elugai

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பல் இந்திய பெருங்கடலில் தீவிரமடையும் புவிசார் அரசியல் போட்டி!

இலங்கைக்கு வரப்போகும் நெருக்கடி

இலங்கைக்கு வரப்போகும் நெருக்கடி

கட்டுரையாளர் - சுபத்ரா

வல்லரசுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டி அல்லது இராணுவ மோதல்களுக்கான களமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மாறிவிடக்கூடாது என வலியுறுத்தி வரும் இலங்கையே, அத்தகைய ஒரு சூழலுக்கு இடமளிக்கிறதா என்ற கேள்வி தற்போது உருவெடுத்திருக்கிறது.

அண்மையில் பீஜிங்கில் நடந்த பூகோள பாதுகாப்பு தொடர்பான வான்சோ கலந்துரையாடல் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை போன்ற நாடுகளுக்கு, கொள்கை சார்ந்த மற்றும் சம நிலையான இராஜதந்திரத்தில் தான், முன்னேற்றம் ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். இறையாண்மை, மூலோபாய சுதந்திரம் மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்கும் அதேவேளை, அனைத்து நாடுகளுடனும் ஆக்கபூர்வமான உறவுகளை பேணுவது அவசியம் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், அனைத்து நாடுகளுடனும் சமமான உறவுகளை பேணுகின்ற உத்தியில், இலங்கை எந்தளவுக்கு சமமான கொள்கையை கையாளுகிறது என்ற கேள்வி இருக்கிறது.

இலங்கையின் பாதுகாப்புத்துறை சார் அதிகாரிகள் அனைவரும், இந்திய பெருங்கடல் பிராந்தியம் புவிசார் அரசியல் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கின்றனர். அண்மையில் மொஸ்கோவில் நடைபெற்ற, பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளின் 14வது சர்வதேசக் கூட்டத்தில் உரையாற்றிய, பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடலை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான ஒரு வலயமாக பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தார்.

இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக பேணும் கருத்து திட்டம், இலங்கையிடம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. 1971 ஆம் ஆண்டு இந்த யோசனை, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் ஐ.நாவில் முன்வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்ட யோசனை இது. ஆனாலும், அப்போதிருந்து தற்போது வரை, இந்திய பெருங்கடல் பிராந்தியம் கொஞ்சம் கொஞ்சமாக பதற்றத்துக்குள்ளாகி வருகிறது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த மார்ச் 4 ஆம் திகதி அதிகாலை, காலிக்கு தெற்கே 19 கடல் மைல் தொலைவில், அமெரிக்க நீர்மூழ்கியினால், ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் டேனா மூழ்கடிக்கப்பட்டது. மத்திய கிழக்கில் நடந்து கொண்டிருந்த போரை இந்திய பெருங்கடலுக்கும் நகர்த்திய சம்பவம் இது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்கள் இரகசியமாக நடமாடிக் கொண்டிருந்தன. இப்போது அவை தாக்குதலுக்குத் தயாராக நடமாடுகின்றன. இந்திய பெருங்கடலில் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மோத வேண்டிய சூழல் இப்போது பல நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. யாரால் - எங்கு – எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்று கணிக்க முடியாத ஒரு சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய பெருங்கடலை அமைதிய வலயமாக பேணுவதற்கு இடமளிக்கவில்லை.

பாகிஸ்தான் கடற்படை பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கி கொழும்பு துறைமுகம் பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கி கப்பலும் போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன — சீனாவில் கட்டப்பட்ட இந்த நீர்மூழ்கி பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கிறது. (படம்: Daily Mirror)

இத்தகைய சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் ஹங்கோர் என்ற நீர்மூழ்கிக் கப்பலும், பிஎன்எஸ் தைமூர், பிஎன்எஸ் அஸ்லத் ஆகிய வழிகாட்டல் ஏவுகணை போர்க்கப்பல்களும், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. விநியோகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும், நல்லெண்ண பயணமாகவும் இந்த பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.

