சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
கடந்த ஒரு மாத காலத்துக்குள் இலங்கைப் படைகளுக்கு பல்வேறு நாடுகளிடம் இருந்து வான்கலன்கள், கடற்கலன், வாகனங்கள் கொடையாக கிடைத்திருக்கின்றன. அண்மையில், கடலோரக் காவல்படைக்கு ஆஸ்திரேலியா 12 கண்காணிப்பு ட்ரோன்களை கொடையாக வழங்கியிருந்தது. மிரிஸ்ஸவில் உள்ள கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆஸ்திரேலிய கடல் எல்லைக் கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் பிரட் சோன்டர், இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் றியர் அட்மிரல் ரொஹான் ஜோசப்பிடம் இவற்றைக் கையளித்திருந்தார். இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த ட்ரோன்களை ஆஸ்திரேலியா கொடையாக வழங்கியது.
அதேவேளை, அமெரிக்கக் கடலோரக் காவல்படையினால், இலங்கை கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான 'டெசிசிவ்' (DECISIVE), கடந்த ஜூன் 4ஆம் திகதி மாலை கொழும்பு துறைமுகத்தில் நடந்த நிகழ்வில் இலங்கை கடற்படையில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. பி-628 எனத் தொடரிலக்கமிடப்பட்ட இந்த ரோந்துக் கப்பலுக்கு என்எல்என்எஸ் சமுத்ரவிஜய எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் அதிகாரபூர்வமாக கடற்படையுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
முன்னதாக இந்தக் கப்பல் அமெரிக்காவில் இருந்து 78 நாட்கள் பயணத்திற்குப் பின்னர் திருகோணமலையை வந்தடைந்திருந்தது. அமெரிக்காவினால் இலங்கை கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்ட இந்தக் கப்பல், கடந்த ஆண்டு டிசம்பர் 02ஆம் திகதி, பால்டிமோரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி இலங்கை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய இந்தக் கப்பல், சுமார் 14,775 கடல் மைல் தூரத்தைக் கடந்து திருகோணமலை கடற்படைத் தளத்தை அடைந்தது. இந்தப் பயணம் இலங்கைக் கடற்படைக் கப்பல் ஒன்று மேற்கொண்ட மிக நீண்ட கடல் பயணமாகும். சமுத்ரவிஜய கப்பல் 64 மீற்றர் நீளமும், 100 பணியாளர்களுடன் 6000 கடல் மைல்கள் வரை பயணம் செய்யும் திறனும் கொண்டது.
என்எல்என்எஸ் சமுத்ரவிஜய — அமெரிக்காவிடம் இருந்து கொடையாக பெறப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல்; கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. (படம்: இலங்கை கடற்படை)
அதேவேளை அண்மையில், வடக்கு மாகாணத்தில் பொலிசாரின் பயன்பாட்டிற்காக இந்தியா 134 கப் வாகனங்களை கொடையாக வழங்கியுள்ளது. இந்திய-இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ், இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த வாகனங்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மே 25ஆம் திகதி காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் இந்த வாகனங்கள், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவினால் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. இந்த வாகனங்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை அடுத்து இந்த மாதம் அமெரிக்க கடற்படையினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட பத்து TH-57 'சீ ரேஞ்சர்' பலநோக்கு ஹெலிகொப்டர்கள் கொழும்பை வந்தடைந்துள்ளன. கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த ஹெலிகொப்டர்களை இரத்மலானவில் உள்ள விமானப்படைத் தளத்தில் ஒருங்கிணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒருங்கிணைப்புப் பணிகள் முடிந்ததும், தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்த பின்னர், விமானப்படையில் சேர்க்கப்பட்டு வழக்கமான பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்த ஹெலிகொப்டர்கள் முதன்மையாக விமானிகளுக்கான பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு மீட்பு நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் விமானப்படையால் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. இலங்கை விமானப்படைக்கு ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையான ஹெலிகொப்டர்கள் வந்திறங்கிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். போர் நடந்த காலங்களில் கூட இவ்வாறு பெருமளவிலான ஹெலிக்கள், விமானங்கள் ஒரே நேரத்தில் வந்து இறங்கியதில்லை.
TH-57 'சீ ரேஞ்சர்' ஹெலிகொப்டர்கள் — அமெரிக்காவிடம் இருந்து இலங்கை விமானப்படைக்கு கொடையாக வழங்கப்பட்ட பத்து ஹெலிகொப்டர்கள்; ஒரே நேரத்தில் இவ்வளவு ஹெலிக்கள் வந்திறங்கியது இதுவே முதல் முறை. (படம்: இலங்கை விமானப்படை)
அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த ஹெலிகொப்டர்களும் கப்பலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை. மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவை இலங்கைப் படையினருக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா வழங்கிய ட்ரோன்கள் புத்தம் புதியவை; கடற்பிரதேசத்தை கண்காணிப்பதற்கு உதவக் கூடியவை. இந்தியா வழங்கிய வாகனங்கள் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நோக்கத்தை கொண்டது.
இவை அனைத்தும் வழங்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவது மாத்திரமல்ல. அவற்றுக்கு அப்பால் இலங்கையின் பாதுகாப்பு, இலங்கையை சுற்றியுள்ள கடற்பிரதேசத்தின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் திறன்களை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்த நோக்கம் இவற்றை வழங்கிய அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் மாத்திரமன்றி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கைக் கடற்படைக்கு போர்க்கப்பல் அல்லது ரோந்துப் படகுகளை வழங்கியிருக்கின்றன. ஜப்பான் கண்காணிப்பு ட்ரோன்களை வழங்குவதற்கும் முன்வந்திருக்கிறது.
