இலங்கைக்கு அதிகரிக்கும் தொந்தரவு
இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மீதான அமெரிக்காவின் கண்காணிப்பு அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இலங்கையில் இருந்து 12 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள சர்வதேச கப்பல் பாதை. உலகம் முழுவதற்கும் முக்கியமான இந்தக் கப்பல் பாதை வழியாக நாளொன்றுக்கு 300க்கும் அதிகமான கப்பல்கள் பயணம் செய்கின்றன. வெளிப்படையாக செல்லுகின்ற கப்பல்களின் எண்ணிக்கையே இது. நீர்மூழ்கிக் கப்பல்களோ அல்லது தமது AIS எனப்படுகின்ற தானியங்கி அடையாள சமிக்ஞையை அணைத்துவிட்டு செல்லுகின்ற கப்பல்களோ இதில் உள்ளடங்கவில்லை. அவற்றையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.
உலகின் கிழக்கு - மேற்கு பகுதிகளை இணைக்கும் இந்த கப்பல் பாதையில், அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் உன்னிப்பாக கவனம் செலுத்துகின்றன. இந்த நாடுகள், இந்த கப்பல் பாதை அமைதியானதாக -தொந்தரவு இல்லாததாக- சுயாதீனமாக பயணம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ஆனால், இந்த கப்பல் பாதையில் அதிகரித்து வருகின்ற சம்பவங்கள், இந்த நாடுகளுக்கு மாத்திரமன்றி இலங்கைக்கும், அதிகளவு நெருக்கடியாக- கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. இந்தப் பாதை சுதந்திரமானதாக-வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தினாலும், இதன் மீதான அதன் கவனமும் கண்காணிப்பும் தலையீடுகளும் அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை.
கடந்த ஜூன் 5ஆம் திகதி அதிகாலையில் காலிக்கு தென்மேற்காக, ஒரு சம்பவம் இடம்பெற்றது. இலங்கை கடல் எல்லையில் இருந்து, இரண்டு, மூன்று கடல் மைல்களுக்கு அப்பால் கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக தரித்து நின்ற ஒரு எண்ணெய் தாங்கி கப்பலில், இந்தோ-பசிபிக் கட்டளை பீடத்தை சேர்ந்த இரண்டு அமெரிக்க ஹெலிகொப்டர்கள் சிறப்புப் படையினரை தரையிறக்கின. அவர்கள் அந்தக் கப்பலை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அந்தக் கப்பல் கைப்பற்றப்பட்ட நேரத்தில், லெனோரே (Lenore) என்ற பெயருடன் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால், அதன் உண்மையான பெயர் எம்.ரி. டவினா என்கிறது அமெரிக்கா.
கிட்டத்தட்ட 330 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் கொண்ட அந்த பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல், 19 இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெயை ஏற்றியிருந்தது. ஈரானின் கார்க் தீவில் இருந்து அந்த கப்பல் மசகு எண்ணெயுடன் புறப்பட்டு, பல வாரங்களாக தனது தன்னியக்க அடையாள சமிக்ஞையை அணைத்துவிட்டு இலங்கைக்கு தெற்காக தரித்திருந்தது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ள அமெரிக்கா, ஈரானிய எண்ணெயை ஏற்றிச்சென்று நடுக்கடலில் வைத்து வேறு கப்பல்களுக்கு மாற்றுகின்ற இந்தக் கப்பலை தடை செய்யப்பட்ட கப்பல்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. அதேவேளை ஈரான் நிழல் கப்பல் படையை உருவாக்கி, அமெரிக்காவின் கண்களுக்கு மண் தூவிவிட்டு, அந்த தடையை உடைத்து வருகிறது. ரஷ்யாவும் இது போன்ற ஒரு நிழல் கப்பல் படையை கொண்டிருக்கிறது. இவை இரகசியமாக எண்ணெயை ஏற்றிச் சென்று ஆழ்கடலில் வைத்து பிற கப்பல்களுக்கு மாற்றுவது வழக்கம். இவ்வாறான கப்பல்களை அமெரிக்கா மோப்பம் பிடித்து கைப்பற்றி வருகிறது.
