பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லையா?
மத்திய கிழக்கு மோதல்களால் இலங்கையில் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மக்களின் எண்ணிக்கை, 13 இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக, ஐ.நா அமைப்பான, உலக உணவு திட்டம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. நீண்டகாலப் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில், குடும்பங்கள் தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் சூழலில், கூடுதலாக 13 இலட்சம் மக்கள் வரை தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத அபாயத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, 2026-ஆம் ஆண்டில், ஏற்கனவே 47 இலட்சம் மக்கள் இவ்வாறான நிலையில் இருப்பதாக கணக்கிடப்பட்டதற்கு மேலதிகமானதாகும்.
இலங்கையின் எரிசக்தித் தேவையில் 63 சதவீதம் மத்திய கிழக்கைச் சார்ந்துள்ளது. அதே சமயம், வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தில் 44 சதவீதம் வளைகுடா நாடுகளிலிருந்து கிடைப்பதுடன், 45 சதவீத தேயிலை ஏற்றுமதி வளைகுடா நாடுகளுக்கு செல்கிறது. இது, தொழிலாளர்களையும் குடும்பங்களையும் எரிசக்தி விலைகள், வர்த்தகம் மற்றும் வருமானம் ஆகியவற்றில் ஏற்படும் அதிர்ச்சிகளுக்கு உள்ளாக்குகிறது. உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதும், முக்கியமான கரிசனைக்குரிய விடயங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக, குடும்பங்களுக்குத் தேவையான உணவின் தரத்தையும் அளவையும் வாங்கும் திறன் படிப்படியாகக் குறைந்து வருகிறது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பொருளாதார காரணிகளால் அடிப்படை உணவு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. எரிசக்தி விலைக்கும் உணவுப்பொருட்களின் விலைக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவது இந்த நிலைமைக்கு முதன்மை காரணம் என உலக உணவுத் திட்டத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் கூறியிருந்தார்.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை — ஐ.நா உலக உணவு திட்டத்தின் படி, மத்திய கிழக்கு மோதல்களால் மேலதிகமாக 13 இலட்சம் மக்கள் அடிப்படை உணவு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். (படம்: WFP / Ada Derana)
ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை தீவிரமான விடயமாக, எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. தற்போதைய பொருளாதார சூழலை ஒரு பொருளாதார நெருக்கடியாகவே அது கணிக்கவில்லை என தெரிகிறது. அண்மைக்காலமாக டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனால், இந்த வீழ்ச்சி பொருளாதார நெருக்கடியை குறிக்கவில்லை என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ, கூறியிருக்கிறார். இதனை ஒரு ஆபத்தான சூழலாக அவர் கணிக்கவில்லை. இது பொருளாதார நெருக்கடியென தவறாக வழிநடத்தப்படுவதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தக் கருத்து கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
ஏனென்றால், பொருளாதார வீழ்ச்சி ஒன்றினது அல்லது நெருக்கடி ஒன்றினது, முக்கியமான குறிக்காட்டியாக இருப்பது அமெரிக்கா டொலருக்கு எதிரான உள்நாட்டு நாணய மதிப்பு தான். இலங்கையின் உள்நாட்டு நாணயத்தின் மதிப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை கணிப்பதற்கு, அமெரிக்க டொலருடனான ஒப்பீடு தான் முக்கியமானது. உள்நாட்டுப் பொருளாதாரத்தில் தங்கியிருக்கும் ஒரு நாட்டில் இதனை தெளிவாக மதிப்பிட இயலாது. ஆனால் இறக்குமதிப் பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில், உள்நாட்டு நாணய மதிப்பை, அமெரிக்க டொலருடனான ஒப்பீட்டின் மூலமே கணிக்க முடியும். கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் உச்சமாக, அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு, 400 ரூபாவையும் தொட்டது. தற்போது அதன் நிலை, 330 ரூபாவுக்கும் அதிகமாகவே காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அளவில் 289 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் மதிப்பு இப்போது கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும், ஒவ்வொரு டொலர் பெறுமதியான பொருட்களுக்கும் உள்நாட்டில் கூடுதலாக 40, 50 ரூபாவைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பொருளாதார நெருக்கடி இல்லை அல்லது பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை என்று கூற முற்படுவது அரசாங்கம் உண்மையை மறைக்கப் பார்க்கிறது என்றே பொருள்.