இந்த கப்பல்கள் வருவதற்கு முதல் நாள், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஐராவத் என்ற ஈரூடக தரையிறக்கு கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தது. இலங்கை கடலோர காவல்படைக்கு இந்தியா வழங்கிய சுரக்ஷா என்ற ரோந்துக் கப்பலுக்கு தேவையான உதிரிப்பாகங்களை ஏற்றிக்கொண்டு, நல்லெண்ணப் பயணமாக அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகம் வந்திருந்தது. பாகிஸ்தான் போர்க்கப்பல்களின் வருகையை முன்னறிந்து, இந்தியாவினால் இது அனுப்பப்பட்டிருக்கலாம். பாகிஸ்தான் போர்க்கப்பல்களின் வருகை பற்றிய தகவல் முன்கூட்டியே இந்தியாவிற்கு பகிரப்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனென்றால் பாகிஸ்தான் நீர்மூழ்கியும் அந்தக் கப்பல்களின் அணியில் இருந்தது. பிஎன்எஸ் ஹங்கோர் என்ற இந்த நீர்மூழ்கி கப்பல், சீனாவில் கட்டப்பட்டது. சீனாவின் சன்யா துறைமுகத்தில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி நடந்த நிகழ்வில், பாகிஸ்தான் கடற்படையில் இந்த நீர்மூழ்கி கப்பல் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் கடற்படை தளபதி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். சீனாவில் இருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லும் வழியிலேயே, இந்த நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தது.

இதன் வருகை இந்தியாவிற்கு தெரிந்திருந்தாலும், இந்தியா இதனை விரும்பாமல் இருந்தாலும், அதனை தடுக்கக் கூடிய நிலை இருக்கவில்லை. பாகிஸ்தான் கடற்படையில் 1969 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரை- பிஎன்எஸ் ஹங்கோர் எஸ்- 131 என்ற நீர்மூழ்கி கப்பல் முன்னர் இருந்தது. இந்தியாவுடனான 1971 ஆம் ஆண்டு போரின்போது பிஎன்எஸ் ஹங்கோர், இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் குக்ரி என்ற போர்க்கப்பலை மூழ்கடித்திருந்தது. அதன் நினைவாக, பாகிஸ்தான் கடற்படையில் பதிதாக சேர்க்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக்கு பிஎன்எஸ் ஹங்கோர் என பெயரிடப்பட்டது.

இந்த நீர்மூழ்கியைக் கட்டியது சீனா, பயன்படுத்தப் போவது பாகிஸ்தான். இந்த இரண்டு நாடுகளுமே இந்தியாவுக்கு சவாலானவை. இந்தியா எதிரியாக கருதுபவை. இந்த இரண்டு நாடுகளின் கடற்படைகளையும் இந்தியா தனக்கு அச்சுறுத்தலாக கருதுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு, இன்னும் இரண்டு போர்க்கப்பல்களுடன் வந்து நிற்பதை, இந்தியா விருப்பத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்று நம்ப முடியாது.

இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகம் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில் — கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் ஐந்து நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்றுள்ளன. (படம்: Ada Derana)

2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது, சீன கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் இரண்டு தடவைகள் கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் சென்றிருந்தது. சீனா தனது நீர்மூழ்கியை இலங்கையில் தரித்து நிறுத்திய முதலும் கடைசியுமான சந்தர்ப்பம் அது. சீன நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துச் சென்றதை இந்தியா விரும்பவில்லை. இந்தியா அதனை கடுமையாக எதிர்த்தது. அதன் விளைவாகவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அடுத்து வந்த, 2015 ஜனாதிபதி தேர்தலின் போது கவிழ்க்கப்பட்டது. அதற்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவு முக்கிய காரணமாக இருந்தது என, ராஜபக்ஷவினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

அதற்குப் பின்னர், நல்லாட்சி அரசின் காலத்தில் 2017 ஆம் ஆண்டு சீனா மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பில் நிறுத்துவதற்கு அனுமதி கேட்டது. ஆனால் இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக, சீன நீர்மூழ்கிக்கு கொழும்பில் தரித்துச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு பின்னர் சீனாவின் நீர்மூழ்கிகள் எவையும் இலங்கையின் துறைமுகங்களுக்கு வரவில்லை. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை தொடர்ச்சியாக கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பி வருகிறது. 2023 ஆம் ஆண்டு ஐஎன்எஸ் வாகீர் என்ற நீர்மூழ்கியும், 2024 ஆம் ஆண்டு ஐஎன்எஸ் கரன்ஸ், ஐஎன்எஸ் ஷால்கி, ஐஎன்எஸ் வேலா ஆகிய மூன்று நீர்மூழ்கி கப்பல்களும் இந்த ஆண்டில் ஐஎன்எஸ் சிந்துகேசரி என்ற நீர்மூழ்கி கப்பலுமாக- கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் ஐந்து நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்றுள்ளன. இந்தியக் கடற்படை இப்போது, தனது நீர்மூழ்கிகள் கிரமமாக வந்து செல்லும் ஒரு தளமாக, கொழும்பு துறைமுகத்தை மாற்றியிருக்கிறது. ஆனால், வேறு நாடுகளின் நீர்மூழ்கிகளுக்கு இடமளிக்கப்படவில்லை.

