elugai

மக்களுக்கான அரசாங்கமா அல்லது இலாபம் பார்க்கும் தனியார் நிறுவனமா? உலகளவில் குறைந்தாலும் இலங்கையில் குறைய மறுக்கும் எரிபொருள் விலை!

துணிய மறுக்கும் அரசாங்கம்

துணிய மறுக்கும் அரசாங்கம்

கட்டுரையாளர் - கார்வண்ணன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியானும், போரை நிறுத்துகின்ற அமைதி உடன்பாட்டில், கையெழுத்திடுவதற்கு முன்னரே, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரியத் தொடங்கிவிட்டது. மார்ச் முதல் வாரத்தில், மசகு எண்ணெய் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ, அந்த விலைக்கு கீழேயே இறங்கியது. இது உலகம் முழுவதற்குமான நல்ல செய்தி. ஆனால் இலங்கையர்களுக்கு இது நல்ல செய்தி அல்ல. ஏனென்றால், சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருக்கின்ற இந்த எண்ணெய் விலை வீழ்ச்சி, இலங்கையர்களுக்கு உடனடி ஆதாயத்தை அளிக்கப்போவதில்லை.

உடன்பாடு கையெழுத்திடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னரே, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 80 டொலர்களுக்கு கீழே குறைய தொடங்கிய நிலையில், பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோவிடம் எரிபொருள் விலைகள் குறைக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் உடனடியாக குறையாது, அதற்கு சாத்தியம் இல்லை என நிராகரித்துவிட்டார். ஏனென்றால், கூடிய விலைக்கு வாங்கப்பட்ட எரிபொருள் இன்னமும் கையிருப்பில் இருக்கிறது. அது தீரும்வரை, புதிய விலைக்கு வாங்கப்படும் எண்ணெய் வந்து சேரும்வரை, எரிபொருள் விலையை குறைக்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அவர் கூறிய காரணம் சரியானது, நியாயமானது. ஆனால், இந்த நியாயம் எந்தளவுக்குப் பொருத்தமானது என்ற கேள்வியும் இருக்கிறது.

இலங்கை எரிபொருள் நிலையம் பெட்ரோல் டீசல் விலை இலங்கையில் எரிபொருள் விலை — சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் பலனை மக்களுக்கு உடனடியாக வழங்க அரசாங்கம் தயங்குகிறது.

பெப்ரவரி 28ஆம் திகதி மத்திய கிழக்கில் போர் தொடங்கிய பின்னர், மார்ச் முதல் வாரம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 27 நாட்களுக்குப் போதுமான பெட்ரோலும், 33 நாட்களுக்குப் போதுமான டீசலும் கையிருப்பில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். ஆனால் அவர் அதனைக் கூறி ஒரு வாரத்துக்குள், மார்ச் 10ஆம் திகதி எரிபொருள் விலையை அதிகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்தது. குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளை அரசாங்கம், கூடிய விலைக்கு விற்பனை செய்தது. அதற்கு பின்னர், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் விலை அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புடன் இணைத்து நியாயப்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த வாரம் அரசாங்கம், ஓகஸ்ட் மாதம் வரைக்கும் போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அறிவித்திருந்தது. அப்படி பார்த்தால் இன்னும் கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு போதுமான எரிபொருளை அரசாங்கம் கையிருப்பில் வைத்திருக்கிறது. அவை அதிகூடிய விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டவை. அந்த எரிபொருள் தீரும்வரை, அரசாங்கம் தற்போதைய விலையிலோ அல்லது இன்னும் அதிக விலையிலோ தான் எரிபொருளை விற்கப்போகிறது. அதேவேளை, இந்த மாதத்துடன் எரிபொருளுக்கான மானியம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என, சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. இந்த இடத்தில் தான் அரசாங்கத்துக்கு ஒரு சிக்கல் உருவாகியிருக்கிறது.

டீசலுக்கு லீற்றருக்கு 100 ரூபாவும், பெட்ரோலுக்கு லீற்றருக்கு 20 ரூபாவும், மானியமாக வழங்குவதாக அரசாங்கம் கூறுகிறது. இந்த மானியம் முடிவடைந்த பின்னர், இவற்றின் விலையை அரசாங்கம் உயர்த்த வேண்டும். சர்வதேச சந்தையில் விலை குறைந்துகொண்டிருக்கும்போது, இலங்கை அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தினால், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்படும். அது அரசாங்கத்திற்கு வேண்டாத விளைவுகளை உருவாக்கும். விலையை இப்படியே பேணுவது பிரச்சினையில்லை, மானிய இழப்பிற்கு இணையாக விலையை உயர்த்தினால் எதிர்வினைகள் உருவாகும். இதனால் சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்படலாம். அதேவேளை, விலையை உயர்த்தாமல் தவிர்த்தால் இழப்பை எப்படி ஈடு செய்வது என்ற பிரச்சினை ஏற்படும்.