இலங்கையின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே இவை வழங்கப்பட்டன என்பதே முக்கியமானது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பில் இலங்கை தீர்க்கமான பங்கை வகிக்க வேண்டும் என இந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன. இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நாடுகள் விரும்புகின்றனவோ இல்லையோ, இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்புகின்றன. இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் ஊடாக தமது பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கின்றன.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில், இறுதிக்கட்டப் போருக்கு பின்னர் இலங்கையில் இருந்து அடுத்தடுத்து படையெடுத்த அகதிகள் படகுகளால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. அந்த பிரச்சினையை சமாளிப்பதற்கு இலங்கை கடற்படையுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைத் தாண்டி, ஆஸ்திரேலியா இந்த விவகாரத்தில் தமது நலனை மட்டும் மையப்படுத்தி இலங்கை கடற்படையுடன் இணைந்து செயற்பட்டது. அந்த பாதுகாப்பு வேலியை தொடர்ந்து பேணுவதற்காக இலங்கை கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை போன்றவற்றுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுத்து வருகிறது.
ஆஸ்திரேலியா கண்காணிக்க வேண்டிய கடற்பகுதி மிகப் பெரியது. இலங்கையுடனான எல்லையை கொண்டிராவிடினும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கிட்டத்தட்ட 5500 கிலோமீற்றர் பரந்து விரிந்த கடற்பரப்பை கண்காணிக்க வேண்டிய தேவை அதற்கு உள்ளது. இந்தப் பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பை மேற்கொள்வதை விட இலங்கை கடற்படைக்கு உதவுவதன் மூலமோ, இலங்கையின் கடலோர காவல் படையை வலுப்படுத்துவதன் மூலமோ குறைந்த செலவுடன் தனது இலக்கை எட்ட முடியும். அதனை இன்னமும் இலகுபடுத்துவதற்காகவே ட்ரோன்களை வழங்கியிருக்கிறது. இந்த ட்ரோன்களுக்கு அதிக செலவு ஏற்படாது; குறைந்த மனித வளத்துடன் இதனை இயக்கவும் கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும். பாரிய கப்பல்களின் மூலமான தேடுதல்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை மீதப்படுத்தவும், ஏனைய வளங்களின் இழப்புகளை தவிர்க்கவும் முடியும். ட்ரோன்களை இலகுவாக கையாளக் கூடியதாகவும் இருக்கும். இதனால் தான் இவற்றை இலங்கைக்கு கொடையாக வழங்கியிருக்கிறது.
அதேவேளை அமெரிக்காவின் இலக்கு சற்று வித்தியாசமானது. அது இந்தியப் பெருங்கடலில் சர்வதேச கப்பல் பாதையின் பாதுகாப்பை இலங்கையின் ஊடாக உறுதிப்படுத்த விரும்புகிறது. இலங்கைக்கு தெற்காக 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள சர்வதேச கப்பல் பாதை மற்றும் சர்வதேச கடற்பரப்பைக் கண்காணிக்க கூடிய வகையில் இலங்கை கடற்படையைத் தயார்படுத்தி வந்திருக்கிறது. இதற்காக இதுவரையில் சமுத்ர, கஜபாகு, விஜயபாகு, சமுத்ரவிஜய என நான்கு ரோந்துக் கப்பல்களை கொடுத்துள்ளது. அதேபோல அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் படைப்பிரிவுகளில் சேவையாற்றிய பின்னர் சேவையில் இருந்து அகற்றப்பட்ட பெல் 206 வகையைச் சேர்ந்த பத்து ரிஎச்-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களையும் அமெரிக்கா வழங்கியுள்ளது. இவையும் கடல்சார் கண்காணிப்பு, மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடியவை. இவை செலவுமிக்க கண்காணிப்பு வசதிகளாக இருந்தாலும் இலங்கை விமானப்படை தனது வான்கலன்களின் பலத்தை இழந்து கொண்டிருந்த சூழலில் இவற்றின் வருகை முக்கியமானது.
இவ்வாறான கொடைகளின் ஊடாக இலங்கையை தங்கள் கைக்குள் வைத்திருப்பதற்கு அமெரிக்கா முற்படுகிறது. இன்னொரு பக்கத்தில் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களின் தேவைகளுக்காக 130 வாகனங்களை இந்தியா வழங்கியிருக்கிறது. இலங்கையில் கடலில் மாத்திரமன்றி உள்நாட்டிலும் பாதுகாப்பான சூழல் இருப்பது இந்தியாவுக்கு முக்கியமானது. இலங்கையின் பாதுகாப்பு சூழலில் பாதிப்பு ஏற்பட்டால் அது இந்தியாவிலும் எதிரொலிக்கும். இது கடந்த காலத்தில் உறுதியான ஒரு விடயம். எனவே போர் ஆயுதங்களை வழங்காமல் இவ்வாறான வாகனங்களை வழங்குவதன் ஊடாக பாதுகாப்பு சூழலை பலப்படுத்த இந்தியா முற்பட்டுள்ளது.
இவை அனைத்தும் இலங்கையின் படைகளை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட கொடைகள் அல்ல. இது திரும்பத் திரும்ப நினைவில் வைக்க வேண்டிய விடயம். இலங்கையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் ஊடாக தங்களின் பாதுகாப்பையும் தங்களுக்கு ஏற்ற சூழலை நிலைப்படுத்திக் கொள்வதற்குமே இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் தேவையை இலங்கை நிறைவேற்றிக் கொள்ளும் வரையில் இது போன்ற உதவிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதனை இலங்கை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்.
0 Comments