பொருளாதார மீட்சி யாருக்காக?
பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடைசித் தவணை கொடுப்பனவை இலங்கை கடந்த வாரம் பெற்றிருந்த போதும், அரசாங்கம் கூறியது போல உள்நாட்டு நாணயப் பெறுமதி வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை. கடந்த வாரத்துக்கு முந்திய வாரம் திடீரென அமெரிக்க டொலரின் மதிப்பு 354 ரூபாவை தொட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கடுமையாக போராடி, உள்நாட்டு நிதி அமைப்புகளுக்கு நெருக்கடிகளை கொடுத்து, டொலரின் மதிப்பை 330 ரூபாவுக்குள் கொண்டு வந்தது.
மே 27ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் 650 மில்லியன் டொலர் நிதியும், உலக வங்கியின் 200 மில்லியன் டொலர் நிதியும் கிடைத்ததும், அமெரிக்க டொலரின் மதிப்பு நிலையாக பேணப்படும் என்றும் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் இழுத்துப் பிடித்து கீழே இறக்கிக் கொண்டு வந்துவிட்ட அமெரிக்க டொலரின் மதிப்பை தொடர்ந்து அந்த நிலையில் தக்க வைக்க முடியவில்லை. முன்னர் சடுதியாக வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இது தான் வித்தியாசமே தவிர, பெறுமதி வீழ்ச்சி என்ற நிலை மாறவில்லை. கடந்த ஜூன் 4ஆம் திகதி 340 ரூபாவைத் தொட்டுவிட்ட அமெரிக்க டொலரின் மதிப்பு, வரும் நாட்களில் மேலும் உயர்வதற்கான சமிக்ஞைகளே தென்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க — டொலர் மதிப்பு நிலைப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதியுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளித்துள்ளார். (படம்: Ada Derana)
சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்ததை காரணம் காட்டி, இந்த நெருக்கடி தம்மால் உருவாக்கப்பட்டதல்ல என்று நிரூபிக்க அரசாங்கம் முற்படுகிறது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை அதிகரிப்பு முக்கியமான ஒரு பொருளாதார பிரச்சினையாக இருந்தாலும், அதனைத் தாண்டி இலங்கையின் பொருளாதார கையாளுகையும் திருப்திகரமானதாக இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் தூரநோக்குடன் பணியாற்றவில்லை, பணியாற்றக் கூடிய நிலையில் இருக்கவும் இல்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்போது அரசாங்கத்தின் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு முற்று முழுதாக அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல. அரசாங்கத்தின் மீது தவறுகள் இருப்பதன் விளைவாகவே இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பொருளாதார விடயங்களை கையாளும் போது ஒரு பக்கம் நாட்டு மக்களின் நிலைமைகளையும், இன்னொரு பக்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கடிவாளத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் வகுத்த நிபந்தனைகளுக்கு அமையவே அரசாங்கத்தினால் செயற்படக் கூடிய சூழல் உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி சர்வதேச நாணய நிதியத்தினால் 2.4 பில்லியன் டொலர் கடனுதவி வழங்கி முடிக்கப்பட்டு விட்டது. இதுவரை வழங்கப்பட்ட கடனைக் கொண்டு பொருளாதாரத்தை மீட்டெடுத்து கடனை திருப்பிச் செலுத்தக் கூடிய நிலைக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கை தயாராக வேண்டும். ஆனால் முன்னோக்கிச் சென்ற இலங்கையின் பொருளாதார நகர்வு இப்போது பின்னோக்கியதாக செல்கிறது.
சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை கொடுக்கிறது. எரிபொருள் விலைகளை உயர்த்துமாறு, கொள்வனவுக்கு ஏற்ப மானியங்கள் இன்றி அதனை விற்பனை செய்யுமாறும் அழுத்தம் கொடுக்கிறது. இன்னொரு பக்கம் மின்சாரத்தின் விலையை உற்பத்திப் பெறுமானத்துக்கு இணையானதாக தீர்மானிக்குமாறும் வற்புறுத்தியிருக்கிறது. மின்சாரம் மற்றும் எரிபொருளை செலவினங்களுக்கு இணையாக விற்பனை செய்கின்ற நடைமுறையை தொடங்குமாறு சர்வதேச நாணய நிதியம் கொடுத்த அழுத்தத்திற்கு அரசாங்கம் இணங்கியிருக்கிறது. அரசாங்கம் அறிவித்த 100 மில்லியன் ரூபா மானியங்கள் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிடும் என்றும், அதற்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பின்பற்றுவதாகவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஆனால் அதற்குள் மானியங்களை முடித்துவிட்டு மானியங்கள் இல்லாத சூழலுக்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி — மானியங்கள் நீக்கப்பட்டால் எரிபொருள் விலை மேலும் உயர்ந்து மக்களின் பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும். (படம்: Ada Derana)
எரிபொருளுக்கான மானியம் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வந்தால், அதற்குப் பின்னர் எந்த மானியமும் இல்லாமல் கொள்வனவு விலைக்கு ஏற்ப அரசாங்கம் சில்லறை விலைக்கு அதனை விற்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போதே எரிபொருள் விலையை தாங்கிக்கொள்ள முடியாதிருக்கும் மக்களுக்கு அது இன்னும் அழுத்தங்களை கொடுக்கும். அதைப்பற்றி சர்வதேச நாணய நிதியம் அக்கறைப்படவில்லை. அரசாங்கமும் அதுபற்றி அக்கறைப்படாமல் தான் அந்த நிபந்தனைக்கு இணங்குவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும், மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்து மூலம் உறுதியளித்துள்ளனர். செப்டம்பர் மாதத்திற்கு பின்னரான பொருளாதார சூழல் எந்தளவுக்கு பின்னோக்கிச் செல்லும் என்பதற்கான ஒரு குறிகாட்டியாக இது அமைந்துள்ளது.
நாளுக்கு நாள் பொருளாதார நிலை மோசமடைந்து வரும் சூழலில் அரசாங்கம் முற்று முழுதாக மானியங்களில் இருந்து விலகிக்கொள்ளும் போது, பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள மக்கள் இன்னும் பின்னோக்கித் தள்ளப்படும் நிலை ஏற்படும். இது அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியை உருவாக்கும். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கியது. ஆனால் பொருளாதார ரீதியாக மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கிய போது அவ்வப்போது மானியங்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போதைய அரசாங்கம் அதற்கான வழியை சுருக்கியிருக்கிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் தான் டொலர் வெளியேற்றம் அதிகரித்து நாணய மதிப்பு வீழ்ச்சியடைகிறது என அரசாங்கம் கூறுகின்ற காரணத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அடுத்த மாதம் எரிபொருள் கொள்வனவு செலவு 186 மில்லியன் டொலராக குறையும் என இப்போது அரசாங்கம் கூறியிருக்கிறது. அவ்வாறாயின் டொலர் வெளியேற்றம் குறைந்து உள்நாட்டு நாணயப் பெறுமதி அதிகரிக்க வேண்டும். அவ்வாறு அதிகரிக்காவிட்டால் அரசாங்கம் எரிபொருள் கொள்வனவினால் தான் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஏற்படுகிறது எனக் கூறிய காரணம் பொருத்தமற்றது என்று உறுதியாகிவிடும்.
இப்போதைய சூழலில் எரிபொருள் செலவை மட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் வாகனங்களில் இறக்குமதியை அதிகரித்துவிட்டு, அதன் மூலம் கூடுதல் வருவாயை பெறுவதற்கான வழிகளை திறந்துவிட்டு, எரிபொருள் செலவின் அளவை குறைக்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். 2020 ஆம் ஆண்டு இருந்த வாகனங்களின் அளவைவிட தற்போதுள்ள வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அந்த அதிகரிப்புக்கு ஈடாக எரிபொருள் பயன்பாடும் அதிகரிக்கும். எனவே எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது என்பது சாதாரண விடயமாக இருக்காது. எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதன் ஊடாக மாத்திரமே அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை தடுக்க முடியும் என அரசாங்கம் கூறினாலும் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
அரசாங்கம் பொருளாதார முறைமையை கையாளும் விடயத்தில் பல்வேறு குறைபாடுகளும் குழப்பங்களும் நீடிக்கின்றன. இதனால் தான் உள்நாட்டு நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து செல்கிறது. பொருளாதாரத்தை முறைப்படுத்துவதில் அரசாங்கத்துக்கு உள்ள பொறுப்பு சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை. அந்தப் பொறுப்பை அரசாங்கம் சரியான முறையில் கையாள முயற்சிக்காதவரையில் இந்த நெருக்கடி தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது. சர்வதேச நாணய நிதியம் இது பற்றி சுட்டிக்காட்டுகிறதோ இல்லையோ, எரிபொருள் விலை அதிகரிப்பு, மின்கட்டண அதிகரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கிறது. அது நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முனைகிறதோ இல்லையோ, மக்களின் மீதான அழுத்தங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று தெரிகிறது.
0 Comments