தற்போதைய அரசாங்கம் 200 ரூபாவுக்கு குறைவான விலைக்கு எரிபொருளை பெற்றுத் தருவதாக ஆட்சிக்கு வர முன்னர் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் என கணக்கு காட்டி இதுவரை ஏமாற்றிவிட்டது. இவ்வாறான நிலையில், சர்வதேச அளவில், குறைந்துவரும் எண்ணெய் விலைக்கு ஏற்ப அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்குமா என்பது சந்தேகம். அதேபோல, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக கூறிவிட்டு, பத்து நாட்களிலேயே, எரிபொருள் விலையை உயர்த்திய அரசாங்கம், அப்போது அதற்கு பல்வேறு நியாயங்களை கூறியது. அப்போது, அரசாங்கத்திடம் ஒரு மாதத்திற்கான எரிபொருள் கையிருப்பு மாத்திரமே இருந்தது. தற்போது கூடிய விலை கொடுத்து, இரண்டரை, மூன்று மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பை அரசாங்கம் வைத்திருக்கிறது.

எண்ணெய் கையிருப்பு சேமிப்பு தொட்டிகள் இலங்கை எரிபொருள் கையிருப்பு — கூடிய விலையில் வாங்கப்பட்ட இரண்டரை மாதங்களுக்கான எரிபொருளை அரசாங்கம் தற்போது சேமித்து வைத்திருக்கிறது. (படம் குறிப்புக்காக)

குறைந்த விலைக்கு கூடிய எரிபொருளை சேமித்து வைக்காத அரசாங்கம், கூடிய விலைக்கு கூடியளவு எரிபொருளை சேமித்து வைக்க முனைந்தது ஏன் என்ற கேள்வி வருகிறது. போர் அபாயம் காரணமாக, மேலும் எண்ணெய் விலை உயரும், தட்டுப்பாடு அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக, எரிபொருள் களஞ்சியப்படுத்தும் அளவை உயர்த்தியதாக அரசாங்கம் ஒரு காரணத்தை முன்வைக்கலாம். அது நியாயமானது. போர் அச்சமுள்ள எந்தவொரு நாட்டிலும் இப்படி வாங்கிப் பதுக்குவது அல்லது சேமிப்பது இயல்பு தான். ஆனால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்த போது, தன் கையிருப்பில் இருந்த எரிபொருளைக் கூட கூடிய விலைக்கு விற்ற அரசாங்கம், கூடிய விலைக்கு வாங்கப்பட்ட எரிபொருளை ஏன் குறைந்த விலைக்கு விற்கத் தயங்குகிறது?

நட்டத்தை தவிர்க்க, விலையைக் குறைக்க முடியாதென்பது உண்மை. ஆனால், ஒரு அரசாங்கம், தனியார் நிறுவனம் போல செயற்பட முடியாது. முற்று முழுதாக இலாப நோக்குடன் அது இயங்க முடியாது. மக்களிடம் இருந்து வரிப்பணத்தைப் பெற்றுக்கொள்ளும் அரசாங்கம், அதன் ஊடாக மக்களுக்கான நிவாரணங்களையும் வழங்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறது. அதனை மறந்துவிட்டு அரசாங்கம் இலாப நோக்குடன் செயற்படும் தனியார் நிறுவனம் போல செயற்பட முனைகிறது.

கூடிய விலைக்கு எரிபொருளை வாங்கிய போது விலையை அதிகரித்த அரசாங்கம், இப்பொழுது குறைந்த விலைக்கு வாங்கக்கூடிய சூழலில் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அரசாங்கம் இதற்கு இணங்குவதாகத் தெரியவில்லை. இலாப நோக்குடைய ஒரு தனியார் நிறுவனம் போல மாத்திரமன்றி, சர்வதேச நாணய நிதியத்திற்கு கட்டுப்படும் ஒன்றாகவும் கூட அது செயற்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை மீறி செயற்பட அது தயாரில்லை. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டை நீடிக்கப்போவதில்லை எனத் துணிந்து கூறுகின்ற அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, எண்ணெய் விலையை குறைக்கப்போகிறோம் என்று கூறுவதற்கு மட்டும் ஏன் தயங்குகிறது?

Post a Comment

0 Comments