்தியிருந்தது. தற்போது வலுவடைந்து வரும் உறவுகள் முப்படைகளுடனும் உயர்ந்தபட்ச நெருக்கத்தை அடைந்திருக்கின்றன.

அமெரிக்க கடற்படை இலங்கை கொழும்பு துறைமுகம் அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுக வருகை — இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. (படம்: DVIDS)

அமெரிக்க கடலோர காவல்படையினால் பயன்படுத்தப்பட்டு, கைவிடப்பட்ட சுமார் 10 மில்லியன் டொலர் பெறுமதியான ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சமுத்திரவிஜய கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் நடந்த நிகழ்வில், இலங்கை கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. அந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்பு தூதுவரும் இந்தியாவுக்கான தூதுவருமான செர்ஜியோ கோர், பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் அதில் பங்கேற்கவில்லை. இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் நெருடலான சூழல் நிலவுகிறது என ஊகங்களுக்கு வழிவகுத்திருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான், ஒரே நேரத்தில் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான உதவி இராஜாங்க செயலர் போல் கபூரும், பசுபிக் கட்டளைப் பீடத்தின் விமானப்படைகளின் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடரும், ஒரே நேரத்தில் இலங்கைக்கு பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இருவருக்கும் தனித்தனியான நிகழ்ச்சி நிரல்கள் இருந்தாலும், இருவரும் இணைந்து பங்கேற்ற ஒரு நிகழ்வு, இரத்மலானை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றது. அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் படைப்பிரிவுகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு கைவிடப்பட்ட, பத்து சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படைக்காக வழங்கப்பட்டிருந்தன. அவை கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு இரத்மலானை விமானப்படைத் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நிலையில் தான், ஜெனரல் கெவின் ஷ்னைடரும் போல் கபூரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் ஒன்றாக கலந்து கொண்ட, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்ற நிகழ்வில், அதிகாரபூர்வமாக 10 ஹெலிகொப்டர்களும் விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டன.

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா முன்னரும் பல விமானங்களை வழங்கியிருக்கிறது. பெல்-206, பெல்-212, பெல்-414 ஹெலிகொப்டர்கள், சி-130 விமானங்கள் போன்றவை அமெரிக்காவினால் இலங்கைக்கு விற்கப்பட்டிருக்கின்றன. போரின் போது, பீச் கிங் விமானத்தையும் விற்றிருந்தது. அதன் பின்னர், பீச் கிங் கண்காணிப்பு விமானத்தையும், 10 ஹெலிகாப்டர்களையும் அமெரிக்கா கொடையாக வழங்கியிருக்கிறது. இதுவரை நான்கு கப்பல்களையும் இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த கொடைகள் அமெரிக்க நலன்களை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையுடனான அதன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, வழங்கப்பட்டவை. அமெரிக்காவை பொறுத்தவரையில் இந்த கப்பல்களும், விமானங்களும் கழித்து ஒதுக்கப்பட்ட குப்பைகள். அவற்றை புதுப்பித்து, மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில், தயார்படுத்தி இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது.

இலங்கை விமானப்படை அமெரிக்க ஹெலிகொப்டர் இரத்மலானை இரத்மலானை விமானப்படைத் தளம் — அமெரிக்காவின் கொடையாக வழங்கப்பட்ட 10 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டன.

இது அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின் முக்கியமான ஒரு விடயமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த மூலோபாயத்தில் இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை அமெரிக்கா வழங்கி இருக்கிறது. கொழும்பு துறைமுகத்தில் கஜபாகு போர்க்கப்பலைப் பார்வையிட்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர், இலங்கையை அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாய பங்காளர் எனக் குறிப்பிட்டிருந்தார். இலங்கையை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அமெரிக்கா பார்க்கிறது. இலங்கையை, அரசியல், வர்த்தக ரீதியான நட்புறவு மையமாக கையாளுவதை விட, பாதுகாப்பு ரீதியாக ஒரு கேந்திரமாகவே அமெரிக்கா கையாளுகிறது.

ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் காலத்தில், இலங்கையில் – குறிப்பாக திருகோணமலையில், அமெரிக்கா தனது படைத் தளத்தை அமைக்கக் கூடும் என்ற ஊகங்கள் நிலவின. அதன் அடிப்படையிலேயே- அமெரிக்காவின் நகர்வுகளை முறியடிக்கும் நோக்கிலேயே, இந்தியா பல தீர்மானங்களை எடுத்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம், இந்தியப்படைகளின் வருகை என்பன அதனை மையப்படுத்தியவை தான். ஆனால், அமெரிக்காவுக்கு அப்படி ஒரு எண்ணமே இருக்கவில்லை என்பது, பின்னரே உறுதியானது. இப்போது இந்தியாவும் அமெரிக்காவும் நெருக்கமான நட்பு நாடுகளாக இருக்கின்ற போதும், இலங்கையை தன் பாதுகாப்பு தேவைகளுக்காக பயன்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இலங்கை முக்கியமானது என்று ஜெனரல் ஷ்னைடர் குறிப்பிட்டிருக்கிறார். அவர், தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாதுகாப்பு தலைவர்கள் மற்றும் மூலோபாய சிந்தனையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலில், நவீன போர் முறைகள் நாடுகளில் எல்லைகளுடன் நின்று விடுவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். மாறிவரும் நவீன போர் முறைகளின் தன்மை இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை மறு வடிவமைக்கும் சமச்சீரற்ற சவால்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அவர் கலந்துரையாடியிருக்கிறார்.

அதேவேளை, கஜபாகு கப்பலில் இலங்கையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர், "உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் சிலவற்றின் மீது இலங்கை அமைந்துள்ளது. இலங்கையின் கடற்பரப்பு பாதுகாப்பாக இருக்கும்போது, அந்தப் பாதைகள் திறந்தே இருக்கும், வர்த்தகம் தடையின்றி நடைபெறும், இந்தியப் பெருங்கடல் செழிப்புக்கான நெடுஞ்சாலையாகத் திகழும். இது அமெரிக்காவிற்கு நேரடியாக முக்கியத்துவம் வாய்ந்தது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையை, அமெரிக்கா தனது பாதுகாப்பு திட்டத்தின் ஓர் அங்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டு வருகிறது. ஒரேடியாக தளத்தை அமைக்கவோ அல்லது பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளவோ இல்லை. மாறாக கடற்படைக் கப்பல்களின் வருகைகள், கூட்டுப் பயிற்சிகள், பாதுகாப்பு ஒத்துழைப்புகள், இராணுவத் தளபதிகளின் பயணங்கள் மற்றும் ஏனைய எல்லாவிதமான பாதுகாப்பு உதவிகள், ஒத்துழைப்புகளின் ஊடாகவும், இலங்கையில் அதன் செல்வாக்கை உயர்த்திக் கொண்டிருக்கிறது. இது ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் இறுக்கமான கட்டுக்குள் இலங்கையை கொண்டு வந்து விடும். இலங்கை தெரிந்தோ தெரியாமலோ இதற்குள் சிக்கிக் கொண்டு வருகிறது. இந்த நிலை இலங்கையின் நடுநிலையான வெளியுறவுக் கொள்கை அல்லது அணிசேரா கொள்கைக்கு நிச்சயம் கடுமையான சவாலாக இருக்கும். அதனை இலங்கை அண்மைய ஈரான்-அமெரிக்க போரின் போதும் அனுபவரீதியாக உணர்ந்திருந்தது. எதிர்காலத்தில் அத்தகைய கடினமான சூழல்கள் விரிவடையும் சாத்தியங்களை மறுக்க முடியாது.

Post a Comment

0 Comments