இலங்கையை களமாக்கும் பாகிஸ்தான்
ஜூன் முதலாம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த, பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல்களின் அணி, இந்தியாவுக்கு சவால் விட்டு சென்றிருக்கிறது. ஏப்ரல் 30ஆம் திகதி சீனாவில் நடந்த நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட, பிஎன்எஸ் ஹங்கோர் என்ற நீர்மூழ்கி கப்பலும், அதற்கு வழி துணையாக பி.என்.எஸ் தைமூர் மற்றும் பிஎன்எஸ் அஸ்லத் ஆகிய, நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்ட நாசகாரி போர்க்கப்பல்களும், இந்த அணியில் இடம் பெற்றிருந்தன. இவை கொழும்பு துறைமுகத்தில் நான்கு நாட்கள் தரித்திருந்துவிட்டு ஜூன் 4ஆம் திகதி புறப்பட்டு சென்றன. இவற்றின் வருகை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்திருக்கிறது.
இந்த போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கி வந்தவர் பாகிஸ்தான் கடற்படையின் 18வது நாசகாரி கப்பல்படை அணியின் தளபதியான கொமடோர் ஓமர் பாரூக். கொழும்பு துறைமுகத்தில் தரிந்திருந்த போது, அவர் பிஎன்எஸ் தைமூர் போர்க்கப்பலில், ஜூன் 3ஆம் திகதி ஒரு வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கொமடோர் ஓமர் பாரூக், பாகிஸ்தான் கடற்படை பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கியை இணைத்துக் கொள்வதன் மூலம், வங்காள விரிகுடாவில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளப் போகிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். "தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமான இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பலின் இணைப்பு, வங்காள விரிகுடாவில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பரந்த எல்லையை பாகிஸ்தானுக்கு வழங்கும்" என்றும் அவர் கூறியிருக்கிறார். இது இந்தியாவுக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கின்ற விடயம்.
பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் — நான்கு நாட்கள் தரித்திருந்து ஜூன் 4ஆம் திகதி புறப்பட்டு சென்றன. (படம்: Daily Mirror)
இந்தியப் பெருங்கடல் பிரதேசத்துக்குள்ளேயே பிற நாடுகளில் கடற்படைகள், நீர்மூழ்கிகளின் நடமாட்டங்களை விரும்பாத இந்தியா, வங்காள விரிகுடாவில், பாகிஸ்தானின் நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை ஒரு போதும் விரும்பாது. இந்தியாவுக்கு மேற்காக அரபிக் கடலும், கிழக்காக வங்கக் கடலும் தென்காக இந்தியப் பெருங்கடலும் இருக்கின்றன. இதில், அரபிக் கடலை பாகிஸ்தானுடன் நேரடியாக பங்கு போடுகிறது இந்தியா. இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள், 12 முன்னணி போர்க்கப்பல்கள், 8 தொடக்கம் 11 வரையான நீர்மூழ்கி கப்பல்களை மேற்கு கடற் பகுதியிலேயே இந்தியா நிறுத்தியிருக்கிறது. இது பாகிஸ்தானில் நேரடி அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உத்தியாகும். இந்தியாவின் கிழக்கு பகுதியில், முக்கியமாக வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் கடற்படை தளங்களும், தற்போது வலுப்படுத்தி அந்தமான் – நிகோபார் தீவுகளில் உள்ள கடற்படை தளங்களும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக செயற்படுகின்றன.
இவ்வாறான சூழலில் பாகிஸ்தான் தனது கடற்படையில் புதிதாக இணைத்துக் கொள்ளும் ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல்களில், முதலாவது கப்பலை பெற்றுள்ள சூழலில், அதன் இலக்கு வங்காள விரிகுடா என பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இந்தியா தனது பிரத்தியேக கடற் பகுதி என கருதியிருக்கும் வங்காள விரிவுடாவுக்குள், பாகிஸ்தான் மூக்கை நுழைக்க விரும்புகிறது என்பதற்கான தெளிவான ஆதாரம் இதுவாகும். இதனை பாகிஸ்தானால் அவ்வளவு இலகுவாக மேற்கொள்ள முடியாது. ஏனென்றால் பாகிஸ்தானுடன் தற்போதைக்கு இந்தக் கடற்பகுதி நேரடியாகத் தொடர்பில்லாதது. 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் உருவாகும் வரை, அது கிழக்கு பாகிஸ்தானாகவே இருந்தது. அப்போது, பாகிஸ்தான் வங்காள விரிகுடாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தது. பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷ் பிரிந்த பின்னர், வங்கக் கடலில் பாகிஸ்தான் கடற்படையின் செயற்பாடுகள் கிட்டத்தட்ட முற்று முழுதாகவே முடக்கப்பட்டு விட்டது.
