elugai

டாலர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியாவின் 'ரூபாய் கனவு'? கொழும்பு மாநாட்டில் வெளியான அதிரடித் திட்டம்!

இந்தியாவின் ரூபாய் கனவு

இந்தியாவின் ரூபாய் கனவு

கட்டுரையாளர் - ஹரிகரன்

கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் கடந்த திங்கட்கிழமை 'ரூபாய்க்கு ரூபாய்: இந்தியா-இலங்கை வர்த்தக வழித்தடத்தை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதித்துறை சார் உயர் அதிகாரிகளும், வங்கித்துறை சார் அதிகாரிகளும், வர்த்தக பிரதிநிதிகளும் அந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். அது இருதரப்பு வர்த்தகத்தில், ரூபாய் நாணயத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலான ஒரு கருத்தரங்கு. இந்திய ரூபாயில் வர்த்தகத்தை செய்யுமாறு இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, அந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியிருந்தார். அவ்வாறு இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ளும்போது, இரண்டு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மை கிடைக்கும் என அவர் கூறியிருந்தார்.

"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆண்டு வர்த்தகம் தற்போது சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இருப்பினும், பெரும்பாலான பரிவர்த்தனைகள் மூன்றாவது நாணயமான அமெரிக்க டொலர் மூலமாகவே தீர்க்கப்படுவதால், இரு நாடுகளுக்கும் கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன. அமெரிக்க டொலரின் ஏற்ற இறக்கங்களால், நாணய மாற்றுச் செலவுகள், பரிவர்த்தனை, தீர்வு தாமதங்கள் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மூன்றாவது நாணயத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வர்த்தகத்தை நேரடியாக ரூபாயில் செய்தால், இந்தச் செலவுகளில் பலவற்றைத் தவிர்க்கலாம்." என்று இந்தியத் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த ஆலோசனையை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இது இரண்டு தரப்புகளுக்கும் நன்மை அளிக்கக்கூடிய ஒரு பரிமாற்ற முறையாக இருந்தாலும், வர்த்தகர்களாலோ வணிக நிறுவனங்களோ பரவலாக இது பயன்படுத்தப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்க விடயம். இந்தியா இதனை வலியுறுத்துவதற்கும், இலங்கை இதனை ஏற்றுக்கொள்வதற்கும் ஒவ்வொரு காரணங்கள் உள்ளன. இரண்டு தரப்புக்கும் பொதுவான நலன்களும் இருக்கின்றன.

இந்தியா இலங்கை ரூபாய் வர்த்தக கலந்துரையாடல் கொழும்பு கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் நடைபெற்ற 'ரூபாய்க்கு ரூபாய்' கலந்துரையாடல் — இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் கலந்துகொண்டனர். (படம்: Daily Mirror)

