elugai

ஒரு பாடலுக்குள் பயங்கரவாதமா? கிளிநொச்சி பாடகர் சங்கீதன் கைதுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி!

இறுக்கப்படும் கடிவாளம்

இறுக்கப்படும் கடிவாளம்

கட்டுரையாளர் - கபில்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தமிழ் மக்கள் பலர் தாங்கள் அதிகம் சுதந்திரமான ஒரு சூழலுக்குள் வந்துவிட்டதாக நம்பியிருந்தனர். ஆனால் அந்த வெளி வரையறையற்றதல்ல, குறுகிய எல்லை வேலிகளைக் கொண்டது என்பது அவர்களுக்கு இப்போது தெளிவாகி வருகிறது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு இந்த ஆபத்தை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியிருந்தது. இப்போது நடந்துகொண்டிருக்கும் பல சம்பவங்கள் தமிழ் மக்கள் எந்த வகையான திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

இப்போது வடக்கில் சைவ ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்ற காலம். இந்த திருவிழாக்களில் இசை நிகழ்ச்சிகள் பரவலாக இடம்பெறுகின்றன; பக்தி பாடல்கள், திரையிசை பாடல்களுடன் உள்ளூரில் மெட்டமைக்கப்பட்ட எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்படுகின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்துக்கு பின்னர் இசை நிகழ்ச்சிகளில் எழுச்சிப் பாடல்கள் சில திருத்தங்களுடனும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. பல எழுச்சிப் பாடல்கள் பொதுவான மக்களின் வாழ்வியலை சித்தரிப்பனவாகவும் இருக்கின்றன; சில பாடல்களில் இருக்கக்கூடிய சொற்கள் நீக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டும் பாடப்படுகின்றன. இந்தப் பாடல்கள் மக்கள் மத்தியில் நீக்கமற நிறைந்திருக்கின்றன; அவர்கள் அதனை விரும்பிக் கேட்கிறார்கள், உணர்வுபூர்வமாக இரசிக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் விரும்பி அத்தகைய பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் பாடுமாறு கேட்கிறார்கள்.

இது இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. அண்மையில் உரும்பிராயில் இடம்பெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் "வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம், கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்" என்ற பாடல் இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது கோப்பாய் பொலிசார் அதனை தடுத்து நிறுத்தினர். அந்தப் பாடல் பாடக்கூடாது என அவர்கள் எச்சரித்தனர். போர்க்காலத்தில் மீனவர் ஒருவர் தன் வாழ்வியல் சிக்கலை வெளிப்படுத்தும், தான் எதிர்கொள்ளும் ஆபத்தையும் அவலத்தையும் எடுத்துக்கூறும் அந்தப் பாடலில் பொய்யான வரிகள் இடம்பெறவில்லை. ஆனாலும் அந்தப் பாடல் தடுக்கப்பட்டது; அதன் தொடர்ச்சியாக விசாரணைகளும் நடத்தப்பட்டன. இதற்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்ற கலைஞர்களின் சங்கம் மூலம் இத்தகைய பாடல்களை பாடக்கூடாது என பொலிஸ் தரப்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தடை இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாடகர் சங்கீதன் கைது பயங்கரவாத தடைச்சட்டம் கிளிநொச்சி கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகர் சங்கீதன் — சமூக ஊடகத்தில் எழுச்சிப் பாடல் பதிவிட்டதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சூழலில் நாவற்குழியில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் தான் பாடிய பாடலை எழுச்சிப் பாடலுடன் சேர்த்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த சங்கீதன் என்ற பாடகர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முற்பட்டார் என அவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பாடகர் விடுதலைப் புலிகளை மீளுருவாக்குவதற்கு என்ன செய்தார்? வெறுமனே ஒரு பாடலை பாடினார். அந்தப் பாடலில் விடுதலைப் புலிகள் பற்றியோ அதன் தலைவர் பற்றியோ எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. அதில் ஒரு இடத்தில் தமிழீழம் என்ற வார்த்தை வந்ததாக நீதிமன்றத்தில் பொலிசார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். தமிழீழம் என்பது தடை செய்யப்பட்டதல்ல என்றும், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகள் இன்னமும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கிக்கொண்டிருப்பதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி சட்டத்தரணி சயந்தன் வாதிட்டிருக்கிறார்.

என்னதான் உண்மை ஒரு விதமாக இருந்தாலும் இதனை ஒரு பயங்கரவாதமாக விம்பப்படுத்துகின்ற போக்கு தெற்கில் பலரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு எதையும் வழங்கவில்லை, வழங்கப் போவதுமில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தை அது அங்கீகரிக்கவோ மகிமைப்படுத்தவோ தயாராகவும் இல்லை. ஏனென்றால் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்த ஒரு அமைப்பு தான் ஜேவிபி; அதன் அரசாங்கம் தமிழ் மக்களின் கடந்தகால ஆயுதப் போராட்டத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்ப்பதற்கில்லை. அதேவேளை தற்போதைய அரசாங்கம் வடக்கில் பயங்கரவாதத்திற்கு துணைபோவதாக காட்டிக்கொள்வதற்கு முற்படும் சக்திகள், மீண்டும் விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க முயற்சிகள் நடப்பதாக பிரசாரம் செய்கின்றனர். அதன் விளைவு தான் இது.