அண்மைக்காலத்தில் பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்கு சாதகமானதாக இருக்கவில்லை. அதில் பாகிஸ்தான், சீனாவின் தலையீடுகள் இருப்பதாக இந்தியா நம்புகிறது. அதனை அச்சுறுத்தலான விடயமாக பார்க்கிறது. இந்தியாவுக்கு எதிராக பங்களாதேஷை திருப்புவதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கிறது. பங்களாதேசுடனான உறவுகளை பாகிஸ்தானும், சீனாவும் வலுப்படுத்தியிருக்கின்றன. பங்களாதேசுக்கு சீனா இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை வழங்கியதையும், இந்தியா விரும்பவில்லை. இப்போது பங்களாதேசுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பாகிஸ்தான், அதனை சாட்டாக வைத்துக் கொண்டு, வங்காள விரிகுடாவிற்குள் நுழைவதற்கு எத்தனிக்கிறது. இது இந்தியாவின் கிழக்கு மற்றும் தென்பகுதியில் உள்ள தளங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குர்கி என்ற போர்க்கப்பலை 1971இல் மூழ்கடித்த ஹங்கோர் என்ற பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலின் நினைவாகவே- 5 பில்லியன் டொலர் செலவில், 8 நீர்மூழ்கிகளைக் கொண்டு உருவாக்கும் பிரிவுக்கு ஹங்கோர் எனப் பெயர் சூட்டியது பாகிஸ்தான். சீனாவின் Type 039A/B யுவான் வகை நீர்மூழ்கிக் கப்பல்களையே, பாகிஸ்தான் ஹங்கோர் வகை என அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்டுவதற்கான ஒரு நடவடிக்கை. இந்த தொகுதியின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பலுக்கு பிஎன்எஸ் ஹங்கூர் என பெயரிடப்பட்டு, தற்போது தான் பாகிஸ்தானைச் சென்றடைந்திருக்கிறது. இந்த எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் நான்கு சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒன்று ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களான பிஎன்எஸ் சுஷுக், பிஎன்எஸ் மாங்ரோ, பிஎன்எஸ் காஸி ஆகியவை கடந்த ஆண்டில் கடலில் இறக்கப்பட்டு சோதனையோட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏனைய நான்கு கப்பல்களும் சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் உதிரிப்பாகங்களுடன் கராச்சியில் கட்டப்படும். இவை செயற்பாட்டுக்கு வந்தவுடன் இந்தியப் பெருங்கடலிலும் அரபிக் கடலிலும் பாகிஸ்தான் கடற்படையின் பலம் கணிசமாக உயரும். இது இந்தியா கடுமையாக எதிர்கொள்ளப் போகின்ற ஒரு சவால்.
அதைவிடச் சிக்கலான விடயம், இவற்றை வங்காள விரிகுடாவில் நிலை நிறுத்துவதற்கு பாகிஸ்தான் திட்டமிடுகிறது. ஹங்கோர் வகை நீர்மூழ்கிகளின் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு இன்னொரு சிக்கல். வழக்கமாக டீசல்- எலக்ட்ரிக் நீர்மூழ்கிகள், பற்றரிகளுக்கு மின்னேற்றுவதற்காகவும் ஒட்சிசனைப் பெற்றுக் கொள்வதற்காகவும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கடலின் மேற்பரப்புக்கு வர வேண்டியிருக்கும். இந்தச் செயற்பாடு 'ஸ்னோர்கெலிங்' (Snorkeling) என்று அழைக்கப்படும். இவ்வாறு கடலின் மேற்பரப்பிற்கு வரும்போது எதிரி நாட்டு ராடர்களில் சிக்கும் அபாயங்கள் அதிகம். ஆனால், டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பலான ஹங்கோர் வகை அப்படிப்பட்டதல்ல. இவற்றில், மேம்பட்ட AIP என்ற தொழில்நுட்பம் உள்ளது. இதன் மூலம் டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்களால் 15 தொடக்கம் 20 நாட்கள் வரை, கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக இருக்க முடியும். இவை எந்த சத்தமும் இன்றி இயங்குவதால், எதிரி நாட்டு சோனார் (Sonar) மற்றும் உளவு அமைப்புகளால் கண்டறிவது மிகவும் கடினம். அடுத்து, ஹங்கோர் நீர்மூழ்கி கப்பல்கள், சக்திவாய்ந்த டோர்பிடோக்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டவையாக