elugai

சொந்த அறிக்கையைக் கூட வெளியிட முடியாத கையாலாகாத ஐ.நா உபகுழு! இலங்கையின் கொடூரச் சட்டங்களை மாற்றிவிடுமா இந்த 7 ஆண்டு காலப் பயணம்?

கையாலாகாத ஐ.நா உபகுழு

கையாலாகாத ஐ.நா உபகுழு

கட்டுரையாளர் - என்.கண்ணன்

சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா உபகுழு தற்போது, இலங்கையில் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. எதிர்வரும் 24 ஆம் திகதி வரை, இலங்கையில் தங்கியிருந்து, பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்துவதும், கள ஆய்வுகளை மேற்கொள்வதும் இந்த உபகுழுவின் முக்கியமான நோக்கம் ஆகும். கடைசியாக 2019 ஆம் ஆண்டு சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த உபகுழுவின் பயணம் இடம்பெறுகிறது.

இந்தக் குழுவின் நிபுணர்கள் கொழும்பில் வந்து இறங்கியதும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்டவர்களை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது சித்திரவதைகள் தொடர்பாக கண்டிப்பாக பூச்சிய நிலைக் கொள்கையை கடைப்பிடிப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருந்தார். அதாவது, சித்திரவதைகளை அரசாங்கம் சகித்துக்கொள்வதில்லை என்பதே இதன் பொருளாகும்.

ஐ.நா உபகுழு சித்திரவதை தடுப்பு கொழும்பு வெளிவிவகார அமைச்சு சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா உபகுழு உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் — 7 ஆண்டுகளுக்குப் பின் முதல் பயணம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக அளித்த வாக்குறுதியை மீறி, அது பயன்படுத்தப்படுவதாக, தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐ.நா உபகுழுவின் இந்த பயணம் அமைந்திருக்கிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதில்லை என, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் பயங்கரவாத தடைச் சட்டம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டது. குறித்த காலப்பகுதியில், இந்தச் சட்டத்தை பயன்படுத்தி நீண்டகாலம் தடுத்து வைக்கப்படுவதும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதும் ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறியது. தற்போதும் கூட அந்த நிலை நீடிக்கிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் அதற்குப் பின்னரான காலகட்டத்தில் தடுத்து வைப்புகள், சித்திரவதைகள் போன்ற மனித உரிமை மீறல் பிரச்சினைகள் தீவிரம் அடைந்த பின்னர், சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவின் பயணம் முதல்முறையாக இடம்பெற்றிருக்கிறது.

இந்த சூழலில் பயங்கரவாத தடைச் சட்டம் மோசமாக -தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு ஐ.நா உபகுழு எந்தளவுக்கு பங்காற்றும் என இப்போது கூறமுடியாது. அரசாங்கம் இதனை தவறாக பயன்படுத்துகிறது, இந்த குற்றச்சாட்டு முன்னர் தமிழர் தரப்பில் இருந்து மாத்திரம் முன்வைக்கப்பட்டு வந்தது. பயங்கரவாத தடைச்சட்டம் அண்மைக்காலம் வரை, தமிழர்களுக்கு எதிராக மாத்திரமே இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துவதற்கு, பயங்கரவாத தடைச் சட்டத்தை, அரச படையினரும், சட்ட அமுலாக்க அமைப்புகளும், ஒரு முக்கியமான கவசமாக பயன்படுத்தினர். ஆனால் இப்பொழுது சிங்கள மக்கள், சிங்கள அரசியல் கட்சிகள், அமைப்புகளாலும் கூட பயங்கரவாத தடைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தீவிரமாக முன்வைக்கப்படுகிறது. அதற்கு முக்கியமான காரணம், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், நல்லாட்சி அரசின் காலத்திலும் அரசபடைகளை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் இல்லாத எதிர்ப்பு, இப்போது கிளம்பியிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு இப்போதும் தடுப்புக்காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகும். இது அரசாங்கம் தனது வாக்குறுதியை மீறி செயற்படுத்துகின்ற ஒரு நடவடிக்கையாகும். பயங்கரவாத தடைச் சட்டம் யாருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டாலும் அது தவறானது. ஏனென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது நாட்டின் அரசியல் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதற்கும், தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்ற ஒரு கொடூரமான சட்ட கட்டமைப்பாகும். இது தனி மனிதர்களுக்குரிய உரிமைகளையும் மதிப்பையும் கெடுப்பதற்கும் மறுப்பதற்கும் மாத்திரமன்றி காலவரையின்றி அவர்களை தடுத்து வைத்து குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கும் பயன்படுத்தக்கூடியது.

கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது மிகக் கொடூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அவற்றில் உண்மை இருந்ததோ இல்லையோ அவ்வாறான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. அதனால் பல ஆண்டுகள் சிறைகளில் துன்பங்களை அனுபவிக்கும் நிலையும் உருவானது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யக்கூடிய நிலை இருக்கிறது. இதன்மூலம் சித்திரவதைகளையும் கொடூரமான துன்புறுத்தல்களையும் மேற்கொள்வதற்கான வழிவகைகளை இந்த சட்டம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதனால் தான், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா அமைப்பு இந்த விடயத்தை சார்ந்து கூடுதலான கவனம் செலுத்துவதாக தெரிகிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் ஒழிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தாலும், அதற்கு மாற்றாக இன்னொரு சட்டத்தை கொண்டுவருவதற்கு மிகக் குறுகிய காலக்கெடுவையும் அறிவித்திருக்கிறது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் தகவல்படி, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பயங்கரவாதத்துக்கு எதிரான அரச சட்டம் என்ற பெயரில் புதிய சட்டமூலத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு போதுமான நாடாளுமன்ற பலம் அரசாங்கத்திடம் இருப்பதால், ஜே.ஆரின் பாணியில் தடாலடியாக இதனை நிறைவேற்றக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. இதனை தடுப்பதற்கான வழிகளும் இல்லை.

