elugai

அன்று தேவதாசன், இன்று சுரேஷ் சாலே: ஒரே பயங்கரவாத தடைச்சட்டமும் தலைகீழாக மாறிய காலமும்!

ஒரே சட்டமும் இரண்டு கைதிகளும்

ஒரே சட்டமும் இரண்டு கைதிகளும்

கட்டுரையாளர் - என்.கண்ணன்

கடந்த ஜூன் 9 ஆம் திகதி, முன்னாள் அரசியல் கைதியான, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர், கனகசபை தேவதாசன், முகநூலில் தன் அனுபவத்தைப் பதிவிட்டிருந்தார். "2008 ஜூன் மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் வெள்ளைவான் மூலம் நான் கடத்தப்பட்டு இரகசிய இடமொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டேன். நான்கு நாள் கழித்து, ஜூன் 18 இல் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவர் என்னை வந்து சந்தித்தார். இரத்த வாடை கலந்து துர்நாற்றம் வீசும் உடையுடன் தரையில் இருந்த என்னை கதிரையில் இருக்கச் சொன்னார். வன்முறையற்ற வார்த்தைகளுடன் மிகவும் மென்மையாக ஒரு மணிநேரம் என்னுடன் உரையாடினார். இனவாதமற்ற இலங்கை பற்றியும் பேசினார். உரையாடலின் இறுதிக் கட்டம் வந்தது. அவர் சொன்னார்: 'என்னைக் கடத்திய செய்தி தொலைக்காட்சி ஊடகத்தில் வந்துவிட்டது. இனிமேல் என்னைச் சும்மா விட முடியாது. அதனால், தற்கொலை அங்கி தொடர்பான ஏதேனும் ஒரு சம்பவத்தைக் கூறிக் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால், உயிருடன் விடமுடியும். இல்லையென்றால் இன்றிரவு அவிசாவளையில் மதகு ஒன்றின் கீழ் உருத்தெரியாத சடலமாக்கி வீசிவிடுவார்கள். நம்மாட்கள் குடிபோதையில் அதற்குத் தயாராகிவிட்டனர். இன்னும் ஒரு மணிநேரம் தருகிறேன். நன்றாக யோசித்து முடிவைச் சொல்.' அந்த நாள்களில் உருத்தெரியாத சடலங்கள் அவிசாவளையில் வீசப்படுவது அடிக்கடி ஊடகச் செய்தியாக வந்ததை அப்பொழுது நான் அறிந்திருந்தேன்" என்பதுடன் அவரது அந்தப் பதிவு நிறைவடைகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே விவகாரம், ஊடகங்களிலும் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் அவரது இந்த பதிவு வெளியாகியுள்ளது. போர் நடந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அவர் கைது செய்யப்பட்டு, ஒரு ஆயுள் மற்றும் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில், 15 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த அவர், 2023ஆம் ஆண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டை முன்வைத்தே அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இப்போது அதே பயங்கரவாத தடைச் சட்டம், அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக இருந்த சுரேஷ் சாலேயை சிறைக்குள் அடைத்து வைத்திருக்கிறது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஈஸ்டர் ஞாயிறு விசாரணை கைது மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே — அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

