இருண்ட ஆட்சியின் மீள் எழுச்சி சாத்தியமா?
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்படுபவர்கள் மற்றும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவுக்கு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது. அவர் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கு தலா நான்கு ஆண்டுகள் வீதம், மொத்தம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலகட்டத்தில், அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக அல்லது உயர் பதவிகளில் இருந்தவர்கள், சிறைத்தண்டனையை எதிர்கொள்வது இது தான் முதல் முறையல்ல. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். அவருடன் முன்னாள் அமைச்சர் நளின் பெர்னான்டோ 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருக்கிறார். வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஊழல் குற்றச்சாட்டில் 16 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கிறார். கடந்த வாரம் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இலங்கை நீதிமன்றம் — மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த பலருக்கு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறைத்தண்டனைகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகின்றன. (படம்: Wikipedia)
ராஜபக்ஷவினரின் ஆட்சிக்காலங்களில் அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக, அரச நிறுவனங்களின் தலைவர்களாக பதவிகளில் இருந்தவர்கள், இவ்வாறான ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளில் தொடர்ச்சியாக சிக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குகள் இடம்பெற்று வருகின்றன, அல்லது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தரமற்ற மருந்து இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்; தற்போது பிணையில் உள்ள அவர், நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இப்படிப் பல முன்னாள் அமைச்சர்கள் வழக்குகளை அல்லது விசாரணைகளை எதிர்கொள்கின்றனர்.
அதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ என பலர் ஊழல் அல்லது மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணைகளுக்கு முகம் கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் மீதான பிடி தற்போது இறுகி வருகிறது. ராஜபக்ஷவினரின் ஆட்சியில் அமைச்சர்களாக, உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள் கணிசமானோர் இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் என்பது எவ்வாறானதாக இருந்தது என்பதற்கு ஒரு அடையாளம். ஒரு மோசமான நிர்வாக சீர்கேடுள்ள, ஊழல் நிறைந்த ஒரு அரசாங்கத்தை அவர் வழிநடத்தினார் என்பதையே இது புலப்படுத்துகிறது.
இப்போது ராஜபக்ஷவினரின் விசுவாசிகள் நாமல் ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி என கூறித் திரிகிறார்கள். அது அவர்களின் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்ற கூற்றாகவோ நம்பிக்கையாகவோ இருக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் ராஜபக்ஷவினர் எவ்வாறு ஆட்சியை நடத்தினார்கள் என்பது முக்கியமானது. ராஜபக்ஷவினரின் ஆட்சி என்பது இலங்கையின் பொற்கால ஆட்சி அல்ல. அது வடக்கு கிழக்கில் மிக மோசமான மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் இனப்படுகொலையும் நிறைந்த ஒரு இருண்ட ஆட்சியாக இருந்தது. தெற்கிலும் கூட தமிழர்கள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்படும் கொடுமையான சூழலே நிலவியது. அதேவேளை சிங்கள மக்கள் மத்தியில் கூட ராஜபக்ஷவினரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என கருதப்படுகின்ற நிலை இல்லை. போரில் வெற்றி பெற்றதை தவிர, அவர்கள் வேறெதையும் சாதிக்கவில்லை.