உள்ளன. இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில், பாகிஸ்தானின் அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் 'பாபூர்-3' (Babur-III) ஏவுகணைகளை பொருத்த முடியும். இது பிராந்தியத்தில் அணு ஆயுத சமநிலையை மாற்றக் கூடிய ஆபத்தும் உள்ளது. அதைவிட, பாகிஸ்தானுக்கு இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதன் மூலமும், கராச்சியுடன் இந்த தொழில்நுட்பத்தை பகிர்வதன் மூலமும், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை ஆதிக்கம் மற்றும் புலனாய்வு வேலைகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்திய கடற்படையின் P-8I போசிடோன் உளவு விமானம் — பாகிஸ்தான் நீர்மூழ்கி அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா அமெரிக்காவிடம் இருந்து இந்த விமானங்களை வாங்கியுள்ளது. (படம்: Wikipedia)
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இந்த வியூகங்களை எதிர்கொள்ள இந்திய கடற்படை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிக்கும் திறனை இந்தியா பலப்படுத்தியுள்ளது. இதற்காக அமெரிக்காவிடம் இருந்து P-8I போசிடோன் உளவு விமானங்கள், MH-60R ரோமியோ ஹெலிகொப்டர்களை வாங்கியிருப்பதுடன், கடலுக்கு அடியில் நீர்மூழ்கிகளை கண்டறியும் நவீன சென்சார்களையும் இந்தியா நிறுவியுள்ளது. அதைவிட, இந்தியா தனது 'புரொஜெக்ட் 75-I' திட்டத்தின் கீழ், AIP தொழில்நுட்பம் கொண்ட 6 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிப்பதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக இந்தியாவின் மசாகோன் டொக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் திஸ்சென்குரூப் மரைன் சிஸ்டம்ஸ் ஆகியன இணைந்து செயற்படுகின்றன. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஜெர்மனியின் Type 214 நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கப்பல்களில் ஜெர்மனியின் அதிநவீன எரிபொருள் கலன் (Fuel Cell) அடிப்படையிலான AIP தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது சீனாவின் ஸ்டிர்லிங் AIP-ஐ விட அதிக செயற்திறன் கொண்டது. அத்துடன், நீண்டதூர வழிகாட்டல் டோர்பிடோக்கள் மற்றும் பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டதாகவும் இந்த நீர்மூழ்கிகள் இருக்கும்.
பாகிஸ்தானின் இந்த இலக்கை இந்தியா தெளிவாக புரிந்துகொண்டு, ஏற்கனவே திட்டமிடல்களை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இந்தியாவுக்கு இது பெரும் பிரச்சினை அல்ல. ஆனால், இதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்துவதற்கு, பாகிஸ்தான் முற்படுவது தான் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. வங்காள விரிகுடாவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கு கொழும்புத் துறைமுகத்தை பாகிஸ்தான் தேர்ந்தெடுத்திருக்கிறது. இது இந்தியாவுக்கு சினமூட்டும் ஒரு விடயம். ஏற்கனவே, சீன நீர்மூழ்கி விடயத்தில், இப்படித்தான் நடந்தது. இலங்கையுடனான உறவுகளை பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக தன் பலத்தை கட்டியெழுப்ப முற்படுகிறது பாகிஸ்தான். இது பிராந்தியத்தில் குழப்பத்தையும் இலங்கைக்கு நீடித்த கலக்கத்தையும் உருவாக்கும். இலங்கை திரும்பத் திரும்ப இதே சிக்கலுக்குள் சிக்கிக் கொள்கிறது. அமெரிக்கா, சீனா போன்ற தரப்புகளுக்குள் சிக்கி வந்த இலங்கை, இப்போது ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குள்ளேயும் அகப்பட்டுக் கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது. இது இலங்கை போன்ற ஒரு சின்னஞ்சிறிய, அதேவேளை கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு நாட்டிற்கு, நீடித்த அமைதியையும் பாதுகாப்பான சூழலையும் ஏற்படுத்தாது.
0 Comments