மூன்றாவது நாணயமான அமெரிக்க டொலரில் வர்த்தகம் செய்யும்போது இரண்டு நாடுகளும் தமது பணத்தை டொலராக மாற்றி செலுத்துகின்றன. அவ்வாறு டொலராக மாற்றப்படும்போது, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இரண்டு தரப்புகளுமே, இந்த தேவையற்ற ஒரு தரகு கொடுப்பனவை செலுத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்கொள்கிறது. ஏனென்றால், அமெரிக்க டொலர் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயம். வெளிநாடுகளில் வாங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்கும், வெளிநாடுகளுடன் வர்த்தக கொடுப்பனவுகளை தீர்ப்பதற்கும், அமெரிக்க டொலரே தேவைப்படுகிறது. ஆனால் இலங்கைக்கு கிடைக்கின்ற டொலர் வருவாயை விட, செலவிடப்படும் டொலர் அதிகமாக இருப்பதால், அதிகளவில் அதனைச் சேமிக்க முடியாத நிலை உள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ள அமெரிக்கா டொலரின் அளவு பெருமளவில் அதிகரிக்கவில்லை. அண்மைக்காலத்தில் அது கணிசமாக வீழ்ச்சி அடைந்தது. எண்ணெய் விலை அதிகரிப்பு அதற்கு முக்கியமான ஒரு காரணம். ஆனாலும் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த 650 மில்லியன் டொலர் நிதியுதவி மூலம், மத்திய வங்கி அந்த கையிருப்பை ஓரளவுக்கு தக்க வைத்திருக்கிறது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில், இலங்கை வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. 2028 இல், 3.259 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அமெரிக்க டொலரை திரட்டி வைத்திருக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால், இந்த ஆண்டில் அமெரிக்க டொலரின் கையிருப்பை உயர்த்துகின்ற முயற்சியில் பெருமளவில் வெற்றிபெற முடியவில்லை. எரிபொருள் கொள்வனவுக்காக, அதிகளவில் டொலரை விடுவிக்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. வாகன இறக்குமதி மூலமாகவும் அதிகளவிலான அமெரிக்க டொலர் கையிருப்பு கரைந்து போனது. இதனாலேயே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இவ்வாறான சூழலில், அமெரிக்க டொலரின் கையிருப்பையும் பாதிக்காமல், இறக்குமதிச் செலவுகளையும் பாதிக்காமல் – இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இருக்கின்ற ஒரே வழி, இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வது தான். இந்திய ரூபாயில் கொடுப்பனவுகளை தீர்க்கும்போது அது டொலருக்கான நெருக்கடியை ஏற்படுத்தாது. உள்ளூரில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் தட்டுப்பாடுகளுக்கும் தீர்வாக இருக்கும். அதைவிட டொலர் மதிப்பில் ஏற்படுகின்ற திடீர் ஏற்ற இறக்கங்களால் பொருட்களின் விலைகள் மாறுபடாமல் நிலையான விலையில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான வழியும் ஏற்படும். பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க டொலர் கையிருப்பை பேணுவதில் நெருக்கடியை எதிர்கொள்ளுகின்ற இலங்கை போன்ற நாடுகளுக்கு இது சாதகமான தீர்வாகும்.

அதேவேளை இந்த தீர்வை இந்தியா முன்வைப்பதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. அமெரிக்க டொலரை தவிர்த்து இந்திய ரூபாயின் ஊடான வர்த்தகத்தை விருத்தி செய்வதற்கு இந்தியா முற்படுகிறது. இந்திய ரூபாய் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாணயமாக அண்மையில் மாறியிருந்தாலும் அமெரிக்க டொலர், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் அளவுக்கு அது அங்கீகரிக்கப்படவில்லை. ஜப்பானிய யென், சீன யுவான், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் டொலர்கள் போன்றவற்றின் அளவிற்கு கூட இந்திய ரூபாய் வர்த்தகத்தில் அங்கீகாரத்தை பெறவில்லை. ஆனால் இலங்கை, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட 22 நாடுகளில் ரூபாய் கணக்குகளை திறந்து வர்த்தகம் செய்வதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு இப்போது இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரித்து வருவது. இந்தியாவிடம் 700 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இருந்தாலும் அங்கு அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவது இந்தியாவுக்கு சிக்கலாக மாறி இருக்கிறது. இந்த நிலையை சமாளிப்பதற்கு இலங்கை போன்ற நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்வது இந்தியாவுக்கு சாதகமானது. ஏனென்றால், அமெரிக்க டொலர் கொடுப்பனவுகளை செய்வதற்கும், அதனை மாற்றிக்கொள்வதற்கும் கூடுதலான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படுகிறது. இதன் மூலம் அதனைத் தவிர்க்க முடியும். இன்னொரு பக்கம் இந்திய ரூபாயின் ஊடான வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான சூழலும் ஏற்படும். இது பொருளாதார ரீதியாக இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கும் அதனுடான வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும். சர்வதேச அளவில் இந்திய ரூபாய்க்கான அங்கீகாரத்தை அது இன்னும் உயர்த்தும்.