தற்போது ஏற்பட்டுள்ள டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி, புறஅதிர்ச்சிகளால் ஏற்பட்டது என்றும் மத்திய கிழக்கு நெருக்கடியினால் தோன்றியது என்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ குறிப்பிட்டிருக்கிறார். புற அதிர்ச்சிகளால் ஏற்படக் கூடிய நாணய பெறுமதி வீழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் அதேவேளை, உடனடியாக சீரான நிலைமைக்கு வராது என்றும் அவர் கூறியிருக்கிறார். அவர் இதனைக் கூறி, ஒரு வாரத்திற்குப் பின்னரும் கூட, டொலரின் மதிப்பு, குறையவில்லை. இது புற அதிர்ச்சிகளால் ஏற்படுகின்ற தாக்கமாக இருந்தாலும், இது உள்நாட்டு பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்றது என்பதைக் காட்டுகிறது. இந்த தாக்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக முயற்சிக்கும் அரசாங்கத்திற்கு முக்கியமானதொரு நெருக்கடியாக இருக்கும். ஏனென்றால் பொருட்களின் விலை அதிகரிப்பு, டொலர் நெருக்கடி, வருமான பற்றாக்குறை, கடன் திருப்பிச் செலுத்துவதற்கான காலஎல்லை நெருங்குவது என பல்வேறு பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய சிக்கல்களை அரசாங்கம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
இறக்குமதிக்காக கூடுதல் டொலர்கள் விடுவிக்கப்படுவது, உள்நாட்டில் டொலரின் மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. அதற்காக கூடுதல் உழைப்பையும் கூடுதல் பணத்தையும் செலவிட வேண்டிய நிலையில் நாட்டு மக்கள் இருக்கிறார்கள். இது தான் பொருளாதார நெருக்கடி. அவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய கிழக்கு நெருக்கடி ஏற்பட்ட பிறகு மேலதிகமாக 13 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது இதன் இன்னொரு சிக்கலான சூழலாகும். உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீட்டின்படி ஏற்கனவே 47 இலட்சம் பேர் அத்தகைய நெருக்கடிக்குள் இருந்தனர். அந்த எண்ணிக்கை இப்பொழுது 60 இலட்சமாக மாறியிருக்கிறது. இது கிட்டத்தட்ட இலங்கையின் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் ஆவர். நாட்டில் உள்ள நான்கில் ஒருவர் உணவைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கிறார் அல்லது பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார் என்பது சாதாரணமான விடயம் அல்ல.
இலங்கை பொருளாதார நெருக்கடி — டொலருக்கு எதிரான ரூபா மதிப்பு 330 ஐ தாண்டியுள்ள நிலையில் பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களை நெருக்கடிக்கு தள்ளுகிறது.
ஆனால் அரசாங்கமோ இதனை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்கிறதா? கடந்த காலங்களில், சர்வதேச அமைப்புகளால் இத்தகைய தரவுகள் முன்வைக்கப்பட்ட போது, அதனை அரசாங்கம் மறுத்திருந்தது. ஏனென்றால் இந்த புள்ளிவிவரங்களை ஏற்றுக் கொண்டால், அரசாங்கம் அதிகளவிலானோருக்கு மானியங்களையோ கொடைகளையோ வழங்க வேண்டியிருக்கும். தற்போது அரசாங்கத்தின் மானியங்கள் அல்லது கொடைகளில் தங்கியிருப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 15 இலட்சம் வரையே ஆகும். இவர்களுக்கே நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இதனை விட நான்கு மடங்கானவர்கள் இப்போது உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் கூறுகிறது. உலக வங்கியும் கூட 24.5 வீதமானவர்கள் வறுமை நிலையில் இருப்பதாக, ஏற்கனவே கூறியிருந்தது. அதனை அரசாங்கம் புறக்கணித்திருந்த சூழலில், இப்போது, ஐ.நாவின் இந்த புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது.
பொருளாதார சூழலை சமாளிக்க முடியாத நிலைக்கு அதிகளவிலான மக்கள் தள்ளப்படுவதும், பொருளாதார நெருக்கடியின் அடையாளம். ஆனால், அரசாங்கமோ இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி அல்ல, வீழ்ச்சி அல்ல என்று நியாயப்படுத்த முற்படுகிறது. அண்மையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டில் இலங்கையில் முன்னர் எதிர்பார்க்கப்பட்டது போல பொருளாதார வளர்ச்சி 4 வீதமாக இருக்காது, 3 வீதமாகவே இருக்கும் என கூறியிருக்கிறது. பணவீக்கம் 5 வீதத்தில் இருந்து 6.2 சதவீதமாக அதிகரிக்கும் என கணித்திருக்கிறது. அதுபோல முன்னர் கணிக்கப்பட்ட அத்தனை குறிகாட்டிகளையும் அது மாற்றியமைத்திருக்கிறது. இவையெல்லாம் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலையை அடையும் என்ற கணிப்புகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அதனை மக்களிடமிருந்து மறைத்து போலியான ஒரு விம்பத்தை உருவாக்க பார்க்கிறது. இவ்வாறான போலியான விம்பம் தான் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்தியது.
0 Comments