தற்போதைய சட்டமே மிகக் கொடூரமானதாக கருதப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு என்ற பெயரில் அரசாங்கம் முன்மொழிந்த சட்ட வரைவு அதைவிட கொடூரமான ஏற்பாடுகளை கொண்டதாக இருந்தது. அதில் திருத்தங்களை செய்தே புதிய சட்ட வரைவு உருவாக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறினாலும் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது எந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அது கொடூரமான சித்திரவதைகளுக்கும் துன்புறுத்தல்களுக்குமே வழிவகுக்கும். ஏனென்றால், பயங்கரவாதம் என்பதை வரையறுப்பதற்கான தெளிவான கோட்பாடு எதுவும் இதுவரை இலங்கையில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் எந்த ஒரு குற்றத்தையும் அல்லது எந்த ஒரு செயலையும் பயங்கரவாதமாக அறிமுகப்படுத்தவோ வரையறுக்கவோ வாய்ப்புகள் உள்ளன. பயங்கரவாதம் என சந்தேகிக்கின்ற எந்த ஒரு செயற்பாட்டுக்கு எதிராகவும் உச்ச பலத்தையும் அதிகாரத்தையும் பிரயோகிக்கின்ற சூழல் இலங்கையில் காணப்படுகிறது. அதற்கான அதிகாரங்கள் அரச படைகள் மற்றும் பொலிசாருக்கு வழங்கப்படுகின்றபோது அவை தவறான நோக்கில் அல்லது தவறான வகையில் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்துக்கள் அதிகம்.

அதனால் தான் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக குற்றவியல் சட்டத்தை பயன்படுத்தி எந்த ஒரு தீய செயலையும் தடுக்கவும் கட்டுப்படுத்தவோ முடியும். ஆனால் இலங்கையில் ஆட்சியில் இருந்துவந்த அரசாங்கங்கள், கடந்த ஐந்து தசாப்தங்களாக பயங்கரவாத தடை சட்டத்தை ஒரு முக்கியமான ஆயுதமாக பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்டன. அவற்றுக்கு இதுபோன்ற ஒரு கொடுமையான, கொடூரமான சட்ட அமைப்பு தேவைப்படுகிறது. அவர்களை திருப்திப்படுத்துவதற்கே தற்போதைய அரசாங்கமும் முற்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் ஜெனிவா இலங்கை அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் — 2019 பயணத்தின் அறிக்கை கூட இலங்கை அரசாங்கம் கோராததால் இன்றுவரை வெளியிடப்படாமல் உள்ளது. (படம்: Wikipedia)

இந்த விடயத்தில் ஐ.நா அமைப்புக்கள் எவ்வாறு செயற்படபோகின்றன என்று தெரியவில்லை. ஆனால் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா அமைப்பு இந்த விடயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. ஏனென்றால் சித்திரவதைகளை தடுப்பது என்பது வெறுமனே செயல்களைத் தடுப்பது மாத்திரமல்ல. அவ்வாறான சூழல்கள் உருவாவதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் எந்த ஒரு வடிவத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அது சித்திரவதைகள் மற்றும் கொடுமைப்படுத்தல்களை செயற்படுத்துவதற்கான சூழலையே உருவாக்கும். அந்த வகையில் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு தீர்க்கமாக செயற்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.

ஆனால், துரதிஷ்டவசமாக, இந்த உபகுழு அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை. ஏனென்றால் இதன் செயற்பாட்டு கட்டமைப்பு அவ்வாறானது. இதன் இரகசிய அறிக்கையைக் கூட சுயமாக வெளியிட முடியாது. 2019 ஆம் ஆண்டு இந்த உபகுழுவின் இலங்கைப் பயணத்தின் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்னமும் கூட வெளியிடப்படவில்லை. ஏனென்றால் அந்த அறிக்கையை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கம் கோர வேண்டும். அப்படி கோரினால் தான் அதனை வெளியிட முடியும். ஐ.நாவின் இந்த அமைப்பின் அதிகாரம் இந்தளவு தான். அரசாங்கம் அந்த அறிக்கையை வெளியிடுமாறு கோரவில்லை. அவ்வாறு கோருவது அரசாங்கம் தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டதாக அமைந்துவிடும். அதனால் அது அவ்வாறு கூறாமல் இருந்துவிட்டது. இந்த உபகுழுவின் தற்போதைய பயணத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை கூட, அவ்வாறு கிடப்பிலேயே போடப்பட்டுவிடக்கூடும். இது அரசாங்கங்களுக்கு வசதியானது. ஐ.நா அமைப்பு அரசுகளை காப்பாற்றுகின்ற அமைப்பாக செயற்படும் வரை இவ்வாறான நிலையை இருக்கும். இதனை மீறி இந்த அமைப்பினால் பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது அதனைப் பயன்படுத்தி இங்கு இடம்பெறுகின்ற சித்திரவதைகளையோ அதனால் அம்பலப்படுத்திவிட முடியாது.

Post a Comment

0 Comments