இந்த இடத்தில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. பிரிக்ஸ் நாடுகள் டொலர் இல்லாத வர்த்தகத்தை ஊக்குவிக்க முனைகின்றன. இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாபிரிக்கா, ஈரான், இந்தோனேசியா, எகிப்து, எதியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அமெரிக்க டொலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டிருந்தன. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அவ்வாறு செய்தால் பொருளாதார தடைகளை விதிப்போம் என எச்சரித்திருந்தார். பிரிக்ஸ் நாடுகள் தனி நாணயத்தில் வர்த்தகம் செய்யத் தொடங்கினால் அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். ஏனென்றால் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் பரப்பளவிலும் சனத்தொகையிலும் பொருளாதாரத்திலும் மிக வலிமையானவை. உலகின் அரைப்பங்கு சனத்தொகையையும், மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பையும், 39 சதவீத பொருளாதாரத்தையும் கொண்டவை இந்த நாடுகள். இந்த நாடுகளின் வர்த்தகத்தை அமெரிக்க டொலர் இழக்கும் நிலை ஏற்பட்டால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்யும். அத்தகைய ஒரு நிலை உருவாகுவதைத் தடுப்பதற்கு அமெரிக்கா தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவையும் மிரட்டி பணிய வைத்தது.

இந்திய ரூபாய் நாணயம் அமெரிக்க டொலர் வர்த்தகம் இந்திய ரூபாய் நாணயம் — அமெரிக்க டொலரை தவிர்த்து ரூபாய் ஊடான வர்த்தகத்தை விருத்தி செய்ய இந்தியா 22 நாடுகளில் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. (படம்: Wikipedia)

இப்போது, பிரிக்ஸ் நாணயத்திற்கு முன்னுரிமை கொடுக்க முடியாத நிலையில், இந்தியா தனது ரூபாய் நாணயத்தின் ஊடான வர்த்தகத்தை மேம்படுத்த பார்க்கிறது. இந்த இடத்தில் இந்தியாவும் இலங்கையும் ரூபாயில் வர்த்தகம் செய்யும் முனையும்போது, அதில் அமெரிக்கா தலையீடு செய்யாதா என்ற கேள்வி வருகிறது. நிச்சயமாக அமெரிக்கா இதனை தனக்கான அச்சுறுத்தலாக பார்க்கும். தனது டொலர் மீதான அச்சுறுத்தலாக- அதனை பயன்படுத்துவதன் ஊடாக தமக்கு கிடைத்துவரும் வருமானங்களை பாதிக்கின்ற விடயமாக அமெரிக்கா பார்க்கும். ஒப்பீட்டளவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் மிகப்பெரியளவிலானது அல்ல. அமெரிக்காவின் பேரண்ட பொருளாதாரத்தில் இது ஒரு மிகச்சிறிய துளியாகும். ஆனால் அமெரிக்கா இதனை சிறு துளியாக பார்க்காது. இந்த சிறு துளியால் ஏற்படும் பாதிப்பை விட, இதனை முன்னுதாரணமாக கொண்டு, பிற நாடுகளும் இத்தகைய வர்த்தக முயற்சிகளில் இறங்கிவிடும் என்றே அமெரிக்கா நோக்கும். அது தமக்கான அச்சுறுத்தலை பெரிதாக்கிவிடும் என்ற நோக்கிலேயே இந்த விவகாரத்தை பார்க்கும்.

அமெரிக்கா அப்படி அணுக முயன்றால், இந்தியாவுடனான இலங்கையின் ரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும். இலங்கையின் வர்த்தகர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்கள் ரூபாயில் வர்த்தகம் செய்ய தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். அமெரிக்காவை தம் கைக்குள் வைத்திருக்க ரூபாயில் வர்த்தகம் செய்வதில் இருந்து விலக்கு பெற பல நிறுவனங்கள் முற்படுகின்றன. பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் அழுத்தங்களும் தடைகளும் இருக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். அமெரிக்காவின் வர்த்தக கட்டுப்பாடுகளை தாண்டி இந்தியாவுடன் ரூபாய் வர்த்தகத்தை இலங்கை உறுதி செய்துகொள்வது அவ்வளவு இலகுவானதல்ல என்பதையே இது உணர்த்துகிறது.

Post a Comment

0 Comments