elugai

விடுதலைப் புலிகளின் ஒழுக்கத்தையும் போர் நுட்பத்தையும் இராணுவத் தளபதிகள் புகழ்ந்தால் அது குற்றமில்லை! ஆனால் ஒரு பாடகர் பாடினால் அது பயங்கரவாதமா?

எது பயங்கரவாதம்?

எது பயங்கரவாதம்?

கட்டுரையாளர் - கபில்

எழுச்சிப் பாடலை பாடியதற்காக சங்கீதன் என்ற பாடகர் கைது செய்யப்பட்டதும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் சுரேஷ் சாலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு என்பன, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சூடான வாதப் பிரதிவாதங்களுக்கு வழிவகுத்தது. இந்த இரண்டு பேரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர். சுரேஷ் சாலேக்கு முதலில் 90 நாட்களும், பின்னர் 90 நாட்களும் தடுப்பு காவல் உத்தரவு, பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை அடுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதும், பாடகர் சங்கீதனுக்கு தடுப்புக் காவல் உத்தரவு இன்னமும் பிறப்பிக்கப்படவில்லை, என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருக்கிறார்.

பயங்கரவாத தடைச் சட்டம் முற்று முழுதாக ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில், அரசாங்கம் தொடர்ந்தும் அதனைப் பயன்படுத்தி வருகிறது. முன்னர் ஒரு காலகட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், தற்போது பரவலாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு சூழல் காணப்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தாலும், அதற்கு மாற்றாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதிலும் உறுதியாக இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது சர்ச்சைக்குரியது. ஏனென்றால் அரசாங்கம் ஏற்கனவே பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு ஒன்றை முன்மொழிந்திருக்கிறது. அது பல ஆபத்தான பிரிவுகளைக் கொண்டிருப்பதாக சட்ட நிபுணர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், இந்த சட்டவரைவு, சர்வதேச தராதரங்களுக்கு இணங்கியிருக்கவில்லை என கூறியிருந்தன. ஆனால், அரசாங்கம் அதனை எப்படியாவது நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அந்த சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு, அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்தில் இருந்து அதனை புரிந்துகொள்ள முடிகிறது.

பாடகர் சங்கீதன் கைது பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றம் பாடகர் சங்கீதன் — எழுச்சிப் பாடல் பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது நாடாளுமன்றத்தில் சூடான விவாதத்துக்கு வழிவகுத்தது. (படம்: Tamil Guardian)

ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பாடகர் சங்கீதன் விவகாரத்தை முன்வைத்து உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்ற முறை தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். பாடகர் சங்கீதன் சாவகச்சேரி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டு பொலிசாரால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட தகவல்களின்படி, அவர் பாடல்களை பாடியதற்காக கைது செய்யப்படவில்லை. அதன் பொருள் காரணமாகவே கைது செய்யப்பட்டார் என்பது தெளிவாகியுள்ளது.

அந்த பாடல்கள் விடுதலைப் புலிகளை போற்றுவதாக அல்லது விடுதலைப் புலிகளின் தலைவரை போற்றுவதாக இருந்தால் கூட, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அது குற்றமல்ல என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விடயத்திற்கு உதவுவது அல்லது அதற்கு தூண்டுவதைத் தான், பயங்கரவாதச் செயலாக குற்றம்சாட்ட முடியுமே தவிர, ஒரு அமைப்பை புகழ்வது அல்லது போற்றுவது பயங்கரவாத செயல் அல்ல என்று அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இது ஒரு விவாதத்திற்குரிய விடயம் தான். ஏற்கனவே பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவிலும் இதுபோன்ற பல சிக்கலான விடயங்கள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பயங்கரவாதம் தொடர்பான தெளிவான வரையறை, தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்திலும் இல்லை, புதிதாக முன்மொழிக்கப்பட்டுள்ள சட்ட வரைவிலும் இல்லை. இது பரந்தபட்ட கைதுகளுக்கும் எழுந்தமானமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கும் வழிவகுத்திருக்கிறது. பயங்கரவாதம் என்பது என்ன என்பதற்கான திட்டவட்டமான வரையறை ஒன்று உருவாக்கப்படாத நிலையில், பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாத விடயங்களைக் கூட, அதனுடன் தொடர்புபடுத்தப்படுகின்ற நிலை காணப்படுகிறது. இதன் விளைவாகத் தான், பாடகர் சங்கீதனும் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் கூட இவ்வாறான ஏற்பாடுகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. இது பயங்கரவாதத்தை தூண்டுவதாக, பயங்கரவாதத்திற்கு துணைபோவதாக அல்லது அதனைப் போற்றுவதாக குற்றம்சாட்டி ஊடகத் துறையினர், கலைஞர்கள், எழுத்தாளர்கள் கைது செய்யப்படுகின்ற அல்லது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்ற கண்மூடித்தனமான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கக்கூடிய ஆபத்து உள்ளது. எனவே தான், இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறி இருக்கிறது.

அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தை அல்லது அதன் தலைமைத்துவத்தை புகழ்வது அல்லது போற்றுவது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்செயலா என்பது முக்கியமான கேள்வி. ஏனென்றால் விடுதலைப் புலிகளை, அதன் தலைவரை, சில தளபதிகளை இலங்கையின் இராணுவத் தளபதிகளே புகழ்ந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் செயலையோ, போராட்டத்தையோ அவர்கள் நியாயமானதாக குறிப்பிடவில்லை. ஆனால் அவர்களின் செயற்திறனை, ஒழுக்கத்தை, போர் நுட்பங்களைப் புகழ்ந்திருக்கிறார்கள். முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட பல இராணுவ தளபதிகளின் நூல்களில், கட்டுரைகளில், செவ்விகளில் இது வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றம் பயங்கரவாத தடைச்சட்டம் விவாதம் இலங்கை நாடாளுமன்றம் — பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாடு குறித்து உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த கேள்விகள் கடுமையான விவாதத்திற்கு வழிவகுத்தன. (படம்: Wikipedia)

விடுதலைப் புலிகளின் போராட்டம், தலைமைத்துவம், ஒழுக்கம் போன்றவை குறித்து அவர்கள் வெளியிட்ட புகழ்ச்சியான கருத்துக்கள், பயங்கரவாதத்தை தூண்டுவதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முற்படுவதாக குற்றம்சாட்டப்படவில்லை. விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதாக கருதப்படவில்லை. ஆனால் இதே கருத்தை முன்வைத்து, ஒரு பாடகர் தன் கலைப் படைப்பை வெளியிடுகின்ற போது, அவர் குற்றவாளியாக்கப்படுகிறார். அவர் பயங்கரவாதியாக, பயங்கரவாதத்தை தூண்டுபவராக, விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முற்படுபவராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய கருத்துகள் இதனுடன் ஒத்துப் போகின்றன. அவர் இத்தகைய புகழ்ச்சியை அல்லது போற்றுதலை ஒரு கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுகின்ற ஒரு விடயம் அல்ல என குறிப்பிட்டிருக்கிறார். இதனை தவறாக கையாளுவது சட்டத்தை சரியாக புரிந்துகொள்ளாதவர்களின் செயல் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார். இது நீதிமன்றத்தினால் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயம். பயங்கரவாதம் என்றால் என்ன- பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தக்கூடிய சூழல் எது- அதற்கான அடிப்படைகள் என்ன - என்பதை வரையறை செய்யாமல், ஒரு சட்டத்தை கொண்டுவருவதன் ஆபத்தை இது உணர்த்துகிறது.

பயங்கரவாத தடைச் சட்டம் என்பதே ஒரு மோசமான, முற்று முழுதாக இல்லாமல் செய்யப்பட வேண்டிய ஒரு சட்டம். ஆனால், அரசாங்கம் தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினாலும், புதிய ஒன்றைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறது. புதிய பயங்கரவாத தடைச் சட்டம் கூட தெளிவான வரையறை ஒன்றுடன் வரப்போவதில்லை என்பது தெளிவு. ஏனென்றால், தற்போதைய சட்டத்தையே சரியாக கையாள தெரியாத அரசாங்கம் மற்றும் அதிகாரிகள், புதிய சட்டத்தை கொண்டுவருவதில் தீர்க்க தரிசனத்துடன் செயற்படுவார்கள் என ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

Post a Comment

0 Comments