மத்திய கிழக்குப் போர் நெருக்கடியை அடுத்து, கடந்த மார்ச் மாதம் இலங்கையில் கடுமையான எரிபொருள் நெருக்கடி உருவானது. அந்தச் சமயத்தில் எங்கிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது என, இலங்கை அரசாங்கம் குழம்பிப் போயிருந்தது. இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் போலவே இலங்கைக்குத் தேவையான எரிபொருளை வழங்க தயாராக இருப்பதாக ஈரானும் அறிவித்தது. இலங்கைக்கு தேவைப்படும் எரிபொருளை எந்த நேரத்திலும் விநியோகிக்க, ஈரான் தயாராக இருப்பதாக கொழும்பில் உள்ள ஈரானிய தூதுவர் கூறியிருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை; அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டது. அதற்கு அரசாங்கம் கூறிய காரணம், ஈரானிலிருந்து எண்ணெயை எடுத்து வருவதற்கு இலங்கையிடம் கப்பல்கள் இல்லை என்பதாகும். ஆனால் உண்மை காரணம் அதுவல்ல. அமெரிக்காவை பகைத்துக்கொண்டு ஈரானிடம் எண்ணெய் வாங்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு துணிச்சல் இல்லை. அப்படி வாங்கினால் அது அமெரிக்காவை சினமடையச் செய்யும். அமெரிக்காவின் தடையை மீறி கொள்வனவு செய்யும்போது, இலங்கை மீதும் அமெரிக்கா வரிகளை விதிக்கக்கூடிய நிலை இருந்தது. இலங்கை அரசாங்கம் அதனை வெளிப்படுத்தவில்லை. மாறாக, கப்பல் வசதிகள் இலங்கையிடம் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ சமாளித்திருந்தார்.
ஆனால், இலங்கைக்கு அருகே வரை எரிபொருளைக் கொண்டு வந்து விநியோகிக்கக்கூடிய நிலையில், ஈரான் இருந்தது. அதன் நிழல் கப்பல்கள் அணியில் உள்ள எண்ணெய் தாங்கிகள் பல இந்திய பெருங்கடலில் நடமாடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் இலட்சக்கணக்கான பீப்பாய் மசகு எண்ணெய் இருக்கிறது. அமெரிக்காவின் அழுத்தங்கள் நெருக்கடியை தாண்டி ஈரான் தன் பொருளாதாரத்தை பேணுகிறது என்றால், பாதுகாப்புக்கு பெருமளவு நிதியை செலவிடுகிறது என்றால், அது இவ்வாறான எண்ணெய் வர்த்தகத்தின் மூலமாக மாத்திரமே சாத்தியமாகிறது. மத்திய கிழக்குப் போர் தொடங்குவதற்கு முன்னர், ஈரானில் பொருளாதார நிலை மோசமடைந்துவிட்டதாகவும், டொலரின் உள்நாட்டு நாணயப் பெறுமதி வீழ்ச்சி அடைந்துவிட்டதாகவும், பொதுமக்கள் அதற்கு எதிராக போராட்டங்களை நடத்துவதாகவும், அமெரிக்கா பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்காவின் பெருமெடுப்பிலான குண்டுவீச்சுகளையும் தாண்டி, ஈரானிய பொருளாதாரம் தாக்குப்பிடிக்கிறது. அங்கு மக்களின் கிளர்ச்சியோ ஆட்சி மாற்றமோ நடக்கவில்லை. மாறாக, ஈரான் அந்தப் போரில் இருந்து மீண்டெழுந்திருக்கிறது. இப்போது, அமெரிக்காவுக்கு சவால் விடுகிறது.
அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளை பீடத்தைச் சேர்ந்த படையினர் ஈரானிய மசகு எண்ணெய் ஏற்றிய கப்பலில் தரையிறங்கி அதனை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட அடுத்த நாள், ஈரானின் உயர்தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய், சிஎன்என் செய்தியாளருக்கு செவ்வியளித்திருந்தார். அமெரிக்கா மீண்டும் போரைத் தொடங்கினால், ஈரான் பாரசீக வளைகுடாவிற்கு அப்பால் போரை இழுத்துச் செல்லும் என்றும், ஹோர்முஸ் நீரிணையிலிருந்து இந்தியப் பெருங்கடல், பாப் அல்-மண்டாப் நீரிணை, செங்கடல் மற்றும் மத்தியதரைக்கடல் வரை இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
இந்த எச்சரிக்கை சாதாரணமானது அல்ல. குறிப்பாக இலங்கை கவலைப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே காலிக்கு தெற்காக 19 கடல் மைல் தொலைவில், ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் டேனா என்ற நாசகாரி கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கடித்திருந்தது. அது மத்திய கிழக்கு போரை, இந்தியப் பெருங்கடல் வரைக்கும் விரிவுபடுத்தியது. அந்தச் சம்பவத்திற்கு பின்னர், கொழும்பை மையப்படுத்தி, ஈரானிய இராஜதந்திர நகர்வுகள் பல முன்னெடுக்கப்பட்டன. இது இலங்கைக்கு அமெரிக்காவுக்கும் இடையே சுமுகமற்ற உறவுகளையும் தோற்றுவித்தது. அந்த சம்பவத்துக்கு பின்னர் இலங்கைக்கு கிழக்காக இந்தோனேசியாவுக்கு அருகே ஒரு ஈரானிய மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் அமெரிக்க கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு அருகே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இலங்கைக்கு அருகே செல்லும் சர்வதேச கப்பல் பாதை — நாளொன்றுக்கு 300க்கும் அதிகமான கப்பல்கள் பயணிக்கும் இந்தப் பகுதியில் அமெரிக்க கண்காணிப்பும் தலையீடுகளும் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்கப் படையினரின் தேடுதல்கள் சோதனைகள் இந்த கடல் பகுதியில் அதிகரித்து வருவதானது, இது பதற்றத்துக்குரிய ஒரு பிரதேசமாக மாறி இருப்பதையே அடையாளப்படுத்துகிறது. ஒரு பக்கம் சுதந்திரமான, வெளிப்படையான கப்பல் போக்குவரத்து பாதையாக இந்திய பெருங்கடல் இருக்க வேண்டும் என அறிவிக்கும் அமெரிக்கா, இந்த பிரதேசத்தின் ஊடாக செல்லும் கப்பல்களின் மீது அழுத்தங்களையும் அதிகரித்து வருகிறது. இந்த அழுத்தங்கள் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இன்னமும் கூடுதலான பொறுப்பையும் நெருக்கடிகளையும் உருவாக்கும். ஏனென்றால், இந்த கப்பல் போக்குவரத்து பாதையின் மீதான கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்கா, இலங்கைப் படையினருக்கான வசதிகளை அதிகரித்து வருகிறது. அந்த நோக்கில் வழங்கி வரும் கொடைகளும் போர்த் தளபாடங்களும் ஏனைய உதவிகளும் அமெரிக்காவின் நோக்கங்களை ஈடு செய்வதற்காக பயன்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது. இந்த அழுத்தங்களை இலங்கை சாதாரணமாக எதிர்கொள்ள முடியாது. ஏனென்றால் இது பல சந்தர்ப்பங்களில் பல நட்பு நாடுகளுடன் கூட இராஜதந்திர விரிசல்களை ஏற்படுத்தும். இதனால் அமெரிக்காவுக்கு கவலை இல்லை, ஆனால் இலங்கையினால் அப்படி கவலைப்படாமல் இருக்க முடியாது.
0 Comments