வளைகுடா அமைதி - இலங்கைக்கு நெருக்கடி
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி உடன்பாடு வெள்ளிக்கிழமை செய்துகொள்ளப்படுவது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரியத் தொடங்கியது. இந்தப் போர் முடிவிற்குக் கொண்டுவரும் அறிவிப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. எனினும், அமெரிக்க ஜனாதிபதியின் சமூக ஊடகப் பதிவு வெளியான சற்று நேரத்திற்கெல்லாம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் தளத்தில், இதனை வரவேற்று பதிவிட்டிருந்தார்.
சஜித் பிரேமதாச இலங்கையின் உள்நாட்டு அனுபவத்தின் அடிப்படையில் இந்தக் கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் போர் இல்லாத நிலை மட்டுமே அமைதி அல்ல என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். இலங்கையில் போர் இல்லை, ஆனால் அதற்காக அமைதி உருவாகிவிட்டது என்று கூற முடியாத நிலையே உள்ளது. இந்த அனுபவம் அவருக்கு இந்த கருத்தை பதிவிட தூண்டியிருக்கிறது. சில வேளைகளில் அவர் 2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இப்போது அதிகாரத்தில் இருந்திருந்தால், இந்த அனுபவத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பாரோ தெரியவில்லை. எவ்வாறாயினும், மத்திய கிழக்கின் இந்த சூழலை அவர் வரவேற்றிருப்பதற்கு முக்கியமான காரணம் உள்ளது. அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இதற்கு உடனடியாக கருத்து எதனையும் வெளியிடாமல் இருந்ததற்கும் காரணம் உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச — அமெரிக்கா-ஈரான் அமைதி உடன்பாட்டை தனது எக்ஸ் தளத்தில் உடனடியாக வரவேற்று பதிவிட்டார்.
மத்திய கிழக்குப் போர் உலகின் பல நாடுகளின் பொருளாதாரங்களுக்கு சவாலான சூழலை ஏற்படுத்தியது, நெருக்கடியை உருவாக்கியது. எண்ணெய், எரிவாயு போன்றவற்றிற்கு தட்டுப்பாட்டையும் விலை அதிகரிப்பையும் ஏற்படுத்தியது. அதன் விளைவாக பணவீக்கம் உள்ளிட்ட தொடர்ச்சியான பொருளாதார விளைவுகள் பல உருவாகின. அதற்கு இலங்கையும் விதிவிலக்காக இருந்திருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் பதவியேற்று இன்னும் மூன்று மாதங்களில், இரண்டு வருடங்கள் ஆகப்போகின்ற நிலையில், பொருளாதார ரீதியாக முன்னேற்றகரமான நிலையை எட்டியிருக்கவில்லை. ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய திட்டங்களை அப்படியே முன்னோக்கி நகர்த்திச் செல்லும் வேலையே காணப்பட்டது. ஆனால் அது மாத்திரம் போதுமானதல்ல என்பதை, அண்மைய நாட்களில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள சரிவு நிலை, எடுத்துக்காட்டியிருக்கிறது.
இலங்கையின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக கடுமையான சரிவை நோக்கி நகர்ந்து செல்கிறது. அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது, நாடு மெது மெதுவாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருப்பதாகவும், விரைவில் முழுமையான வீழ்ச்சியை எதிர்கொள்ளும் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது எந்தளவிற்கு சரியான கூற்று என்பதையிட்டு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், நாட்டின் பொருளாதாரம் செழிப்பான நிலையில் இல்லை, அது வீழ்ச்சிப் போக்கில் சென்றுகொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத விடயம். அரசாங்கமும் கூட பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள தளர்ச்சியை ஒப்புக்கொண்டிருக்கிறது.
இந்த நெருக்கடிக்கு அரசாங்கம் கூறியுள்ள ஒரே காரணம், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் தான். மத்திய கிழக்கின் போர்ச்சூழலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தான், பொருளாதாரம் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது என அரசாங்கம் கூறிவருகிறது. இது ஒரு வகையில், அரசாங்கம் தப்பித்துக்கொள்வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் உண்மையான நிலை அவ்வாறு இல்லை. மத்திய கிழக்குப் போர் அத்தகைய விளைவை ஏற்படுத்தியிருந்தாலும், இலங்கையின் இப்போதைய பொருளாதாரப் பின்னடைவுக்கு அது மட்டுமே ஒற்றைக் காரணி என சுட்டிக்காட்ட முடியாது. ஏனென்றால் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நிலைப்பாடுகள், நகர்வுகள்- பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய விடயங்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளால், பொருளாதாரம் சரிவை சந்திக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சூழலில் தான், மத்திய கிழக்குப் போர் தொடங்கியது. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல, அமைந்துவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அரசாங்கம் முழுப்பழியையும் அதன் மீது போட்டுவிட்டது.