அவர் தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக - தன்னைச் சுற்றி இருந்தவர்களை காப்பாற்றிக்கொள்வதற்காக- உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் வெளிநாட்டுப் பயண தடையை விதித்த பின்னர் தான், பலரும் பதற்றமடைய தொடங்கியிருக்கிறார்கள் எனக் கூறுகிறது அரசாங்கம். சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இப்போதுதான் அவர், தான் சித்திரவதை செய்யப்படுவதாக, மனிதாபிமானமின்றி நடத்தப்படுவதாக, கூறி போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். அவர் தற்கொலைக்கு முயற்சிக்கின்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என அவரது மனைவியும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்நோக்கத் தொடங்கியுள்ள சூழலில், இந்தக் குற்றச்சாட்டுக்கள் மேலெழத் தொடங்கியுள்ளன. அதுமாத்திரமன்றி, இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவர் சித்திரவதை செய்யப்பட்டாரா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, அவரையும், அவரைச் சுற்றியுள்ளவர்களையும் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று பரவலாக வலியுறுத்தப்படுகின்ற நிலையில், அந்தச் சட்டத்தை பயன்படுத்தி, கடந்த காலங்களில் பெரும் கொடுமைகளை இழைத்த அல்லது அதற்கு துணைபோன ஒருவர், இன்று அதே சட்டத்திற்கு பலிக்கடா ஆகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சுரேஷ் சாலே உண்ணாவிரதம் இருந்து, போராட்டங்களை முன்னெடுத்து விசாரணைகளில் இருந்து தப்பிக்க முனைகிறார் என அரசாங்க தரப்பு கூறுகிறது. இப்படிப் போராட்டங்களை நடத்துவதன் மூலம் விசாரணைகளை தடுத்துவிட முடியாது என்றும், விசாரணைகள் தடையின்றி தொடரும் என்றும், திட்டவட்டமாக கூறியிருக்கிறார் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால. சுரேஷ் சாலே அரச புலனாய்வுச் சேவையின் உயர்மட்ட தலைவராக இருந்தவர். இராணுவப் புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்தவர். அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். கடந்த காலங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களிடம் அவ்வாறான எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தவர். ஆனால் அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியிருக்கிறார். தனது ஐபோன், மற்றும் மடிகணனியின் கடவுச் சொற்களை வழங்க மறுக்கிறார் என்றும், அவற்றை ஆய்வு செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷ் சாலே புலனாய்வு பிரிவில் இருந்த காலகட்டத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர், தனது மடிகணினி, அலைபேசியின் கடவுச்சொற்களை வழங்க மறுத்திருந்தார், அவர்களை அவர் எப்படி கையாண்டிருப்பார்? அவ்வாறானவர்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கும்? முன்னாள் அரசியல் கைதி தேவதாசனின் முகநூல் பதிவில் இருந்தே அதனை புரிந்துகொள்ள முடியும். ஆனால், இப்போது, சுரேஷ் சாலே அதே சட்டத்தின் கீழ், அதே விசாரணைக் கட்டமைப்பின் கீழ், தாம் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது, ஒத்துழைக்க மறுக்கிறார். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அவரை புலனாய்வு அதிகாரிகள் எப்படி நடத்தினார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தாம் சித்திரவதை செய்யப்படுவதாக அவர் மனைவி, மகனிடமும், சட்டத்தரணியிடமும் அழுது புலம்பியிருக்கிறார். இதே போன்ற நிலை எத்தனையோ அரசியல் கைதிகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் அப்படி அழுது புலம்பக்கூடிய சுதந்திரம் கூட இருந்திருக்காது. ஏனென்றால் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சட்டத்தரணிகள், உறவினர்களின் கண்களில் காட்டப்படாமல் பலர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.

2010ஆம் ஆண்டு, தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு, சுரேஷ் சாலே தான் காரணம் என்றும், அவரே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதற்கான ஆலோசனைகளை வழங்கினார் என்றும், இதைவிட மோசமான இடத்தில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் நடத்தப்பட்டதாகவும், முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கூறியிருக்கிறார். வடக்கு கிழக்கில் ஒரு பக்கம் போர் நடந்துகொண்டிருக்க, கொழும்பிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற பெயரில், சுரேஷ் சாலே உள்ளிட்ட குழுவினர் எத்தகைய கொடூரங்களில் ஈடுபட்டார்கள் என்பதை பாதிக்கப்பட்ட சிலர் வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். அவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை, ஒரு சிலர் தான் தப்பி பிழைத்திருக்கிறார்கள். அவர்கள் கூறத் தொடங்கியுள்ள கதைகள் சுரேஷ் சாலே பற்றிய விம்பங்களையும் உடைக்க தொடங்கி இருக்கிறது. அந்த காலகட்டத்தில் போர்க்களத்திற்கு வெளியேயும், ஈவிரக்கமற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அவை அரசியல் நோக்கில் அல்லது பொருளாதார நோக்கில் இடம்பெற்றிருக்கின்றன என்பதை பல்வேறு சம்பவங்களும் விசாரணைகளும் வெளிக்காட்டுகின்றன.