இது தெற்கில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்களினால் உருவாகியுள்ள பிரச்சினை மட்டுமல்ல; அரசாங்கமும் இந்த விடயத்தில் தெளிவான நோக்கத்தில் இல்லை. ஒரு பக்கம் கடிவாளத்தை இலகுபடுத்திவிட்டாலும் மற்றொரு கட்டத்தில் இழுத்துப் பிடிக்கும் நிலையிலேயே இருந்துவந்தது; இப்போது இழுத்துப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தான் தமிழ் மக்கள் பலருக்கு தாங்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறோம் என்ற உண்மையை உணரச் செய்திருக்கிறது. தமிழ் மக்கள் இப்போது தங்களின் உரிமைகளைப் பற்றி பேசக்கூடிய நிலையில் இல்லை, தங்களுக்கான அரசியல் தீர்வு பற்றி போராடும் நிலையில் இல்லை. அவர்கள் காலத்துக்கு காலம் இவ்வாறாக எழுகின்ற ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை, தையிட்டி என்று அவ்வப்போது பிரச்சினைகள் மாறிக்கொண்டிருக்கின்றன; இப்போது பாடல் பிரச்சினை வந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்க கோரி போராடும் நிலை வந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் தடுத்து வைக்கப்பட்ட புத்தகங்கள் விடுவிக்கப்படவில்லை; அந்தப் போராட்டங்களும் தொடரவில்லை. பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டிருந்தாலும் அவற்றுக்கான தீர்வுகள் எட்டப்படாமலேயே அடுத்தடுத்த பிரச்சினைகள் உருவாகின்றன, உருவாக்கப்படுகின்றன.

தமிழ் மக்கள் போராட்டம் பாடகர் விடுதலை வடக்கு இலங்கை வடக்கு இலங்கையில் போராட்டம் — பாடகர் சங்கீதனை விடுவிக்கக் கோரி மக்கள் தெருவில் இறங்கியிருக்கின்றனர்; தமிழ் மக்கள் ஒவ்வொரு பிரச்சினைக்காகவும் தனித்தனியாக போராட நிர்பந்திக்கப்படுகின்றனர். (படம்: Tamil Guardian)

பாடகர் சங்கீதனை விடுக்கக் கோரி போராட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அவர் விடுவிக்கப்படலாம் அல்லது அவரது விளக்கமறியல் நீடிக்கப்படலாம். ஆனால் இந்தப் பாட்டுப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படுமா என்று தெரியவில்லை. இது போன்ற பிரச்சினைகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன; அவர்களின் நிரந்தரமான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலிருந்து அவர்களை விலக்கி வைக்க முயற்சிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் அவர்களை அடக்கி ஆளுவதற்கும் அவர்களின் கருத்து சுதந்திரத்தையும் விருப்பங்களையும் நசுக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படித்தான் இப்போது பாடலுக்கான தடை வந்திருக்கிறது.

தமிழ் மக்களின் கலை வடிவங்களை கூட சிங்கள பௌத்த பேரினவாதம் நசுக்க முற்படுகிறது. தீபச்செல்வனின் நூல்கள் தடுக்கப்பட்டதும், பாடல்கள் மீது விதிக்கப்படும் தடைகளும் அதனையே உணர்த்துகின்றன. சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்கள் எந்த வகையிலாவது தங்களின் உணர்வுகளை, உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இதனைச் செய்வதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் தன் கையில் வைத்திருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டம் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களின் கையில் இருக்கும் வரையில் தமிழ் மக்கள் எதற்கும் அஞ்சுகின்ற நிலையிலேயே இருக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் அதன் மூலம் எதையும் பயங்கரவாதமாக மாற்ற முடியும்; எந்த அமைதிவழி நிகழ்வையும் பயங்கரவாதமாக அர்த்தப்படுத்தவும் அடையாளப்படுத்தவும் இந்தச்சட்டம் உதவும்.

சட்ட அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு தமிழர்களை அடக்க முற்படுகிறது தற்போதைய அரசாங்கம். முன்னைய ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு தங்களின் அதிகார பலத்தைப் பயன்படுத்தினார்கள்; இப்போதைய ஆட்சியாளர்கள் சட்டத்தை தங்களின் அதிகாரமாக மாற்றுகிறார்கள். இதுதான் இருவருக்கும் இடையிலான வித்தியாசம். தமிழ் மக்களை அடக்குவதில் மட்டும் அவர்கள் ஒரே இலக்கில் செயற்படுகிறார்கள்; எந்த ஆட்சி மாறினாலும் இந்த நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ் மக்கள் மீதான இவ்வாறான அழுத்தங்கள் எதிர் விளைவுகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது. பாடல்கள் விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 17 ஆண்டுகளாக இந்தப் பாடல்கள் மக்களின் நினைவில் இருந்தன; இப்போதும் நினைவில் இருக்கின்றன. ஆனால் இந்தப் பாடல்கள் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கவில்லை. இப்போது இதனைப் பாடுவதை விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சி என்று அர்த்தப்படுத்துவது அபத்தமானது. 1965இல் வெளியான எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்ற "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்" என்ற பொதுவான பாடலை 1980களின் தொடக்கத்தில் ஜே.ஆர். அரசாங்கம் வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்தது. அது உரிமைக் குரல் எழுப்பும் பாடல் என்பது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கேப்டன் பண்டிதருக்கு மிகவும் பிடித்தமான பாடல் என்பதால் தான் அந்தத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடையினால் விடுதலைப் புலிகளின் எழுச்சியைத் தடுக்க முடியவில்லை. எழுச்சிப் பாடல்களை பாடுவதன் மூலம் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முனைவதாக கூறுவது எந்தளவு தவறோ, அதனை தடுப்பதன் மூலம் மீளுருவாக்க முயற்சிகளை தடுத்துவிடலாம் என்று நினைப்பதும் தவறான அனுமானமாகவே இருக்கும்.

Post a Comment

0 Comments