elugai

அட்டமஸ்தானாதிபதியின் இடைநிறுத்தமும் மகா சங்கத்தின் தயக்கமும் பௌத்தத்தின் மாண்பைச் சிதைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்!

பௌத்தம் எதிர்கொள்ளும் சவால்

பௌத்தம் எதிர்கொள்ளும் சவால்

என்.கண்ணன்

அனுராதபுர அட்டமஸ்தானங்களில் பிரதம சங்கநாயக்கர் பதவியில் இருந்து பல்லேகம ஹேமரதன தேரரை இடைநிறுத்துவதற்கு மல்வத்த மகா விகாரையின் சங்க சபா தீர்மானித்திருக்கிறது. பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு முடியும் வரை, இந்தப் பதவியில் இருந்து அவரை இடைநிறுத்தும் தீர்மானம், கடந்த 30ஆம் திகதி காரக மகா சங்க சபா கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மல்வத்த மகாநாயக்கர் திபொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரின் அனுமதியுடன் அவரை இடைநிறுத்தம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மல்வத்த மகா விகாரையின் பதிவாளர் சுமங்கல தேரர் அறிவித்திருந்தார். மகா சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பது பரவலான வரவேற்பை அளித்திருக்கிறது.

இந்த தீர்மானம் எடுக்கப்படுவதற்கு முன்னர், கலகொடஅத்தே ஞானசார தேரர், நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அட்டமஸ்தானிபதி பதவியில் இருந்து, பல்லேகம ஹேமரதன தேரரை இடைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அட்டமஸ்தானிபதியான ஹேமரதன தேரர் அனைத்து வகையிலும் செல்வாக்கு மிக்கவர். அனுராதபுரவின் எட்டு முக்கிய விகாரைகளின் அதிபதி அவர். அதனால் தான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இவரை சந்தித்து காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றிருந்தார்.

அனுராதபுர ருவன்வெலிசாய ஸ்தூபி இலங்கை அனுராதபுரம் — புனித நகரில் எட்டு முக்கிய விகாரைகளின் அதிபதியான அட்டமஸ்தானிபதி மீதான குற்றச்சாட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. (படம்: Wikipedia)

இந்தியப் பிரதமர் காலில் விழுந்து வணங்கிய ஒரு துறவி, இப்பொழுது கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார். தற்போது 15 வயதை எட்டியுள்ள சிறுமி ஒருவரை, 11 வயதில் இருந்தே, பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகள், முற்றிலும் நியாயமான முறையில் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பரவலாக இருக்கிறது. ஏனென்றால், அவருக்கு எதிராக சட்டரீதியான விசாரணைகள் ஒரு பக்கம் நடந்தாலும், அவரை காப்பாற்றும் முயற்சிகள் அதற்கு இணையாக- சட்டத்திற்கு அப்பாலும் முன்னெடுக்கப்படுவதாக சந்தேகங்கள் நிலவுகின்றன. அரசியல் மட்டங்களிலும் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, இந்த விசாரணைகள் எந்தளவுக்கு நீதியான முறையில் முன்னெடுக்கப்படும் என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

எவ்வாறாயினும் இது ஒரு சிக்கலான விவகாரம். பௌத்த மதத்துக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள விவகாரம். பௌத்தம் என்பதன் அடிப்படையே துறவு தான். வாழ்வின் பற்றுகளைத் துறந்த கௌதம புத்தரை முன்னுதாரணமாக கொண்டு, சுகபோக வாழ்க்கையை துறந்த துறவிகள் தான், பௌத்த மதத்தை பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

அதற்கு சவாலாக, அதற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக, பல்வேறு பௌத்த துறவிகள் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பௌத்த மதத்தை, தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே பயன்படுத்தியிருந்தார்கள். அது தவிர, இலங்கையிலும் மியான்மாரிலும் பௌத்த துறவிகள் இனவாதிகளாக அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு நிலைமைகள் உள்ளதையும் மறுக்க முடியாது. இது பௌத்த தர்மத்துக்கு எதிரானதாக இருந்தாலும், அதனை அங்கீகரித்துச் செயற்படும் போக்கு இலங்கையில் உள்ளதும் மறுக்க முடியாத உண்மை.

இப்போது பௌத்த மதகுருமார் பலர், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள். பல்லேகம ஹேமரதன தேரரை போல, கண்டியில் ஒரு பௌத்த பிக்கு சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்தச் செய்தி அட்டமஸ்தானிபதி பதவியில் இருந்து, ஹேமரதன தேரர் நீக்கப்பட்ட பின்னர் தான் வெளியே வந்தது. அதாவது சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்தே பொலிசார் இந்த தகவலை கசியவிட்டிருக்கிறார்கள். இவ்வளவு காலம் ஏன் அந்த செய்தி வெளிவரவில்லை – ஏன் அது மறைக்கப்பட்டது என்ற கேள்விகள் உள்ளன.

அனுராதபுர அட்டமஸ்தானிபதி கைது செய்யப்பட்ட போதும், அவரை சிறைக்குக் கொண்டு செல்லாமலேயே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சூழலில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இவ்வாறான சம்பவங்கள் பரவலாக இடம்பெறும் நிலையில், இதற்கு எதிராக வடக்கிலும் கிழக்கு உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. நியாயமான விசாரணைகளை நடத்தக் கோரி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தை பௌத்த பீடங்கள் நிதானமாகவும் நீதியாகவும் கையாண்டிருக்க வேண்டும். அட்டமஸ்தானிபதி மீதான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன், இந்த விவகாரத்தில் தலையீடு செய்திருக்க வேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளான பௌத்த பிக்குகளை காப்பாற்ற முனையாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் மல்வத்த பீடம் அவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை.