இலங்கை நீதிமன்றம் ஈஸ்டர் ஞாயிறு விசாரணை இலங்கை நீதிமன்றம் — ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகளை எட்டியிருக்கும் சூழலில் சுரேஷ் சாலே வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த புலனாய்வு அதிகாரியாக இருந்த சுரேஷ் சாலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதற்கு விதித்த நிபந்தனைகள் நகைப்புக்கிடமானது. தாம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை மாற்ற வேண்டும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஷானி அபேசேகர தம்மை விசாரிப்பதில் இருந்து நீக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்திருக்கிறார். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படக்கூடியவையாக தெரியவில்லை. ஷானி அபேசேகர இந்த விசாரணைகளின் மிக முக்கியமான ஒருவர். அவரை அரசாங்கம் நம்புகிறது. அதற்கான உத்தரவாதங்களின் அடிப்படையில் தான் அவர் அரசாங்கத்துடன் இணைய முன்வந்திருந்தார். அதுமாத்திரமல்ல, தன் மீதான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவிலிருந்து மாற்ற வேண்டும் என்றும், ஷானி அபேசேகரவை நீக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் மனைவி மூலம் முறைப்பாடு செய்திருக்கிறார். இது பற்றி முடிவு எடுக்க வேண்டியவர் பொலிஸ் மா அதிபர் மாத்திரமே. அவரிடம் செல்லாமல், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சென்றிருப்பதும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பது. ஒரு காலத்தில் மனித உரிமைகளையோ, மனித உரிமைகள் ஆணைக்குழுக்களையோ மதிக்காதவர்கள் இன்று தங்களுக்கு நெருக்கடி வந்ததும் அதனிடம் புகலிடம் கோர முனைகிறார்கள்.

சுரேஷ் சாலே போன்று, மகசின் சிறையில் அரசியல் கைதியான தேவதாசன் ஒன்பது நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். அப்போது தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, மேன்முறையீடு செய்திருந்த அவர், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரியே உண்ணாவிரதம் மேற்கொண்டார். தேவதாசன், தனது வழக்கை தானே வாதாடினார். அவர் சிறைக்குள் இருந்துகொண்டு சாட்சியங்களை, சான்றுகளை தேட போதிய வசதிகள் இருக்கவில்லை. அதனால் தண்டனை தீர்ப்புக்குப் பின்னர், மேன்முறையீடு செய்த அவர், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்க சாட்சியங்களை திரட்டுவதற்காகவே பிணையில் விடுதலை செய்ய கோரி உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், கடைசி வரையில் அதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால், சுரேஷ் சாலே தன்னை விசாரிக்கும் அதிகாரியை மாற்றுமாறும், தடுத்து வைத்துள்ள இடத்தை மாற்றுமாறும் உண்ணாவிரதம் இருக்கிறார். பல பக்கங்களின் ஊடாக ஓடி திரிந்து, இந்த விசாரணை வளையத்திற்குள் இருந்து தப்பிக்கின்ற ஒரே நோக்கம் மாத்திரமே சுரேஷ் சாலேயிடம் இருப்பதாக தெரிகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள், உயர்மட்டத்தை எட்டியிருக்கின்ற சூழலிலேயே இந்தப் பரபரப்பான சூழல் உருவாகியிருக்கிறது. உயர்மட்ட சதி பற்றிய தகவல்கள் வெளிப்படுவதை தடுக்கும் உத்தியாகவே இது பரவலாக நோக்கப்படுகிறது. விசாரணைகள் எப்படி முடிவடையும், நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பளிக்கும் என்பதெல்லாம் காலப்போக்கில் தான் தெரியவரும். ஆனால், சில விடயங்களில் சிலர் அடைகின்ற பதற்றமும் பரபரப்பும், அவர்களுக்குள் ஏதோ இருக்கிறது என்ற சந்தேகத்தை பரவலாக தோற்றுவித்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.

Post a Comment

0 Comments