ஏற்கனவே இதேபோன்ற ஒரு சூழல் முன்னரும் ஏற்பட்டிருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வரும்போது, பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது. அவர் ஆட்சியை பொறுப்பேற்றதும் எடுத்த பல முடிவுகள், பொருளாதாரத்தின் அடிமட்டத்தை ஆட்டம் காண செய்தது. அந்த சந்தர்ப்பத்தில் கோவிட் தொற்றும் பரவியது. கோவிட் தொற்றின் விளைவாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அதுபோலவே, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் பொருளாதாரமும் வீழ்ச்சியை நோக்கி சென்றது. அப்போது கோவிட் தொற்றினால் தான் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது என்று அரசாங்கம் மக்களை நம்ப வைக்க முயன்றது. ஆனால் உண்மை நிலை அதுவல்ல. இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே வீழ்ச்சி அடைந்துகொண்டிருந்தது. கோட்டாபாய ராஜபக்ஷ எடுத்த தவறான தீர்மானங்கள் அதனை இன்னும் வேகமாகச் சரிவை நோக்கி கொண்டுசென்றது. கோவிட் தொற்று பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சிக்கு பங்களித்தது. இதையெல்லாம் மறைத்துவிட்டு, கோவிட் தொற்றின் மீது முழுப்பழி போட முயற்சிக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை; அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். கடைசியில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை விட்டு வெளியேறும் நிலை உருவானது.
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு — மத்திய கிழக்குப் போர் முடிவுக்கு வந்தால் எண்ணெய் விலை குறையும் சூழலில் அரசாங்கத்தின் காரணம் கேள்விக்குள்ளாகும்.
தற்போதைய அரசாங்கம் தெளிவான பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்காத சூழலில் ஏற்பட்டுவந்த பொருளாதார நெருக்கடியை, மத்திய கிழக்குப் போர் தீவிரமடைய செய்திருக்கிறது. தற்போதைய அரசாங்கமும் முழுப்பழியை அதன் மீது போட்டுவிட்டு தான் தப்பிக்கொள்ள முயன்றிருக்கிறது. இந்த சூழலில் தான் போர் முடிவுக்கு வரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு சங்கடமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த போர் முடிவுக்கு வருமேயானால், பொருளாதார வீழ்ச்சியின் முழுப்பழியையும் அதன் மீது போட்டுவிட முடியாத நிலை ஏற்படும். போரினால் ஏற்பட்ட பின்னடைவுகள் உடனடியாக சரி செய்யப்பட முடியாதவை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனாலும், போரின் விளைவுகள் மேலும் நீடிக்காமல் தவிர்க்கப்படுவதுடன், அதிலிருந்து மெதுவாக மீளுகின்ற சூழல் உருவாகும். இலங்கையின் பொருளாதாரமும் அதன் போக்கில் மீண்டும் மேல்நோக்கி வளர்ச்சி பெறக்கூடிய சூழல் உருவாக வேண்டும். அதற்கான சூழல் ஏற்படாவிட்டால் மத்திய கிழக்கு போர் தான் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது என்ற அரசாங்கத்தின் காரணம் பொய் என்பது உறுதியாகிவிடும். அத்தகைய ஒரு சூழல் உருவாகிவிட்டால் அது அரசாங்கத்துக்கு ஆபத்து. அதனால் தான் அரசாங்கம் இந்த அமைதிக்கான உடன்பாட்டை உடனடியாக வரவேற்கவில்லை. அது இலங்கைக்கு சாதகமானது அல்ல.
போரின் விளைவுகள் பல இலங்கைக்கு பாதகமானதாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இலாபம் ஈட்டியவர்களும் இருக்கிறார்கள். எரிபொருள் நெருக்கடி விடயத்தின் போதும், எரிபொருளை கொள்வனவு செய்த விடயத்திலும் கூட அரசாங்கம் சிறப்பாக செயற்பட்டது என கூற முடியாது. அரசாங்கம் மீது விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இத்தகைய பின்னணியில் போர் நிறுத்தப்படுவது அரசாங்கத்திற்கு உடனடி சாதகமானது என்று கூற முடியாது. அதனால் தான் சஜித் பிரேமதாச இதனை உடனடியாக வரவேற்றார். அரசாங்கம் எந்தளவுக்கு இந்த விடயத்தில் பின்னோக்கிச் செல்கிறதோ அந்தளவிற்கு அரசாங்கத்தின் மீது அதிக அழுத்தம் கொடுக்கக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை பரலுக்கு 20 டொலர்கள் வரை குறைந்திருக்கிறது. பரலுக்கு ஒரு டொலர் உயர்ந்தால், லீற்றருக்கு 2 ரூபாய் அதிகரிக்க வேண்டும் என்று கணக்குக் காட்டியவர் ஜனாதிபதி. அதிகரிப்பின் போது அந்தக் கணக்கைக் காட்டியவர் வீழ்ச்சியின் போது எப்படிக் கணக்குக் காட்டப்போகிறார்? அரசாங்க தரப்புக்கு இது ஒரு சிக்கலான சூழல். ஏனென்றால் மத்திய கிழக்கு போரை காரணம் காட்டி பொருளாதாரம் சரிந்துபோனது என்று இனிமேல் காரணம் கூற முடியாத நிலை உருவாகி வருகிறது. அதற்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ன காரணத்தை முன்வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 Comments