மே மாதம் 9ஆம் திகதி பல்லேகம ஹேமரதன தேரர் கைது செய்யப்பட்ட போதும், அவருக்கு பிணை வழங்கப்பட்ட பின்னரே, அவரை அட்டமஸ்தானிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு மல்வத்த பீடம் தீர்மானித்தது. இந்த தீர்மானத்தை அவர்கள் எடுப்பதற்கு 20 நாட்களுக்கு மேல் சென்றது. பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, பௌத்த பீடம் எந்தளவிற்கு தயங்குகிறது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

பல்லேகம ஹேமரதன தேரர் கைது செய்யப்பட்ட செய்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. உலக ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளித்திருந்தன. அந்தளவுக்கு ஹேமரதன தேரர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொறுப்பை வகித்திருந்தார். புனித நகரமான அனுராதபுரவில், எட்டு முக்கிய விகாரைகளின் அதிபதியான அவர் நெறி தவறி நடந்து கொண்டது, சர்வதேச கவனத்தை ஈர்த்தது ஆச்சரியம் இல்லை. ஆனால் இலங்கையின் பௌத்த பீடங்கள் அதனை ஆச்சரியமாக பார்க்க தவறிவிட்டனவோ எனத் தோன்றுகிறது. அவர் மீதான நடவடிக்கைக்கு ஏற்பட்ட தாமதம், இந்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.

ஏனென்றால், பௌத்த பீடங்களுக்கு இத்தகைய குற்றச்சாட்டுக்கள் பழக்கப்பட்டு போனவை போல தெரிகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் என்ற அமைப்பு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரி பெற்ற ஒரு தகவலை கடந்த மே 26 ஆம் திகதி வெளியிட்டது. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 285 பௌத்த பிக்குகளுக்கு எதிராக சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

2023 மே முதலாம் திகதி முதல், 2026 மே முதலாம் திகதி வரையான காலகட்டத்தில் சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 27 பௌத்த பிக்குகளுக்கு எதிராக மாத்திரமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரங்கள் கூட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் இல்லை.

இலங்கை பௌத்த பிக்குகள் மகா சங்கம் இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவது பௌத்த நெறிமுறையின் சிதைவை காட்டுகிறது என விமர்சிக்கப்படுகிறது. (படம்: Wikipedia)

பல்லேகம ஹேமரதன தேரர் மீதான சட்ட நடவடிக்கைகள் விடயத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தான் முன்னென்று செயற்படுகிறது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நீதிமன்றத்தின் ஊடாக கொடுத்த அழுத்தங்களின் மூலம் தான், பொலிசார் நடவடிக்கை எடுக்கின்ற நிலை ஏற்பட்டது. தடியை எடுத்துக் கொண்டு பொலிசாரைத் துரத்த வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியிருக்கிறது.

பரவலாக அதிகரித்து வந்திருக்கின்ற இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அட்டமஸ்தானிபதியின் மீதான குற்றச்சாட்டை மல்வத்த பீடம் பாரதூரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஏனென்றால், அவர்களுக்கு இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பழகிப் போய் விட்டது. இது பௌத்த நெறிமுறையும் துறவு வாழ்க்கை முறையும் சீர்குலைந்து வருவதை காட்டுகிறது. இதனை மீட்டெடுப்பதற்கு பௌத்த பீடங்கள் முன்னுரிமை அளிக்கவில்லை. மாறாக அவற்றை சகித்துக் கொண்டு போக முனைந்திருக்கின்றன.

அதனால் தான் உரிய வேளையில் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் தயங்கியிருக்கிறார்கள். இது தவறிழைப்பவர்களுக்கு இன்னும் வசதியாகி விட்டது. அவர்கள் தங்கள் தவறை மறைக்கவும் தொடர்ந்து தவறுகளை இழைக்கவும் காரணமாகியிருக்கிறது.

இந்த விடயத்தில் பௌத்த பீடங்கள் முக்கியமான குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன. எல்லா விடயங்களிலும் பௌத்தத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என மல்லுக்கட்டும் மகா சங்கம் பௌத்தத்தின் மாண்பையும் மதிப்பையும் பாதுகாப்பதில், முதலில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் அவர்கள் தவறுகளைச் செய்திருக்கிறார்கள். பல்வேறு விடயங்களில் பௌத்த பீடங்கள் உரிய நேரத்தில் செயலாற்றத் தவறியிருக்கின்றன.

நாட்டைத் தாங்களே சரியாக வழி நடத்துவதாக கூறிக் கொள்ளும் பௌத்த பீடங்கள், முதலில் தங்களுக்குள் களையெடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. பௌத்தத்தின் மாண்பை கெடுப்பவர்களைக் களையெடுக்க தவறினால், அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க தவறினால், இலங்கையின் பௌத்த பாரம்பரியம் விரைவில் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். வெளியே இருந்து யாரும் அந்த அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டியதில்லை, உள்ளிருப்பவர்களே சிதைவுகளை ஏற்படுத்துவார்கள்.

Post a Comment

0 Comments