பொருளாதார ரீதியாக ஏராளமான சுரண்டல்களில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுகள் அதிகளவில் உள்ளன. அந்தக் காலகட்டத்தில் பெருமளவில் அரச வளங்கள் நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் நிரூபிக்கப்படவில்லை. அவற்றை நிரூபிக்க கூடிய சாத்தியங்கள், வாய்ப்புகள் இல்லாமல் போய் இருப்பதும், அவை நிரூபிக்கப்பட முடியாமல் போனதற்கான காரணமாக இருக்கலாம். குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போனதால் யாரும் குற்றவாளிகள் இல்லை என்று அர்த்தமில்லை. எத்தனையோ குற்றவாளிகள் அவர்கள் இழைத்த குற்றங்களை நிரூபிக்க போதிய சாட்சிகள், சான்றுகள் இல்லாமல் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் சான்றுகள், சாட்சியங்களைத் தோண்டி துருவி எப்படியாவது அவர்களை சிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. ராஜபக்ஷவினருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தீவிரம் அடைந்திருப்பதாகவும் அவர்களை ஒரு இறுக்கமான நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றியளிக்கும் என இப்போது கூற முடியாது. ஆனால் ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவருவதை தடுப்பதற்கு, அவர்கள் மீள்எழுவதை தடுப்பதற்கு, தற்போதைய அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை நிச்சயமாக தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏனென்றால் ராஜபக்ஷவினர் இப்போது தங்களின் அடுத்த தலைமுறை அரசியல் தலைமைத்துவத்திற்கு தயாராகிவிட்டனர். அவர்களின் மூன்றாவது தலைமுறை இப்பொழுது தலைமை தாங்குகின்ற நிலைக்கு வர தொடங்கியிருக்கிறது. அந்த மூன்றாவது தலைமுறையைக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்ற ராஜபக்ஷவினர் முற்படுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் இருப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம். அதனால் ராஜபக்ஷவினரை ஒவ்வொருவராக சிக்க வைப்பதில் தீவிரம் காட்டப்படுவதாக தெரிகிறது. ராஜபக்ஷவினர் மாத்திரமல்ல, அவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள், அவர்களுக்கு துணையாய் இருப்பவர்களை கூட, விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. கடந்த காலங்களில் அவர்கள் அதிகாரத்தில் இருந்த போது, தவறு இழைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அந்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தூசி தட்டியோ அல்லது அவற்றை தோண்டி துருவியோ அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டப்படுகிறது.
நாமல் ராஜபக்ஷ — ராஜபக்ஷ குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையாக அரசியல் தலைமைத்துவத்திற்கு தயாராகி வருகிறார்; அவரது விசுவாசிகள் அவரை 2029 ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்கின்றனர். (படம்: Daily Mirror)
ராஜபக்ஷவினர் தங்களை மீண்டும் கட்டியெழுப்புவதை தடுக்காவிட்டால், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று அச்சம் அரசாங்கத்துக்குள்ளேயும் உருவாகியிருக்கிறது. 2029 இல் நாமல் ராஜபக்ஷவே ஜனாதிபதி என ராஜபக்ஷவினர் நம்ப வைக்க முற்படுகிறார்கள். அதற்காக அவர்களின் விசுவாசிகளை நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாமல் ராஜபக்ஷ சர்வதேச அளவில் தன் செல்வாக்கை விரிவுபடுத்திக்கொண்டு, தொடர்புகளை விசாலமாக்கிக்கொண்டு, தன் ஆளுமையை உயர்த்த தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் அவரது உரைகள், மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த காலத்தை நினைவுபடுத்துகின்ற அளவிற்கு ஆளுமை மிக்கதாக மாறி வருவதை காணமுடிகிறது. இதனை கூர்ந்து அவதானித்தால் ராஜபக்ஷவினரின் அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தின் வலிமையை குறைத்து மதிப்பிடத் தோன்றாது.
ஆனால், கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக மன்னிப்பு கோருவதற்கோ அல்லது தங்களின் தவறுகளை ஒப்புக்கொள்வதற்கோ அவர்கள் தயாராக இல்லை. கடந்த காலத்தின் தவறுகளை ஏற்றுக்கொள்வது மாத்திரமல்ல, அதற்காக அவர்கள் தண்டனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள். தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், ராஜபக்ஷவினரின் மூன்றாவது தலைமுறை தலைமைத்துவத்தை நோக்கி நகர முனைகிறது. தேசிய மக்கள் சக்தி, ராஜபக்ஷவினர் அளவிற்கு தனித்துவமான செல்வாக்கை கொண்டதல்ல. ராஜபக்ஷவினரின் குடும்ப செல்வாக்கு முன்னாள் தேசிய மக்கள் கட்சியின் தனித்துவ ஆளுமையை விட மிகமிகக் குறைவானதே. இப்போது, ராஜபக்ஷவினரின் குடும்ப தலைமைத்துவமும் ஜேவிபியின் தலைமைத்துவ அமைப்புமே மோதிக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அடுத்த தலைமைத்துவத்தை உறுதி செய்வதற்கான இந்த போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில், சஜித் பிரேமதாச, இந்தப் போட்டியில் இருந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறார் போலவே தெரிகிறது.
0 Comments