சீனாவின் ஆய்வு கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கூட, இந்தியாவின் அழுத்தங்களால் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை சீனாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் கூட சீன தூதுவர் கீ சென்ஹொங் கடல் சார் கூட்டு செயல்பாடுகளில் இலங்கை தனது இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் தீர்மானங்களை எடுக்கும் என நம்புவதாக கூறியிருந்தார்.

இப்போது, பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு வந்திருக்கிறது. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அண்மைக்காலமாக பாதுகாப்பு உறவுகள் மிகவும் நெருக்கமடைந்திருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு நாடுகளின் சிறப்புப் படைகளுக்கு இடையில் கூட்டுப் பயிற்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது தொடர்பாக, பல உயர்மட்ட பேச்சுகளும் இடம்பெற்றிருந்தன. இப்போது பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் சென்றிருக்கிறது. இது இந்தியாவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும். இந்தியா அதனை வெளிப்படையாக கூறுகிறதோ இல்லையோ அதுதான் உண்மை.

பாகிஸ்தான் நீர்மூழ்கியை தடுக்க முடியாத ஒரு சூழல் இந்தியாவிற்கு உள்ளது. ஏனென்றால் சீனாவில் இருந்து வரும் நீர்மூழ்கி கப்பல், இந்தோனேசியாவுக்கு அப்பால், இலங்கை தவிர வேறு எந்த இடத்திலும் தரித்துச் செல்வதற்கு வசதிகள் இல்லை. இந்த நியாயமான காரணத்தை இந்தியாவினால் புறக்கணிக்க முடியாது. அடுத்து இந்தியா நீர்மூழ்கி கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிறுத்துகின்ற போது, இன்னொரு நாடு தனது நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துவதை தடுக்க முடியாது. அது தார்மீக அடிப்படையில் நியாயமானது அல்ல. அதனால் இந்த விடயத்தில் இந்தியா பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

ஆனால் இது ஒரு ஆபத்தான விளையாட்டு. ஏனென்றால் இப்போது, பாகிஸ்தான் நிறுத்தியது போல, சீனாவும் தனது நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திச் செல்வதற்கு அனுமதி கோருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவ்வாறானதொரு கோரிக்கை விடுக்கப்பட்டால், அதனை இலங்கையால் மறக்க முடியாது, இந்தியாவினாலும் கூட அதனை எதிர்க்க முடியாது.

இலங்கை அரசாங்கம் எல்லா நாடுகளுடனும் நெருக்கத்தை பேணுவதற்கு முற்படுகிறது. அதனை தனது இராஜதந்திரமாக கையாள பார்க்கிறது. ஆனால் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சக்திகளுடன் இத்தகைய மூலோபாய உறவுகளை கையாளுவது அவ்வளவு இலகுவானதல்ல. ராஜபக்ஷ அரசாங்கம் கவிழ்ந்தது இதனால் தான். ரணில் விக்கிரமசிங்க இதனை தந்திரமாக கையாண்டார். அனுரகுமார திசாநாயக்கவினால் இந்தச் சிக்கலை எந்தளவிற்கு சாதகமான முறையில் கையாள முடியும் என்று தெரியவில்லை. இந்த விடயத்தை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்ப முடியாது. இதனைச் சமாளிப்பது சிக்கலானது. பிராந்தியத்தை அமைதி வலயமாக பேண வேண்டும் என, சர்வதேச அரங்குகளில் வலியுறுத்துவது மட்டும் போதாது. அதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பும் அனைத்து நாடுகளுக்கும் இருக்கிறது.

Post a Comment

0 Comments